Sunday, February 6, 2011

ஆடைகளில் மின்னுவது வண்ணங்களா - இரத்தச் சுவடுகளா?


வண்ணங்களை விரும்பாதவர்களோ, இரசிக்காதவர்களோ இவ்வுலகில் இருக்கவே முடியாது. அனைத்தையும் துறந்த விட்டதாகக் கூறும் சாமியார்கள்கூட காவிக்கு அடிமைகள். சாமிகளே வண்ணத்தை விரும்பும் போது மற்றவர்களைச் சொல்ல வேண்டுமா?

எல்லா அரசியல்வாதிகளும் பொதுவில் விரும்புவது வெள்ளை நிறம். ரொம்ப வெள்ள மனசு இவர்களுக்கு! மனம் அழுக்காய் உள்ளவர்கள் தங்களை வெளுப்பாய் காட்டிக் கொள்வார்கள் என்பது ஒரு உளவியல். எப்பொழுதும் எதிர் நிலை எடுப்பதே மனதின் இயல்பு. அப்பொழுதுதான் தனது பலவீனத்தை மறைத்துத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியும். 

கட்சியின் கொள்கைக்கேற்ப ஒவ்வொரு கட்சியும் ஒரு நிறத்தை பட்டா போட்டுக்கொண்டு விட்டன. பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டனுக்கு மஞ்சளும், தலித் இயக்கத் தொண்டனுக்கு நீலமும், பாரதிய ஜனதா கட்சித் தொண்டனுக்கு காவியும் பிடிக்கும். கம்யூனிஸ்டுகளின் விருப்பமாய் இருந்த சிவப்பை இன்று மேல்மருவத்தூர் அம்மாக்கள் அதிகம் நேசிக்கின்றனர். பகுத்தறிவாளர்களின் பாசத்திற்குரிய கருப்பு இன்று அய்யப்ப பக்தர்களின் அன்பிற்குரிய நிறமாய் மாறிவிட்டது.  

தனக்குப் பிடித்த நிறத்தை விரும்புகிற அதே நேரத்தில் பிறருக்கு பிடித்த நிறத்தை வெறுக்கவும் செய்கிறார்கள். சங்கப் பரிவாரங்களுக்கு சிவப்பின் மீது வெறுப்பு. மேல் மருவத்தூரின் சிவப்பும் இவர்களுக்குப் பிடிக்காதுதான். காரணம் சாமானிய சாதிக்காரன் தனி ஆவர்த்தனம் பாடுவதால். நேற்றுவரை கருப்பை வெறுத்த இந்து முன்னணிக்காரனுக்கு இன்று கருப்பும் பிடிக்கும். காரணம் அது அய்யப்பனின் விருப்பமாயிற்றே.

இந்த விருப்பு-வெறுப்பு எல்லாம் தனி நபர் சார்ந்ததல்ல. தாங்கள் கொண்டிருக்கும் கொள்கை கோட்பாடு சார்ந்தது. கொள்கையை மாற்றிக் கொள்ளும் போது இவர்கள் தங்களது நிற விருப்பத்தையும் சேர்த்தே மாற்றிக் கொள்கிறார்கள். கொள்கைளை நேசிப்பவர்களுக்கு இந்த நிறங்கள் தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை என்றாலும் கூட்டமாகச் சேரும் போது அதற்குரிய நிறத்தில்தான் உடையனிய வேண்டும். அதுவே அவர்களின் ஒழுங்கு.

கன்னி மேரிகளுக்கும், அங்கிப் பாதிரிகளுக்கும் வெள்ளை என்றால் ரொம்பப் பிடிக்கும்.விரும்புகிறார்களோ இல்லையோ  இஸ்லாமியப் பெண்களுக்கு கருப்பு (பர்தா) கட்டாயம். இந்த நிறங்கள் மதக் கோட்பாட்டாளர்களுக்கு கட்டாயம் பிடிக்கும். இங்கே நிற விருப்பம் மதத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

காவலருக்கும், காவலாளிக்கும்,ஓட்டுநர்கள்-நடத்துனர்களுக்கும் காவி கட்டாயம். பள்ளிச் சீருடை, கல்லூரிச் சீருடை, தொழிலாளர் சீருடை, அலுவலக சீருடை என அந்ததந்த நிறுவனங்கள் தீர்மானித்துள்ள நிறங்கள் இவர்களுக்கு கட்டாயம். விருப்பம் இருக்கிறதோ இல்லையோ இவர்களுக்கு இந்நிறுவனத்தின் நிறம் கௌரவம்.

வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நீதிமான்களுக்கு வெள்ளை உடையும்-கருப்பு கோட்டும், மருத்துவர்களுக்கு வெள்ளை உடையும் அதே நிறத்தில் கோட்டும், செவிலியர்களுக்கு வெள்ளை உடையும் அவசியம். இது இவர்களின் தொழில் சார்ந்த நிறம்.

விதவைகளுக்கு வெள்ளைதான் என நாட்டாமைகள் தீர்ப்பளிக்கின்றன.

இப்படி சாதி, மத, அரசியல், தொழில் அடிப்படையில் ஒரு சில வண்ணத்தில்தான் ஆடைகள் என தீர்மானிக்கப்பட்டுவிட்டன. 

ஆனால் தனிநபர்களின் விருப்பம்! இதற்கு எல்லை ஏது? கருப்பு, வெள்ளை, சிவப்பு, மஞ்கள், நீலம், பச்சை அல்லது இவைகளின் எண்ணற்ற கலவைகளில் பல்வேறு வண்ணங்களை மக்கள் விரும்புகிறார்கள்.

கருப்பாய் உள்ளவர்களுக்கு மெல்லிய வண்ணங்களும், சிவப்பாய் உள்ளவர்களுக்கு அடர்த்தியான வண்ணங்களும் எடுப்பாய் இருக்கும் என்கிற கருத்தியலுக்கு ஆட்படாதவர்களே கிடையாது. அதற்காகவே கடை கடையாய் ஏறி இறங்குவதும், மணிக்கணக்கில்-ஏன் நாட்கணக்கில்கூட வண்ண வண்ண ஆடைகளைத் தேடி அலைவதும் இன்று வாடிக்கையாகிவிட்டது. 

தனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கணவனுக்குப் பிடித்த நிறம், மனைவிக்குப் பிடித்த நிறம், காதலிக்குப் பிடித்த நிறம், காதலனுக்குப் பிடித்த நிறம் என பிறரின் அன்புக்காக அணியும் வண்ண வண்ண ஆடைகள். ரூம் போட்டு துணி எடுக்கிற நகைச்சுவை கதைகளெல்லாம் நிஜக்கதைகள்தான். துணி எடுக்க கடைக்குப் போனால்... சும்மா சொல்லக்கூடாது... ஒரு சேலை எடுக்க ஓராயிரம் சேலைகளை உருவிப்போடவேண்டுமே. துர்ச்சாதனர்களைவிட பலசாலிகள் நம் விற்பனையாளர்கள். ஒரு சேலை எடுக்க ஓராயிரம் சேலைகளைப் புரட்டினால் அதற்குரிய மேட்சிங் பால்சுக்கும் பிளவ்சுக்கும் ஓராயிரம் கடைகளில் ஏறி இறங்க வேண்டும். உள்ளாடைகளில்கூட நாம் வண்ணங்களை விடுவதில்லையே.

ஆடைகளில் மட்டுமா வண்ணத்தைத் தேடுகிறோம். வாகனங்களில் தொடங்கி வீட்டில் உபயோகிக்கின்ற ஜாமான்கள் வரை அனைத்திலுமே நாம் நிறங்களைத் தேடுகிறோம். 

”வண்ணங்கள் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது. உணவுக்கு எவ்வாறு உப்பு அவசியமோ, அதுபோல வாழ்க்கைக்கு வண்ணங்கள் அவசியம். வண்ணங்கள் நமக்கு சந்தோஷத்தையும், ஆனந்தத்தைம் தருகின்றன. அதனால் அனைவரும் வண்ணங்களை விரும்புகின்றனர்.
ஆடை மட்டுமின்றி உணவு, செல்போன்கள், காலணிகள், பைகள், கண்ணாடிகள், தலைமுடி என எல்லாவற்றிலும் வித்தியாசமான வண்ணங்களை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர் இன்றைய இளையதலைமுறையினர். கருப்பு-வெள்ளையில் பாரப்பதற்கு போரடித்த புத்தகங்கள் கூட இன்றைக்கு பலவிதமான வண்ணங்களில் வெளிவந்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
வண்ணங்களைச் சாதாரணமாக நினைத்து விடக் கூடாது. நாம் தேர்ந்தெடுக்கும் வண்ணங்களை பொறுத்து நம்முடைய மனநிலை அமைவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்..... "

இப்படி வலைப்பூ ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. புற உலகிலிருந்து நாம் பெற்றுள்ள கருத்துக்கள் ஏற்படுத்திய மன நியைிலிருந்தே நாம் வண்ணங்களைத் தேர்வு செய்கிறோம்.  ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட மனநிலை இது. இந்த மனநிலை ஒரு உளவியலாக உருப்பெற்றுள்ளது. இந்த உளவியலே வண்ணங்களைத் தேடி விரட்டுகிறது. பலப்பல வண்ணங்களை விரும்பவது ஒரு உளவியல் தேவையேயொழிய அவசியத் தேவையல்ல. ((it is only a psychological need but not a physiological need)
அவசியமா இல்லையா என்பதிலிருந்து நிறங்களை மக்கள் தீர்மானிப்பதில்லை. தனிப்பட்ட மன விருப்பங்களிலிருந்தே தீர்மானிக்கிறார்கள். தான் எடுப்பாய், அழகாய்த் தோன்ற வேண்டும் என்ற கருத்திலிருந்தே மன விருப்பமும்   அமைகிறது. சுருங்கச் சொன்னால் எதிர் பாலினத்தைக் கவரவே பெரும்பாலானவர்கள் வண்ண வண்ண ஆடைகளை நேசிக்கிறார்கள். இதுவே எதார்த்தம். மற்றபடி எடுப்பான நிறத்தில் ஆடை அணிந்தால் தன்னம்பிக்கை வரும் என்பதெல்லாம் வெற்று நம்பிக்கை. ஆழமான அறிவே தன்னம்பிக்கைக்கு வழி வகுக்கும். இதை நாம் தனிப் பதிவில் பார்ப்போம்.

வெயிலுக்கும், அதிக வெளிச்சத்திற்கும் பொருந்தாத வண்ண உடைகளை அணிந்தால் அவை உடல் நலத்திற்குக் கேடு என்றால் அதில் பொருள் உண்டு. மற்றபடி மஞ்சள் மங்களகரமானது, கருப்பு அபசகுணமானது என வண்ணங்களுக்குத் தரும் தத்தவ விளக்கங்களில் ஒரு வெங்காயமும் கிடையாது. 

இவ்வுலகில் உள்ள எல்லா பொருட்களும் தனிமங்களின் சேர்க்கையிலான மூலக்கூறுகளின் தொகுப்பே. இந்தப் பொருட்களின் மீது ஒளி பட்டு பிரதிபலிக்கும் போது ஏற்படும் ஒரு இயற்பியல் நிகழ்வே நம் கண்களுக்கு வண்ணமாகத் தெரிகிறது. தனிமங்கள் மற்றும் மூலக்கூறுகளின் சேர்க்கைக்கேற்ப வண்ணங்கள் மாறுபடும். இதங்கும் அப்பால் வண்ணங்களுக்கும் வாழ்க்கைக்கும் முடிச்சுப் போடுவது முட்டாள்தனமே.

பச்சைப் பசேலென்ற மலைகளையும், காடுகளையும், பள்ளத்தாக்குகளையும் பார்த்து மயங்குகிறோம். இங்கே பச்சை இரசனைக்குரியது. அதே பச்சையில் ஆடை அணிந்தால் "அய்ய இது என்ன பாய் கலர்ல" என முகம் சுளிக்கிறோம். கண்ணைப் பறிக்கும் ஃபுளோரசன்ட் வண்ணங்கள் பபூன்களுக்கு வேண்டுமானால் பொருந்தும் என்று இருந்தவர்கள் இன்று சீன வாஸ்து வந்தவுடன் இவை தங்கள் வீடுகளை கொழிக்கச் செய்யும் ராசியான வண்ணங்கள் என தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டார்கள். 

இப்படி வண்ணங்களின் மாய்மாளங்களில் மயங்கிக் கிடக்கிறார்கள் மக்கள். இந்த மயக்கம் திடீர் எனத் தோன்றுவதில்லை. குழந்தையாய் இருக்கும் போது வண்ணங்களில் வேறுபாடு மட்டும்தான் தெரியுமே தவிர அதில் விருப்பு வெறுப்புக்கு இடமில்லை. குழந்தைகளைக் கேட்டுப்பாருங்கள். வண்ணங்களைப் பற்றிய கறபிதம் ஏற்படுத்தப்படாதவரை எல்லா வண்ணங்களுமே அவர்களுக்கு ஒன்றுதான். குழந்தைகள் வளர வளர, வண்ணங்களைப் பற்றிய கருத்து திணிக்கப்பட்டு அதற்கேற்ற மனநிலை வளர்க்கப்படுகிறது. இந்த மனநிலையே நாம் வளர்ந்த பிறகு வண்ணங்களைப் பார்க்கும் போது வெளிப்படுகிறது.

குழந்தையாய் இருக்கம் போது இல்லாத விருப்பு வெறுப்பு வளர்ந்த பிறகு வருகிறது என்றால் அது மாறுபட்ட மனநிலைதானே. ஒருசில வண்ணங்களை வெறுப்பதும் (aversion) ஒருசில வண்ணங்களை விரும்புவதும் (desire) மாறுபட்ட மனக்குறிகளே என ஹோமியோபதி மருத்துவம் நிரூபித்துள்ளது.

மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி தங்களின் ஆடைகளை சந்தைப்படுத்தவும் அதிக இலாபமீட்டவுமே முதலாளிள் முயலுவார்கள். அதற்காக புதிய புதிய யுக்திகளைக் கையாளவும் தயங்குவதில்லை. சகோதரர்கள் தங்களின் சகோதரிகளுக்கு "பச்சை நிறச் சேலை எடுத்துத் தரவேண்டும், இல்லை என்றால் ஏதாவது கேடு நேரும்" என்பன போன்ற பீதிகளை அவ்வப்போது பரப்பி தங்களின் விலை போகாத சரக்கை சந்தைப்படுத்தவதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். 

வண்ண வண்ண ஆடைகளை அணிந்தால் நீங்கள் "ஆஹா ஓஹோ' என்றிருப்பீர்கள் என பீலாவிட்டு மக்களைக் கவருவார்கள். சில வண்ணங்கள் பிரபலமாகிவிட்டால் அதைவிட மேம்பட்ட ஒன்றை மற்றொரு முதலாளி வெளிக்கொணர்வான். இப்படி போட்டி போட்டுக் கொண்டு வண்ண வண்ண ஆடைகளை உற்பத்தி செய்வார்கள் முதலாளிகள். வண்ணங்கள் அதிகரிக்க அதிகரிக்க சாயப்பட்டறைகளின் மாசும் அதிகரிக்கும் வெகு வேகமாக சுற்றுச் சூழலும் கெடும். உடை அடிப்படைத் தேவைக்கானவை என்பதையும் தாண்டி அவை நுகர்வுக்கானவை, அணிந்து மகிழ் என்கிற வளர்ந்து வரும் நுகர்வுப் பண்பாடே வண்ண வண்ண ஆடைகளை நோக்கி மக்களை விரட்டுகிறது. 

ஆக, பல வண்ண ஆடைகளுக்கான கிராக்கி அதிகமாவதற்கு மக்களிடையே பரப்பப்படும் தவறான கருத்துக்களும், முதலாளிகளின் லாப வெறியுமே முக்கியக் காரணங்களாகும். ஆடைகளில் அதிகப்படியான வண்ணங்களைக் குறைத்தாலே சாயப்பட்டறைகளினால் ஏற்படும் மாசு பெருமளவில் குறையும். அவசியத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வண்ணங்களால் ஏற்படும் சாயக்கழிவு நீரை உண்மையான  ”ஜீரோ டிஸ்சார்ஜ்” மூலம் சுற்றுச் சூழல் கேட்டைக் குறைக்கலாமே.

நமது ஆடைகளில் மின்னுவது வெறும் வண்ணங்கள் அல்ல. அவை சாயக் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட மக்களின் இரத்தச் சுவடுகள்.

தொடர்புடைய பதிவுகள்: 

No comments:

Post a Comment