Tuesday, February 8, 2011

எகிப்தாய் மாறுமா இந்தியா?

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழல் 2ஜி அலைக்கற்றை முறைகேடு. இந்த முறைகேட்டில் ரூ 1.75 இலட்சம் கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேட்டின் மூலம் ஆதாயம் அடைந்தவர்கள் யார்? சுருட்டிய தொகை எவ்வளவு? இங்கே லஞ்சமாக சுருட்டப்பட்ட தொகை எவ்வளவு,  சுருட்டியவர்கள் யார்? இதுவும் உறுதி செய்யப்படவில்லை. இன்னும் விசாரணை முடியவில்லையே. இப்போது மாட்டிக் கொண்டவர்கள் குற்றம் சாட்டப் பட்டவர்கள்தானேயொழிய குற்றவாளிகள் அல்லவே. சங்கரராமன் கொலை வழக்கைப் போல சாட்சிகள் பல்டியடித்துவிட்டால் சங்கராச்சாரியாரைப் போல ராஜாக்கள் உத்தமர்கள்தானே.

இந்த இடுகையை எழுதி முடிப்பதற்கு ஒரு வாரம் காலம் ஆகிவிட்டது. அதற்குள் மற்றோரு அலைக்கற்றை முறைகேடு அரசுத் துறை நிறுவனமான இஸ்ரோ மூலம் நடந்துள்ளதாம். இதில் ரூ 2 .லட்சம் கோடி இந்தியாவுக்கு வருவாய் இழப்பாம். அப்படியானால் இதுதான் இந்திய வரலாற்றின் மிகப்பெரிய ஊழலா? இப்போதைக்குச் சொல்ல முடியாது? இனி தொடரும்தானே.

ஊழலில் இரண்டு வகை. அலைக்கற்றை முறைகேடு போல விதிமுறைகளை மீறி சிலருக்கு சாதகமாக நடந்து கொள்வதில் கமிசனாகப் பெறும் கையூட்டு ஒரு வகை. இதை "ஊழல்" என்கிறோம். விதி முறைகள் கடைபிடிக்கப் பட்டாலும் வெட்ட வேண்டியதை வெட்டினால்தான் காரியம் நடக்கும். அவ்வாறு வெட்டப்படும் தொகை ஊழலில் மற்றொரு வகை.

இந்தியா 'விடுதலையடைந்த' பிறகு நடந்ததாக சொல்லப்படும் பெரும் ஊழல்களெல்லாம் முதல் வகையைச் சேர்ந்ததே. பெரும்பாலும் அரசாங்கத்தில் வேலை செய்யும் மிகப் பெரிய அதிகாரிகளும், மிகப் பெரிய முதலாளிகளும், அரசியல் கட்சிகளின் மிகப் பெரிய தலைவர்களும் இத்தகைய ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். கடந்த அறுபது ஆண்டு கால 'சுதந்திர' இந்தியாவில் இத்தகைய ஊழலில் சம்பந்தப்படாத அதிகாரிகளோ, முதலாளிகளோ, அரசியல் வாதிகளோ இருக்க முடியாது.

இத்தகைய ஊழல்கள் நடக்கும் போது எதிர்கட்சிகளால் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய போராட்டங்களால் எதிர்கட்சிகள் ஆட்சியைப் பிடித்தனவே ஒழிய ஊழல்கள் ஒழிந்த பாடில்லை. ஊழல் செய்தவர்களும் தண்டிக்கப்படவும் இல்லை.

ஆக ஊழல்கள் தொடர்ந்து நடக்கும். எதிர்கட்சிகளின் போராட்டங்களும் தொடர்ந்து நடக்கும். ஆட்சிகள் மாறும். ஆனால் ஊழல் மட்டும் ஒழியாது. இதுதான் ஊழலுக்கெதிரான் எதிர்கட்சிகளின் போராட்டங்கள் நமக்கு உணர்த்தும் பாடம்.

இத்தகைய மேல்மட்ட ஊழல்களால் உணர்ச்சி வசப்படுவது போல நடிப்பவர்கள் அரசியலில் ஆதாயம் அடையும் ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகள் மட்டுமே. மற்றபடி பொதுமக்களைப் பொருத்தவரை இவையெல்லாம் அரசியல் கொரிப்புக்கான ஒரு நொருக்குத் தீனி. அவ்வளவே!.

இந்த முதல் வகை ஊழலில் கீழ்மட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கூட சில இடங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இவையெல்லாம் அந்த அலுவலகத்தோடும், கழிஷன் கொடுத்தவரோடும் முடிந்துவிடுகிறது.

இரண்டாவது வகை ஊழல் நமது பாக்கெட்டிலிருந்து நேரடியாக பணத்தை உருவும் ஊழல். இதைத்தான் நாம் லஞ்சம் என்கிறோம்.

பிறப்புச் சான்றிதழ் பெற,  இறப்புச் சான்றிதழ் பெற, சாதிச் சான்றிதழ் பெற, வசிப்பிடச் சான்றிதழ் பெற, வருமானச் சான்றிதழ் பெற,  குடும்ப அட்டை பெற, பத்திரப் பதிவு செய்ய, வீடு கட்ட அனுமதி பெற, மின் இணைப்பு பெற, ஓட்டுநர் உரிமம் பெற,  வாகனத்திற்கு R.C பெற,   தொலைபேசி இணைப்பு பெற,  இணைய இணைப்பு பெற,  பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க, பாஸ்போர்ட் பெற, அரசு வேலை கிடைக்க, வங்கிக்கடன் பெற, சிறு தொழில் தொடங்க, வழக்கறிஞராக பதிவு செய்ய, வாய்த் தகராறு-வரப்புத் தகராறுகளில் காவல் துறையிடம் சிக்கி்கொண்டு அவர்களிடமிருந்து மீள, நீதி மன்ற படிக்கட்டுகளில் ஏறி இறந்க என இந்த நாட்டின் குடிமக்களின் பாக்கெட்டுகளிலிருந்து அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் பறித்தெடுக்கும் ஊழல் பணம் எவ்வளவு? கணக்குப் போட்டுப பாருங்கள்! சைபர்களைப் போட இந்த சைபர் பக்கங்கள் போதாது. பில்கேட்ஸ் வந்து உதவினால்தான் உண்டு.

இலஞ்சமாக பணத்தைப் பறிகொடுக்காத குடிமகனே இந்தியாவில் இருக்க முடியாது. இப்படி பணத்தை பறி கொடுக்கவில்லையெனில் அவன் இந்தியாவில் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை. பணமா? இந்தியாவா? பணம் போனால் போகட்டும். இந்தியனாய் இருப்பதில்தான் எத்தனை பெருமை!

முதல் வகை ஊழல் குறித்து கொரிக்கவாவது செய்கிறோம். ஆனால் இரண்டாவது வகை ஊழலில் நமது பணத்தை பறி கொடுத்த பிறகும் புலம்பலைத் தவிர வேறெவையும் நாம் செய்வதில்லையே ஏன்?

தங்களின் பிழைப்புவாத்திற்காக மட்டுமே சங்கமாகத் சேர்ந்துள்ள அரசு ஊழியர் சங்கங்களோ, வங்கி ஊழியர் சங்கங்களோ, தொழிற்கங்கங்களோ, அரசியல் கட்சிகளோ, வாலிபர் சங்கங்களோ, மாதர் சம்மேளனங்களோ, மகளிர் சுய உதவிக் குழுக்களோ, சமூகத் தொண்டு நிறுவனங்களோ, மக்களுக்கு ஆதரவாகவும், மேற்கண்ட இரண்டு வகை ஊழல்களுக்கெதிராகவும் போராட மாட்டார்கள். காரணம் ஒரு வகையில் அவர்களே ஊழல் செய்பவர்களாகவும், அதற்குத் துணை போகிறவர்களாகவும் இருப்பதுதான். இலஞ்ச ஊழலுக்கு எதிராக கோபப்படுவதற்குப் பதிலாக அரசு உத்யோகம் என்றால் மேற்படி வருமானம் இல்லாமலா என்று கேட்கும் அளவுக்கு சாமான்யர்களும் இதை சகஜமாகத்தான் பார்க்கிறார்கள்

இலஞ்சம் பெருவது கூடுதல் வருமானத்துக்கான ஒரு வழி என்கிற அளவுக்குத்தான் மக்கள் அதை பார்க்கிறார்கள். அது ஒரு சமூக விரோதச் செயல், ஒரு வழிப்பறிக் கொள்ளை என்று பார்ப்பதில்லை. அதனாலேயே இத்தகைய வழிப்பறிக் கொள்ளைக்கெதிராகப் போராடுவதில்லை. ஒரு சில இடங்களில் ஒரு சிலர் துணிந்து கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்தாலும் இலஞ்சம் பெற்றவரை பாதுகாக்க ஊழியர் சங்கங்கள் களத்தில் குதித்துவிடுகின்றன. மொத்தத்தில் இலஞ்சம் என்பது சமூக அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது என்றே சொல்லலாம்.

சுருங்கச் சொன்னால் வாய்ப்பில்லாதவன் யோக்கியவான், வாய்ப்பிருந்தும் வாங்காதாவன் பிழைக்கத் தெரியாதவன். இதுவே இன்றைய சமூக ஒழுக்கம்! பிழைக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகாமல் இங்கே எகிப்துக்களைக் காண முடியாது.

ஊழல் செய்யும் மனப்பாங்கு என்பது தனி நபரோடு நின்று விடுவதல்ல. தனி நபர்கள் திருந்தி விட்டால் அல்லது ஊழல் செய்பவர்களை கடுமையாகத் தண்டித்து விட்டால் ஊழலை முற்றிலுமாக ஒழித்து விடலாம் என்பது திரைக் கதைக்கு வேண்டுமானால் பயன் படலாமேயொழிய நடைமுறைக்கு உதவாது. தனி நபர் சொத்து சேர்த்துக் கொள்ளலாம் என்கிற சமூகம் எப்போது தோன்றியதோ அப்போதே ஊழலும் தோன்றியிருக்க வேண்டும். சொத்துடமைச் சமுதாயம் தொடரும் வரை ஊழலும் சேர்ந்தே தொடரும்.

4 comments:

 1. //சொத்துடமைச் சமுதாயம் தொடரும் வரை ஊழலும் சேர்ந்தே தொடரும்//
  நல்ல அலசல். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி சரவணன் அவர்களே!

  ReplyDelete
 3. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. நன்றி இரத்னவேல் அவர்களே!

  ReplyDelete