Showing posts with label சுனாமி. Show all posts
Showing posts with label சுனாமி. Show all posts

Sunday, 15 February 2015

காதலற்ற உலகை நோக்கி.....!

ஆஸ்திரேலியாவின் புனித வின்சென்ட் வளைகுடா அருகில் அடிலெய்டில் இன்று மாலை ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியில் விராத்கோலியின் அதிரடியில் உருவான கிரிக்கெட் சுனாமி பசுபிக் கடலைத்தாண்டி இந்தியாவில் மகிழ்ச்சி அலைகளை அள்ளிக் கொட்டியதால் மக்கள் திக்குமுக்காடிவிட்டார்களாம். இந்த அலை ஒரே நொடியில் இந்திய மக்களின் தேசபக்தியை இமயத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டதால் இந்த தருணத்தில் தேச ஒற்றுமையை பாதுகாக்கவும் தேசத்தின் பெருமையை நிலைநாட்டவும் தலைவர்கள் வாழ்த்து மழைகளை பொழியத் தொடங்கிவிட்டனர். பாருங்களேன்! கலைஞர்கூட இந்த மகிழ்ச்சி அலையில் மிதக்கும் போது சாமான்யர்கள் எல்லாம் எம்மாத்திரம்?

இரண்டு நாட்களாக இந்தியாவை உலுக்கிய காதலர் தினக் கொண்டாட்டங்களும் - எதிர்ப்புகளும்கூட இந்த கிரிக்கெட் சுனாமியில் காணாமல் போய்விட்டனவோ! காதலர் தினக் கொண்டாட்டங்கள் வேண்டுமானால் வருவதும் போவதுமாக இருக்கலாம் ஆனால் எதிர்ப்புகள் மட்டும் எப்போதும் தொடரவே செய்கின்றன. ஏன் எதிர்ப்புகள் மட்டும் தொடர்கின்றன?

காதலை எதிர்ப்பவர்கள் காதலையும் காதல் திருமணங்களையும் எதிர்க்கவில்லையாம். திட்டமிட்ட காதலையும் நாடகக் காதலையும் மட்டும்தான் எதிர்க்கிறார்களாம். அறியாப் பருவத்தில் காதலித்தால் ”எது சரி! எது தவறு!” என்பது தெரியாதாம். 25 வயதுக்கு மேல் பக்குவம் வந்த பிறகு காதலிக்கலாமாம்; படித்துவிட்டு காதலிக்கலாமாம்; வேலைக்குச் சென்று பிறகு வாழ்க்கையில் செட்டில் ஆனபிறகும் காதலிக்கலாமாம். ஆனால் அப்படிக் காதலித்தாலும் பெற்றோர் ஒப்புதலின்றி திருமணம் செய்து கொள்ளக்கூடாதாம்?

காதல் திருமணங்களில் 5% மட்டுமே வெற்றி பெறுகின்றனவாம். 95% காதல் திருமணங்கள் தோல்வியில்தான் முடிகின்றனவாம். மணமுறிவு கேட்டு நீதிமன்றங்களை நாடுவோர் பெரும்பாலும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தானாம். காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு கைவிட்டுவிட்டால் கேட்க நாதி இல்லையாம். காதலில் தோற்ற பெண்கள் வயிற்றில் கருவை சுமந்து கொண்டு வாழ வழியற்று தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்களாம். காதலால் சமூகத்தில் பதட்டம் ஏற்பட்டு சமூக அமைதி குலைகிறதாம். 

இவர்கள் சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான். மனைவியை - குழந்தையை - தாயை - தங்கையை - தகப்பனை - அண்ணனை - அக்காளை - ஆயாவை - நாயை - பேயை - கழுதையை - குதிரையை இப்படி யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் காதலிக்கலாமாம். அதாவது அன்பு செலுத்தலாமாம்; நேசிக்கலாமாம். யாரும் எதிர்க்கப் போவதில்லையாம். இப்படி கேப்பையில் நெய்வடிகிற மாதிரி இவர்கள் பேசுவதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். பார்ப்பனன், முதலியான், பிள்ளையான், கவுண்டன், நாயுடு, ரெட்டி, செட்டி, வன்னியன், கள்ளன், தேவன், நாடான், முத்தரையன், கோனான் உள்ளிட்ட பிற OC-BC- MBC உள்ளிட்ட பிற உயர் சாதிப் பெண்களை தாழ்த்தப்பட்ட வாலிபர்கள் காதலித்துவிடக் கூடாது. குலநாசம் - அதாவது சாதிநாசம் ஆகிவிடக்கூடாது என்பதுதான் இவர்களின் ஒரே கவலை.

இதை வெளிப்படையாகச் சொல்வதற்குக்கூட அஞ்சும் இந்தக் கோழைகள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு யார் காரணம்? 

அடுத்த பதிவில் பார்ப்போம்.

தொடர்புடைய பதிவுகள்:

விளையாட்டு இரசனைக்கானதா?

Tuesday, 5 April 2011

என்னை விடப் பசியோடு பலர் காத்துக் கிடக்கின்றனர்!

நண்பா,

நீயும் உனது குடும்பத்தாரும் நலமா?

கடந்த சில நாட்களாக இங்கு எல்லாமே குழப்பமாகவே உள்ளது. கண்களை திறந்தாலும், மூடினாலும் பிணங்களைத்தான் பார்க்க முடிகிறது.

ஒரு நாளைக்கு 48 மணி நேரம் எனக்கருதி 20 மணி நேரம் உழைத்தால்தான் துன்பத்திலிருந்து மக்களை மீட்டு உதவ முடியும்.

எங்களுக்கு குடிக்கத் தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை. பங்கீட்டு (ration) முறையில் வழங்கினாலும் கிட்டத்தட்ட உணவும் இல்லாத நிலைதான். அகதிகளை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்ல உத்தரவு வரும் வரை பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறோம்.

புகுசிமா (Fukushima) அணுமின் நிலையத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் தற்போது இருக்கிறேன். நான் நிறையவே உனக்குச் சொல்ல வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் எழுதினால் நெருக்கடியான காலங்களில் மனித உறவுகளும் நடத்தைகளும் பற்றிய ஒரு நாவலாக அது அமையக்கூடும்.

இங்கு மக்கள் அமைதியாக இருக்கின்றனர். அவர்களது நடத்தையும் நேர்மையும் சிறந்து விளங்குகிறது. தற்போது இங்கு எதுவும் மோசமாக இருக்கவில்லை; இன்னும் ஒரு வார காலத்தில் போதுமான பாதுகாப்பு கொடுத்து நிலைமையை ஒழுங்குபடுத்தவில்லை என்றால் அதற்கான உத்தரவாதத்தை என்னால் தரமுடியாது.

அவர்களும் மனிதர்கள்தானே. பசியும் தாகமும் நேர்மையை வீழ்த்திவிட்டால் அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடும்.வான் வழியாக உணவையும், மருந்தையும் அரசாங்கம் அளித்து வந்தாலும் அது சிறிதளவு உப்பைப் பெருங்கடலில் போடுவதற்கு ஒப்பாகும்.

நண்பா! இதோ ஒரு உயிர்த் துடிப்பான சம்பவம். 'மனிதனாக நடந்து கொள்வது எப்படி?' என என்னைப் போன்ற வளர்ந்தவர்களுக்கு ஒரு ஜப்பானியச் சிறுவன் கற்றுத் தந்த பாடம்.

உணவு வழங்கவிருக்கும் ஒரு அறக்கட்டளை நிறுவனத்துக்கு உதவி செய்ய நேற்று இரவு ஒரு சிறிய இலக்கணப் பள்ளிக்குச் (grammar school) சென்றிருந்தேன். பாம்பு போல் நீண்டிருந்த வரிசையில் ஒரு சிறுவனைக் கண்டேன். அவன் டி-சட்டையும் காற்சட்டையும் அணிந்திருந்தான்.

அப்பொழுது குளிர் அதிகமாகிக் கொண்டிருந்தது. வரிசையின் கடைசியில் அச்சிறுவன் நின்றிருந்தான். அவன் வரும் போது உணவு தீர்ந்து விடுமோ என்ற கவலை எனக்கு. அவனிடம் பேசினேன். நில நடுக்கம் ஏற்பட்ட போது அவன் பள்ளியில் இருந்ததாகக் கூறினான். இப்பகுதியிலேயே பணிபுரியும் அவனது தந்தை மகிழுந்துவில் (car) அப்போது வந்திருக்கிறார். அவனது தந்தையை மகிழுந்தோடு சுனாமி அள்ளிச் சென்றதை மூன்றாவது மாடியின் பால்கனியிலிருந்து தான் பார்த்ததாகச் சொன்னான்.

அவனது தாயைப் பற்றிக் கேட்டேன். கடற்கரையையொட்டி அவர்களது வீடு இருந்ததால்,  அவனது தாயும் தங்கையும் தப்பித்திருக்க முடியாது என்றான். அவனது உறவினர்களைப் பற்றி கேட்ட போது தலை குனிந்து கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

சிறுவன் குளிரில் நடுங்கினான். எனது 'போலிஸ் ஜாக்கெட்டை' அவனுக்குப் போர்த்தினேன். எனக்கு கொடுக்கப்பட்ட பங்கீட்டு (ration) உணவுப் பை கீழே நழுவிய போது அதை எடுத்து அவனிடம் கொடுத்தேன். "நீ வரிசையில் வரும் போது உணவு தீர்ந்துவிடும். நான் ஏற்கனவே உணவு உட்கொண்டு விட்டேன். நீ ஏன் எனது பங்கை பெற்றுக் கொள்ளக்கூடாது?" என்று கேட்டேன்.

தலை வணங்கி நான் கொடுத்த உணவுப் பையை பெற்றுக் கொண்டான். அவன் உடனே உணவு உட்கொள்வான் என நினைத்தேன். ஆனால் அவன் அதைச் செய்யவில்லை.உணவுப் பையை எடுத்துக் கொண்டு வரிசையின் மறுமுனைக்குச் சென்று விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மொத்த உணவோடு நான் கொடுத்த உணவையும் சேர்த்துவிட்டான்.

நான் அதிர்ந்து போனேன். "நீ ஏன் சாப்பிடாமல் அங்கே சென்று சேர்த்தாய்?" எனக் கேட்டேன். "என்னை விடப் பசியோடு பலர் காத்துக் கிடக்கின்றனர். நான் சேர்த்த அந்த உணவையும் பிறருக்கு சமமாக விநியோகிக்கலாமே" என பதிலளித்தான்.

என் கண்களில் வழிந்த கண்ணீரை துடைப்பதற்காக நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டதாக அவர்கள் பேசியதை என்னால் கேட்க முடிந்தது.

நல்லவற்றிற்கு தியாகம் செய்ய வேண்டும் என்ற கருத்தை புரிந்து கொள்ளும் ஒரு சிறுவனை உருவாக்கிய மக்களும் சமூகமும் உயர்ந்தவர்கள்தானே.

நன்று! உனக்கும்,உனது குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அடுத்த சுற்றுப் பணி மீண்டும் தொடங்குகிறது. 

ஹா மின் தான்
Ha Minh Thanh

குறிப்பு: ஜப்பானுக்குப் புலம் பெயர்ந்து அங்கு காவலராகப் (police) பணிபுரியும் வியட்நாமைச் சேர்ந்த ஹா மின் தான் (Ha Minh Thanh) தனது நண்பனுக்கு எழுதிய கடிதம் இது. 

Published on Shanghai Daily.com 
(http//www.shanghaidaily.com/)
http://www.shanghaidaily.com/article/?id=467066&type=opinion

 தமிழில்: ஊரான்.