Showing posts with label சிவப்பு. Show all posts
Showing posts with label சிவப்பு. Show all posts

Monday, 8 February 2016

சீக்காளியும் லேகியக்காரனும்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. திராவிடம் - தமிழியம் - தேசியம் - சாதியம் என வித விதமான லேகியங்களை கிண்டத் தொடங்கிவிட்டனர். 

இலையில் மை தடவி மயக்கும் காரிகை ஒருத்தி 'என் பச்சிலை லேகியத்துக்கு ஈடு இணை ஏது?' என எக்காளத்துடன் இருமாந்து இருக்கிறாள். இவள் மென்று துப்பும் எச்சத்தைக் கவ்வ சிலர் நாய் போல காத்துக் கிடக்கின்றனர்.

ஏற்கனவே லேகியத்தைக் கிண்டி கண்ணாடிக்  குடுவையில் போட்டு வெயிலில் வைத்து 'லேகியம் கைகூடுமா!' என சூரியனையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் ஒரு இளம் காளை.

இவர்கள் இருவரும் மொத்த வியாபாரிகள் என்பதால் தனியாக கடைவிரிக்க சிலர் முயற்சிக்கின்றனர். 

அவர்களில்...

மஞ்சள் சட்டைக்காரன் தனியாக 'மாங்கனி' லேகியம் கிண்ட முயற்சிக்கிறான். ஆளாளுக்கு கூவினால் கூட்டம் கலைந்து விடுமோ என இவன் எண்ணினானோ என்னவோ ஒருவனை மட்டுமே லேகியம் விற்க நியமித்துள்ளான். இவன் கிண்டும் லேகியத்தை இவன் வீட்டில் உள்ளவனே வாங்குவானா என்பதுகூட தெரியாமலேயே இவன் கடைவிரித்திருக்கிறான் பாவம்!

மோடி மஸ்தான் வித்தை எல்லாம் இங்கே எடுபடாது என உணர்ந்த காவி வேட்டிக்காரன், 'கேனவாயன் எவனாவது கிடைக்கமாட்டானா!' என அலைந்து கொண்டிருக்கிறான். எவனும் கிடைக்கவில்லை எனில் இவன் முதலுக்கு மோசம்தான். 


நீலச்சட்டையும்,  சிவப்புச் சட்டைகளும், பட்டா பட்டியோடு சேர்ந்து ஊர் ஊராய் லேகியம் விற்கத் தொடங்கி விட்டனர். சீக்காளிகள் பெருத்த நாடல்லவா இது! லேகியம் என்றால் கூட்டம் கூடத்தானே செய்யும். ஆனால் வேடிக்கை பார்ப்பவன் எல்லாம் லேகியம் வாங்குவானா என்பதைக்கூட அறியாமலேயே இப்பொழுதே கல்லாப் பெட்டி நிறைந்து விட்டதாக எண்ணி குதூகலிக்கத் தொடங்கிட்டனர் இவர்கள்.

போன முறை காரிகையோடு சேர்ந்து லேகியம் விற்றதில் கேப்டனுக்கு கொஞ்சம் சில்லரை சேர்ந்தது. சில சேல்ஸ்மேன்கள் கல்லாப்பெட்டியை லவட்டிக் கொண்டு இவரை விட்டு ஆத்தா வீட்டுக்கே ஓட்டம் பிடித்ததால் இம்முறை கடைவிரிப்பது பற்றி சேல்ஸ்மேன்களோடு இன்னமும் ஆலோசித்து வருகிறார். 

அகில இந்திய அளவில் லேகியம் விற்பவர்களுக்கு இங்கே காலனாகூட பேறாது என்பதால் ஏதாவது ஒரு கடையில் லேகியம் மடிக்கவாவது வாய்ப்பு கிடைக்குமா என 'கை' ஏந்தி நிற்கின்றனர்.

முதல் போட வாய்ப்பில்லாத பலர் சில்லரை விற்பனைக்காக முண்டியடிக்கின்றனர். 

லேகியங்களுக்கான லேபில்கள் பல வண்ணங்களில் தயாராகிவிட்டன. 

சந்துக்கு சந்து - தெருவுக்கு தெரு - ஊருக்கு ஊரு என முச்சந்திகளில் லேகியக்காரர்கள் கடைவிரிக்கத் தொடங்கிவிட்டனர்.

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த லேகியக் கடைகள் திறந்திருக்கும் என்பதால் முச்சந்திகளில் கூட்டம் அலைமோதுகிறது. 

ஆசை காட்டியும், அச்சமூட்டியும் எப்படியாவது லேகியத்தை நம் தலையில் கட்டுவதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். எச்சரிக்கை!

சீக்காளிகள் இருக்கும் வரை லேகியக்காரர்களுக்கு கொண்டாட்டம்தான்.

ஊரான்

தொடர்படைய பதிவுகள்:

டம்மி பீசு!
தேர்தல் களம்-4: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-3: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-2: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-1: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தமிழகமே திருமங்கலமாக மாறுமா?
சாபமா? வரமா? கேப்டனுக்கு எது பலிக்கும்?
கேப்டன் கேடட் ஆன கதை!
"முள்ளுக்காட்டில் மல்லுக்கட்டு!" த்ரில்லர் பட கருத...
மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!...
யாருக்கும் வெட்கமில்லை!
கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா..

Sunday, 6 February 2011

ஆடைகளில் மின்னுவது வண்ணங்களா - இரத்தச் சுவடுகளா?


வண்ணங்களை விரும்பாதவர்களோ, இரசிக்காதவர்களோ இவ்வுலகில் இருக்கவே முடியாது. அனைத்தையும் துறந்த விட்டதாகக் கூறும் சாமியார்கள்கூட காவிக்கு அடிமைகள். சாமிகளே வண்ணத்தை விரும்பும் போது மற்றவர்களைச் சொல்ல வேண்டுமா?

எல்லா அரசியல்வாதிகளும் பொதுவில் விரும்புவது வெள்ளை நிறம். ரொம்ப வெள்ள மனசு இவர்களுக்கு! மனம் அழுக்காய் உள்ளவர்கள் தங்களை வெளுப்பாய் காட்டிக் கொள்வார்கள் என்பது ஒரு உளவியல். எப்பொழுதும் எதிர் நிலை எடுப்பதே மனதின் இயல்பு. அப்பொழுதுதான் தனது பலவீனத்தை மறைத்துத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியும். 

கட்சியின் கொள்கைக்கேற்ப ஒவ்வொரு கட்சியும் ஒரு நிறத்தைப் பட்டா போட்டுக் கொண்டு விட்டன. பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டனுக்கு மஞ்சளும், தலித் இயக்கத் தொண்டனுக்கு நீலமும், பாரதிய ஜனதா கட்சித் தொண்டனுக்குக் காவியும் பிடிக்கும். கம்யூனிஸ்டுகளின் விருப்பமாய் இருந்த சிவப்பை இன்று மேல்மருவத்தூர் அம்மாக்கள் அதிகம் நேசிக்கின்றனர். பகுத்தறிவாளர்களின் பாசத்திற்குரிய கருப்பு இன்று அய்யப்ப பக்தர்களின் அன்பிற்குரிய நிறமாய் மாறிவிட்டது.  

தனக்குப் பிடித்த நிறத்தை விரும்புகிற அதே நேரத்தில் பிறருக்கு பிடித்த நிறத்தை வெறுக்கவும் செய்கிறார்கள். சங்கப் பரிவாரங்களுக்கு சிவப்பின் மீது வெறுப்பு. மேல் மருவத்தூரின் சிவப்பும் இவர்களுக்குப் பிடிக்காதுதான். காரணம் சாமானிய சாதிக்காரன் தனி ஆவர்த்தனம் பாடுவதால். நேற்றுவரை கருப்பை வெறுத்த இந்து முன்னணிக்காரனுக்கு இன்று கருப்பும் பிடிக்கும். காரணம் அது அய்யப்பனின் விருப்பமாயிற்றே.

இந்த விருப்பு-வெறுப்பு எல்லாம் தனி நபர் சார்ந்ததல்ல. தாங்கள் கொண்டிருக்கும் கொள்கை கோட்பாடு சார்ந்தது. கொள்கையை மாற்றிக் கொள்ளும் போது இவர்கள் தங்களது நிற விருப்பத்தையும் சேர்த்தே மாற்றிக் கொள்கிறார்கள். கொள்கைளை நேசிப்பவர்களுக்கு இந்த நிறங்கள் தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை என்றாலும் கூட்டமாகச் சேரும் போது அதற்குரிய நிறத்தில்தான் உடையனிய வேண்டும். அதுவே அவர்களின் ஒழுங்கு.

கன்னி மேரிகளுக்கும், அங்கிப் பாதிரிகளுக்கும் வெள்ளை என்றால் ரொம்பப் பிடிக்கும். விரும்புகிறார்களோ இல்லையோ  இஸ்லாமியப் பெண்களுக்கு கருப்பு (பர்தா) கட்டாயம். இந்த நிறங்கள் மதக் கோட்பாட்டாளர்களுக்கு கட்டாயம் பிடிக்கும். இங்கே நிற விருப்பம் மதத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

காவலருக்கும், காவலாளிக்கும், ஓட்டுநர்கள்-நடத்துனர்களுக்கும் காக்கி கட்டாயம். பள்ளிச் சீருடை, கல்லூரிச் சீருடை, தொழிலாளர் சீருடை, அலுவலகச் சீருடை என அந்ததந்த நிறுவனங்கள் தீர்மானித்துள்ள நிறங்கள் ஊழிர்களுக்குக் கட்டாயம். விருப்பம் இருக்கிறதோ இல்லையோ இவர்களுக்கு இந்நிறுவனத்தின் நிறம் கௌரவம்.

வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நீதிமான்களுக்கு வெள்ளை உடையும்-கருப்பு கோட்டும், மருத்துவர்களுக்கு வெள்ளை உடையும் அதே நிறத்தில் கோட்டும், செவிலியர்களுக்கு வெள்ளை உடையும் அவசியம். இது இவர்களின் தொழில் சார்ந்த நிறம்.

விதவைகளுக்கு வெள்ளைதான் என நாட்டாமைகள் தீர்ப்பளிக்கின்றன.

இப்படி சாதி, மத, அரசியல், தொழில் அடிப்படையில் ஒரு சில வண்ணத்தில்தான் ஆடைகள் என தீர்மானிக்கப்பட்டுவிட்டன. 

ஆனால் தனிநபர்களின் விருப்பம்! இதற்கு எல்லை ஏது? கருப்பு, வெள்ளை, சிவப்பு, மஞ்கள், நீலம், பச்சை அல்லது இவைகளின் எண்ணற்ற கலவைகளில் பல்வேறு வண்ணங்களை மக்கள் விரும்புகிறார்கள்.

கருப்பாய் உள்ளவர்களுக்கு மெல்லிய வண்ணங்களும், சிவப்பாய் உள்ளவர்களுக்கு அடர்த்தியான வண்ணங்களும் எடுப்பாய் இருக்கும் என்கிற கருத்தியலுக்கு ஆட்படாதவர்களே கிடையாது. அதற்காகவே கடை கடையாய் ஏறி இறங்குவதும், மணிக்கணக்கில்-ஏன் நாட்கணக்கில்கூட வண்ண வண்ண ஆடைகளைத் தேடி அலைவதும் இன்று வாடிக்கையாகிவிட்டது. 

தனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கணவனுக்குப் பிடித்த நிறம், மனைவிக்குப் பிடித்த நிறம், காதலிக்குப் பிடித்த நிறம், காதலனுக்குப் பிடித்த நிறம் என பிறரின் அன்புக்காக அணியும் வண்ண வண்ண ஆடைகள். ரூம் போட்டு துணி எடுக்கிற நகைச்சுவை கதைகளெல்லாம் நிஜக்கதைகள்தான். துணி எடுக்க கடைக்குப் போனால்... சும்மா சொல்லக்கூடாது... ஒரு சேலை எடுக்க ஓராயிரம் சேலைகளை உருவிப் போடவேண்டுமே. துர்ச்சாதனர்களைவிட பலசாலிகள் நம் விற்பனையாளர்கள். ஒரு சேலை எடுக்க ஓராயிரம் சேலைகளைப் புரட்டினால் அதற்குரிய மேட்சிங் பால்சுக்கும் பிளவ்சுக்கும் ஓராயிரம் கடைகளில் ஏறி இறங்க வேண்டும். உள்ளாடைகளில்கூட நாம் வண்ணங்களை விடுவதில்லையே.

ஆடைகளில் மட்டுமா வண்ணத்தைத் தேடுகிறோம். வாகனங்களில் தொடங்கி வீட்டில் உபயோகிக்கின்ற ஜாமான்கள் வரை அனைத்திலுமே நாம் நிறங்களைத் தேடுகிறோம். 

”வண்ணங்கள் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது. உணவுக்கு எவ்வாறு உப்பு அவசியமோ, அதுபோல வாழ்க்கைக்கு வண்ணங்கள் அவசியம். வண்ணங்கள் நமக்கு சந்தோஷத்தையும், ஆனந்தத்தைம் தருகின்றன. அதனால் அனைவரும் வண்ணங்களை விரும்புகின்றனர்.
ஆடை மட்டுமின்றி உணவு, செல்போன்கள், காலணிகள், பைகள், கண்ணாடிகள், தலைமுடி என எல்லாவற்றிலும் வித்தியாசமான வண்ணங்களை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர் இன்றைய இளையதலைமுறையினர். கருப்பு-வெள்ளையில் பாரப்பதற்கு போரடித்த புத்தகங்கள் கூட இன்றைக்கு பலவிதமான வண்ணங்களில் வெளிவந்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
வண்ணங்களைச் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. நாம் தேர்ந்தெடுக்கும் வண்ணங்களை பொறுத்து நம்முடைய மனநிலை அமைவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்..... "

இப்படி வலைப்பூ ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. புற உலகிலிருந்து நாம் பெற்றுள்ள கருத்துக்கள் ஏற்படுத்திய மன நியைிலிருந்தே நாம் வண்ணங்களைத் தேர்வு செய்கிறோம்.  ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட மனநிலை இது. இந்த மனநிலை ஒரு உளவியலாக உருப்பெற்றுள்ளது. இந்த உளவியலே வண்ணங்களைத் தேடி விரட்டுகிறது. பலப்பல வண்ணங்களை விரும்பவது ஒரு உளவியல் தேவையேயொழிய அவசியத் தேவையல்ல. ((it is only a psychological need but not a physiological need)
அவசியமா இல்லையா என்பதிலிருந்து நிறங்களை மக்கள் தீர்மானிப்பதில்லை. தனிப்பட்ட மன விருப்பங்களிலிருந்தே தீர்மானிக்கிறார்கள். தான் எடுப்பாய், அழகாய்த் தோன்ற வேண்டும் என்ற கருத்திலிருந்தே மன விருப்பமும்   அமைகிறது. சுருங்கச் சொன்னால் எதிர் பாலினத்தைக் கவரவே பெரும்பாலானவர்கள் வண்ண வண்ண ஆடைகளை நேசிக்கிறார்கள். இதுவே எதார்த்தம். மற்றபடி எடுப்பான நிறத்தில் ஆடை அணிந்தால் தன்னம்பிக்கை வரும் என்பதெல்லாம் வெற்று நம்பிக்கை. ஆழமான அறிவே தன்னம்பிக்கைக்கு வழி வகுக்கும். இதை நாம் தனிப் பதிவில் பார்ப்போம்.

வெயிலுக்கும், அதிக வெளிச்சத்திற்கும் பொருந்தாத வண்ண உடைகளை அணிந்தால் அவை உடல் நலத்திற்குக் கேடு என்றால் அதில் பொருள் உண்டு. மற்றபடி மஞ்சள் மங்களகரமானது, கருப்பு அபசகுணமானது என வண்ணங்களுக்குத் தரும் தத்தவ விளக்கங்களில் ஒரு வெங்காயமும் கிடையாது. 

இவ்வுலகில் உள்ள எல்லா பொருட்களும் தனிமங்களின் சேர்க்கையிலான மூலக்கூறுகளின் தொகுப்பே. இந்தப் பொருட்களின் மீது ஒளி பட்டு பிரதிபலிக்கும் போது ஏற்படும் ஒரு இயற்பியல் நிகழ்வே நம் கண்களுக்கு வண்ணமாகத் தெரிகிறது. தனிமங்கள் மற்றும் மூலக்கூறுகளின் சேர்க்கைக்கேற்ப வண்ணங்கள் மாறுபடும். இதற்கும் அப்பால் வண்ணங்களுக்கும் வாழ்க்கைக்கும் முடிச்சுப் போடுவது முட்டாள்தனமே.

பச்சைப் பசேலென்ற மலைகளையும், காடுகளையும், பள்ளத்தாக்குகளையும் பார்த்து மயங்குகிறோம். இங்கே பச்சை இரசனைக்குரியது. அதே பச்சையில் ஆடை அணிந்தால் "அய்ய இது என்ன பாய் கலர்ல" என முகம் சுளிக்கிறோம். கண்ணைப் பறிக்கும் ஃபுளோரசன்ட் வண்ணங்கள் பபூன்களுக்கு வேண்டுமானால் பொருந்தும் என்று இருந்தவர்கள் இன்று சீன வாஸ்து வந்தவுடன் இவை தங்கள் வீடுகளை கொழிக்கச் செய்யும் ராசியான வண்ணங்கள் என தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டார்கள். 

இப்படி வண்ணங்களின் மாய்மாலங்களில் மயங்கிக் கிடக்கிறார்கள் மக்கள். இந்த மயக்கம் திடீர் எனத் தோன்றுவதில்லை. குழந்தையாய் இருக்கும் போது வண்ணங்களில் வேறுபாடு மட்டும்தான் தெரியுமே தவிர அதில் விருப்பு வெறுப்புக்கு இடமில்லை. குழந்தைகளைக் கேட்டுப்பாருங்கள். வண்ணங்களைப் பற்றியக் கற்பிதம் ஏற்படுத்தப்படாதவரை எல்லா வண்ணங்களுமே அவர்களுக்கு ஒன்றுதான். குழந்தைகள் வளர வளர, வண்ணங்களைப் பற்றிய கருத்து திணிக்கப்பட்டு அதற்கேற்ற மனநிலை வளர்க்கப்படுகிறது. இந்த மனநிலையே நாம் வளர்ந்த பிறகு வண்ணங்களைப் பார்க்கும் போது வெளிப்படுகிறது.

குழந்தையாய் இருக்கம் போது இல்லாத விருப்பு வெறுப்பு வளர்ந்த பிறகு வருகிறது என்றால் அது மாறுபட்ட மனநிலைதானே. ஒருசில வண்ணங்களை வெறுப்பதும் (aversion) ஒருசில வண்ணங்களை விரும்புவதும் (desire) மாறுபட்ட மனக்குறிகளே என ஹோமியோபதி மருத்துவம் நிரூபித்துள்ளது.

மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி தங்களின் ஆடைகளை சந்தைப்படுத்தவும் அதிக இலாபமீட்டவுமே முதலாளிள் முயலுவார்கள். அதற்காக புதிய புதிய யுக்திகளைக் கையாளவும் தயங்குவதில்லை. சகோதரர்கள் தங்களின் சகோதரிகளுக்கு "பச்சை நிறச் சேலை எடுத்துத் தரவேண்டும், இல்லை என்றால் ஏதாவது கேடு நேரும்" என்பன போன்ற பீதிகளை அவ்வப்போது பரப்பி தங்களின் விலை போகாத சரக்கை சந்தைப்படுத்தவதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். 

வண்ண வண்ண ஆடைகளை அணிந்தால் நீங்கள் "ஆஹா ஓஹோ' என்றிருப்பீர்கள் என பீலாவிட்டு மக்களைக் கவருவார்கள். சில வண்ணங்கள் பிரபலமாகிவிட்டால் அதைவிட மேம்பட்ட ஒன்றை மற்றொரு முதலாளி வெளிக்கொணர்வான். இப்படி போட்டி போட்டுக் கொண்டு வண்ண வண்ண ஆடைகளை உற்பத்தி செய்வார்கள் முதலாளிகள். வண்ணங்கள் அதிகரிக்க அதிகரிக்க சாயப்பட்டறைகளின் மாசும் அதிகரிக்கும். வெகு வேகமாக சுற்றுச் சூழலும் கெடும். உடை அடிப்படைத் தேவைக்கானவை என்பதையும் தாண்டி அவை நுகர்வுக்கானவை, அணிந்து மகிழ் என்கிற வளர்ந்து வரும் நுகர்வுப் பண்பாடே வண்ண வண்ண ஆடைகளை நோக்கி மக்களை விரட்டுகிறது. 

ஆக, பல வண்ண ஆடைகளுக்கான கிராக்கி அதிகமாவதற்கு மக்களிடையே பரப்பப்படும் தவறான கருத்துக்களும், முதலாளிகளின் இலாப வெறியுமே முக்கியக் காரணங்களாகும். ஆடைகளில் அதிகப்படியான வண்ணங்களைக் குறைத்தாலே சாயப்பட்டறைகளினால் ஏற்படும் மாசு பெருமளவில் குறையும். அவசியத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வண்ணங்களால் ஏற்படும் சாயக்கழிவு நீரை உண்மையான  ”ஜீரோ டிஸ்சார்ஜ்” மூலம் சுற்றுச் சூழல் கேட்டைக் குறைக்கலாமே.

நமது ஆடைகளில் மின்னுவது வெறும் வண்ணங்கள் அல்ல. அவை சாயக் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட மக்களின் இரத்தச் சுவடுகள்.

தொடர்புடைய பதிவுகள்: 

Wednesday, 8 December 2010

சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா? தொடர்---3

'நமது 'முன்னோர்கள்' திருமண விசயத்தில் நன்கு சிந்தித்து சாஸ்திர விதிமுறைகளை ஆராய்ந்து 23 பொருத்தங்களை வகுத்தார்களாம்' என்பதை ஏற்கனவே பார்த்தோம்.


நமது முன்னோர்கள்தான் தற்குறிகளாச்சே? அவர்கள் எப்படி நன்கு சிந்தித்து...? ஆராய்ந்து ...? வகுத்திருக்க முடியும்? அதுவும் சாஸ்திர விதிமுறைகளை ஆராய்ந்தார்களாம். கேட்கிறவன் கேனப்பயல்னா எருமைமாடுகூட ஏரோப்பிளேன் ஓட்டுமாம். அந்த கதையாயில்ல இருக்கு இது.

இங்கே முன்னோர்கள் என்பது பார்ப்பனர்களைத் தவிர வேறுயாருமில்லை என்பது சொல்லித்தான் தெரியவேண்டுமா?

இந்தப் பொருத்தங்களில் ஆறு பொருந்தினாலே போதுமாம். திருமணத்திற்கு தடை ஏதுமில்லையாம். சரி. ஜாதகத்தை நம்புகிறவர்கள் இந்தப் பொருத்தங்களை மட்டும்தான் பார்க்கிறார்களா? வேறு பொருத்தங்களைப் பார்ப்பதில்லையா?

நடைமுறையில் மக்கள் பார்க்கும் பொருத்தங்களே முதன்மையானதாகவும் இறுதியானதாகவும் அமைகின்றன. திருமணம் நடைபெறுவதற்கும், நடைபெறாமல் போவதற்கும் நடைமுறையில் பார்க்கப்படும் பொருத்தங்களே பிரதானமாக அமைகின்றன.

நடைமுறையில் பார்க்கப்படும் பொருத்தங்கள்:

  • பையன் கருப்பா-சிவப்பா? ஆளு நெட்டையா-குட்டையா? ஊத்தப்பல்லா- நல்லப்பல்லா?   கூர் மூக்கா-சப்ப மூக்கா? நல்ல கண்ணா-மாறு கண்ணா?  நடை, பாவனை, குரல்.....ஆணா இருந்தா ஹாண்ட்சம், பெண்ணா இருந்தா குடும்ப லட்சணம், குடும்பப் பாங்கான-இப்படி ஜோடி பொருத்தத்திற்கே ஆயிரம் இருக்கிறது. 
  • வசதி-வாய்ப்பு எப்படி? பையன் என்ன வேலை செய்கிறான்? கை நிறைய சம்பளம்-குறிப்பா 'கவர்மெண்ட்' மாப்பிள்ளையா, உட்கார வச்சி சோறு போடுவானா?அதாவது பெண் கஷ்டப்படாம வாழ வேண்டும். சம்பளத்தோடு மேற்படி வருமானம்-கிம்பளம்- எவ்வளவு? அதாவது மாப்பிள்ளை ஊரை ஏமாற்றத் தெரிந்தவனா? வீடு நில புலம் சொத்து,  அப்பாவோட சேமிப்பு, வங்கி இருப்பு, ஏழையாக இருந்தால் ஆடு மாடு என  வசதிகளைப் பார்க்க வேண்டும். சொத்தைப் பங்கு போட உடன் பிறந்தவர்கள் அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை இருக்கிறார்களா? மொத்தத்தில் ஒரே பையனா? சாதி சனம், சொந்த பந்தம், பலம் எவ்வளவு? நாளைக்கு ஏதாவது தகராறுன்னா தேவைப்படுமே என்பதை உறுதி செய்து கொள்வது. இவைகள் பெண் வீட்டார் பார்க்கும் பொருத்தம். இவற்றை உறுதி செய்து கொணட பிறகே அடுத்த பொருத்தத்திற்குச் செல்கின்றனர்.
  • பெண் நல்ல சிவப்பா 'கலரா' இருக்க வேண்டும்.  ஐஸ்வர்யா ராய் போல-இப்போதைய கனவுக்கன்னி யாரோ? இது பையனின் எதிர்ப்பார்ப்பு. இதற்குமேல், பையனை பெற்றவர்கள், உற்றார் உறவினர்களின் எதிர்பார்ப்புகள் தனி. கருத்தவன் செவத்தவளைக் கட்டலாம் ஆனால் செவத்தவன் கருத்தவளைக் கட்டமாட்டான். 
  • உருவப் பொருத்தங்கள் மேற்சொன்ன வகையில் அமைந்து விட்டால் அடுத்து பார்ப்பது பெண்ணுக்கு உடன் பிறந்தவர்கள், குறிப்பாக ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடாது. எதிர்காலத்தில் மாமனாரின் சொத்து முழுக்க இவனுக்கே வரவேண்டும். சொத்து பத்து ஏராளம் என்றால் உருவம்-வடிவம் விசயத்தில் 'அட்ஜஸ்ட்'  செய்து கொள்பவர்களும் உண்டு. முன்பெல்லாம் பெண்ணோடு பிறந்த ஆண்கள் நிறைய பேர் இருக்க வேண்டும் என்று கருதினர். மாமன் மச்சான்கள் அதிகமாக இருப்பதை எதிர்ப்பார்ப்பார்கள். காரணம் ஆபத்துக்கு உதவுமே என்று.
  • மாப்பிள்ளை வீட்டார் பார்க்கிற அடுத்தப் பொருத்தம் பெண்ணுக்கு சமைக்கத் தெரியுமா? வீட்டு வேலை தெரியுமா? என்பது. சாதாரண வீட்டுப் பெண்களாக இருந்தால், புகுந்த வீட்டில் வந்து எல்லோருக்கும் அடிமையாக வேலை செய்ய வேண்டும். அதாவது, தொழில் சார்ந்த வேலைகள் மற்றும் துணி துவைப்பது, பாத்திரம் விளக்குவது, ருசியாய் சமைப்பது....மொத்தத்தில் உழைத்துக் கொட்டத் தயாராக இருக்க வேண்டும்.
  • வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தால், சம்பளத்தை கவரோடு மாமியாரிடம் அல்லது கணவனிடம் கொடுப்பாளா? தன்னைப் பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கி வேலை வாங்கிக் கொடுத்த பெற்றோர் மற்றும் உற்றார் உறவினருக்கு ஆபத்துக் கட்டத்தில்கூட அந்தப் பெண் உதவக்கூடாது. வெளி ஊரில் வேலை என்றாலும் வேலையை விடக்கூடாது,  மாற்றிக்கொண்டு வரவேண்டும். இது எதுவும் பொருந்தாத பட்சத்தில் விருப்பம் இல்லை என்றாலும் வேலையை விட்டுவிடவும் தயாராக இருக்க வேண்டும்.
  • அடுத்து வரதட்சணை. நகை பவுன் கணக்கிலா, கிலோ கணக்கிலா? கார் பங்களா சீர் எவ்வளவு தேறும்? டூ வீலரில் தொடங்கி கோட்டு சூட்டு என நீண்டு செருப்பைக்கூட விடாமல் வாங்க வேண்டும். தனக்கு தேவைப் படுகிறதோ இல்லையோ வாசிங் மிசின், ஏசி, ஃபிர்ட்ஜ், கட்டில் மெத்தை எனத் தொடங்கி ஊறுகாய்ச் சட்டிவரை எதையும் விடுவதில்லை. இவையெல்லாம் திருமணத்தன்று மண்டபத்தில் பொருட்காட்சி வைக்க வேண்டும். சில வசதி படைத்த திருமணங்களில் இந்த பொருட்காட்சிக்கு தனி ஹாலே தேவைப்படுகிறது.
ஒற்றரை வைத்து உளவு பார்ப்பது: 
  • சாதி-குலம் கோத்திரத்தை உறுதி செய்வது. 
  • சொல்லப்பட்ட சொத்து பத்து உண்மைதானா? 
  • பையனுக்கு பீடி சிகரெட்டு, தண்ணி- கிண்ணி, சீட்டு, பொம்பள-கிம்பள இத்தியாதி-இத்தியாதி என ஏதாவது பழக்கம் உண்டா?  இது பெண் வீட்டார் பார்க்கும் உளவு வேலை. 
  • பெண் நல்லவளா? 'கற்பு' விசயத்தில் பெண் 'கெட்டுப்' போயிருந்தால் அவள் வாழ்வு அதோ கதிதான்.  ஆனால் ஆண் இந்த விசயத்தில் கெட்டவனாயிருந்தாலும் அது ஒரு பெரிய விசயமல்ல. ஒரு பெண் ஆண்களுடன் இயல்பாகப் பழகினால் அது குற்றம், பெண்ணோட அப்பன் எப்படி என்பதைவிட பெண்ணோட தாயார் எப்படி?  இது குடும்ப கௌரவத்திற்கு அவசியமாம். இது பையன் வீட்டார் பார்க்கும் உளவு வேலை.
CIA, RAW, ISI, KGB இவர்களெல்லாம் நம்ம ஒற்றர்களிடம் பயிற்சி எடுத்தால் டெரரிஸ்டுகளைப் பின்னிப் பெடலெடுக்கலாம்.

ஆக மேற்கண்ட பொருத்தங்களே நடைமுறையில் திருமணங்களைத் தீர்மானிக்கின்றன. பிறகெதற்கு ஜாதகப் பொருத்தம்? புரோகிதர்கள் பொருக்கித் தின்னத்தான்.

தொடரும்

ஊரான்