Tuesday, December 20, 2011

சனி பகவான் பால் காய்ச்சப் போகிறார்!

தினக்கூலியோ, மாதச்சம்பளமோ நீங்கள் எப்படி சம்பாதிப்பவராக இருந்தாலும் சொந்த வீட்டுக்காரராய் இருந்தால் வீடு மாற்ற வேண்டிய பிரச்சனை இல்லை. பிள்ளைகள் வளர்ந்து பங்கு கேட்கும்வரை ஒரே வீட்டிலேயே - வேலை நிமித்தமாக வேறு ஊருக்கு மாற்றலாகாதவரை - காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால் நீங்கள் வாடகை வீட்டில் குடியிருப்பவராய் இருந்தால் தற்போது குடியிருக்கும் வாடகை வீடு எத்தனை நாட்களுக்கு என்று தெரியாது.

 வாடகை வீடு

கணவன்-மனைவி, பிள்ளைகள் என்றால் ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு; இதற்குமேல் இருந்தால் வாடகை வீடு கிடைப்பதே அரிது. எப்போதாவது ஊரிலிருந்து உறவினர்கள் வந்துவிட்டால் 'பாத்ரூம் - கக்கூஸ்' பக்கம் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவசரம் என்றாலும் அடக்கித்தான் ஆகவேண்டும். தெரியாத்தனமாக ஒரே ஒரு முறை ஆய் போய்விட்டால் "சொந்தக்காரங்க வந்து செப்டிக் டேங்கே நிறைந்து விட்டதாக" 'ஹவுஸ் ஹோனர்' கூப்பாடு போடுவார். பிறகு 'செப்டிக் டேங்க்கை' சுத்தம் செய்யும் செலவும் உங்கள் தலையில்தான் விழும். அதனால் சொந்தக்காரர்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. அப்படியே வந்துவிட்டால் 'பஸ் ஸ்டாண்டிலேயே' பார்த்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டு - வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு வழி அனுப்பி வைக்க வேண்டும். அங்கே அவசரத்து ஒதுங்க ஒரு இரண்டு ரூபாய் கொடுத்தால் போதும். 

உணர்ச்சி வேகத்தில் மூன்றாவது குழந்தை வயிற்றில் உருவாகி விட்டால் என்னவாகும்? அப்படி ஒரு நிலை வந்தால் வாடகைக்கு வீடு கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் கிடைக்கும். வேறு இடத்திற்குச் சென்றுவிட்டால் முதல் இரண்டு பிள்ளைகளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது? அதற்காக ஆட்டோ-வேன்களை நம்ப வேண்டும். இதற்கு கூடுதல் செலவு வேறு. வேலைக்குச் செல்பவராக இருந்தால் மேலும் ஒரு பேருந்தை பிடிக்க வேண்டி வரும்- அதற்காகவும் கூடுதல் செலவு. இப்படி ஒவ்வொரு செலவாகக் கூடி உங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிடும். புதிய சுமைகளை சுமப்பதைவிட பழைய சுமையை இறக்கிவிடுவது - கலைத்துவிடுவது - எவ்வளவோ மேலல்லவா!

சனிப் பெயற்சி

இப்படி வீடு மாற்றுவதில்தான் நமக்கு எத்தனை எத்தனை பிரச்சனைகள்? ஆனால் சனி பகவானுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். நாளை அவர் பால் காய்ச்சப் போகிறாராம். இதுவரை பக்கத்து விட்டில் குடியிருந்த துலா என்பவரை விரட்டிவிட்டு - பலம் இருந்தால் எதையும் செய்யலாமே - அங்கே குடியேறப் போகிறாராம். பக்கத்து வீட்டுக்காரன் காலி செய்வதற்கு முன்பே திடலடியாக உள்ளே நுழைந்து வெள்ளையெல்லாம் அடித்தாகிவிட்டதாம். பால் காய்ச்சுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன.
தமிழகமே இந்த பால்காய்ச்சும் விழாவில் பங்கேற்கவிருக்கிறது. இதற்காக தமிழக மக்கள் அனைவருக்கும் செய்தித்தாள்கள்-வார-மாத இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக ஒரு மாதத்திறகு முன்பிருந்து தற்போதைய கடைசி நேரம் வரை தொடர்ந்து அழைப்புகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த கோலாகலமான பால் காய்ச்சும் நிகழ்ச்சிக்கு சனிப் பெயற்சி என ஆன்றோர்கள் பெயரிட்டுள்ளனர்.

நண்பர்களோ அல்லது உறவினர்களோ பால் சாய்ச்ச அழைக்கும் போது - அவர் குடி மாற்றிப் போவதால் உங்களது வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் எதுவும் வராது என்றாலும் - சம்பிரதாயத்துக்காக தலை காட்டுவது போல சனி பகவான் பால் காய்ச்சுவதை எண்ணி விடாதீர்கள்.

உறவும் - நட்பும் நிரந்தரமானதல்ல. எப்பொழுது வேண்டுமாலும் அதை நீங்கள் முறித்துக் கொள்ளலாம் ஆனால் நீங்கள் பிறக்கும் போதே உங்களது ராசி தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. இந்த ராசிதான் உங்களது வாழ்க்கையின் சகலத்தையும் தீர்மானிக்கிறது. எனவே நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ராசியை விட்டு விலக முடியாது; அதனுடனான உறவை முறித்துக் கொள்ள முடியாது. இப்படி ராசி வலையில் சிக்கிக் கொண்டவர்கள் சனிப் பெயற்சியை அலட்சியப் படுத்திவிட முடியாது.

நாளை நடைபெறும் பால் காய்ச்சும் நிகழ்ச்சிக்குப் பிறகு 12 ராசிக்காரர்களுக்கும் கிடைக்கப் போகும் சில நற்பலன்களும் பரிகாரங்களும்: 

மேஷ ராசிக்கார்களே! அக்கிரகார வீட்டில் இருந்து கொண்டு மற்றவர்களின் ராசியை தீர்மானிக்கும் அதிகாரத்தை வைத்துள்ள உங்களுக்கு இனி அமோகமான எதிர்காலம்தான். இதுவரை உங்களை அண்டவிடாத மன்னார்குடி ஏழரை நாட்டுச் சனி இன்றோடு வீட்டை விட்டு விரட்டப்பட்டதால் உங்களின் அதிகாரம் எட்டுத்திக்கும் இனி கொடி கட்டிப் பறக்கும்.  ஆனால் அதிகாரத்தை சற்றே நிதானத்துடன் கையாள வேண்டும். அதிகாரப் போட்டியில் உங்களுக்குள் சில நேரங்களில் பிணக்குகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதற்கு பரிகாரமாக நீங்கள் துக்ளக்கால் புகுழ் பெற்ற 'சோ' சாமியை பூஜித்து வர உங்கள் பிணக்குகள் நீங்கும். மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு வாழ்க்கை பேஷாக இருக்கும்.

ரிஷப (வாகன) ராசிக்கார்களே! பேருந்துகளிலேயே நீங்கள் பயனித்து வருவதால் ஒன்றரை மாதத்துக்கு முன்பு உங்களுக்கு பிடித்த கட்டண உயர்வு என்கிற சனி நீங்க வாய்ப்புகள் குறைவு என்றாலும் அதற்காக துவண்டு விடாதீர்கள். மாதம் ஒருமுறை நீங்கள் திருநள்ளாறு சென்று சனிபகவானை வழிபட வேண்டும். பேருந்து கட்டணம் செலுத்த உங்களுக்கு வழி இல்லை என்றாலும் மாட்டு வண்டியிலாவது சென்றுவர வேண்டும். மாட்டு வண்டிக்கு எங்கே செல்வது என்று கவலைப்பட வேண்டாம். அம்மா கொடுக்கிற கரவல் மாடு ஈன்றும் கன்று காளைாய் வளரும்.  காளை மாட்டு வண்டியில் நீங்கள் படு ஜாலியாய் பாட்டுப் பாடி குஷியாய் வாழ்க்கை பயணத்தைத் தொடரலாம்.

மிதுன ராசிக்காரர்களே! சமச்சீர் கல்லி கிடைத்துவிட்டது என மகிழ்ச்சியில் திளைத்த உங்களுக்கு இனி சற்று கஷ்ட காலம்தான். 'தரமான கல்வி' கிடைத்துவிட்டது என ஒரு பக்கம் மகிழ்ச்சியடைந்தாலும் மேல்படிப்பு படிக்க துட்டு இல்லை என்பதால் நீங்கள் பள்ளிப் படிப்பை தாண்டிச் செல்வது கடினம் என்றாலும் ஆட்டுக் குட்டிகள் உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கவிருப்பதால் அவற்றை மேய்த்து நீங்கள் எதிர்காலத்தில் ஒளிமயமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

கடக ராசிக்காரர்களே!நீங்கள் வாழும் ஊழல் வலை மிகவும் பாதுகாப்பானதுதான். ஆனாலும் சில மாதங்களாக அன்னா அசாரே போன்ற குள்ள நரிகள் தங்களின் வாலை நுழைத்து உங்களை பிடிக்க முயற்சி செய்வதைக் கண்டு அச்சப்பட வேண்டாம். அது ஒரு சல சலப்பு நாடகம்தான். ஒரு வேளை அதையும் மீறி வாலை நுழைத்தால் வாலை கடித்து துப்பிவிட்டு வேறு ஒரு பாதுகாப்பான வலையை ஏற்படுத்திக் கொள்வதற்கான திறமை உள்ளவர்கள் நீங்கள் என்பதால் உங்களின் எதிர்காலம் எப்போதும் போல வளமாகவே இருக்கும்.

மற்ற ராசிக்கார்கள் அவசரப்பட வேண்டாம். நாளை சந்திப்போம்.

1 comment:

  1. ஹா ஹா ... நன்றாக நையாண்டி செய்து எழுதுகிறீர்கள்

    ReplyDelete