Thursday, April 18, 2024

65 வயதில் நான் ஏன் முதன்முறையாக வாக்களித்தேன்?

பதின்ம வயதில் இயல்பாகவே நான் கடவுள் மறுப்பாளனாக வளர்ந்தவன். சென்னையில் தொழில் நுட்ப பட்டயப் படிப்பை முடித்து, திருச்சி பெல் நிறுவனத்தில் 20 வயதில் பணிக்கு சேர்ந்த தொடக்க காலத்தில், பொதுவுடமை கோட்பாடு என்னை ஈர்த்தது‌. அது முதல் மார்க்சிய லெனினிய பொதுவுடமை இயக்கத்தோடு என்னை இணைத்துக் கொண்டேன். 

இந்திய ஜனநாயகம் போலியானது, இரட்டைத் தன்மையுடையது. ஒரு பக்கம் நிரந்தரமான அதிகாரிகள் மறுபக்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். இதில் உண்மையான அதிகாரம் அதிகாரிகளிடம் மட்டுமே குவிந்து கிடக்கிறது. மேலும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டம் இயறறும் அதிகாரம் மட்டுமே உண்டு, மாறாக அவற்றை நடைமுறைப்படுத்துகின்ற அதிகாரம் கிடையாது, என்பதோடு மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்தால் அவர்களைத் திருப்பி அழைக்கின்ற உரிமையும் தேர்ந்தெடுத்த மக்களுக்குக் கிடையாது.


எனவே, இது போலி ஜனநாயகம், இந்த ஜனநாயகத்தில் பங்கேற்பதன் மூலம் சமூகத்தை மாற்றி அமைக்க முடியாது, மாறாக மக்கள் புரட்சியின் மூலம், தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சட்டம் இயற்றவும் அதை நடைமுறைப்படுத்தவும் அதிகாரம் உள்ள ஒரு புதிய ஜனநாயக அரசமைப்பை உருவாக்க வேண்டும் என மார்க்சிய லெனினிய இயக்கங்கள் தொடர்ந்து தேர்தலை புறக்கணித்து வந்தன. அதனால் நானும் நேற்று வரை தேர்தல்களில் வாக்களித்ததில்லை.

தேர்தல் ஆணையம் நடத்தும் உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில்தான் நான் வாக்களிக்கவில்லையே ஒழிய, திருச்சி பெல் ஆலையில் பணியாற்றிய போது 1990 இல் நடைபெற்ற உணவக நிர்வாகக் குழு தேர்தலில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறேன். இதன் மூலம் நாலரை கோடி ரூபாய் திருச்சி பெல் உணவக ஊழலையும் எம்மால் வெளிக் கொணர முடிந்தது. தவிர, பெல் ஆலையில் நடைபெற்ற சேமநல நிதிக் குழு, மற்றும் உணவக நிர்வாகக் குழு உள்ளிட்ட தேர்தல்களிலும், தொழிற்சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களிலும் வாக்களித்திருக்கிறேன்.

இராணிப்பேட்டை பெல் ஆலையில் பணியாற்றிய போது 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நுண் பார்வையாளராக (micro observer) வாக்குப்பதிவின் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும் தேர்தல் ஆணையத்தின் கீழ் பணியாற்றியிருக்கிறேன்.

காலங்கள் உருண்டோடின.  இந்திய அரசியல் வானில் மதவாத சக்திகள் காலூன்றத் தொடங்கி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவும் நோக்குடன் ஒரு பாசிச வடிவிலான காட்டாட்சியை மோடி தலைமையில் அரங்கேற்றி வருகின்றனர். 

மதவாதச் சக்திகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுமேயானால், இந்திய போலி ஜனநாயகக் கட்டமைப்பில் இருக்கிற அரைகுறை ஜனநாயகமும்கூட முற்றிலுமாக பறிக்கப்பட்டு மனுதர்ம வடிவிலான ஒரு காட்டாட்சிதான் இனி நடைபெறும். 

அரசியல் அரங்கில் மாற்றுக் கருத்துக்களோடு குறைந்தபட்சம் செயல்பட வேண்டும் என்றாலும் கூட அதற்கு ஆட்சி அதிகாரத்தை மதவாத சக்திகள் கைப்பற்றுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியா கூட்டணி தவிர வேறு மாற்று தற்போதைக்கு இல்லை என்பதனால், இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பது என பெரும்பாலான மார்க்சிய லெனினிய இயக்கங்கள் முடிவு செய்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டனர். 

மேற்கண்ட கருத்தோடு எனக்கு முழுமையான உடன்பாடு ஏற்பட்டதனால், நானும் இந்தத் தேர்தலில் பாசிச பாரதிய ஜனதா கட்சியையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளை மையமாக வைத்து, இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்திருக்கிறேன். 

தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தலில் முதன்முறையாக நான் வாக்களித்ததை ஒரு அரிய சாதனையாகக் கருதவில்லை. மாறாக தேர்தலிலும் பாசிச பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும், அதே வேளையில் தொடர்ந்து வீதிகளிலும் பாசிச சக்திகளுக்கு எதிராக களமாடி அவர்களை முற்றிலுமாக துடைத்தெரிய வேண்டும் என்கிற நோக்கத்தோடு எனது களப்பணியும் தொடரும். 

தமிழ்மணி