Tuesday, April 5, 2011

என்னை விடப் பசியோடு பலர் காத்துக் கிடக்கின்றனர்!

நண்பா,

நீயும் உனது குடும்பத்தாரும் நலமா?

கடந்த சில நாட்களாக இங்கு எல்லாமே குழப்பமாகவே உள்ளது. கண்களை திறந்தாலும், மூடினாலும் பிணங்களைத்தான் பார்க்க முடிகிறது.

ஒரு நாளைக்கு 48 மணி நேரம் எனக்கருதி 20 மணி நேரம் உழைத்தால்தான் துன்பத்திலிருந்து மக்களை மீட்டு உதவ முடியும்.

எங்களுக்கு குடிக்கத் தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை. பங்கீட்டு (ration) முறையில் வழங்கினாலும் கிட்டத்தட்ட உணவும் இல்லாத நிலைதான். அகதிகளை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்ல உத்தரவு வரும் வரை பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறோம்.

புகுசிமா (Fukushima) அணுமின் நிலையத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் தற்போது இருக்கிறேன். நான் நிறையவே உனக்குச் சொல்ல வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் எழுதினால் நெருக்கடியான காலங்களில் மனித உறவுகளும் நடத்தைகளும் பற்றிய ஒரு நாவலாக அது அமையக்கூடும்.

இங்கு மக்கள் அமைதியாக இருக்கின்றனர். அவர்களது நடத்தையும் நேர்மையும் சிறந்து விளங்குகிறது. தற்போது இங்கு எதுவும் மோசமாக இருக்கவில்லை; இன்னும் ஒரு வார காலத்தில் போதுமான பாதுகாப்பு கொடுத்து நிலைமையை ஒழுங்குபடுத்தவில்லை என்றால் அதற்கான உத்தரவாதத்தை என்னால் தரமுடியாது.

அவர்களும் மனிதர்கள்தானே. பசியும் தாகமும் நேர்மையை வீழ்த்திவிட்டால் அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடும்.வான் வழியாக உணவையும், மருந்தையும் அரசாங்கம் அளித்து வந்தாலும் அது சிறிதளவு உப்பைப் பெருங்கடலில் போடுவதற்கு ஒப்பாகும்.

நண்பா! இதோ ஒரு உயிர்த் துடிப்பான சம்பவம். 'மனிதனாக நடந்து கொள்வது எப்படி?' என என்னைப் போன்ற வளர்ந்தவர்களுக்கு ஒரு ஜப்பானியச் சிறுவன் கற்றுத் தந்த பாடம்.

உணவு வழங்கவிருக்கும் ஒரு அறக்கட்டளை நிறுவனத்துக்கு உதவி செய்ய நேற்று இரவு ஒரு சிறிய இலக்கணப் பள்ளிக்குச் (grammar school) சென்றிருந்தேன். பாம்பு போல் நீண்டிருந்த வரிசையில் ஒரு சிறுவனைக் கண்டேன். அவன் டி-சட்டையும் காற்சட்டையும் அணிந்திருந்தான்.

அப்பொழுது குளிர் அதிகமாகிக் கொண்டிருந்தது. வரிசையின் கடைசியில் அச்சிறுவன் நின்றிருந்தான். அவன் வரும் போது உணவு தீர்ந்து விடுமோ என்ற கவலை எனக்கு. அவனிடம் பேசினேன். நில நடுக்கம் ஏற்பட்ட போது அவன் பள்ளியில் இருந்ததாகக் கூறினான். இப்பகுதியிலேயே பணிபுரியும் அவனது தந்தை மகிழுந்துவில் (car) அப்போது வந்திருக்கிறார். அவனது தந்தையை மகிழுந்தோடு சுனாமி அள்ளிச் சென்றதை மூன்றாவது மாடியின் பால்கனியிலிருந்து தான் பார்த்ததாகச் சொன்னான்.

அவனது தாயைப் பற்றிக் கேட்டேன். கடற்கரையையொட்டி அவர்களது வீடு இருந்ததால்,  அவனது தாயும் தங்கையும் தப்பித்திருக்க முடியாது என்றான். அவனது உறவினர்களைப் பற்றி கேட்ட போது தலை குனிந்து கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

சிறுவன் குளிரில் நடுங்கினான். எனது 'போலிஸ் ஜாக்கெட்டை' அவனுக்குப் போர்த்தினேன். எனக்கு கொடுக்கப்பட்ட பங்கீட்டு (ration) உணவுப் பை கீழே நழுவிய போது அதை எடுத்து அவனிடம் கொடுத்தேன். "நீ வரிசையில் வரும் போது உணவு தீர்ந்துவிடும். நான் ஏற்கனவே உணவு உட்கொண்டு விட்டேன். நீ ஏன் எனது பங்கை பெற்றுக் கொள்ளக்கூடாது?" என்று கேட்டேன்.

தலை வணங்கி நான் கொடுத்த உணவுப் பையை பெற்றுக் கொண்டான். அவன் உடனே உணவு உட்கொள்வான் என நினைத்தேன். ஆனால் அவன் அதைச் செய்யவில்லை.உணவுப் பையை எடுத்துக் கொண்டு வரிசையின் மறுமுனைக்குச் சென்று விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மொத்த உணவோடு நான் கொடுத்த உணவையும் சேர்த்துவிட்டான்.

நான் அதிர்ந்து போனேன். "நீ ஏன் சாப்பிடாமல் அங்கே சென்று சேர்த்தாய்?" எனக் கேட்டேன். "என்னை விடப் பசியோடு பலர் காத்துக் கிடக்கின்றனர். நான் சேர்த்த அந்த உணவையும் பிறருக்கு சமமாக விநியோகிக்கலாமே" என பதிலளித்தான்.

என் கண்களில் வழிந்த கண்ணீரை துடைப்பதற்காக நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டதாக அவர்கள் பேசியதை என்னால் கேட்க முடிந்தது.

நல்லவற்றிற்கு தியாகம் செய்ய வேண்டும் என்ற கருத்தை புரிந்து கொள்ளும் ஒரு சிறுவனை உருவாக்கிய மக்களும் சமூகமும் உயர்ந்தவர்கள்தானே.

நன்று! உனக்கும்,உனது குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அடுத்த சுற்றுப் பணி மீண்டும் தொடங்குகிறது. 

ஹா மின் தான்
Ha Minh Thanh

குறிப்பு: ஜப்பானுக்குப் புலம் பெயர்ந்து அங்கு காவலராகப் (police) பணிபுரியும் வியட்நாமைச் சேர்ந்த ஹா மின் தான் (Ha Minh Thanh) தனது நண்பனுக்கு எழுதிய கடிதம் இது. 

Published on Shanghai Daily.com 
(http//www.shanghaidaily.com/)
http://www.shanghaidaily.com/article/?id=467066&type=opinion

 தமிழில்: ஊரான்.

11 comments:

  1. ////நான் அதிர்ந்து போனேன். "நீ ஏன் சாப்பிடாமல் அங்கே சென்று சேர்த்தாய்?" எனக் கேட்டேன். "என்னை விடப் பசியோடு பலர் காத்துக் கிடக்கின்றனர். நான் சேர்த்த அந்த உணவையும் பிறருக்கு சமமாக விநியோகிக்கலாமே" என பதிலளித்தான்.////

    மனிதன்

    ReplyDelete
  2. மீண்டும் வளரும் ஜப்பான்

    ReplyDelete
  3. ஒவ்வொரு நாளும் பல மின்னஞ்சல்கள் வந்தாலும் நேற்று மின்னஞ்சலில் வந்த இக்கடிதம் என் உள்ளத்தைத் தொட்டதால் இதை வலைப்பூ வாசகர்களோடு பகிர வேண்டும் என்பதால் உடனே பதிவேற்றியுள்ளேன். இக்கடிதம் நம்மில் ஒரு பண்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற திடமான் நம்பிக்கை எனக்கு உண்டு.

    எது சென்றடைய வேண்டுமோ அது சென்றடைந்துள்ளது என்பதை Raja=Theking அவர்களின் பின்னூட்டம் எடுத்தியம்புகிறது.

    நன்றி நண்பர் Raja=Theking அவர்களே!

    ReplyDelete
  4. இப்படியான மனிதர்களும், குட்டி இதயங்களும் இருப்பதால்தான் பூமி இன்னமும் சுற்றிக் கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
  5. குட்டி இதயங்களே பெரிய இதயங்களுக்குப் பல பாடங்களைக் கற்றுத்தருகின்றன.

    நன்றி சுசி அவர்களே!

    ReplyDelete
  6. நல்லவற்றிற்கு தியாகம் செய்ய வேண்டும் என்ற கருத்தை புரிந்து கொள்ளும் ஒரு சிறுவனை உருவாக்கிய மக்களும் சமூகமும் உயர்ந்தவர்கள்தானே.


    ....very touching. a very good message, indeed. அருமையான பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சித்ரா அவர்களே!

    ReplyDelete
  8. இந்த சோக நிகழ்வில் ஜப்பான் அடிப்படை மக்கள காட்டும் நாகரிகம் என்பது நாம் கனவில் மட்டுமே நினைத்துப் பார்கக முடியும். எந்த இடத்திலும் கொலை கொள்ளை இல்லை. உணவு வழங்கும் இடங்களிலும் மக்கள் வரிசையாக நின்று அமைதியாக அளவான பொருட்களை பெற்றுச் செல்வது என்று அத்தனையும் ஆச்சரியமாக இருக்கிறது.

    ReplyDelete
  9. உலகத்தின் அடுத்த பகுதியில் நடக்கிற செய்தியை தெரிந்துகொள்ள நல்வாய்ப்பாக அமைந்தது. பகிர்தல் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள உதவியது உதவியது.

    ReplyDelete