Monday, 10 August 2026

கீழடியே இந்திய வரலாற்றின் திறவுகோல்!


கீழடியே இந்திய வரலாற்றின் திறவுகோல்

கீழடியில் காணப்படும் கட்டிட எச்சங்கள், செங்கற்கள், நீர் மேலாண்மைத் தடயங்கள், மணிகள், பானை ஓடுகள், தொழில்சார் பொருட்கள், தமிழி எழுத்துப் பொறிப்புகள் ஆகியவை இந்த நகர வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை வெளிப்படுத்துகின்றன. 

இந்திய வரலாற்றை நாம் எவ்வாறு அறிந்துகொள்கிறோம்?

அது உண்மையில் இந்தியத் துணைக்கண்டத்தின் முழுமையான வரலாறா? அல்லது குறிப்பிட்ட சில சமூகங்களின் வரலாறு மட்டுமே “இந்திய வரலாறு” என்ற பெயரில் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளதா?

இந்தக் கேள்வி வெறும் கடந்தகாலத்தைப் பற்றிய கேள்வி அல்ல. ஒரு சமூகத்தின் கடந்தகாலத்தை யார் எழுதுகிறார்கள் என்பதும், அந்த வரலாற்றில் யாருடைய குரல்கள் இடம்பெறுகின்றன என்பதும், இன்றைய சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு புரிதல்களோடு தொடர்புடையவை.

நீண்ட காலமாக இந்தியப் பண்டைய வரலாற்றை அரசர்கள், பேரரசுகள், போர்கள், சமஸ்கிருத இலக்கியங்கள், புராணங்கள் ஆகியவற்றின் வழியே புரிந்துகொள்ளும் போக்கு வலுவாக இருந்தது. ஆனால் நவீன தொல்லியல், மானுடவியல், மொழியியல், மரபியல் ஆகிய துறைகளின் வளர்ச்சி, அந்தப் பார்வையை விரிவுபடுத்தியுள்ளது.

மண்ணுக்குள் புதைந்திருக்கும் செங்கல், பானை ஓடு, கிணறு, மணிகள், கருவிகள், எழுத்துப் பொறிப்புகள் ஆகியவை இப்போது வரலாற்றின் ஆவணங்களாக மாறியுள்ளன.

இந்தப் புதிய வரலாற்றுப் பார்வையின் முக்கியமான சாளரங்களில் ஒன்றுதான் கீழடி.

கீழடியை உயர்த்திப் பேசுவது வடஇந்தியாவை மறுப்பதற்காக அல்ல; வேத மரபை அழிப்பதற்காகவும் அல்ல. அதற்குப் பதிலாக, இந்திய வரலாறு பல்வேறு மக்களாலும், மொழிகளாலும், உற்பத்தி முறைகளாலும், பண்பாடுகளாலும் உருவாக்கப்பட்ட பன்முக வரலாறு என்பதை மீண்டும் நினைவூட்டுவதற்காக.

இந்தக் கட்டுரை அந்தப் பார்வையில் கீழடியைப் புரிந்துகொள்ளும் ஒரு முயற்சி.

இது கீழடியைப் பற்றிய தொல்லியல் அறிக்கையல்ல. அதேபோல், ஒரு புதிய “தமிழ் புராணத்தை” உருவாக்கும் முயற்சியும் அல்ல.

ஆதாரங்களின் அடிப்படையில் வரலாற்றைப் புரிந்துகொள்ளவும், வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் கருவிகளைக் கொண்டு கீழடியை வாசிக்கவும் செய்யப்படும் முயற்சிதான் இந்தக் கட்டுரை.

பகுதி – 1: இந்திய வரலாற்றை ஏன் மறுவாசிப்பு செய்ய வேண்டும்?

வரலாறு என்பது ஏற்கெனவே எழுதப்பட்டு முடிந்த புத்தகம் அல்ல.

புதிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கும்போது பழைய கருத்துகள் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன. புதிய மரபியல் ஆய்வுகள், வெளிவரும்போது மனிதர்கள் குறித்த புரிதல்கள் மாறுகின்றன. புதிய மொழியியல் ஆய்வுகள் மொழிகளின் பரவல் பற்றிய பழைய கருத்துகளைச் சோதிக்கின்றன.

எனவே வரலாறு என்பது கடந்தகாலத்தின் மீது வழங்கப்பட்ட நிரந்தரத் தீர்ப்பு அல்ல; கிடைக்கின்ற ஆதாரங்களின் அடிப்படையில் கடந்தகாலத்தைத் தொடர்ந்து மறுபரிசீலனை செய்யும் அறிவியல் முயற்சி.

இங்கேதான் கீழடியின் முக்கியத்துவம் தொடங்குகிறது.

ஒரு காலத்தில் இந்திய வரலாறு பெரும்பாலும் மன்னர்களின் வரலாறாக எழுதப்பட்டது. எந்த மன்னன் எப்போது ஆட்சி செய்தான், யார் யாரை வென்றான், எந்தப் பேரரசு எவ்வளவு பரப்பளவை ஆண்டது என்பவை வரலாற்றின் மையமாக இருந்தன.

ஆனால் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் வேறு கேள்விகளை எழுப்புகிறது:

  • மக்கள் என்ன உற்பத்தி செய்தார்கள்?
  • எவ்வாறு உற்பத்தி செய்தார்கள்?
  • எந்தக் கருவிகளைப் பயன்படுத்தினார்கள்?
  • இயற்கையை எவ்வாறு மாற்றியமைத்தார்கள்?
  • குடியிருப்புகளை எவ்வாறு உருவாக்கினார்கள்?
  • தொழில்நுட்பம் எவ்வாறு வளர்ந்தது?
  • சொத்துரிமை எவ்வாறு தோன்றியது?
  • சமூக உறவுகள் எவ்வாறு மாறின?

இந்தக் கேள்விகளின் வழியாகப் பார்க்கும்போது வரலாற்றின் மையத்தில் மன்னன் அல்ல, மனிதன் நிற்கிறான்.

ஒரு நகரத்தின் வரலாற்றை எழுதும்போது அதன் அரண்மனை எங்கே இருந்தது என்று மட்டும் கேட்பது போதாது. அந்த நகரத்தை யார் கட்டினார்கள்? செங்கற்களை யார் தயாரித்தார்கள்? பானைகளை யார் செய்தார்கள்? நெசவுத் தொழிலை யார் மேற்கொண்டார்கள்? தண்ணீரை எவ்வாறு நிர்வகித்தார்கள்? கருவிகளை யார் உருவாக்கினார்கள்?

ஒரு நாகரிகத்தின் உண்மையான அடித்தளம், அதை உருவாக்கிய உழைக்கும் மக்களின் கைகளில்தான் இருக்கிறது.

இந்தப் பார்வையில் கீழடி ஒரு முக்கியமான வரலாற்றுச் சாளரமாகிறது.

பகுதி – 2: மனிதன் வரலாற்றை உருவாக்கியது எப்படி?

மனித வரலாற்றை அரசர்களிடமிருந்தோ, போர்களிடமிருந்தோ, கோயில்களிடமிருந்தோ தொடங்க வேண்டியதில்லை.

மனிதன் தனது வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை எவ்வாறு உற்பத்தி செய்தான் என்பதிலிருந்தே தொடங்க வேண்டும்.

மனிதன் இயற்கையின் ஒரு பகுதியாக இருந்தான். உயிர்வாழ்வதற்காக இயற்கையோடு போராட வேண்டியிருந்தது. உணவைத் தேடுதல், வேட்டையாடுதல், கருவிகளை உருவாக்குதல், தீயைப் பயன்படுத்துதல், விவசாயம் செய்தல், குடியிருப்புகளை அமைத்தல் என ஒவ்வொரு முன்னேற்றமும் மனிதனின் உழைப்போடு தொடர்புடையது.

அந்த உழைப்பு தனிமனித உழைப்பாக மட்டும் இருக்கவில்லை. மனிதன் கூட்டாகச் செயல்பட்டான். கூட்டாக வேட்டையாடினான். கூட்டாக ஆபத்துகளை எதிர்கொண்டான். கூட்டாக உற்பத்தி செய்தான்.

மார்க்சிய மானுடவியலாளர் ஜார்ஜ் தாம்சன், மனித சமூகத்தின் ஆரம்ப வளர்ச்சியில் உழைப்பு, மொழி, சமூக உறவுகள் ஆகியவற்றின் பரஸ்பரத் தொடர்பை வலியுறுத்துகிறார். மனிதன் இயற்கையை மாற்றியமைக்கும் உழைப்பின் வழியே தன்னையும் மாற்றிக்கொண்டான் என்ற பார்வை அவரது ஆய்வுகளில் முக்கியமானது.

இதன் பொருள் மிகவும் முக்கியமானது. முதலில் மனிதன் வாழ்க்கையை உருவாக்கினான்; பின்னர் அந்த வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினான்.

அதனால் மனித வரலாற்றைக் கடவுள்களின் கதைகளிலிருந்து மட்டும் தொடங்கினால், மனிதனின் உண்மையான உற்பத்தி வாழ்க்கையை நாம் தவறவிடக்கூடும்.

கீழடியில் கிடைத்த பானை ஓடுகள், சுடுமண் பொருட்கள், மணிகள், கட்டிட எச்சங்கள், தொழில்சார் தடயங்கள் ஆகியவை ஒரு சமூகத்தின் அன்றாட வாழ்க்கையை நமக்குக் காட்டுகின்றன.

தமிழ்நாடு தொல்லியல் துறையின் காலக்கணிப்புகளின்படி, கீழடி தொடர்பான சில மாதிரிகள் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சுட்டுகின்றன; தமிழி எழுத்தின் காலக்கணிப்பும் இந்தக் காலப்பரப்பை நோக்கி நகர்கிறது.

இங்கே வரலாற்றின் கதாநாயகன் யார் என்பது தெளிவாகிறது: உழைத்த மனிதன்.

பகுதி – 3: குகையிலிருந்து நகரம் வரை: உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி

மனிதன் இயற்கையோடு போராடியபோது முதலில் கருவிகளை உருவாக்கினான்.

கல்லை கூர்மைப்படுத்தினான். நெருப்பைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டான். வேட்டையிலிருந்து கால்நடை வளர்ப்புக்கும், பின்னர் விவசாயத்திற்கும் நகர்ந்தான்.

விவசாயம் மனித வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஒரே இடத்தில் குடியேற்றம் ஏற்பட்டது. உணவு உற்பத்தியில் உபரி தோன்றியது. உபரி உற்பத்தியோடு தொழில்களின் பிரிவினை வளர்ந்தது. கைவினைஞர்கள் தோன்றினர். பரிமாற்றம் வளர்ந்தது. குடியிருப்புகள் பெரிதாகின. இறுதியில் நகரங்கள் உருவாயின.

இதையே வரலாற்றுப் பொருள்முதல்வாதம் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி என்ற அடிப்படையில் புரிந்துகொள்கிறது.

ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் தனது குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் உற்பத்தி, குடும்ப அமைப்பு, சொத்துரிமை, சமூகப் பிரிவுகள் மற்றும் அரசின் உருவாக்கம் ஆகியவற்றை வரலாற்று வளர்ச்சியோடு இணைத்துப் பார்க்கிறார்.

நகரம் என்பது வெறும் கட்டிடங்களின் தொகுப்பு அல்ல. அதற்குப் பின்னால் உணவு உற்பத்தி வேண்டும்; நீர் மேலாண்மை வேண்டும்; கைவினைத் தொழில் வேண்டும்; சேமிப்பு வேண்டும்; பரிமாற்றம் வேண்டும்; தொழில்களின் பிரிவினை வேண்டும்; தகவல் பரிமாற்றம் வேண்டும்.

அதனால் நகரம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வளர்ந்த உற்பத்திச் சக்திகளின் சமூக வெளிப்பாடு.

கீழடியில் காணப்படும் கட்டிட எச்சங்கள், செங்கற்கள், நீர் மேலாண்மைத் தடயங்கள், மணிகள், பானை ஓடுகள், தொழில்சார் பொருட்கள், தமிழி எழுத்துப் பொறிப்புகள் ஆகியவை இந்த நகர வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை வெளிப்படுத்துகின்றன.

இதன் முக்கியமான வரலாற்றுப் பொருள்: இந்தியத் துணைக்கண்டத்தின் நகரமயமாக்கல் வரலாறு வடஇந்தியாவோடு மட்டும் முடிவதில்லை; தென்னகத்திற்கும் தனித்துவமான நகரமயமாக்கல் வரலாறு உள்ளது.

பகுதி – 4: சிந்துவெளி: மன்னர்களின் நாகரிகமா? உழைக்கும் மக்களின் நாகரிகமா?

சிந்துவெளி நாகரிகம் இந்தியப் பண்டைய வரலாற்றின் மிக முக்கியமான அத்தியாயங்களில் ஒன்று.

ஹரப்பா, மொகஞ்சதாரோ, தோலவீரா போன்ற நகரங்கள் திட்டமிடப்பட்ட வீதிகள், செங்கல் கட்டிடங்கள், நீர் மேலாண்மை, கைவினைத் தொழில், வணிகம் போன்றவற்றைக் கொண்டிருந்தன.

அவற்றின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்று — பிரம்மாண்டமான அரச அரண்மனைகளோ அல்லது மன்னர்களின் பிம்பங்களோ தெளிவாகக் காணப்படாதிருப்பது.

அங்கு மன்னராட்சி அல்லது கொடுங்கோல் அரசின் சான்றுகள் கிடைக்கவில்லை என்றாலும், வீடுகளின் அளவு, தானியக் களஞ்சியங்கள் மற்றும் நகர்ப்புற அமைப்புகளின் மூலம் உழைப்புப் பிரிவினையும் சமூகப் படிநிலைகளும் (Social Stratification) நிலவியதை அறிய முடிகிறது. இருப்பினும் அந்தச் சமூகத்தை மன்னரை மையமாகக் கொண்டு விளக்க முடியாது.

இங்கே டி.டி. கோசாம்பியின் பங்களிப்பு முக்கியமானது. An Introduction to the Study of Indian History நூலில் சிந்துவெளி, ஆரியர்கள், கிராமப் பொருளாதாரம், வணிகம், சொத்துரிமை, சாதி ஆகியவற்றை சமூக-பொருளாதார மாற்றங்களோடு இணைத்து அவர் அணுகுகிறார்.

இதிலிருந்து ஒரு முக்கியமான வரலாற்றுப் பாடத்தைப் பெறலாம்: ஒரே நிலப்பரப்பில் பின்னர் வாழ்ந்த சமூகங்கள் அனைத்தும் ஒரே சமூக-பொருளாதார அமைப்பைக் கொண்டிருந்தன என்று கூற முடியாது.

சிந்துவெளி நகர நாகரிகம் வேத இலக்கியம் பிரதிபலிக்கும் சமூகத்துடன் ஒன்றல்ல. அவற்றின் காலவரிசையும் சமூக-பொருளாதாரப் பின்னணியும் வேறுபட்டவை.

எனவே, சிந்துவெளி நாகரிகம் = வேத நாகரிகம் என்ற சமன்பாட்டை வரலாறு ஏற்காது.

பகுதி – 5: வேதம், ஆரியர்கள், நகரம்: வரலாற்றை வேறுபடுத்திப் பார்ப்போம்

“இந்தியா என்றால் வேதம்” என்ற எளிமையான சமன்பாடு வரலாற்றின் பன்முகத்தன்மையை மறைத்துவிடுகிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில் பல்வேறு காலங்களில் வேட்டையாடிகள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், கைவினைஞர்கள், வணிகர்கள், நகர மக்கள் எனப் பல்வேறு சமூகங்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் மொழிகளும் பண்பாடுகளும் வேறுபட்டிருந்தன.

எனவே இந்திய வரலாற்றை ஒரு குறிப்பிட்ட மத மரபின் வரலாறாகச் சுருக்குவது அறிவியல் ரீதியாகப் பொருந்தாது.

டோனி ஜோசப்பின் Early Indians நூல், மரபியல், தொல்லியல், மொழியியல் ஆகிய பல துறைகளின் ஆய்வுகளை ஒருங்கிணைத்து இந்திய மக்களின் உருவாக்கத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறது.

அவரது ஆய்வுகள் சுட்டிக்காட்டும் முக்கியமான செய்தி: இந்திய மக்களின் உருவாக்கம் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில், ஒரே மக்களால் நிகழ்ந்தது அல்ல. பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட இடம்பெயர்வுகள், கலப்புகள் மற்றும் பண்பாட்டுத் தொடர்புகள் இந்திய சமூக உருவாக்கத்தில் பங்கு பெற்றுள்ளன.

இங்கே “ஆரியர்” என்ற சொல்லையும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். அதை நவீன அர்த்தத்தில் ஒரு தூய்மையான “இனம்” என்று கருதுவது தவறானது. மொழி, பண்பாடு, மக்கள் இயக்கம், மரபியல் ஆகியவை ஒன்றுக்கொன்று ஒரே பொருளுடையவை அல்ல.

அதே நேரத்தில், “ஆரியர்கள் வந்தவுடன்தான் இந்திய நாகரிகம் தொடங்கியது” என்ற கருத்தும் வரலாற்றுச் சான்றுகளோடு பொருந்தாது. சிந்துவெளி நகரங்கள் அதற்கு முன்னரே இருந்தன. தென்னிந்தியாவிலும் தனித்துவமான சமூக-பொருளாதார வளர்ச்சிகள் நிகழ்ந்தன. கீழடி அவற்றில் ஒன்றுக்கான முக்கியமான தொல்லியல் சான்றாகிறது.

எனவே, வேத மரபு இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாக சிலரால் கருதப்படலாம்; ஆனால் அது முழு இந்திய நாகரிகத்தின் பெயர் அல்ல.

(தொடரும்…)

  • தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

மக்கள் கலை இலக்கியக் கழகமும் தமிழ் மக்கள் இசை விழா...

வேத நாகரிகத்தைத் துரத்தும் கீழடி!

தமிழ் மக்கள் இசை விழா சிறக்க நிதி தாரீர்!

தொழில்நுட்பத்தில் இந்தியா ஏன் பின்தங்கியது? கீழடி உணர்த்தும் பாடம்!

'நல்ல பாம்பாக'த் திரியும் நச்சுப் பாம்பை தட்டித் த...

கீழடி-இந்திய வரலாற்றின் தொடக்கப் புள்ளி?


Saturday, 8 August 2026

மக்கள் கலை இலக்கியக் கழகமும் தமிழ் மக்கள் இசை விழாவும்: ஒரு வரலாற்றுப் பார்வை

கடைசியாக நடைபெற்ற தமிழ் மக்கள் இசை விழா, 2007

ருகிற ஆகஸ்ட் 22, 2026 அன்று மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பாக தஞ்சாவூரில் “தமிழ் மக்கள் இசை விழா” நடைபெற உள்ளது. “தமிழ் மக்கள் இசை விழாவா? இது என்ன புதுசா இருக்கு?” என்று இன்றைய இளைய தலைமுறையினர் புருவம் உயர்த்துவதைக் காண முடிகிறது.

உண்மையில் இது திடீரென முளைத்த விழாவல்ல; பார்ப்பனிய ஆதிக்கத்திற்கும், மறுகாலனியாதிக்கப் பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கும் எதிராக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முழங்கிவரும் வரலாற்றுப் பூர்வமான பண்பாட்டுப் போரின் தொடர்ச்சியே இந்த இசை விழா.

வரலாற்றுப் பின்னணியும் முதல் இசை விழாவும்

1991 – அரசியல் அடக்குமுறைக் காலம்: 1991 ஆம் ஆண்டில் திமுக அரசு மத்திய அரசால் கலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு தமிழகத்தில் பல்வேறு முற்போக்கு இயக்கங்கள் மீதும் கடுமையான அடக்குமுறைகள் ஏவப்பட்டன. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக திமுக மீது குற்றம்சாட்டி, ஜெயலலிதா ஆட்சிக் கட்டிலில் ஏறிய காலம் அது.

1992 டிசம்பர் 6 – பாபர் மசூதி இடிப்பு: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, “ராமருக்குக் கோயில் கட்டுவதாகச் சொல்கிறீர்களே… அப்படியானால் கருவறைக்குள் பிற்படுத்தப்பட்டோரையும் தாழ்த்தப்பட்டோரையும் அனுமதிப்பீர்களா?” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கேள்வியை மக்கள் கலை இலக்கியக் கழகம் எழுப்பியது.

1993 – திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம்: மே 1 அன்று தடையை மீறி நடைபெற்ற பெருந்திரள் கருவறை நுழைவுப் போராட்டத்தில் சுமார் 1000 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, 1993 மே 24 அன்று முன்னறிவிப்பு ஏதுமின்றி திருச்சி திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) ரங்கநாதர் கோயில் கருவறைக்குள் 5 பெண்கள் உட்பட சுமார் 30  ம.க.இ.க. தோழர்கள் நுழைந்ததோடு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் படங்களை வைத்துப் புகைப்படமும் எடுத்தனர். அப்போது கோயில் கதவுகளை அடைத்துப் பார்ப்பனர்கள் தடிகளால் கொடூரமாகத் தோழர்களைத் தாக்கியபோதும், போராட்டத்தின் அரசியல் நோக்கம் திசைதிரும்பிவிடக் கூடாது என்பதற்காகத் தோழர்கள் திருப்பித் தாக்கவில்லை. “சூத்திரர்களும் தாழ்த்தப்பட்டோரும் பெண்களும் கருவறைக்குள் நுழையக்கூடாது” என்ற சனாதன விதிகளை உடைத்தெறிந்த இப்போராட்டம், சனாதன சாதி ஆதிக்கத்திற்கு எதிராகத் தமிழகத்தில் நடைபெற்ற முக்கியமான பண்பாட்டுப் போராட்டங்களில் ஒன்றாக அது அமைந்தது.

திருவையாறு தியாகய்யர் உற்சவமும் ‘தமிழிசை’ மீட்பும்

ஆண்டுதோறும் திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை இசை விழாவில் தெலுங்கு மற்றும் சமஸ்கிருதக் கீர்த்தனைகள் மட்டுமே பாடப்படும்; தமிழ் மொழி “நீச மொழி” எனக் கூறிப் புறக்கணிக்கப்பட்டது.

தமிழறிஞர்களான முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரியப்பப் பிள்ளை, பாபநாசம் சிவன் போன்றோர் தமிழில் பாடியதற்காக மேடையை விட்டே இறக்கப்பட்டு, தமிழிசை பாடிய கலைஞர்கள் அவமதிக்கப்பட்டனர்; தமிழுக்கு உரிய இடம் மறுக்கப்பட்டது.

பார்ப்பன மேலாதிக்கத்திற்கு எதிராக, “திருவையாறு உற்சவத்தில் தமிழில் பாட வேண்டும்” என்று, நினைவில் வாழும் தோழர் சீனிவாசன் தலைமையில் ம.க.இ.க. தோழர்கள் மேடையிலேயே முழக்கமிட்டனர். அப்போதும் தோழர்கள் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

ஆபிரகாம் பண்டிதர் உள்ளிட்ட தமிழிசை ஆய்வாளர்கள், கர்நாடக இசையின் வேர்கள் தமிழிசையில்தான் உள்ளன என்று வலியுறுத்தியுள்ளனர். தமிழிசையைக் களவாடித் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் கீர்த்தனைகளாக மாற்றி, தங்களுடைய உடைமை எனப் பார்ப்பனர்கள் உரிமை கொண்டாடுகின்றனர். ஆபிரகாம் பண்டிதர் (கருணாமிர்த சாகரம்) போன்ற இசை அறிஞர்கள் கர்நாடக இசையின் தாய் தமிழிசைதான் என்பதை ஆணித்தரமாக நிறுவியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, “களவாடிய இசையே கர்நாடக இசை!” என்ற முழக்கத்தோடு, 1994-ஆம் ஆண்டு தஞ்சையில் முதல் தமிழ் மக்கள் இசை விழா ம.க.இ.க.வால் நடத்தப்பட்டது.

2007 வரை தொடர்ந்த பண்பாட்டுப் போர்

1994-இல் “களவாடிய இசையே கர்நாடக இசை!” என்ற முழக்கத்துடன் தொடங்கிய தமிழ் மக்கள் இசை விழா, அதன் பின்னர் ஒவ்வொரு காலகட்டத்திலும் அன்றைய அரசியல், பொருளாதார, பண்பாட்டு தாக்குதல்களை மையமாகக் கொண்டு பல்வேறு தலைப்புகளில் நடைபெற்றது. 2007-ஆம் ஆண்டு “தனியார்மயம்–தாராளமயம்–உலகமயமாக்கல் (GATT/WTO): விடுதலைப் போரின் வீர மரபு!” என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இசை விழா, அந்தக் கட்டத்தின் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

இடைவெளியும் களப் போராட்டங்களும்

2007-க்குப் பிறகு, இந்தியச் சமூகத்தின் மீது ஏவப்பட்ட எண்ணற்ற பொருளாதார, சமூகத் தாக்குதல்களை எதிர்த்துக் களப் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ம.க.இ.க.விற்கும் அதன் தோழமை அமைப்புகளுக்கும் ஏற்பட்டது:

கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டங்கள், பணமதிப்பிழப்பு (Demonetization), ஜி.எஸ்.டி (GST) வரி விதிப்பு எதிர்ப்பு இயக்கங்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடுவதற்கான மக்கள் போராட்டங்கள், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் உரிமைக்கான போராட்டங்கள் எனத் தீவிரமான களப் போராட்டங்களால், தமிழ் மக்கள் இசை விழாவைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் உருவானது.

கீழடியும் தமிழ் மக்கள் இசை விழாவும்!

மத்தியில் பாசிச மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, “ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல; பார்ப்பனர்களே நாட்டின் பூர்வ குடிகள்; சரஸ்வதி நாகரிகம்தான் இந்தியாவின் வேத நாகரிகம்” என்று கற்பனைக் கதைகளை உருவாக்கி வரலாற்றுத் திரிபுவாதத்தைச் செய்து வருகிறது.

ஆனால், கீழடி, சிவகளை, கொடுமணல் அகழ்வாய்வுகள், இந்திய வரலாறு தென்னகத்தின் நதிக்கரைகளில் இருந்தே தொடங்குகிறது என்பதையும், அது வேத நாகரிகத்திற்கு முந்தைய மதச்சார்பற்ற நகர நாகரிகம் என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன!

கீழடி, சிவகளை, கொடுமணல் போன்ற அகழாய்வுகள், தென்னகத்தின் தொன்மையான நகர நாகரிகத்தை புதிய அறிவியல் ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. இந்திய வரலாற்றைப் பற்றிய நிலைநிறுத்தப்பட்ட பல கருத்துகளை மறுபரிசீலனை செய்யவும் அவை தூண்டியுள்ளன.

இந்த வரலாற்று உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில்தான் இந்த ஆண்டின் தமிழ் மக்கள் இசை விழா நடைபெறுகிறது.

அதன் முழக்கம்:
  • கீழடியை உயர்த்திப் பிடிப்போம்!
  • வேத நாகரிகத்தைத் துரத்தியடிப்போம்!
  • இந்திய வரலாற்றை தென்னகத்திலிருந்து எழுதுவோம்!
என்கிற முழக்கத்தின் அடிப்படையில், மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக தமிழ் மக்கள் இசை விழா நடைபெற உள்ளது.
அழைப்பு!
இது வெறும் பொழுதுபோக்கு இசை நிகழ்ச்சியல்ல; உழைக்கும் மக்களின் பண்பாட்டுப் போர் முழக்கம்! சாதி ஏற்றத்தாழ்வுகளையும், மதவெறியையும் இந்திய மண்ணில் புகுத்தி, நாட்டைப் பிளவுபடுத்தும் சனாதனப் பண்பாட்டை வீழ்த்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை அல்லவா?
நாள்: ஆகஸ்ட் 22, 2026
இடம்: தஞ்சாவூர்
விழா சிறக்கத் தாராளமாக நிதி தாரீர்!
வரலாற்றை மீட்கும் இந்தப் பண்பாட்டுப் போரில் உங்கள் பங்களிப்பையும் பதிவு செய்யுங்கள்!
தமிழ்மணி
(மக்கள் அதிகாரம் தளத்தில் வெளியான கட்டுரை)

Wednesday, 5 August 2026

சகிப்பின்மையால் சிக்கித் தவிக்கும் தமிழ் தர்க்க மரபு!

கருத்து மோதல்களால் வளர்ந்த மண்... கருத்துகளைத் தாங்க முடியாத நிலை ஏன்?

தமிழர் நாகரிகத்தின் பெருமை என்ன என்று கேட்டால், அதன் இலக்கியச் செல்வத்தையும் கலை மரபையும் மட்டுமல்ல; தர்க்கம் செய்யத் தயங்காத சிந்தனை மரபையும் நாம் பெருமையாகச் சொல்ல வேண்டும்.

ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையிலான சிந்தனை மோதல்கள், பௌத்தம்–சமணம்–சைவம்–வைணவம் ஆகியவற்றுக்கிடையே நிகழ்ந்த கருத்துப் போர்கள், சித்தர்களின் மறுப்புக் குரல்கள், பக்தி இலக்கியங்களின் எதிர்வினைகள்—இவை அனைத்தும் தமிழ்ச் சமூகத்தில் கருத்து வேறுபாடுகளுக்கான இடம் இருந்ததையே காட்டுகின்றன.

புராணக் கதையாக இருந்தாலும், "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!" என்ற நக்கீரரின் உறுதியான நிலைப்பாடு, அதிகாரத்திற்குப் பணிவதைவிட உண்மைக்காக வாதிடும் தமிழரின் மனப்பாங்கைச் சின்னமாகக் காட்டுகிறது.

அப்படிப்பட்ட தர்க்க மரபைக் கொண்ட சமூகத்தில், இன்று ஏன் கருத்து வேறுபாட்டையே சகிக்க முடியாத மனநிலை உருவாகியுள்ளது?

கருத்து வேறுபாடு இயற்கையானது

உலகை நாம் அனைவரும் ஒரே மாதிரியாகப் பார்க்கவில்லை. ஒரே நிகழ்வை பத்து பேர் பத்து விதமாகப் புரிந்துகொள்வார்கள். அனுபவங்களும் அறிவும் வாழ்க்கைச் சூழலும் மாறுபடும் போது கருத்துகளும் மாறுபடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

அதனால்தான் ஒரே அரசியல் இயக்கத்திற்குள்ளும் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன; ஒரே மதத்திலும் பல பிரிவுகள் உருவாகின்றன; ஒரே தத்துவத்தைப் பின்பற்றுபவர்களுக்குள்ளும் விவாதங்கள் தொடர்கின்றன.

எனவே, கருத்து வேறுபாடு என்பது சமூகத்தின் பலவீனம் அல்ல; அதன் உயிரோட்டத்தின் அடையாளம்.

சமூக ஊடகங்கள்: சிந்தனை மேடையா? சினத்தின் மேடையா?

ஒருகாலத்தில் கருத்து மோதல்கள் நூல்களிலும் இதழ்களிலும் நடைபெற்றன. பதிலளிக்க கால அவகாசம் இருந்தது; சிந்தித்து எழுதும் வாய்ப்பும் இருந்தது.

இன்று சமூக ஊடகங்கள் அந்த இடைவெளியை அழித்துவிட்டன. ஒரு கருத்து பதிவான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அதைப் படிக்கிறார்கள்; அதே வேகத்தில் எதிர்வினைகளும் குவிகின்றன.

இது அறிவியல் மனிதனுக்குத் தந்த மிகப் பெரிய ஜனநாயக வாய்ப்பு.

ஆனால், அந்த வாய்ப்பை உண்மையைத் தேடும் தர்க்க மேடையாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பல இடங்களில் தனிநபர் வெறுப்பு, வசை, அவதூறு, காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றின் வெளிப்பாடாக மாற்றியிருப்பது வருத்தமளிக்கிறது.

தர்க்கத்தின் நோக்கம் வெற்றியல்ல; உண்மை

நவீன தொழிற்சாலைகளில் சிக்கலான உற்பத்திப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு Brainstorming என்ற கூட்டுச் சிந்தனை முறை பயன்படுத்தப்படுகிறது.

பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஆய்வு செய்யப்படுகிறது. தவறுகள் நீக்கப்படுகின்றன. சிறந்த தீர்வு தேர்ந்தெடுக்கப்படுகிறது.

சமூக விவாதங்களும் இப்படித்தான் இருக்க வேண்டும்.

"என் கருத்து மட்டுமே சரி" என்பதை நிரூபிப்பதற்காக அல்ல; "உண்மை எது?" என்பதைக் கண்டறிவதற்காக.

நேரில் சந்தித்த சகிப்பின்மை

இந்தச் சகிப்பின்மையை நான் பலமுறை நேரடியாக அனுபவித்திருக்கிறேன்.

ஒரு அரசியல் நிகழ்வைப் பற்றி எழுதிய பதிவுக்கு, என்னுடன் பல ஆண்டுகள் ஒரே ஆலையில் பணியாற்றிய நண்பர் ஒருவர், எனது கருத்தை மறுப்பதற்கான தர்க்கத்தை முன்வைக்கவில்லை. அதற்குப் பதிலாக, ஒருமையில் இழிவாக அழைத்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

மற்றொரு வாட்ஸ்அப் குழுவில், "உங்கள் கருத்துகளை வேறு இடத்தில் பதிவு செய்யுங்கள்; இங்கே வேண்டாம்" என்று கூறப்பட்டதால் வெளியேறினேன்.

இன்னொரு குழுவில், "அரசியலும் பகுத்தறிவும் பேசக்கூடாது" என்ற மறைமுகத் தடை விதிக்கப்பட்டதால் அங்கிருந்தும் விலகினேன்.

இவர்கள் யாரும் முகம் தெரியாத சமூக ஊடகப் பயனர்கள் அல்ல. பல ஆண்டுகள் என்னோடு பணியாற்றிய நண்பர்களே.

முகம் தெரிந்தவர்களிடமே இந்த நிலை என்றால், முகம் தெரியாத சமூக ஊடக உலகில் தனிநபர் தாக்குதல்கள் அதிகரிப்பது ஆச்சரியமல்ல.

கருத்தை எதிர்கொள்வோமா? கருத்தாளரைத் தாக்குவோமா?

எந்தக் கருத்தும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல.

எனது எழுத்துகளும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஆனால், கருத்துக்கு எதிராக கருத்தை வைப்பதற்குப் பதிலாக, கருத்தாளரை இழிவுபடுத்துவது, அவதூறு செய்வது, "இதைப் பேசக்கூடாது" என்று தடை விதிப்பது—இவை தர்க்கத்தின் மொழியல்ல; சகிப்பின்மையின் மொழி.

ஒரு சமூகத்தின் அறிவாற்றலை அளப்பது, அது எத்தனை பேரை மௌனமாக்குகிறது என்பதனால் அல்ல; எத்தனை மாறுபட்ட கருத்துகளை அமைதியாகக் கேட்கிறது என்பதால்தான்.

தமிழ் தர்க்க மரபை நாம் இழந்துவிட்டோமா?

சங்க காலத்திலிருந்து சித்தர்கள் வரை, தமிழ் சிந்தனை மரபு பல்வேறு குரல்களைத் தாங்கி வளர்ந்தது.

ஆனால் இன்று, கருத்து மாறுபாடு தோன்றியவுடனேயே, "இதைப் பேசாதே", "அந்தக் குழுவில் வராதே", "உன் கருத்துக்கு இடமில்லை" என்ற மனநிலை பரவி வருகிறது.

இந்தப் போக்கு தொடர்ந்தால், நாம் இழப்பது ஒரு தனிநபரின் கருத்துரிமையை மட்டும் அல்ல; ஆயிரம் ஆண்டுகளாக உருவான தமிழ் தர்க்க மரபையே.

முடிவுரை

ஒரு சமூகத்தின் வலிமை, அனைவரும் ஒரே மாதிரி சிந்திப்பதில் இல்லை; மாறுபட்ட கருத்துகளுடன் கூட ஒன்றாக வாழக் கற்றுக்கொள்வதில்தான் இருக்கிறது.

கருத்து வேறுபாட்டை எதிரியாக அல்ல, சிந்தனையின் வாய்ப்பாகப் பார்க்கும் பண்பாடு மீண்டும் உருவாக வேண்டும்.

தர்க்கம் என்பது வெற்றி பெறுவதற்கான ஆயுதமல்ல; உண்மையை நோக்கி மனிதன் மேற்கொள்ளும் கூட்டுப் பயணம்.

அந்தப் பயணத்தை வெறுப்பாலும் வசையாலும் முடக்காமல், அறிவாலும் நாகரிகத்தாலும் தொடரச் செய்வதே தமிழ் மரபிற்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும்.

ஊரான் @ பொன். சேகர்

Tuesday, 4 August 2026

திருமந்திரமும் மெய்ஞ்ஞானமும்: ஒரு பகுத்தறிவுப் பார்வை


முகவுரை

தமிழ் இலக்கிய மரபில் ஆழமான உவமைகளும், செறிவான உருவகங்களும் நிறைந்துள்ளன. அவற்றின் இலக்கிய அழகை இரசிப்பது ஒரு புறமெனில், அவற்றின் தத்துவக் கருத்துகளை விமர்சனப்பூர்வமாக ஆராய்வது இன்னொரு புறம். இவ்விரண்டையும் ஒன்றாகக் கலக்காமல் அணுகுவதுதான் பகுத்தறிவின் அடிப்படை.

திருமூலர் பாடியுள்ள பின்வரும் திருமந்திரப் பாடல், தமிழறிஞர்களாலும் ஆன்மீகவாதிகளாலும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது.

"மரத்தை மறைத்தது மாமத யானை;
மரத்தின் மறைந்தது மாமத யானை;
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்;
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே."
(திருமந்திரம் – 2290)

சமீபத்தில் நண்பர் ஒருவர் இந்தப் பாடலை மேற்கோள் காட்டி, "மெய்ஞ்ஞானிக்கு உலகம் தெரியாது; இறைவன் மட்டுமே தெரிவான். அஞ்ஞானிக்கு உலகம் மட்டுமே தெரியும்" என்று எழுதியிருந்தார்.

இந்த விளக்கம் தர்க்க ரீதியாகவும், அறிவியல் நோக்கிலும் எந்த அளவுக்கு பொருந்துகிறது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

1. உவமையின் அழகு; கருப்பொருளின் தத்துவம்

மரத்தால் செய்யப்பட்ட யானைச் சிலையை ஒருவர் பார்க்கிறார்.
  • ஒரு கோணத்தில் அது யானை — அதன் வடிவம்.
  • மற்றொரு கோணத்தில் அது மரம் — அதன் பருப்பொருள்.
இரண்டுமே உண்மைகள். இரண்டையும் நமது ஐம்புலன்களால் அறிய முடிகிறது. மரம் என்ற பொருள் இல்லாமல் யானை என்ற வடிவம் உருவாகாது.
இவ்வளவு வரை இது ஒரு சிறந்த இலக்கிய உவமை.

ஆனால், இந்த உவமையை அடிப்படையாகக் கொண்டு "கண்ணுக்குத் தெரியும் உலகம் மாயை; கண்ணுக்குத் தெரியாத பரம்பொருளே உண்மை" என்று வாதிடும்போது அது இலக்கிய விளக்கத்தைத் தாண்டி ஒரு தத்துவ நிலைப்பாடாக மாறுகிறது.

இத்தகைய நிலைப்பாட்டையே தத்துவத்தில் கருத்துமுதல்வாதம் (Idealism) என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது, பருப்பொருள் உலகத்தை விட கருத்து, ஆன்மா அல்லது இறை உணர்வே அடிப்படையான உண்மை என்று கருதும் அணுகுமுறை.

2. மெய்ஞ்ஞானி யார்?

"மெய்" என்ற தமிழ்ச்சொல்லுக்கு உடல், உண்மை, நிஜம் போன்ற பல பொருள்கள் உள்ளன. இக்கட்டுரையில் "மெய்" என்பதை உண்மையான புற உலகம் (Objective Reality) என்ற பொருளில் எடுத்துக்கொள்கிறேன்.

அதன்படி,
  • மெய் = உண்மை
  • ஞானம் = அறிவு
எனவே, மெய்ஞ்ஞானி என்றால் உண்மையை அறிந்தவர் என்பதே நேரடிப் பொருள்.

இயற்கையின் விதிகளை ஆராய்ந்து,
  • அணுவின் அமைப்பைக் கண்டறிவதும்,
  • நோய்களின் காரணங்களைக் கண்டுபிடிப்பதும்,
  • விண்வெளியின் இயக்கத்தை விளக்குவதும்,
  • புதிய அறிவியல் உண்மைகளை நிரூபிப்பதும்
இந்த அனைத்தையும் செய்பவர் விஞ்ஞானி.

அறிவியல் அளவுகோலின்படி பார்க்கும்போது, இயற்கையின் உண்மைகளை ஆதாரங்களுடன் விளக்குபவரே உண்மையான மெய்ஞ்ஞானி.

3. மெய்ஞ்ஞானி, அஞ்ஞானி, விஞ்ஞானி

ஆன்மீக விளக்கங்களில் பொதுவாக,
  • கண்ணுக்குத் தெரியும் உலகம் நிலையற்றது.
  • கண்ணுக்குத் தெரியாத பரம்பொருளே நிலையானது.
என்று கூறப்படுகிறது.

ஆனால் அறிவியல் முறையில் ஒரு உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு,
  1. ஐம்புலன்கள் தரும் தகவல்கள்,
  2. பரிசோதனைகள்,
  3. அளவீடுகள்,
  4. மீண்டும் மீண்டும் நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள்
ஆகியவையே அடிப்படையாகின்றன.

அறிவியல் சான்றுகளால் நிரூபிக்க முடியாத ஒன்றை உண்மை என்று ஏற்றுக்கொள்வது அறிவியல் அணுகுமுறை அல்ல.

எனவே, பருப்பொருள் உலகத்தை மறுத்து, நிரூபிக்க முடியாத ஆன்மீகக் கருத்துகளையே இறுதியான உண்மையாக வலியுறுத்துபவர்களை அறிவியல் அளவுகோலின்படி "மெய்ஞ்ஞானிகள்" என்று அழைப்பது பொருத்தமானதல்ல.

4. "அக உணர்வு" என்ற வாதம்

ஆன்மீக உரைகளில் அடிக்கடி ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.
"இதைப் பரிசோதித்து நிரூபிக்க முடியாது; தியானத்தின் மூலம் மட்டுமே உணர முடியும்."
ஆனால் அறிவியலில் எந்தக் கண்டுபிடிப்பாக இருந்தாலும்,
  • பிறராலும் சோதிக்கப்பட வேண்டும்.
  • ஒரே முடிவு மீண்டும் மீண்டும் கிடைக்க வேண்டும்.
  • ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இதுவே அறிவியல் முறை.

தனிநபரின் உள்ளுணர்வு மட்டுமே ஆதாரமாக இருக்கும்போது, அந்த அனுபவத்தை பொதுவான உண்மையாக நிறுவ முடியாது.
அதனால், ஆன்மீக அனுபவம் என்பது ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கையாக இருக்கலாம்; ஆனால் அதை அறிவியல் உண்மையாகக் கருத முடியாது.

முடிவுரை

திருமந்திரம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் உயர்ந்த கவிதை நயமும், அழகிய உவமைகளும் நிறைந்துள்ளன. அவற்றை இலக்கியப் படைப்புகளாக இரசிப்பதில் எந்தத் தடையும் இல்லை.

ஆனால், இலக்கிய உருவகங்களை அப்படியே உலகின் அறிவியல் விளக்கமாக எடுத்துக்கொள்வது பகுத்தறிவிற்கு ஏற்புடையதல்ல.
  • அணுவின் அமைப்பைக் கண்டறிந்தவரும்,
  • கிருமிகளைக் கண்டுபிடித்து மருத்துவத்தை முன்னேற்றியவரும்,
  • ஈர்ப்பு விசையையும் விண்வெளியின் இயக்க விதிகளையும் விளக்கியவரும்,
  • இயற்கையின் உண்மைகளை ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டியவர்களே மனித அறிவின் உண்மையான முன்னோடிகள்.
இலக்கியத்தை இலக்கியமாகவும், தத்துவத்தை விமர்சனப் பார்வையுடனும், அறிவியலை ஆதாரங்களின் அடிப்படையிலும் அணுகும் பண்பே நவீன சமூகத்தின் அடையாளமாகும்.

மனித அறிவை முன்னேற்றுவது நிரூபிக்கக்கூடிய அறிவே; வெறும் நம்பிக்கை அல்ல. அறிவியல் ஆதாரங்களால் சோதிக்கவும், விவாதிக்கவும், திருத்திக்கொள்ளவும் முடியும் என்பதில்தான் அதன் வலிமை இருக்கிறது. அதுவே பகுத்தறிவின் அடிப்படை; அதுவே உண்மையான மெய்ஞ்ஞானத்திற்கான பாதையாகும்.

ஊரான்

Monday, 3 August 2026

குடும்பங்கள் ஏன் சிதைகின்றன? — ஒரு வரலாற்றுப் பார்வை!

முகவுரை

இன்று குடும்ப உறவுகள் பலவீனமடைந்து வருகின்றன; விவாகரத்துகள் அதிகரிக்கின்றன; முதியோர் இல்லங்கள் பெருகுகின்றன; குழந்தைகள் தனிமையிலும் மின்னணுக் கருவிகளின் உலகிலும் வளர்கின்றனர். இதைக் கண்டு பலர், "மனிதர்களிடம் அன்பும் பண்பும் குறைந்துவிட்டன" என்று வருத்தப்படுகிறார்கள்.

இது உண்மையின் ஒரு பகுதி மட்டுமே.

இந்த மாற்றங்களை வெறும் தனிநபர் ஒழுக்கச் சிக்கலாகவோ அல்லது பண்பாட்டு வீழ்ச்சியாகவோ மட்டும் பார்க்க முடியாது. குடும்ப அமைப்புகளும் மனித உறவுகளும், அவை இயங்கும் சமூகத்தின் பொருளாதார அடித்தளத்தோடு நெருக்கமாகப் பிணைந்துள்ளன. எனவே, "குடும்பங்கள் ஏன் சிதைகின்றன?" என்ற கேள்விக்கான விடையை வரலாறும் பொருளியலும் இணைந்த பார்வையில் தேட வேண்டியுள்ளது.


1. மனிதன் ஏன் கூடி வாழ்ந்தான்?

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்பது ஒரு ஒழுக்கப் போதனை அல்ல; அது மனித வரலாற்றின் அனுபவம்.

ஆதி மனிதன் தனியாக வாழ முடியவில்லை. இயற்கையின் சீற்றங்களையும், கொடிய விலங்குகளையும் எதிர்கொண்டு உயிர்வாழ வேண்டுமென்றால், கூட்டமாக வாழ்வதும் கூட்டாக உழைப்பதும் அவசியமாக இருந்தது.

வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், இருப்பிடங்களை உருவாக்குதல் போன்ற அனைத்தும் கூட்டு உழைப்பின் அடிப்படையில்தான் நடைபெற்றன.

எனவே, மனித சமுதாயத்தின் தொடக்கத்தில் அன்பு, பகிர்வு, ஒத்துழைப்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை போன்றவை வெறும் அறநெறிகளாக அல்ல; உயிர்வாழ்வதற்கான சமூகத் தேவைகளாக உருவாயின.

2. சொத்துடமை தோன்றியபோது குடும்பத்தின் இயல்பும் மாறியது

காலப்போக்கில் உபரி உற்பத்தியும் தனியார் சொத்தும் உருவான பிறகு மனித சமூகம் மாறத் தொடங்கியது.

கூட்டு உழைப்பின் இடத்தை தனிப்பட்ட சொத்து பிடித்தது.

உறவுகளும் படிப்படியாக சொத்து, வாரிசுரிமை, செல்வம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இயங்கத் தொடங்கின.

இன்று மனிதன் இயற்கையோடு போராடுவதைக் காட்டிலும், சொத்திற்காக மனிதனோடு மனிதன் போராடும் நிலை உருவாகியுள்ளது.
  • அன்று — கூட்டு உழைப்பு மனிதர்களை இணைத்தது.
  • இன்று — தனியார் சொத்துடமை மனிதர்களைப் பிரிக்கிறது.
3. தனிக்குடும்பம் — ஒரு வாழ்க்கைமுறை அல்ல; ஒரு பொருளாதார அமைப்பின் விளைவு

இன்றைய தனிக்குடும்ப (Nuclear Family) முறை தற்செயலாக உருவானதல்ல.

தொழிற்புரட்சிக்குப் பிறகு முதலாளித்துவ உற்பத்தி முறை, வேலை தேடி மக்கள் இடம்பெயர்வதும், நகரமயமாதலும், வேலை நேர அழுத்தமும் ஆகியவற்றின் காரணமாக கூட்டுக் குடும்ப அமைப்பு சுருங்கியது.

"நாமிருவர்; நமக்கொருவர்" என்ற குடும்ப அமைப்பு வசதிகளை அளித்தாலும், பல புதிய சமூகப் பிரச்சினைகளையும் உருவாக்கியது.
  1. குழந்தைகள் பெற்றோருடன் செலவிடும் நேரம் குறைகிறது
  2. மின்னணுக் கருவிகள் குழந்தைகளின் தோழர்களாக மாறுகின்றன.
  3. சகோதர உறவுகள், உறவினர் தொடர்புகள் குறைகின்றன.
  4. பகிர்ந்து வாழும் அனுபவம் இல்லாததால் பொறுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, சமூகப் பொறுப்பு போன்றவை இயல்பாக வளர வாய்ப்பு குறைகிறது.
4. திருவள்ளுவர் கூறிய "அன்பு" எங்கே குறைகிறது?

திருவள்ளுவர் கூறுகிறார்:

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு."

இந்தக் குறள் இன்று இன்னும் ஆழமான பொருளை நினைவூட்டுகிறது.

"எனது வீடு."
"எனது குடும்பம்."
"எனது சொத்து."
"எனது குழந்தை."

என்ற உடைமை மனப்பான்மை சமூகத்தில் வலுப்பெறும் போது, அன்பும் பகிர்வும் இயல்பாகச் சுருங்குகின்றன.

தனியார் சொத்துடமைச் சமூகத்தில் அன்புகூட நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக மாறுகிறது.
  • சொத்து இருந்தால் மதிப்பு.
  • பதவி இருந்தால் மரியாதை.
  • வசதி இருந்தால் உறவு.
இந்த நிலை மனித உறவுகளின் உள்ளடக்கத்தையே மாற்றுகிறது.

5. குழந்தைகளும் முதியோர்களும் ஏன் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?

இந்த மாற்றத்தின் மிகப் பெரிய தாக்கம் இரண்டு தரப்பினர்மீது விழுகிறது.

குழந்தைகள்
  1. பெற்றோருடன் செலவிடும் நேரம் குறைகிறது
  2. திரைகள் (Screen) புதிய நண்பர்களாக மாறுகின்றன.
  3. காத்திருப்பது, பகிர்வது, விட்டுக்கொடுப்பது போன்ற சமூக அனுபவங்கள் குறைகின்றன.
முதியோர்
  1. குடும்பத்தின் பொருளாதார உற்பத்தியில் நேரடிப் பங்கு குறைந்தவுடன், அவர்கள் "சுமை" எனக் கருதப்படும் நிலை உருவாகிறது.
  2. முதியோர் இல்லங்கள் அதிகரிப்பதும், தனிமையில் வாழும் முதியோர் பெருகுவதும் இதன் வெளிப்பாடுகளாகும்.
6. தீர்வு வெறும் ஒழுக்கப் போதனையா?

குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும்.

நற்பண்புகளை கற்றுக்கொடுக்க வேண்டும்.

உறவினர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.

இவை அனைத்தும் மிகவும் அவசியமானவை.

ஆனால், இவை மட்டும் போதுமான தீர்வாக அமையாது.

ஏனெனில், பிரச்சினையின் வேர் தனிநபர்களில் இல்லை; மனிதர்களை தனிமைப்படுத்தும் சமூக–பொருளாதார அமைப்பிலும் உள்ளது.

எனவே, "எனது" என்ற உடைமை மனநிலைக்கு மாற்றாக "நமது" என்ற சமூக உணர்வை வளர்க்க வேண்டும்.

பகிர்வும், ஒத்துழைப்பும், கூட்டு உழைப்பும், சமூகப் பொறுப்பும் மீண்டும் மனித வாழ்க்கையின் மையமாக வர வேண்டும்.

நிறைவுரை

குடும்பங்கள் சிதைவதற்குக் காரணம் மனிதர்கள் திடீரென்று அன்பற்றவர்களாக மாறிவிட்டார்கள் என்பதல்ல.
மனித உறவுகளின் மீது சொத்துடமை மையமான சமூக அமைப்பு செலுத்தும் தாக்கத்தைப் புரிந்துகொள்ளாமல், குடும்பச் சிக்கல்களுக்கு முழுமையான தீர்வைக் காண முடியாது.

நல்ல குடும்பங்கள் உருவாக வேண்டுமென்றால், நல்ல மனிதர்கள் மட்டும் போதாது; நல்ல சமூகச் சூழலும் தேவை.

மனிதனை மையமாகக் கொண்ட, பகிர்வையும் கூட்டு வாழ்வையும் உயர்த்திப் பிடிக்கும் சமூக உணர்வே, குடும்ப உறவுகளையும் மனித அன்பையும் மீண்டும் வலுப்படுத்தும் அடித்தளமாக அமையும்.

தமிழ்மணி

Saturday, 1 August 2026

வேத நாகரிகத்தைத் துரத்தும் கீழடி!

முகவுரை

ந்தியாவின் தோற்றம் மற்றும் அதன் பழங்கால நாகரிகங்கள் பற்றிய விவாதங்கள் எப்போதும் உலக அளவில் உற்றுநோக்கப்படுபவை. கடந்த சில தசாப்தங்களாக, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட “சிந்து சமவெளி நாகரிகத்திற்கு” (Indus Valley Civilization) “சரஸ்வதி நாகரிகம்” என்று மறுபெயரிடவும், இந்திய நாகரிகத்தின் அடித்தளத்தை “வேத நாகரிகம்” என்று நிறுவவும் சங் பரிவார அமைப்புகளால் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், நவீன நிலவியல் (Geology), தொல்லியல் (Archaeology), மொழியியல், மரபணு அறிவியல் (Genetics) மற்றும் தமிழகத்தின் கீழடி அகழ்வாய்வு முடிவுகள் மேற்கண்ட வாதங்களுக்கு வலுவான சவாலை முன்வைக்கின்றன.


1. ‘சரஸ்வதி நாகரிகம்’ என்ற பெயர் மாற்றம்: புவியியல் உண்மையும் வரலாற்று முரண்பாடும்

பஞ்சநதிகள் (Punjab – ஐந்து நதிகள்) ஓடும் சிந்து நதிப் பகுதியில்  தற்போதைய வறண்டு போன காகர்-ஹக்ரா (Ghaggar-Hakra) படுகைகளில் பண்டைய நதிப்பாதைகள் இருந்ததாக (palaeochannels) ISRO-வின் செயற்கைக்கோள் ஆய்வுகள் அடையாளம் காட்டும் பண்டைய நதிப்பாதைகளுக்கும், மனுதர்மம் மற்றும் ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் சரஸ்வதி நதிக்கும் நேரடியான தொடர்பு இருப்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை [1].

தொல்லியல் புள்ளிவிவரங்களின்படி, சிந்து சமவெளி நாகரிகத்தின் 60%-க்கும் அதிகமான நகரங்கள் (ராகிகர்ஹி, காலிபங்கன், பானவளி உட்பட) இந்த காகர்-ஹக்ரா நதிப்படுகையில்தான் அமைந்துள்ளன [2].

நதிப்படுகையின் அடிப்படையில் ஒரு நாகரிகத்திற்குப் பெயரிடலாம் என்ற தொல்லியல் விதியின்படி, இதை ‘சரஸ்வதி நாகரிகம்’ என்று அழைக்கலாம் என சனாதனத் தரப்பு வாதிடுகிறது.

இருப்பினும், இந்தப் பெயர் மாற்றம் வரலாற்று ரீதியாகப் பிழையானது. ஏனெனில்:

  • கால முரண்பாடு (Anachronism): சிந்து சமவெளி மக்கள் செழித்து வாழ்ந்த முதிர்ந்த காலம் கி.மு. 2600 முதல் கி.மு. 1900 வரையாகும். ஆனால், ரிக் வேதத்தின் பழைய பகுதிகள் பொதுவாக கி.மு. 1500–1200 காலப்பகுதியைச் சேர்ந்ததாகவும், மனு ஸ்மிருதி (மனுதர்மம்) கி.மு. 2-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டதாகவும் பல வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர் [3].
  • முறையற்ற தொல்லியல் அணுகுமுறை: காலத்தால் முந்தைய, மத அடையாளங்கள் அற்ற ஒரு நாகரிகத்திற்கு, பிற்காலத்தில் எழுதப்பட்ட மத நூல்களின் (வேதங்கள்) பெயரையோ அல்லது அதில் வரும் நதியின் பெயரையோ சூட்டுவது அறிவியல் பூர்வமான தொல்லியல் முறைக்கு எதிரானது [4].
2. சரஸ்வதி நதி முதல் ‘கல்வித் தெய்வம்’ வரை: ஒரு சொல்லின் வரலாற்றுப் பரிணாமம்

இன்றைய சனாதனவாதிகள் நதியின் பெயரைக் கொண்டு வேத நாகரிகத்தைக் கட்டமைக்க முயலும் வேளையில், ‘சரஸ்வதி’ என்ற சொல்லின் அசல் வரலாற்றுப் பரிணாமத்தை நாம் புரிந்துகொள்வது அவசியமாகிறது [5]:

வேத நாகரிகத்தைத் துரத்தும் கீழடி!

  1. மொழியியல் தோற்றம் (Etymology – கி.மு. 2000-க்கு முன்): சமஸ்கிருதத்தில் ‘சரஸ்’ (Saras) என்றால் ‘நீர்நிலை/ஏரி’ என்றும், ‘வதி’ (Vati) என்றால் ‘கொண்டிருப்பது’ என்றும் பொருள். இதன் அசல் பொருள் “அதிக நீரைக் கொண்ட நதி” (The Flowing One) என்பதாகும். இது முழுக்க முழுக்க ஒரு நதியின் இயற்கை அமைப்பைக் குறிக்கும் சொல் [5].
  2. புவியியல் பெயர் (Geographical Identity – கி.மு. 2600 – 1900): சிந்து சமவெளி நாகரிக காலத்தில், இந்நதி வடமேற்கு இந்தியாவின் பரந்த சமவெளிப் பகுதியில் பாய்ந்ததாக பல நிலவியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அறிவியல் பூர்வமாக இதன் பெயர் ‘காகர்-ஹக்ரா’ (Ghaggar-Hakra). இக்காலகட்ட தொல்லியல் முத்திரைகளில் ‘சரஸ்வதி’ என்ற எழுத்துப் பூர்வமான பெயர் எதுவும் கிடையாது [1, 2].
  3. ரிக் வேதப் பதிவு (The Rig Vedic River – கி.மு. 1500 – 1000): வடமேற்கு இந்தியாவில் குடியேறிய பழங்குடிகளுக்கு இந்நதி வாழ்வாதாரமாக விளங்கியது. ரிக் வேதத்தின் மிகப்பழைய பகுதிகளில் இது ‘நதிதமா’ (நதிகளிலேயே மிகச்சிறந்த நதி) என்று தூய்மையான ஒரு பாயும் நதியாக மட்டுமே வர்ணிக்கப்பட்டது [3, 5].
  4. மனிதர்களின் கூட்டு நினைவும் இடப்பெயர்ச்சியும் (கி.மு. 1900 – 1500): புவித்தட்டு நகர்வுகளால் நதி வறண்டபோது, மக்கள் கங்கைச் சமவெளிக்கு இடம்பெயர்ந்தனர். அவர்கள் தங்களோடு அந்த நதியின் நினைவுகளையும், பெயரையும் தங்களின் வாய்மொழி இலக்கியங்கள் (Oral Traditions) மூலம் சுமந்து சென்றனர் [3, 5].
  5. நதி தெய்வமாக மாறிய பரிணாமம் (Deification – கி.மு. 1000 – 500): இந்நதிக்கரையில் அமர்ந்து பண்டைய முனிவர்கள் தங்களின் சிந்தனைகளை வளர்த்ததால், நதி வளம் கொடுத்து அறிவை வளர்த்ததன் குறியீடாக பிற்கால வேதங்களில் (யஜுர், அதர்வண) இந்நிதி “தூய்மையின் தெய்வம்” மற்றும் சடங்குகளுக்குரிய நதியாக மெதுவாக வழிபாட்டு நிலைக்கு உயர்ந்தது [5].
  6. கல்வித் தெய்வமாக உருமாற்றம் (Goddess of Knowledge – கி.மு. 500 – கி.பி. 300): நதி முற்றிலும் மறைந்துவிட்ட புராணக் காலத்தில், நதியின் அசல் வடிவம் மறைந்து, அது “அறிவையும் கல்வியையும் தரும் பெண் தெய்வம்” (Goddess of Knowledge/Arts) ஆக முற்றிலும் ஆன்மீக மயமாக உருவகப்படுத்தப்பட்டது [5].
  7. நவீன வரலாற்றுப் பொருத்தம் (19-ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை): பிரிட்டிஷ் புவியியலாளர்கள் வறண்ட காகர் நதிப்பாதையைக் கண்டறிந்தனர். அதன் ஒரு சிறிய கிளைக்கு உள்ளூர் மக்கள் ‘சர்சுதி’ என்று வழங்கிய பெயரைக் கொண்டு, புராணங்களில் வரும் ‘சரஸ்வதி’ நதி இதுதான் என்று பிற்கால வரலாற்று ஆசிரியர்களால் இப்பெயர் பொருத்தப்பட்டது [1, 5].

அடிநாதமான உண்மை:

முதலில் இருந்தது நதி; அந்த நதியின் பெயரே பிற்காலத்தில் கல்வித் தெய்வமாக மாறியது. வறண்டு போன ஒரு இயற்கை நதிக்கே பிற்காலத்தில் ஆன்மீகச் சாயம் பூசப்பட்டு அது கடவுளாக மாற்றப்பட்டது என்பதே மொழியியல் மற்றும் தொல்லியல் காட்டும் உண்மை [5].

3. நகர நாகரிகம் vs கிராமப்புற நாடோடிப் பண்பாடு

சிந்து சமவெளி நாகரிகத்தை ‘வேத நாகரிகம்’ என்று அழைக்க முடியாததற்குக் மிக முக்கியமான காரணம், இவ்விரண்டு பண்பாடுகளுக்கும் இடையே உள்ள தலைகீழான வாழ்வியல் முரண்பாடுகள் ஆகும் [4].

  • சிந்து சமவெளி – மேம்பட்ட நகர சமூகம்: சிந்து சமவெளி மற்றும் அதன் தொடர்ச்சியான கீழடி (வைகை சமவெளி) நாகரிகங்கள் உலகின் மிக உன்னதமான நகரமயமாக்கலுக்குச் (Urbanization) சான்றுகள் ஆகும். திட்டமிடப்பட்ட நேர்த்தியான தெருக்கள், சுட்ட செங்கற்கள், உலகமே வியக்கும் மூடிய வடிகால் அமைப்புகள் (Closed Drainage Systems), செப்பு மற்றும் தானியக் களஞ்சியங்கள் என அறிவியல் பூர்வமாக வாழ்ந்தவர்கள் இந்நகர மக்கள் [2, 6].
  • வேத காலம் – கிராமப்புற நாடோடிச் சமூகம்: ஆரம்பகால வேதக் கலாச்சாரம் என்பது அடிப்படையில் ஆடு, மாடு மேய்க்கும் (Pastoral/Rural) ஒரு நாடோடிப் பண்பாடாகும். ரிக் வேதத்தில் பெரிய நகரங்களைப் பற்றியோ, சுட்ட செங்கற்கள் பற்றியோ அல்லது மூடிய வடிகால் அமைப்புகளைப் பற்றியோ எந்தக் குறிப்புகளும் இல்லை. நகரங்களைக் கட்டத் தெரியாத, நாடோடி வாழ்க்கை வாழ்ந்த ஒரு சமூகம், உலகிற்கே நகரமைப்பைக் கற்றுக் கொடுத்த சிந்து-சமவெளி நாகரிகத்தை தங்களுடைய நாகரிகம் எனக் கூறுவது அப்பட்டமான ஒரு வரலாற்றுத் திரிபு [4].
4. உலகமே வியக்கும் ‘மதச்சார்பற்ற’ பண்பாடு (Secular Infrastructure)

பண்டைய எகிப்து அல்லது மெசொப்பொத்தேமியா நாகரிகங்களை அகழ்வாய்வு செய்த போது, அங்கு பிரம்மாண்டமான கோவில்களும், மத குருமார்களின் சிலைகளும், அரசர்களின் மம்மிகளும் மத ஆதிக்கத்தின் அடையாளங்களாகக் கிடைத்தன. ஆனால், வேதம் மற்றும் புராணங்களை இந்திய நாகரிகத்தின் அடித்தளமாகப் மாற்ற நினைப்பவர்களுக்குச் சிந்து சமவெளியும் கீழடியும் ஒரு பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளன [4, 6].

  • மத அடையாளங்கள் இல்லாமை: மொஹெஞ்சதாரோ, ஹரப்பா, ராகிகர்ஹி அல்லது தமிழகத்தின் கீழடி என எங்குத் தோண்டினாலும் எந்தவொரு பெரிய மத நிறுவனங்களோ, பிரம்மாண்டமான கோவில்கள் அல்லது வேதச் சடங்கு அமைப்புகளுக்கான உறுதியான சான்றுகள் இல்லை [2, 6].
  • மனிதநேய வாழ்வியல்: சிந்து சமவெளி மற்றும் கீழடி நாகரிகங்களின் மையப்புள்ளி கடவுளோ அல்லது மதச் சடங்குகளோ அல்ல; மாறாக மனிதர்களின் அன்றாட வாழ்க்கை, சுகாதாரம், விவசாயம், நெசவு மற்றும் வணிகம் மட்டுமே. கீழடியில் கிடைத்த சுடுமண் பொம்மைகள் கூட வழிபாட்டுக்கானவை அல்ல, அவை மக்களின் கலை வெளிப்பாடுகள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பகடைக் காய்கள் ஆகும் [6].

படிக்க: சரஸ்வதி நாகரிகத்துக்கு எங்கே ஆதாரம்? கதைவிடும் பார்ப்பனக்கூட்டம்! | இசைவிழா

வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்கள் முற்றிலும் ஆன்மீகம், வர்ணாசிரமச் சடங்குகள் மற்றும் வழிபாடுகளை முதன்மைப்படுத்துகின்றன. ஆனால், இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகள், அவர்களின் சமூக வாழ்க்கை பெரும்பாலும் உற்பத்தி, வணிகம், கைவினை மற்றும் நகர நிர்வாகத்தை மையமாகக் கொண்டிருந்ததையே காட்டுகின்றன; வேத மரபு சார்ந்த மத நிறுவனங்கள் அல்லது சடங்கு அமைப்புகளுக்கான உறுதியான தொல்லியல் சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை [4, 6].

5. மரபணு (DNA) மற்றும் மொழியியல் சான்றுகள்

2019-ல் புகழ்பெற்ற Cell அறிவியல் இதழில் வெளியான ராகிகர்ஹி (Rakhigarhi) மனித எலும்புக்கூட்டின் மரபணு (DNA) ஆய்வு முடிவுகள் இந்த விவாதத்தில் முக்கியமான அறிவியல் சான்றாக அமைந்தன [7].

  • மரபணு உண்மை: ராகிகர்ஹியில் வாழ்ந்த பண்டைய மனிதரின் மரபணுவில், வேத கால இந்தோ-ஆரியர்களுக்கே உரிய ‘ஸ்டெப்பி’ (Steppe) மரபணுப் புள்ளிகள் முற்றிலும் இல்லை. மாறாக, இது தற்போதைய தென்னாசிய மக்களின் மரபணுக் கலவையில் காணப்படும் Ancient South Asian ancestry-யுடன் தொடர்புடைய கூறுகளைக் காட்டுகிறது [7].
  • மொழியியல் தொடர்பு: சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்ட அதே வடிவவியல் குறியீடுகள் (Graffiti Marks) தமிழகத்தின் கீழடி மண்பாண்டங்களிலும் துல்லியமாகப் பொறிக்கப்பட்டுள்ளன [8].

சிந்து சமவெளி எழுத்து வடிவங்களும் கீழடியின்  தமிழ்-பிராமி (தமிழி) எழுத்துக்களும் ஒத்திருப்பதாக ஐராவதம் மகாதேவன் மற்றும் அஸ்கோ பர்போலா போன்ற ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர் [8, 9].

கீழடியில் நிலவிய எழுத்தறிவு என்பது சாதாரண மக்களும் மண்பாண்டங்களில் தங்கள் பெயரை எழுதும் அளவிற்குப் பரவலாக இருந்துள்ளது [6].

6. உண்மை வரலாறு: இடப்பெயர்ச்சியும் கலாச்சாரக் கலப்பும்

அப்படியானால் வேதங்களும் மனு தர்மமும் எப்படி உருவாயின? அதற்கான எதார்த்தமான வரலாற்றுப் பாதை இதுதான் [3, 5]:

  1. பூர்வகுடிகளின் நகரங்கள் (கி.மு. 2500 வரை): பல மொழியியல் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, சிந்து சமவெளி நாகரிக மக்கள் திராவிட மொழிக் குடும்பத்துடன் தொடர்புடையவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் காகர் மற்றும் சிந்து நதிக்கரைகளில் மேம்பட்ட நகர நாகரிகத்தை உருவாக்கியவர்களாகக் கருதப்படுகின்றனர் [2, 7, 9].
  2. இயற்கைப் பேரழிவும் இடப்பெயர்ச்சியும் (கி.மு. 1900 – 1500): புவித்தட்டு நகர்வுகளால் சட்லெஜ் மற்றும் யமுனை நதிகள் திசைமாறியதால் காகர்-சரஸ்வதி நதி படிப்படியாக வற்றியது. இதனால் மக்கள் அங்கிருந்து கிழக்கு நோக்கி கங்கைச் சமவெளிக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடம் பெயர்த்துள்ளனர். அவர்கள் பிற்காலத்தில் தெற்கு நோக்கியும் புலம் பெயர்ந்து வைகை, பொருநை (கீழடி, ஆதிச்சநல்லூர்) நதிக்கரைகளில் வாழ்ந்த மக்களோடு ஒன்று கலந்திருக்கக்கூடும்.
  3. கீழடியின் காலம் கி.மு. 580 என்று கணிக்கப்பட்டிருப்பது, சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் சங்ககாலத் தென்னக நகரமயத்திற்கும் இடையிலான தொடர்பை ஆய்வு செய்யும் ஒரு முக்கியமான வாய்ப்பை கீழடி உருவாக்கி உள்ளது. [1, 6].
  4. கலாச்சாரக் கலப்பு (கி.மு. 1500-க்குப் பின்): வடமேற்கு இந்தியா கைவிடப்பட்ட காலகட்டத்தில், மத்திய ஆசியாவிலிருந்து ஆரிய மொழி பேசும் மக்கள் இந்தியாவிற்குள் குடியேறினர். அவர்கள் கங்கைச் சமவெளியில் ஏற்கனவே குடியேறியிருந்த சிந்து சமவெளி மக்களின் சந்ததியினருடன் கலந்தனர். இந்த ஆரிய மொழிப் பேசும் குழுக்களுக்கும், இந்தியப் பூர்வகுடி மக்களுக்கும் இடையிலான நீண்டகால கலாச்சாரத் தொடர்புகளின் பின்னணியில், வேத புராணங்களும் பின்னர் தர்மசாஸ்திரங்களும் உருவெடுத்ததாக பல வரலாற்றாசிரியர்கள் விளக்குகின்றனர் [3, 5].

முடிவுரை

சுருக்கமாகக் கூறின்,

மனுதர்மத்தில் காணப்படும் எல்லை வரையறைகள் (2:17-21) பண்டைய வடமேற்கு இந்தியப் புவியியல் நினைவுகளின் புராணப் பிரதிபலிப்பாக சில வரலாற்றாசிரியர்களால் விளக்கப்படுகின்றன [3, 5]. நதி மறைந்தாலும், இடம்பெயர்ந்த மக்களின் நினைவாற்றல் மூலமாகப் பண்பாடு கங்கைச் சமவெளியிலும் தென்னகத்திலும் தொடர்ந்தது.

முதலில் பாய்ந்தது இயற்கை நதி; அது மறைந்த பின் அதை தெய்வமாக்கினார்கள். ஆனால், அந்த நதிக்கரையில் வாழ்ந்த மக்களின் மேம்பட்ட நகர வாழ்க்கையையும் உழைப்பையும் “வேத நாகரிகம்” என்று அழைப்பது வரலாற்றுத் திரிபாகும்.

இந்தியாவின் முதல் நகரமயமாக்கலை நிகழ்த்திய, மத அடையாளங்களற்ற, மேம்பட்ட திராவிடப் பூர்வகுடிகளின் சிந்து சமவெளி-கீழடி நாகரிகத்தை, பிற்காலத்தில் வந்தமர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நாடோடிப் பண்பாடான “வேத நாகரிகம்” என்று அழைப்பதை பல தொல்லியலாளர்கள் ஏற்கவில்லை. அவ்வாறு அழைக்க முயல்வது ஒரு வரலாற்றுப் பிழை. இந்திய நாகரிகத்தின் உண்மையான அடித்தளம் என்பது பன்முகத்தன்மையும், மதச்சார்பின்மையும் கொண்ட பூர்வகுடிகளின் உழைப்பால் உருவானதே தவிர, அது வேதங்களிலிருந்து முளைத்தது அல்ல!

  • தமிழ்மணி

சான்றாதாரங்கள் மற்றும் மேற்கோள் நூல்கள் (References & Citations)

  • [1] ISRO & Geological Survey: Bhadra, B. K., et al. (2009). “Remote sensing based study of palaeochannels in North-Western India.” ISRO Research Report. (வறண்ட காகர்-ஹக்ரா நதிப்பாதை பற்றிய இஸ்ரோவின் செயற்கைக்கோள் தரவு).
  • [2] Possehl, Gregory L. (2002). The Indus Civilization: A Contemporary Perspective. AltaMira Press. (சிந்து சமவெளி நகரங்களின் பரவல் பற்றிய தொல்லியல் தரவுகள்).
  • [3] Thapar, Romila (2004). Early India: From the Origins to AD 1300. University of California Press. (வேதக் காலம் மற்றும் சிந்து சமவெளி கால முரண்பாடுகள் பற்றிய ஆய்வு).
  • [4] Habib, Irfan (2002). The Indus Civilization (A People’s History of India). Tulika Books. (நகர நாகரிகம் vs நாடோடி மேய்ச்சல் சமூக வேறுபாடுகள்).
  • [5] Kochhar, Rajesh (2000). The Vedic People: Their History and Archaeology. Orient Blackswan. (சரஸ்வதி நதி எவ்வாறு கல்வித் தெய்வமாக உருமாறியது என்பதற்கான மொழியியல் பரிணாமம்).
  • [6] Department of Archaeology, Govt of TN (2019). Keeladi: An Urban Settlement of Sangam Age on the Banks of River Vaigai(கீழடி அகழ்வாய்வு அறிக்கை – கி.மு. 580 ரேடியோ கார்பன் கணிப்பு).
  • [7] Shinde, Vasant, Reich, David, et al. (2019). “An Ancient Harappan Genome Lacks Ancestry from Steppe Pastoralists or Iranian Farmers.” Cell, 179(3), 729–735. (ராகிகர்ஹி DNA ஆய்வு – ஸ்டெப்பி மரபணுவின்மை).
  • [8] Mahadevan, Iravatham (1977). The Indus Script: Texts, Concordance and Tables. Archaeological Survey of India. (சிந்து சமவெளி மற்றும் கீழடிக் குறியீடுகளின் மொழியியல் தொடர்ச்சி).
  • [9] Parpola, Asko (1994). Deciphering the Indus Script. Cambridge University Press. (சிந்து வெளி எழுத்துக்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதற்கான சான்று).
***
மக்கள் அதிகாரம் தளத்தில் வெளியான கட்டுரை இங்கே மீள் பதிவு செய்யப்படுகிறது.