Friday, October 23, 2020

எனக்குக் கோவிட்-19 இருக்குமோ?

மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து உலகையே முடக்கிய கரோனாவால் நானும் முடங்கிப் போனேன். அகவை 62 ஐக் கடந்துவிட்ட நிலையில் சர்க்கரைக்கு ஆட்படவில்லை என்றாலும் இதயம், சிறுநீர் கழித்தல், தைராய்டு பிரச்சனைகள் இருப்பதால்  கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள சமூக இடைவெளி, முகக் கவசம், அடிக்கடி சோப்புப் போட்டுக் கை கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை சரியாகவேக் கடைபிடித்து வந்தேன். கடைவீதிக்குச் செல்லும் பொழுது சில நபர்களுடன் முகக்கவசத்திற்கும், சமூக இடைவெளிக்கும் மல்லுக் கட்ட வேண்டியிருந்தது. "என்ன உயிருக்குப் பயமா?" என முறைத்தவர்களும் உண்டு. அவ்வப்பொழுது ஆர்சனிகம் ஆல்பமும், இஞ்சி-சுக்கு-டீயும், ஆவி பிடித்தலும், சில வேலைகள் ஆங்கில மாத்திரைகளும் எடுத்துக்கொள்வது இயல்பாய் மாறின. சும்மாவா பின்னே! உயிர் வாழ்வது ஒரு முறைதானே!

இடைப்பட்டக் காலத்தில் நெருங்கிய உறவினர்களின் திருமணங்கள், நேசித்த உறவுகளின் மரணங்கள் நிகழ்ந்தபோதும் நேரில் செல்லவியலாத நிலைக்குத் தள்ளப்பட்டது நான் மட்டுமல்ல நீங்களும்தான். நிலைமையைப் புரிந்து கொள்ளாதவர்களிடையே உறவுகளும் நட்புகளும்கூட முறிந்து போய் இருக்கலாம். முறிவுகள் முடிவுக்கு வர சில காலங்கள்கூட ஆகலாம். காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால் சில நேரங்களில் உயிருக்கும் மேலான பிரச்சனைகள் சிலருக்கு மேலெழக்கூடும். அந்த வகையில் இந்த மாதத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் 'வேன்' மற்றும் மகிழுந்துகளில் வெளியூர் பயணங்கள் மற்றும் பேருந்துகளில் உள்ளூர் பயணங்களை நான் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய நபர்கள் மற்றும் புதியச் சூழலை எதிர்கொள்ள நேர்ந்தது.  பழைய ஒழுங்கே நமக்கு எட்டிக்காயாய் இருக்கும்பொழுது புதிய ஒழுங்கு மட்டும் கட்டுக்குள் வந்து விடுமா என்ன? ஆதங்கத்தை உள்அமுக்கிக் கொண்டுதான் சிலரோடு பழகவும் பேசவும் நேர்கிறது.

கோப்புப் படம் (நானல்ல)

சளித்தொல்லை எனக்கு இயல்பானதுதான் என்றாலும் இந்த ஒரு மாதத்தில் சற்றே கூடுதல் ஆனதால் 'சுவாப்' சோதனை எடுத்துக் கொள்ளச் சென்ற மாதமே மருத்துவர்கள் பரிந்துரைத்தும்,  முக்கிய வேலைகள் காரணமாகத் தள்ளிப் போட்டேன். நாட்கள் ஓடின. சளியும் குறைந்த பாடில்லை. கோவிட்-19 க்கான வேறு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும் தள்ளிப்போடுவது சிலநேரங்களில்  தலைப்பாகைக்கே ஆபத்தாகிவிடும் என்பதால் 22.10.2020 அன்று வாலாசாப்பேட்டையில் உள்ள இராணிப்பேட்டை மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சளி மாதிரிகளைக் கொடுத்துவிட்டு வந்தேன்.

அரசு மருத்துவமனை என்றாலே எப்படி இருக்குமோ என்ற அச்சம் உள்ளூர நமக்கு இருக்கம்தானே? வாலாசாப்பேட்டை அரசு மருத்துவமனையில் செயல்படும் கோவிட்-19 பரிசோதனை மையம் பழைய மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வந்தாலும், சோதனை மாதிரிகள் எடுக்கின்ற இடத்தின் சுத்தம், பாதி அச்சத்தைப் போக்கியது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் நேர்த்தியான சேவை மீதி அச்சத்தையும் போக்கி விட்டது. கோவிட்-19 பரிசோதனைக்கு யாரும் அச்சப்படத் தேவையில்லை என்பதை நேரடியாக உணர்ந்து கொண்டேன்.

வீட்டுக்கு வந்தேன். முடிவு வரும்வரை தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் என்று குறுஞ்செய்தி வந்தது. ஏற்கனவே சில நாட்களாக இருந்த மூச்சிரைப்பு 'கோவிட்டி'னால் இருக்குமோ என்ற அச்சம் ஒரு பக்கம் ஒட்டிக்கொண்டது. ஆனால் 'சுவாப்' எடுத்த போது, HR-106/mt, SPO2-99%  இருந்ததால் அச்சம் என்கிற மடமையை மட்டுப்படுத்தியது.  ஒரு வேளை எனக்கு 'பாசிட்டிவ்' என வந்து விட்டால், வீட்டில் உள்ளவர்களையும் அள்ளிச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் துரத்த, நான் தனிமரமாய் வீட்டில். 'பாஸிட்டிவ்' ஆனாலும் அதற்கும் தயாராகிக் கொண்டேன். 

இன்று (23.10.2020) மாலை குறுஞ்செய்தியில் முடிவு வந்தது 'நெகட்டிவ்' என்று. நிம்மதிப் பெருமூச்சு! பைசா செலவு இன்றி!

பொன்.சேகர்

தொடர்புடைய பதிவுகள்


Wednesday, October 21, 2020

வாழத் தகுதியற்ற இடத்தில் இராணிப்பேட்டை: யார் காரணம்? பகுதி - 2

இராணிப்பேட்டை ஏன் வாழத் தகுதியற்ற இடமாக மாறிப்போனது; இதற்கு யார் காரணம் என்பது குறித்து வரும் தொடர்களில் எழுதவிருக்கிறேன்.

இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, ஓசூர் உள்ளிட்டப் பகுதிகளில் செயல்படும் ஆலைகளின் மாசுக்கட்டுப்பாட்டைக் கண்காணிப்பதற்காக செயல்படும் வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பொறியாளராகப் பணியாற்றி வரும் பன்னீர்செல்வம் லஞ்ச ஊழலில் ஈடுபடுவதாக புகார் வந்ததையொட்டி  13.10.2020 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.3.25 கோடி ரொக்கம், 3.6 கிலோ தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.100 கோடி மதிப்பிலான 90 அசையாச் சொத்துக்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு சாதாரண பொறியாளராக உள்ளவர் இவ்வளவு சொத்துக்களை எப்படி சேர்க்க முடிந்தது?

மல்லாடி, திருமலை கெமிகல்ஸ், அல்ட்ரா மரைன் உள்ளிட்ட கொடிய நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் 16 சிவப்பு வகை ஆலைகள் (red catagory industries), 176 ஆரஞ்சு மற்றும் பச்சை வகை ஆலைகள் இராணிப்பேட்டையில் செயல்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் விதிகளை இந்த ஆலைகள் முறையாக கடைபிடிக்கின்றனவா என்பதை சோதித்தறிந்து அதைக் கட்டுப்படுத்துகின்ற வேலைகளை வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்தான் மேற்கொண்டு வருகின்றனர். 

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுத்திகரிக்கப்படாத ஆலைக் கழிவுகளை திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனம் புளியங்கண்ணு ஏரிக்குள் திறந்துவிட்டதையொட்டி பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. அதன் பிறகு திருமலை கெமிக்கல்ஸ் உள்ளிட்ட ஆலைகளில் பெங்களூரு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு ரூ.6.88 கோடி அபராதமாக விதிக்கப்பட்டது. 

வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து விட்டு  இங்குள்ள ஆலை முதலாளிகள் தொடர்ந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றி வருவதனால்தான் உலகின் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இராணிப்பேட்டையும் இடம் பிடித்துள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல ஆடு மாடுகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் இனி இராணிப்பேட்டையில் வாழ முடியாது என்ற அளவுக்கு நமது மண்ணும் நீரும் காற்றும் மாசடைந்து விட்டது. இந்த சீர்கேட்டுக்கு காரணமானவர்கள் ஆலை முதலாளிகள் மட்டுமல்ல அவர்களுக்கு துணை போகும் பன்னீர்செல்வம் போன்ற அதிகாரிகளும்தான்.

எனவே, சுற்றுச்சூழலை நாசமாக்கிய ஆலைகள் அனைத்தையும் உடனடியாக இழுத்து மூட வேண்டும்.  பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகளின் இலஞ்ச ஊழல் முறைகேடுகளை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து வாலாஜா மேற்கு ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் காட்பாடியில் அமைந்துள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் எதிரில் 20.10.2020 அன்று காலை 10.30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களிலிருந்து வாலாஜா மேற்கு ஒன்றியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் புளியங்காண்ணு டி.ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் இழுத்து மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 


போராட்டக் களத்திலிருந்து

பொன்.சேகர், வழக்குரைஞர்



Wednesday, October 14, 2020

வாழத் தகுதியற்ற இடத்தில் இராணிப்பேட்டை: யார் காரணம்?

கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. 


பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எந்த மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது என்கிற பட்டிமன்றம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

இலஞ்ச ஊழலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.

இராணிப்பேட்டை நகரம் உலகச் சுற்றுச்சூழல் சீர்கேட்டில் பத்தாவது இடத்தில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 


இவை எல்லாம் வெறும் குற்றச்சாட்டுகளை அல்ல. பல்வேறு ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளியிடப்பட்ட செய்திகள் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை உறுதிசெய்கின்றன. நல்லவற்றில் நாம் முதலிடத்தைப் பிடிக்க முடியாதா என்கிற ஏக்கம் மட்டும்தான் நம்மிடம் மிஞ்சியிருக்கிறது. 

தவறுகளுக்கு எதிரான விடாப்பிடியான போராட்டத்தை நடத்தும் போது மட்டுமே குறைந்த பட்சம் நல்லவற்றின் பட்டியலில் நாம் ஓர் இடத்தையாவது பெற முடியும். தற்காலிக வெற்றி என்றாலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரானப் போராட்டத்தில் தூத்துக்குடி மக்கள் இதை நிலைநாட்டி இருக்கிறார்கள். 

போராட வேண்டும் என்றால் தரவுகள் வேண்டும். தரவுகள் இருந்தாலும் மக்களை நெஞ்சுரம் மிக்கவர்களாக மாற்றுகின்ற ஆற்றலுள்ள அமைப்புகளும், விலை போகாத தலைவர்களும் வேண்டும். அவர்களை மக்கள்தான் அடையாளம் காண வேண்டும்.

வேலூர் மண்டல சுற்றுச்சூழல் பொறியாளர்,  இலஞ்ச ஊழல் புகாரில் சிக்கிய செய்தி ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இராணிப்பேட்டையில் செயல்படும் நூற்றுக்கணக்கான ஆலைகளின் சுற்றுச்சூழலை மதிப்பீடு செய்து, சுற்றுச்சூழலைக் காப்பதற்கான பொறுப்பு வேலூர் மண்டல அதிகாரியிடம்தான் இருக்கிறது. இராணிப்பேட்டை ஆலைகளின் சுற்றுச்சூழல் குறித்து இந்தத் தொடரில் சற்று விரிவாக எழுதவிருக்கிறேன். 

வேலூர் சுற்றுச்சூழல் அதிகாரியின் லஞ்ச ஊழல் முறைகேடுகள் குறித்து ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் கீழ்கண்ட இணைப்புகளில் உள்ளன.

1. விகடனில்-
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.vikatan.com/amp/story/news%252Fcrime%252Fvellore-government-official-arrested-over-bribery&ved=2ahUKEwif__md7bXsAhXryzgGHXhKDLUQFjACegQIChAB&usg=AOvVaw2JMDVnUY1zqAVHgd0Xgae3&ampcf=1

2.தினமணியில்-
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://m.dinamani.com/tamilnadu/2020/oct/14/environmental-associate-chief-engineer-house-rs-33-lakh-confiscated-3484791.amp&ved=2ahUKEwif__md7bXsAhXryzgGHXhKDLUQFjAAegQIAxAC&usg=AOvVaw2b2VLnxtlz6tzmQiOjuE93&ampcf=1

தொடரும்...


பொன்.சேகர்
வழக்குரைஞர்