Tuesday, March 15, 2011

அறிவை ஆண்டவனா கொடுக்கிறான்?

"அறிவிருக்கா?”

"முட்டாள், முட்டாள்”.

"இது கூடத் தெரியாம இருக்க?”

"எந்த ஊர்?”

"எங்க படிச்ச?”

"உனக்கு எத்தனை முறைதான் சொல்லறது?”

"மர மண்ட, மர மண்ட”.

"உனக்கு சொல்லிக் கோடுத்தே எனக்குத் தாலி அறுந்திடும் போல".

இப்படி திட்டு வாங்காத ஆளே இருக்க முடியாது. 'இவங்கிட்ட திட்டு வாங்கறத விட சும்மா இருக்கலாம்' என திட்டு வாங்க முடியாமல் வேலையை விட்டே ஓடுபவர்கள் பலர்.

ஏன் இந்த நிலை?

தான் செய்கிற வேலையைப் பற்றிய புரிதலும்,அறிவும் இல்லாத காரணத்தால்தான் இப்படி எல்லாம் நடக்கிறது.

தெரிந்த வழிமுறைகளில் முடிந்தவரை அறிவைப் பெருக்கிக் கொள்ள முயற்சிப்போர் உண்டு.  முடியாது போனால் "இறைவா எனக்கு அறிவைக் கொடு!" என ஆண்டவனிடம் இறைஞ்சுவோரும் உண்டு. மதம் கடந்து மறக்காமல் தனக்குத் தெரிந்த அனைத்துக் கடவுளர்களையும் அன்றாடம் வழிபடுவதும் உண்டு. மகாத்மா சொன்னார், மகரிஷி சொன்னார் என தியானங்களை (meditation) நாடுவோரும் உண்டு.

என்னதான் முயன்றாலும் அறிவு மட்டும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏறமாட்டேங்குது. இதுதான் பலரது நிலை. அறிவை எப்படித்தான் வளர்த்துக் கொள்வது?

புலனறிவு:

நாம் காண்கின்ற காட்சிகள், கேட்கின்ற ஒலிகள், நுகர்கின்ற வாசனைகள், ருசிக்கின்ற சுவைகள், உணர்கின்ற உணர்ச்சிகள் (sensation) இவையே ஐம்புலன்களின் (கண், காது, மூக்கு, வாய், மெய்) ஊடாக நாம் பெறும் புற உலகின் உள்ளீடுகள் (input). இதைத்தான் புலனறிவு என்கிறோம். இது அறிவின் முதற் கட்டாகும். இதற்கு புற உலகில் உள்ள பொருட்களோடு தொடர்பு கொள்ள வேண்டும். இத்தகைய முதற்கட்ட அறிவு அனுபவங்களிலிருந்தே தொடங்குகிறது.

நான்கு வயதே ஆன நமது வீட்டுக் குழந்தைகள் செல்பேசிகளையும் கணிணிகளையும் கையாளும் போது அசந்து போகிறோம். ஆனால் நாற்பது வயதிலும் குறுஞ்செய்தி அனுப்பத் தெரியாமல் முழிக்கிறோம். நான்கு வயதுக் குழந்தைக்கு இருக்கும் அசாத்தியத் திறமை நமக்கு இல்லாமல் போனது ஏன்?  செல்பேசியோடு கொண்டுள்ள தொடர்புதான் இதைத் தீர்மானிக்கிறது.

புற உலகோடு நாம் எந்த அளவுக்கு தொடர்பு வைத்திருக்கிறோமோ, நெருங்கியிருக்கிறோமோ அந்த அளவுக்கு நமது புலனறிவு அதிகரிக்கும். 

ஐம்புலன்களில் உள்ள குறைபாடுகளுக்கு ஏற்பவும்,அவைகளை முழுமையாகப் பயன்படுத்தாத போதும், புற உலகோடு நெருக்கமில்லாத போதும் ஐம்புலன்களுக்குக் கிடைக்கும் உள்ளீடுகள் குறைவாகத்தான் இருக்கும். அவ்வாறு இருப்பது முதற்கட்ட அறிவைப் பெறுவதில் உள்ள குறைபாடாகும்.

பகுத்தறிவு:

வெவ்வேறு சூழலில் புலனறிவின் மூலம் பெற்ற விவரங்களை ஒழுங்கு படுத்தி, அவற்றை ஒருங்கிணைத்து பார்க்கிறோம்.பிறகு பகுப்பாய்வு செய்கிறோம். மதிப்பீடு செய்கிறோம். கருத்துக்களை (concepts) உருவாக்குகிறோம். இத்தகைய அறிவை பகுத்தறிவு என்கிறோம். பகுத்தறிவு புலனறிவைச் சார்ந்திருக்கிறது. புலனறிவு பகுத்தறிவாக வளர்க்கப்பட வேண்டியுள்ளது. இதுதான் அறிவு பற்றிய கோட்பாடாகும். இது அறிவைப் பெறுவதற்கான இரண்டாவது கட்டமாகும்.

கணித மேதை பித்காரஸை அறியாதவர்கள் இருக்கமுடியாது. ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் மீது வரையப்படும் சதுரத்தின் பரப்பளவு,மற்ற இரு பக்கங்களின் மீது வரையப்படும் சதுரங்களின் பரப்பளவுக்குச் சமம். இந்தத் தேற்றம் தெரியாமல் பத்தாம் வகுப்பைத் தாண்ட முடியாது. தேற்றம் தெரியுமேயொழிய இதன் பயன்பாடு பலருக்குத் தெரியாது. கட்டடங்கள், பாலங்கள் கட்டும் போது பொறியாளர்களுக்குப் பயன்படும் சூத்திரம் இது.

ஜப்பானை உலுக்கிய ஆழிப் பேரலையைப் பார்த்து நாம் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறோம். ஆனாலும் ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்தைப் பார்க்கும் நாம், அது பற்றிய சில விவரங்களைத் தெரிந்து கொள்கிறோம். இந்த விவரங்களை ஒருங்கிணைத்து, பகுத்துப் பார்த்து கடலில் தோன்றிய நில நடுக்கமே ஆழிப் பேரலைக்குக் காரணம் என முடிவுக்கு வருகிறோம். ஆழிப் பேரலை பற்றிய கருத்தை உருவாக்கும் பகுத்தறிவுக் கட்டம் என்பது இதுதான்.

பித்தகாரஸ் ஒரு முறை கடற்கரையில் உட்கார்ந்து கடலையேப் பார்த்துக் கொண்டிருந்தாராம். அதிகாலை நேரம். கடல் அமைதியாய் இருக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் கடலில் எதுவுமே தென்படவில்லை. சற்று நேரத்தில் பறக்கும் ஒரு கொடி மட்டும் தெரிகிறது. சிறிது நேரம் கமித்து கொடி மரம் தெரிகிறது. அதன் பிறகு ஒரு கப்பல் தெரிகிறது. கடல் தட்டையாக கண்ணுக்குத் தெரியும் போது கொடி-கொடிமரம்-கப்பல் அனைத்துமே ஒரே நேரத்தில் அல்லவா தெரிய வேண்டும்? அவர் கணித மேதை என்பதால் சிந்தனையில் ஆழ்கிறார். தட்டை, உருளை, கொடி, கொடி மரம், கப்பல் இவைகளை ஒருங்கிணைத்து தொகுத்துப் பார்த்து பூமி கோள (sphere) வடிவத்தில் இருக்க வேண்டும் என அறிவிக்கிறார். உலகம் உருண்டை என முதன் முதலில் அறிவித்தவரும் அவரே.

இப்படித்தான் புலனறிவு பகுத்தறிவாக வளர்கிறது.

நடைமுறை அல்லது பரிசோதனை:

அனுபவங்களிலிருந்தே முதற்கட்ட அறிவு தொடங்குகிறது. இதைத்தான் புலனறிவுக் கட்டம் என்ற பார்த்தோம். இந்த அனுபவங்களில் இருந்துதான் இரண்டாவது கட்டத்தில் சொல்லப்பட்ட பகுத்தறிவு பெறப்படுகிறது. பின்னர் அது மீண்டும் நடைமுறைக்கே சென்றாக வேண்டும். இது தொகுத்து வகுத்த கோட்பாட்டை சோதித்தறிதலாகும். அதாவது கோட்பாட்டை பரிசோதித்து அதை வளர்ப்பதாகும். இது அறிவின் வளர்ச்சிக்கான மூன்றாவது கட்டமாகும். அறிதல் முழுவதையும் தொடர்ந்து செய்வதற்கான நடைமுறை இதுதான்.

பித்தகாரஸ் உலகம் உருண்டை என சொன்னாலும் அப்படியே நம்பி விட முடியுமா? மெகலன், கொலம்பஸ் போன்றவர்களின் கடற் பயணங்களே நடைமுறையில் உலகம் உருண்டை என நிரூபிக்க உதவின. பித்தகாரசின் பகுத்தறிவு இங்கே மெகலன், கொலம்பஸ் போன்றோரால் சோதித்தறிப்பட்டுள்ளது. இதுதான் கோட்பாட்டை பரிசோதித்தறியும் மூன்றாவது கட்டமாகும்.

உலகை வெறுமனே சுற்றிப் பார்த்தாலும் உருண்டை என அறிவித்து விடமுடியாது. கண்ட காட்சி (புலனறிவு), தொகுத்து ஒழுங்கு படுத்திய கணித அறிவு (பகுத்தறிவு),கடற்பயண அனுபவம் (நடைமுறை அல்லது பரிசோதனை) ஆகிய இம்மூன்றையும் இணைக்கும் போதுதான் உலகம் உருண்டை என்ற முடிவுக்கு வரமுடிந்தது.

ஆர்க்கிமிடீசின் மிதவைக் கோட்பாடு (law of flotation), நியூட்டனின் ஈர்ப்பு விசைக் (law of gravitation) கோட்பாடு என பல கோட்பாட்டு உண்மைகள் எப்படி கண்டறியப்பட்டன? நடைமுறை அனுபவங்களின் மூலம் கண்டறிந்த புலனறிவு விவரங்கள்,பிறகு பகுத்தறிவின் மூலம் தொகுக்கப்பட்டு கோட்பாடாக்கி, அதைச் சோதித்தறிந்து பிறகு மீண்டும் நடைமுறைக்கே கொண்டு செல்லப்பட்டுதான் இவ்விதிகளைப் பற்றிய அறிவைப் பெறமுடிந்தது, பெறமுடிகிறது.

ஒரு குறிப்பிட்ட விசயத்தில் பெறுகின்ற உள்ளீடு ஒருவருக்கொருவர் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். பகுப்பாய்விற்குப் பிறகு வந்தடையும் கருத்தும், விவரங்களைப் பொருத்து மாறுபடலாம். ஆனால் நடைமுறையில் பரிசோதனைக்குப் பிறகு வந்தடையும் முடிவு கண்டிப்பாக ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் உள்ளீடும் பகுப்பாய்வும் போதுமானதாக இல்லை என்று பொருள்.

சாதாரண நீர், குளிர்ந்த நீர், சூடான நீர், நீராவி, பனிக்கட்டி என தண்ணீரின் பல்வேறு நிலைகளை ஐப்புலன்களின் மூலம் நடைமுறை அறிவைப் பெறுகிறோம். ஆனால் தண்ணீர் பற்றி பகுப்பாய்வு செய்து தொகுத்த கருத்தை அதாவது அதன் பண்புகளை நடைமுறையில் சோதித்தறிந்த பிறகே இறுதி செய்கிறோம். ஜீரோ டிகிரியில் தண்ணீர் பனிக்கட்டியாவதும், நூறு டிகிரியில் நீராவியாவதும் நடைமுறை பரிசோதனையின் மூலம் வந்தடைந்த முடிவுகள். தண்ணீர் பற்றிய இத்தகைய அறிவு மேற்கண்ட மூன்று கட்டங்களினூடாகத்தான் பெறப்பட்டன. இன்று யார் சோதித்தறிந்தாலும் இதே முடிவுகள்தான் வரும். இதைத்தான் அறிவியல் பூர்வமானது என்கிறோம்.

அறிவை வளர்த்துக் கொள்ளவும், உண்மையைக் கண்டறியவும் அன்றாடம் நாம் கடைபிடிக்கும் வழிமுறை இதுதான். இது ஒரு இயங்கியல் நிகழ் முறை. மேற்சொன்ன மூன்று அடுத்தடுத்த கட்டங்களினூடாக சுழல் வட்டம் போல நடக்கும் இயக்கமாகும்.

இதற்கும் அப்பால் அறிவை வளர்த்துக் கொள்ள வேறு வழிமுறைகள் கிடையாது. ஆண்டவன் அறிவைக் கொடுக்கிறான் என்பதெல்லாம் ஆண்டவனைத் தக்கவைத்துக் கொள்ள ஆன்மீக 'அறிவாளிகள்' செய்யும் முயற்சிகளே.

குறிப்பு: அறிவின் வளர்ச்சி பற்றி ஜார்ஜ் தாம்சன் அவர்கள் எழுதிய "மனித சாரம்" என்ற நுலில் நான் படித்து புரிந்து கொண்டதிலிருந்து எழுதப்பட்ட கட்டுரை. 

1 comment:

 1. இருந்தது இருந்தபடியே இருக்கும்
  இயற்கை விதிகள்;
  இனிமேலும் அப்படித்தானிருக்கும்.
  அதைப் புரிந்து கொள்ள
  ஆராய்ச்சிகள் நூறு.
  விவாதங்கள் பல நூறு.
  ஆனால் கண்டுபிடிப்புகளின்
  அற்புதக் கருவிகள்
  முதலாளிகளின் கையில்.
  விதிகளின் நுகர்வோர்களாக
  நாம்.
  நம் உழைப்பின் ஊதியம்
  கருவிகளின் நுகர்வுக்கு.
  விஞ்ஞான விதிகளையும்
  பணப்பேய் கவர்ந்துவிடும்
  தந்திரக் கோட்பாடு.
  கோட்பாடுகளைக் கொள்ளையிடும்
  கோட்பாடுகள்.
  கொள்ளையிடும் கோட்பாடுகளைக்
  கொன்றுபோடும் கோட்பாடுகள்?
  அதுவும் இயற்கை விதியிலேயே
  இருந்துகொண்டுதானிருக்கிறது.
  நாம்தான் அதை புரிந்துகொள்வதில்
  தள்ளிப் போட்டுக்கொண்டேயிருக்கிறோம்.
  ஆனால்,
  யார் தூங்கினாலும்
  கிழக்கு சிவக்காமலிருக்காது!

  ReplyDelete