Thursday, October 6, 2022

இந்து மதக் கொடுங்கோன்மையின் வரலாறு!

இராஜராஜ சோழன் இந்துவா? சைவர்கள் இந்துக்களா? தமிழர்கள் இந்துக்களா? முருகன் இந்துக் கடவுளா? என்பன போன்ற கேள்விகளும், அதன் மீதான விவாதங்களும் இன்று சூடு பிடித்துள்ளன. 

சிவன், கிருஷ்ணன், இராமன், பெருமாள், விநாயகர் உள்ளிட்ட கடவுளர்களை வணங்குவதனாலும், ஆயுத பூஜை, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்றப் பண்டிகைகளைக் கொண்டாடுவதனாலும் ஒருவன் தன்னை இந்து என கருதிக் கொள்கிறான். 

மேற்கண்ட கடவுளர்கள் மற்றும் பண்டிகைகளுக்குப் பின்னால் உள்ள வரலாற்றுச் செய்திகளை பொது வெளியில் ஒருவர் முன்வைக்கும் போது, அது இந்து மதத்திற்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்து மதம் குறித்த வரலாற்றுச் செய்திகளை அறியாத, இந்து மதக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளாத, ஒரு அப்பாவி அல்லது ஒரு சாதாரண இந்துக் குடிமகனுக்கு, இந்து மதம் குறித்த விமர்சனங்கள் எரிச்சலைத் தருகிறது. இந்து மதம் குறித்த விமர்சனங்களை, தன் மீதான தாக்குதலாகக் கருதிக் கொண்டு அவர் ஆவேசப்படுகிறார். இந்த ஆவேசத்தால், அவர் தன்னையும் அறியாமல், தன்னையே இழிவுபடுத்தும் பார்ப்பன சனாதான வாதிகளுக்கு வாலாக மட்டுமல்ல, தூணாகவும் மாறிவிடுகிறார்.

எனவே, இந்து மதம் குறித்த வரலாற்றுச் செய்திகளை, ஒரு ஆசிரியர், ஏதுமறியாத மாணவனுக்கு எடுத்துச் சொல்வதைப் போல பொறுமையாகவும், அதே நேரத்தில் நிதானமாகவும் புரிய வைக்க முயற்சிக்க வேண்டும். ஆதாரம் ஏதுமின்றி, 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்கிற  பாணியில், வெறும் சொற்பிரயோகங்களால் மட்டும், இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட, மிகச் சாதாரண இந்துக்களுக்கு, பார்ப்பன சனாதனம் குறித்துப் புரிய வைக்க முடியாது.

அதற்கு இந்து மத வரலாற்றைக் கவனம் கொடுத்து தனியாகப் பயில வேண்டும். 

"நமக்குத் தெரிந்த கிறிஸ்தவ மதம், சீக்கிய மதம், இஸ்லாம் மதம், புத்த மதம், ஜைன மதம் ஆகிய இதர மதங்களைப் போன்ற ஒன்றல்ல இந்து மதம். ஏனென்றால்,

  • இந்து மதத்தில் எல்லோருக்கும் பொதுவான கடவுள் இல்லை. 
  • ஏனைய மதங்களைப் போல் இந்துக்களுக்கு பொதுவான ஒரு குருவோ, நிறுவனரோ, உயர் அதிகாரிகயோ கிடையாது. 
  • எனவே, பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு மத நூலும் கிடையாது.
  •  பிற மதத்தினரைப் போல் ஒரே சமுதாயமாக ஒருங்கிணைந்து நிற்க அவர்களுக்கு ஒரு அமைப்பு கிடையாது.
  •  இந்துக்களின் மத்தியில் மத நம்பிக்கையைப் பாதுகாக்கவோ பயிற்றுவிக்கவோ பொதுவான ஒரு அமைப்பு கிடையாது.
  •  இந்துக்களனைவருக்கும் பொதுவான வழிபாட்டுத் தலங்களோ, வழிபாட்டு முறைகளோ கிடையாது.
  •  அவர்களின் மத்தியில், மதத்தைத் தலைமுறை தலைமுறைகளாகப் பயிற்றுவித்து வளர்ப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட குருமார்கள் (போதகர்கள்) கிடையாது.
  •  அவர்களுக்குப் பொதுவான சமுதாய அமைப்பு முறைகள் கிடையாது.
  • இந்து மதத்திற்கு உண்மையில் ஒரு பெயரை கிடையாது என்பதுதான் வரலாற்று உண்மை. முஸ்லிம்களும், கிரேக்கர்களும் இந்தியாவுக்கு வந்த போது மக்களனைவரையும் இந்துக்கள் என்று அழைத்து, அவர்களுடைய மதம் எதுவாயினும் இந்து மதம் என்றனர். இந்தப் பெயர், அதற்கு முந்திய எந்த மத நூல்களிலும் கிடையாது.

பிறகு எப்படி இந்து மதத்தை பற்றி பயில முடியும்? அது எத்தககையது என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

  • அதற்கு ஒரே வழி தான் இருக்கிறது. புராதன காலத்தில் இருந்து அதாவது ஏறத்தாழ 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கும் இந்த நாட்டு மக்களின் 'மதம்-பண்பாடு'களின் இன்று வரையிலான வரலாற்றை ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
  •  அதற்காகத்தான் " History of Hindu imperialism" என்ற நூல் எழுதப்பட்டிருக்கிறது. இதைப்போல வேறு நூல் இருப்பதாகத் தெரியவில்லை."
என்று 1968 இல் கேரளாவைச் சேர்ந்த தவத்திரு தர்ம தீர்த்த அடிகளார் அவர்கள், தான் எழுதிய "இந்து மதக் கொடுங்கோன்மையின் வரலாறு" என்ற நூலுக்கான பின்னிணைப்பாக ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்.

"நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கருத்துகளே இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. நான் எழுதி வரும் நூலில் குறிப்பிட்டிருக்கும் பல கருத்துக்களை இந்த நூலிலும் காண்கிறேன். இந்த நூலை நான் மிகவும் விரும்பி வரவேற்கிறேன்"

என இந்நூல் குறித்து டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள் இந்து மதம் குறித்த ஏராளமான வரலாற்றுச் செய்திகளை தனது நூல்களில் தொகுத்துக் கொடுத்துள்ளார். பார்ப்பன சனாதனிகளை எதிர்கொள்வதற்கு மிக வலுவான ஆயுதங்களாக அம்பேத்கருடைய எழுத்துக்கள் பயன்படுகிறது என்பதை பலரும் அறிவர்.

எனவே, இந்து மதம் குறித்து அறிந்து கொள்ள தவத்திரு தர்மதீர்த்த அடிகளாரின் "இந்து மதக் கொடுங்கோன்மையின் வரலாறு" பெரிதும் பயன்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

மேலும், அம்பேத்கரும், தர்மதீர்த்த அடிகளாரும் மனிதனுக்கு மதமே வேண்டாம் என்று சொல்பவர்கள் அல்ல. இவர்கள் மட்டுமல்ல, புத்தர்-சித்தர்கள் தொடங்கி  ஜோதிராவ் மகாத்மா  புலே, வள்ளலார், நாராயண குரு, அய்யா வைகுண்டர் என எண்ணற்ற பெரியோர்கள், இந்து மதத்தின் அடி நாதமாக விளங்கும் பார்ப்பன சனாதன சாதியக் கொடுங்கோன்மைக்கு எதிராக பேசியும், போராடியும் வந்துள்ளனர். அவர்களுடைய கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்வதன் மூலமாகத்தான், சனாதனத்தை வீழ்த்துவதற்கான போரில் வெகு மக்களை நம் பக்கம் ஈர்த்து நம்மால் வெல்ல முடியும்.

ஊரான்

Wednesday, October 5, 2022

சம்பூகன் வதம்! முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பார்ப்பனியம்!

சமீபத்தில், முகநூலில் ஒரு காணொளியைப் கண்டேன். "சூத்திரனாய்ப் பிறந்த சம்பூகன் தவம் செய்யலாமா என ஆத்திரம் கொண்ட இராமன் சம்பூகனை வதம் செய்தான் என்று சொல்லுவது ஒரு வடிகட்டியப் பொய். திராவிடர் கழகத்தினால் இட்டுக்கட்டப்பட்ட கற்பனைக் கதை" என்று வாய் கூசாமல் அளந்து கொண்டிருந்தார் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர். 

அதற்குப் பதிலடி கொடுத்த திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள், "வால்மீகி இராமாயணத்தில் சம்பூகன் வதம் இருப்பதை இராமகிருஷ்ணா மடம் வெளியிட்டுள்ள நூலில் இருந்து நிரூபிக்கத் தயார், வெளிப்படையான விவாதத்திற்கு நீங்கள் தயாரா?" என்று கேட்டபோது சீனிவாசனின் முகம் கருத்துப் போனதுதான் மிச்சம். இதில் வேடிக்கை என்னவென்றால் சீனிவாசன் ஒரு பேராசிரியராம். பார்ப்பனியம் தலைக்கு ஏறிப் போனால் பேராசிரியர் என்று பீற்றிக்கொள்பவனுக்கும் புத்தி மட்டுப் போகும் என்பதற்கு இந்த சீனிவாசனே ஒரு நிகழ்கால சாட்சி. 

சமீப காலமாக, சில பார்ப்பன அடிவருடிகள் தங்களது கருத்துக்கு வலு சேர்ப்பதற்காக அம்பேத்கரை துணைக்கு அழைத்துக் கொள்கின்றனர். ஏதோ அம்பேத்கரை கரைத்துக் குடித்து, கரை சேர்ந்தவர்கள் போல பிதற்றிக் கொண்டு திரிகின்றனர். பார்ப்பனித்தையும், இந்து மதக் கொடுங்கோன்மையும் எத்தனை முறை அம்பேத்கர் அவர்கள் கழுவி கழுவி ஊற்றினாலும் அவர்களுக்கு உரைப்பதே இல்லை. 

சம்பூகன் வதம் குறித்து அம்பேத்கர் அவர்களே எழுதியதை வாசகர்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன். இராமாயணம் மூலநூலில் இருந்தே சம்பூகன் வதம் குறித்து அம்பேத்கர் அவர்கள் எழுதி உள்ள்ளார் என்றாலும் கூட, அதற்கும் திராவிடர் கழகம், பெரியாரே காரணம் என்று கூட, நா கூசாமல் முடிச்சுப் போடுவர். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே உலவுவதுதானே ‌‌ பார்ப்பனியம். நல்ல வேலை, மகாத்மா ஜோதிராவ் புலே,  நாராயண குரு, வள்ளலார் அம்பேத்கர், பெரியார் போன்ற எண்ணற்ற நம் முன்னோர்கள் பார்ப்பனியம் குறித்த சில உண்மைகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். இல்லையென்றால் நாமும் பார்ப்பனியம் சொல்வதைத்தான் வேதவாக்காகக் கருதிக் கொண்டிருப்போம்.

இதோ அம்பேத்கர் மொழியில் சம்பூகன் வதம்!

"...நாட்டு மக்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக் கூட இராமன் ஒருபோதும் கடைபிடிக்கவில்லை. தம் மக்கள் குறைகளை ஏதோ ஒரு தடவை இராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்பத்தைக் குறிப்பிடுகிறார். அதுவும் ஒரு துயரமான நிகழ்ச்சியாக அமைகிறது. அக்குறையைத் தானே தீர்த்து விடுவதாய் பொறுப்பேற்கிறான் இராமன். அப்படி செய்கையில், வரலாறு காணாத கடும் கொடிய குற்றத்தைச் செய்கிறான் இராமன். அதுவே சூத்திரன் சம்பூகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.

இராமனுடைய ஆட்சிக் காலத்தில் அவனுடைய நாட்டு மக்கள் யாரும் அகால மரணம் அடையவில்லை என்கிறார் வால்மீகி. இருந்த போதிலும் பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணம் அடைய நேர்ந்தது. மகனைப் பறிகொடுத்த தந்தை, தன் பிள்ளையின் பிணத்தை தூக்கிக்கொண்டு இராமனின் அரண்மனையை நோக்கிப் போனான். அரண்மனையின் வாசலில் பிணத்தை கிடத்தி விட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு இராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவம்தான் தன் மகனின் மரணத்திற்குக் காரணம் என்றான். குற்றத்தை அறிந்து தண்டிக்காவிட்டால் மன்னன் இராமனே குற்றவாளி என்றான். மனம் போனபடி பழித்தான்; சபித்தான் குற்றவாளியைப் பிடித்துத் தண்டித்து, செத்துப்போன தன் மகனை பிழைக்கச் செய்யாவிட்டால், அரண்மனை வாசலிலேயே பட்டினிப் போர் (தர்ணா) நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என அச்சுறுத்தினான்.

அதைக் கேட்டு நாரதன் உட்பட அறிவார்ந்த எட்டு ரிஷிகளுடன் இராமன் கலந்தாலோசித்தான். அந்த அறிஞர்களின் ஆலோசனைகளை கூட்டத்தில், நாட்டு மக்களுள்-அதாவது இராம இராஜ்ஜியத்தில், யாரோ சூத்திரன் ஒருவன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும், அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நாரதன் சொன்னான். தரும (புனித) சட்டங்களின்படி பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்களுக்குச் சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை என்று மேலும் நாரதன் கூறினான். 

தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று இராமன் திடமாய் நம்பினான். உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றித் துருவி அக்குற்றவாளியைப் பிடித்து வரப் புறப்பட்டான். இறுதியில், நாட்டின் தெற்கே அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனை நோக்கிப் போனான். அந்தத் தவம் செய்து கொண்டிருந்தவன், தான் சம்பூகன் என்னும் சூத்திரனா, மனித உருவிலேயே மோட்சத்திற்குச் செல்லத் தவம் செய்பவனா என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவி விட்டான் இராமன். அதே நொடியில் எங்கோ தொலைதூரத்து அயோத்தியில் அகால மரணம் அடைந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம். 

கடவுள்களெல்லாம் மன்னன் இராமனின் மீது, மலர் தூவி மகிழ்ந்தார்களாம். தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டதைத் தடுத்து, தண்டித்து சம்பூகனை கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக அவர்கள் மகிழ்ந்தார்கள். கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன் தோன்றி அவன் செய்த இந்நற் காரியத்திற்காக அவனைப் பாராட்டினார்கள். 

அயோத்தி அரண்மனை வாசலில் பிணமாய்க் கிடந்த பிராமணச் சிறுவனை மீண்டும் உயிர்பிக்க வேண்டும் என்று கடவுள்களிடம் இராமன் வேண்டினான். "அந்த பிராமணச் சிறுவன் எப்போதோ உயிர் பெற்று எழுந்து விட்டான்" என்று அவர்கள் இராமனுக்குச் சொல்லிவிட்டு மறைந்து போயினர். அதற்குப் பின் இராமன் அருகிலிருந்த அகத்திய முனிவனின் ஆசிரமத்திற்குப் போனான். சம்பூகனைக் கொன்ற நற்செயலைப் பாராட்டி தெய்வ மகிமையுள்ள காப்பு ஒன்றை அகத்தியன் இராமனுக்குப் பரிசாய் அளித்தான். பிறகு இராமன் அயோத்திய அடைந்தான். இத்தகையவனே இராமன்."

பக்கம்: 462, 463, 464. பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 8.

ஊரான்

Sunday, October 2, 2022

ஐயம் இருப்போர் ஆய்வு செய்க!

"இந்தியக் கிராமம் ஒரே ஒரு சமூக அலகாக இல்லை. அது பல சாதிகளைக் கொண்டது.

1.கிராமத்தின் மக்கள் தொகை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (1).தீண்டத்தக்கவர்கள் (2).தீண்டத்தகாதவர்கள்.

2. தீண்டத்தக்கவர்கள் பெரிய சமுதாயமாகவும், தீண்டத்தகாதவர்கள் ஒரு சிறிய சமுதாயமாகவும் உள்ளனர்.

3. தீண்டத்தக்கவர்கள் கிராமத்தின் உள்ளேயும், தீண்டத்தகாதவர்கள் கிராமத்திற்கு வெளியேயும் தனித்தனிப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

4. பொருளாதார ரீதியில் தீண்டத்தக்கவர்கள் பலமான, சக்தி வாய்ந்த சமுதாயமாக உள்ளனர். தீண்டத்தகாதோர் ஏழைகளாக, சார்ந்து வாழ்கின்ற சமுதாயமாக உள்ளனர்.

5. சமூக ரீதியில், தீண்டத்தக்கவர்கள், ஆளும் இனம் என்ற இடத்தில் உள்ளனர். தீண்டத்தகாதவர்கள் பரம்பரையான, பிணை வேலைக்காரர்களைக் கொண்ட, ஆளப்படும் இனம் என்ற இடத்தில் உள்ளனர்.

இந்தியக் கிராமங்களில் தீண்டத்தக்கவர்களும், தீண்டத்தகாதோரும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இணைந்து வாழ்கின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும், அதற்கு சில விதிகளை வைத்திருக்கின்றனர். இவற்றை தீண்டத்தகாதவர்கள் பின்பற்றி நடக்க வேண்டும்.  எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எதைச் செய்தால் குற்றம், எதைச் செய்யத் தவறினால் குற்றம் என்பவை குறித்து அவை கூறுகின்றன.

அவற்றில்,

தீண்டத்தகாதவர்கள், இந்துக்கள் வசிக்கும் இடத்திற்கு அப்பால் தனியான பகுதிகளில் வசிக்க வேண்டும். இவ்வாறு பிரித்து வைக்கும் விதியை மீறுவது குற்றமாகும். (மனு: 10-51)

தீண்டத்தகாதோர் வசிக்கும் பகுதிகள் தெற்கு திசையில் இருக்க வேண்டும். ஏனென்றால், தெற்குதான் நான்கு திசைகளில் மிகவும் அமங்கலமானது. இந்த விதியை மீறி நடப்பது குற்றமாக கருதப்படும்.

தீண்டத்தகாதவர்கள் தீட்டு ஏற்படுத்தும் தூரம் அல்லது நிழல் தீட்டு பற்றிய விதியை பின்பற்ற வேண்டும். இந்த விதியை மீறுவது குற்றமாகும்."

-அமபேத்கர் நூல் தொகுப்பு-9.

இந்தியா முழுக்க இதுதான் விதி. ஐயம் இருப்போர் ஆய்வு செய்க!

தீண்டாமையின் தொடக்கப் புள்ளியே ஊரும் சேரியும் தனித்தனியாக இருப்பதுதான். இதற்கு விதி வகுத்தது சனாதன தர்மம். அந்த சனாதனத்தைப் போற்றிப் பாதுகாப்பது என்பது தீண்டாமைக்கு துணை போவதாகும். இதுதான் இந்து தர்மம். இதைத்தான் பார்ப்பனியம் பேசி வருகிறது; பாஜக ஏற்றிப் போற்றுகிறது, அதற்காகத்தான் மோடி ஓடோடி உழைக்கிறார். வானதி வால் பிடிக்கிறார். தமிழிசை தாளம் போடுகிறார். கிருஷ்ணசாமி ஜால்ரா அடிக்கிறார். 

-ஊரான்