Friday, December 10, 2010

சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா? தொடர்.....4

ஜாதகப் பொருத்தங்களும் நடைமுறையில் பார்க்கப்படும் பொருத்தங்களும் திருப்தியளிக்கும் பட்சத்தில் திருமணம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன.

அடுத்து பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்வதும், மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குச் செல்வதும் என்கிற சம்பிரதாய நடவடிக்கை. இதற்கு நாள், நேரம், கிழக்கே போவதா, தெற்கே போவதா, எந்த பக்கம் போகக் கூடாது என்பதையெல்லாம் உறுதி செய்து கொண்டு தான் செல்கின்றனர். போகும் போது கண்டிப்பாக பூனையோ, பொட்டிழந்த பெண்ணோ கண்ணில் கூட பட்டுவிடக் கூடாது. தப்பித்தவறி கண்ணில் பட்டுவிட்டால் பயணம் ரத்து. 

போய் உட்கார்ந்த உடன் பஜ்ஜி, போண்டா என அனைத்தையும் ருசி பார்க்கலாம். ஆனால், கை மட்டும் நனைக்கக் கூடாதாம்! இது என்ன லாஜிக்கோ? செல்லும் போது மூன்று, ஐந்து அல்லது ஏழு பேர் என்கிற ஒற்றைப்படையில்தான் செல்ல வேண்டும்.இரட்டைப்படையில் செல்லக்கூடாது. சென்றால் என்னவாகும் என்று யோசிக்கக்கூட யாருக்கும் தைரியம் கிடையாது.

அடுத்து படைபலத்தை கூட்டிக் கொண்டு கை நனைக்கச் செல்வது. இதற்கு குறிப்பாக பிற சாதியினர் ஒன்றிரண்டு பேரையாவது அழைத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் இவர்களுடைய அருமை பெருமைகளை பறைசாற்றிக் கொள்ள முடியும். வசதி இருக்கிறதோ இல்லையோ இந்தப் படலத்திற்கு குறைந்த பட்சம் அம்பாசிடரில் தொடங்கி ஸ்கோர்பியோ வரை-சொந்த கார் இல்லை என்றால் வாடகைக்காவது வண்டி அமர்த்த வேண்டும். இல்லையென்றால், மரியாதை என்னத்துக்கு ஆவது! இது இரு வீட்டாருக்குமே பொருந்தும்.

செல்லும் போது வழியில் ஏதாவது ஒரு கோயிலில் கட்டாயம் தேங்காய் உடைத்தாக வேண்டும். தேங்காய் உடைக்கும் போது எசகு பிசகாக -கோணலாக உடைந்தாலோ, அழுகலாக இருந்தாலோ-எதாவது நடந்துவிட்டால், அதற்கு ஒரு NCR -நான் கன்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட்-போட்டுக் கொள்வார்கள்! 

மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குச் செல்லும் போது பெண் வீட்டார் பெண்ணை அலங்காரம் செய்து அனைவர் முன்பும் நிறுத்துவார்கள். இதற்கு தனி அழகுக்கலை நிபுணர்களை அழைத்து வந்து அழகு படுத்திக் காட்டுவதும் உண்டு. ஏற்கெனவே, முதல் படலத்திலேயே பெண்ணும் பையனும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு பிடித்ததினால்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த அலங்காரமெல்லாம், பையன் வீட்டு படைபலத்திற்கு பெண்ணை பிடிக்க வேண்டுமே என்பதற்காக. 

விருந்து மற்ற பிற இத்தியாதி இத்தியாதி சமாச்சாரங்கள் முடிந்த பிறகு நிச்சயார்த்தம் தேதி தீர்மானிக்கப்படும். சுவரில் தொங்கும் ஒரு காலண்டரைப் பார்த்து தோராயமாக திருமணத்திற்கு ஒரு தேதியையும் தீர்மானித்துக் கொள்வார்கள். 

அடுத்து நிச்சயதார்த்தத்தை நடத்துவது யார்? திருமணத்தை நடத்துவது யார்? என்பது தீர்மானிக்கப்படும். சாதி வழக்கம், ஊர் வழக்கம் என்ற பெயரில் இவை தீர்மானிக்கட்பட்ட காலம் போய் திருமணத்தை பெண்வீட்டார் தலையில் கட்டுவதுதான் இன்றைய வழக்கம். இது ஒரு சம்பிரதாயமாகவும் மாறிவருகிறது.

நிச்சயதார்த்தத்திற்கு பத்திரிக்கை அடிப்பதும் உண்டும். மண்டபம், கார், ஊர்வலம் இவையெல்லாம் வசதியைப் பொருத்து அமையும். இதற்கும் பெரும் படை தேவைப்படும். சில நேரங்களில் பேருந்து வைப்பதும் உண்டு. பலத்தைக் காட்டவேண்டாமா! நிச்சயதார்த்தத்தை நடத்துபவர்கள் சாப்பாடு போடுவதற்கு திண்டாடவேண்டும். இதனைப் பார்த்து, இதுக்கே இப்படின்னா, கல்யாணத்துக்கு எப்படி என்று வாய் பிளக்க வேண்டும்.

அடுத்து ஐயரைக் கலந்து ஜாதக் பொருத்தப்படி திருமண நாள், நேரம் தீர்மானிப்பார்கள். இவர்கள் தீர்மானித்த நாளில் மண்டபம் தேடுவார்கள். வேண்டிய மண்டபம் கிடைக்கவில்லை என்றால் மற்றொரு தேதியில் மண்டபத்தை பதிவு செய்வார்கள். அந்தத் தேதி ஜாதகத்துக்குப் பொருந்தவில்லை என்றாலும், இன்னொரு NCR-நான் கன்ஃபார்மன்ஸ் ரிப்போர்ட்-போட்டுக் கொண்டு தங்களைத் தாங்களே சமாதானம் செய்து கொள்வார்கள். மண்டபம் கிடைக்காமல் திண்டாடுவதற்குக் காரணம், பஞ்சாங்கப்படி முகூர்த்த நாள் மாதத்தில் ஒரு சில நாட்கள்தானே. பிறகு எப்படி ஒரே நாளில் பல திருமணங்களை இருக்கின்ற ஒரு சில மண்டபங்களில் நடத்த முடியும்? மண்டபம் மட்டுமல்ல, புரோகிதரும் கிடைக்கமாட்டார். இது அந்தக் காலத்திலேயே வரும்படிக்காக பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகள் போலும்.

முன்பெல்லாம் வீட்டிலேயே திருமணம் நடக்கும். இட நெருக்கடி இருந்தாலும், உணவு பரிமாற இடப் பற்றாக்குறை இருந்தாலும் இருக்கிற இடத்தில் ஒருவழியாக சமாளித்துக் கொள்வார்கள். இப்போதெல்லாம், கட்டாயம் கோயில் மண்டபமாவது ஏற்பாடு செய்ய வேண்டும். வசதியைப் பொருத்து தனிக் கல்யாண மண்டபம்.

அடுத்து பத்திரிக்கை அடிப்பது. இதற்கு ஐயரை கன்சல்ட் பண்ண வேண்டும். பிறகு, முன் அட்டையை அலங்கரிக்கப் போவது குலதெய்வமா அல்லது ஐயா, திருமா, வைகோ, அம்மா, கலைஞர், தளபதி, மற்றும் சாதித்தலைவர்களா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பின் அட்டையை தீர்மானிப்பதில் பெரும் சர்ச்சைக்கு பிறகு மாமன், மச்சான், அண்ணன், தம்பி, அங்காளி, பங்காளி, சாதி சணம் என மொத்த ஊரையே பட்டியலிட வேண்டும். இதில் பெயருக்குப்  பின்னால் ஒரு பட்டம் கட்டாயம் இடம் பெறவேண்டும். படித்திருந்தால் படிப்பும், வேலையிலிருந்தால் வேலையும், இவை இரண்டும் இல்லாவிட்டால் சாதிப் பட்டம்-கவுண்டர், முதலியார், செட்டியார், நாயுடு எக்ஸ்செட்ரா., கோவணம் அளவே நிலமிருந்தாலும் நிலக்கிழார் பட்டம். இவற்றில் ஏதாவது மிஸ்ஸிங் என்றால் அவர் கல்யாணத்திலும் மிஸ்ஸிங்.

பத்திரிக்கை வீட்டுக்கு வந்தவுடன், அதன் நான்கு மூளைகளிலும் மஞ்சளில் முக்கியாகவேண்டும். இல்லையேல் மங்களம் இல்லாமல் போய்விடும்! பத்திரிக்கை கவருக்குள் நான்கு மஞ்சள் அரிசி கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பத்திரிக்கை வைக்கும் போது, நெருங்கிய சொந்தம் என்றால், தட்டிலே புடவையோ, நகையோ வைத்து அழைக்க வேண்டும். சற்று தூரத்து உறவு என்றால் பத்திரிக்கையுடன் வெத்தலை பாக்கு போதும். நண்பர்கள் என்றால் வெறும் பத்திரிக்கை போதும், தட்டு கூடத் தேவையில்லை. தெரிந்தவர்- கொடுக்க வேண்டுமே என்ற கட்டாயம் இருந்தால், பத்திரிக்கையில் பெயர் எழுதக் கூடத் தேவையில்லை. பத்திரிக்கை வைக்கச் செல்லும் போது கையிலே குங்குமச் சிமிழ், கொஞ்சம் மல்லிகைப் பூ கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டுமல்லவா!

மணப் பெண்ணுக்கு பட்டுப்புடவை எடுக்க இருவீட்டாரும், அருகில் உள்ள பெருநகருக்குச் சென்றாக வேண்டும். வசதியைப் பொருத்து ஆயிரங்களில் தொடங்கி பல ஆயிரங்களில் முடிவதுண்டு. இதில் ஒரு நாளில் முடிக்காமல் லாட்ஜில் ரூம் போட்டுக் கொண்டு மறுநாளும் பார்ப்பவர்கள் உண்டு. பொருத்தமான கலர் கிடைக்க வேண்டுமே? பட்டுப் புடவை இல்லாமல் கல்யாணம் ஏது, அதற்குத்தான் இவ்வளவு முக்கியத்துவம்.

சொந்த பந்தங்களுக்கு துணிமணி எடுக்க செலவு தனித்தனி. எடுத்த துணி சரியில்லை என்று ஒரு சொந்தம் ஆட்சேபித்தாலும் அதற்கு பிடித்தமாதிரி  இன்னொரு துணி எடுத்தாக வேண்டும். குறிப்பாக சேலை எடுப்பதில்தான் இந்த பிரச்சனை அதிகமாக வரும்.

தாலி வாங்குவது. அதற்கு உரிய கைராசி பொற்கொல்லரைத் தேடுவது; சாதியைப் பறைசாற்றும் முத்திரையைத் தீர்மானிப்பது என இது ஒரு தனிவேலை.

பந்தக்கால் நடுவது, நவதானியத்தை முளைவாரி விடுவது-எத்தனை சட்டி என்பதை சாதி தீர்மானிக்கும்-குல தெய்வத்தைக் கும்பிடுவது எல்லாம் அவரவர் குடும்பக் குழு மரபைப் பொருத்தது.

பசிக்கு சோறு போடுவதை விட பகட்டைக் காட்டுவதற்காகவே பந்தி ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்கு முதலில் மெனுவை, ஐயிட்டங்களைத் தீர்மானிக்க வேண்டும். அடுத்து அந்த மெனுவுக்கேற்ற சமையல்காரரைத் தேட வேண்டும். அவர் குஜராத்தில் இருந்தாலும் விடப்போவதில்லை. வந்தவர்கள் மெச்சவேண்டுமே. அதற்காகத் தான் இவ்வளவும்.

முன்பெல்லாம், சோறு, சாம்பார், ரசம், மோர், அப்பளம், வடை அல்லது போண்டா, கொஞ்சம் பாயாசம் இவைதான் இயல்பான மெனு. யாரும் குறை சொன்னதில்லை. ஆனால், இப்பொழுதெல்லாம் பூரி தோசை ஊத்தாப்பத்தில் தொடங்கி ஐஸ்கிரீம் வரை ஆயிரத்தெட்டு ஐயிட்டங்கள். இலையைப் பார்த்தவுடனே, சாப்பிடச் சென்றவர் மலைத்துப்போய் ஒரு சிலவற்றை சாப்பிட்டுவிட்டு மற்றதை வீணாக்குவது சகஜமாக நடக்கிறது. இங்கே வயிற்றுக்கு உணவு என்பதைவிட பந்தாவுக்காவே பந்தி நடக்கிறது.

முதல் நாள் மாலை வரவேற்பு; கல்யாண மண்டப அலங்காரம்;  பிரம்மாண்டமான மணமேடை. பளபளக்கும் வண்ண வண்ண டிஜிட்டல் பேனர்கள் இதில் மணமக்கள் மட்டுமல்ல மணமக்களின் பெற்றோர்களும் மின்ன வேண்டும். மண்டபத்திற்கு போகின்ற பாதையில் இருபுறமும் துணிச்சீலைகள் கட்டுவது; மண்டபத்தை முழுவதற்கும் சீரியல் லைட்டுகள் அமைப்பது-பக்கத்தில் மரங்கள் இருந்துவிட்டால் அவையும் வண்ண விளக்குகளால் பூத்து குலுங்கும். புற்களையும் தழைகளையும் அள்ளி தெளித்து முடிந்தால் வெண்புறாக்களை மேடையில் மேயவிட்டு வாய்ப்பிருந்தால் கூடுதலாக சில ஜீவராசிகளையும் உயிரோடு மேடையிலேற்றி பிரமிக்க வைக்கிறார்கள். 

இன்னொரு பக்கம் சைடு மேடையிலே ஆர்கெஸ்ட்ரா குழுவினர் பாட்டு கச்சேரி நடத்தி அனைவரையும் பிரமிக்க வைக்கிறார்கள். நீண்ட நாட்கள் சந்திக்காத உறவினர்கள், நண்பர்கள் திருமணத்திற்கு வருவார்கள். இவர்கள் தங்களது உணர்வுகளை பகிர்ந்துகொள்ளக் கூட இந்த ஆர்கெஸ்ட்ரா குழுவினர் இடம் கொடுப்பதில்லை. இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கும் இந்தக் காட்டுக்கத்தல் கௌரவமானதுதான். ஆனால், மனம் விட்டு பேசுபவர்கள் கூட இந்தக் கத்தலுக்கு மேல் அதிகமாக கத்திப் பேசி தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். 

மணமேடையில் மணமக்களுக்கு பின்னால் யார் நிற்பது என்பது இரு வீட்டாரின் வல்லமையைப் பொருத்தது. 

மறுநாள் காலை திருமண நிகழ்ச்சி என்றால், நண்பர்கள், உறவினர்கள் சிலர் முதல்நாள் இரவு விடியவிடிய ரூம் போட்டு தண்ணியடிப்பது கட்டாயம் செய்ய வேண்டிய கடமை. இது இல்லையென்றால், திருமணத்தில் கலந்து கொண்ட திருப்தி இருக்காது.

காலை நான்கு மணியிலிருந்து சடங்கு சம்பிரதாயங்கள் நடக்கும். ஐயர் தீர்மானித்த வகையில் அவருக்கு அடுத்த திருமண நிகழ்ச்சி இருந்தால் அவசரமாகவும், இல்லையென்றால் மெதுவாகவும் மந்திரம் ஓதி சம்பிரதாயப்படி திருமணத்தை முடித்து வைப்பார். அதன் பிறகு இருக்கும் சம்பிரதாயங்கள் பலப்பல. ஊருக்கு ஊர், சாதிக்கு சாதி இச்சம்பிரதாயங்களும் சடங்குகளும் மாறுபடும்.

மொய்யில்லாமல் கல்யாணமா? மாமன் வைக்கும் மொய்யில் தொடங்கி நண்பர்கள் வைக்கும் மொய் வரை, நகையில் தொடங்கி பண்ட பாத்திரங்களில் தனது பெயரைப் பொதித்து, ரூபாய் நோட்டுகளை கவரிலே திணித்து-கவர் கிடைக்காமல் திண்டாடுவதும் தனது பெயரை எழுதத் தெரியாமால் திண்டாடுவதும் தனிக்கதை. ஏற்கெனவே எழுதின மொய்யை திரும்பப் பெறுவதில் கல்யாணக்காரனின் ‘அக்கரையும்’, மொய்யை வாங்கியவன் திரும்பத் தனது கடனை செலுத்தும் ‘கண்ணியமு’ம் இங்கே ஒன்றுபடுகிறது. இனி நமக்கு வருமா என்ற கவலையுடன் மொய் எழுதுபவர்களும் உண்டு. உயரிய மனித உறவை வெறும் பண உறவாக சிறுமைப் படுத்தும் இதை பழங்காலந்தொட்டே செய்து வருவதற்காக யாரும் வெட்கப்பட்டதில்லை! இதற்கு தலைமுறை தலைமுறையாக தனி நோட்டை பராமரிப்பது, தொல்லியல் ஆய்வுக்குரியது.

இந்து மதம் சார்ந்த திருமணம் குறித்தே இங்கு கருத்துக்களை முன் வைத்துள்ளேன். இசுலாமிய, கிருத்துவ மதத் திருமணங்களில் சில மாறுபட்டும் சில கூடுதலாகவும் சில குறைவாகவும் அமையக் கூடும். 

மணவீட்டார், உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அனைத்து வகையான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடைபிடித்து அனைவரையும் மகிழ்வித்துத்தான் பெரும்பாலான திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

திருமணத்திற்குப் பிறகு, தங்களது வாழ்வில் மணமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு திருமணத்தில் கடைபிடிக்கப்படும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் இன்ன பிற நடவடிக்கைகளும் இவர்களுக்கு உதவுகிறதா என்பதே நம்முடைய கேள்வி. 

தொடரும்...

ஊரான்.

No comments:

Post a Comment