Saturday, May 14, 2011

தேன் எடுத்தவன் புறங்கையை நக்கமாட்டானா?


தமிழகத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக வினர் ஆங்காங்கே பட்டாசுகளைக் கொளுத்தினர். இன்று காலை பல அலுவலக வாயில்களில் பட்டாசு கொளுத்தியதோடு 'சாக்லெட்' உள்ளிட்ட இனிப்புகளையும் வழங்கினர். ஒரு சிலர் மிகவும் நெருங்கிய தங்கள் நண்பர்களுக்கு, அவர்கள் மாற்றுக் கட்சியினராய் இருந்தாலும்கூட இலட்டு, மக்கன் பேடா, ஜிலேபி, மைசூர்பாகு உள்ளிட்ட இனிப்புகளை வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். இப்படி இனிப்பு வழங்கியவர்களுக்கு அரசியலால் சொந்த ஆதாயம் எதுவும் இல்லை என்றாலும் தங்கள் சொந்தக் காசிலேயே இவற்றைச் செய்கின்றனர்.

எதற்காக இதெல்லாம் என்று கேட்ட போது "குடும்ப ஆதிக்கம், குடும்ப அரசியல் ஒழிஞ்சிச்சில்ல" இதுதான் அவர்களின் பதில். கருணாநிதி குடும்பம் நுழையாத இடமே கிடையாது. எல்லா இடங்களிலும் நுழைந்து கொள்ளையடித்தார்கள். "குடும்பமே கொள்ளையடிப்பதை எப்படி சகித்துக் கொள்ள முடியும?" இதுதான் இவர்களிடம் கோபமாக வெளிப்பட்ட பதில். இதே உணர்வுதான் மக்களிடமும் இருந்துள்ளது என்பது தேர்தல் முடிவுகளில் பிரதி பலித்தது.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மணல் கொள்ளை, இலங்கை பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனை, அலைக்கற்றை ஊழல் என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதில் திமுக கூட்டணி மண்ணைக் கவ்வியதற்கு முக்கிய காரணம் குடும்ப அரசியல்தான். 

எல்லை பிரித்துக் கொள்ளையடிப்பார்கள்:

கருணாநிதி குடும்பம் இலட்சம் கோடிகளில் கொள்ளையடித்தால் மந்திரிகள், மாவட்டங்கள் சில கோடிகளையும் வட்டங்கள், கவுன்சிலர்கள், அல்லக்கைகள் சில இலட்சங்களையும் வாரிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் அலைக்கற்றையில் அள்ளினால் இவர்கள் மணற் கொள்ளையில் வாரினார்கள். அள்ளுவதற்கும் வாருவதற்கும் வாய்ப்பு ஆளுங்கட்சியினருக்கு மட்டும்தான் என்பதுதானே நமது நாட்டு நடைமுறை. பொருளாசை கொண்ட எவர்க்கும் இதைப் பார்க்கின்ற போது பொறாமையும் கோபமும் வருவது சொத்துடைமைச் சிந்தனையின் இயல்புதானே.

நேர்மையான முறையில் பொருள் ஈட்டி, ஒரு நிலம் வீடு மனை வாங்கினாலோ, பிள்ளைகளை படிக்க வைத்தாலோ, சற்றே ஆடம்பரமாக திருமணம் செய்தாலோ அங்காளிக்கும் - பங்காளிக்கும், எதிர் வீட்டுக்காரனுக்கும் - அக்கம் பக்கத்து வீட்டுக் காரனுக்கும் பொருத்துக் கொள்ள முடிவதில்லை. பொறாமையால் பொருமுகிறான். இதுதானே சொத்துடைமைச் சமுதாயம் நம்மிடம் தோற்றுவித்துள்ள மன நிலை. அப்படி இருக்கும் போது கருணாநிதி குடும்பத்தைப் பார்த்து யாருக்குத்தான கோபம் வராது. 

தற்போதைய ஆட்சி மாற்றத்தால் ஒரே ஒரு மாற்றம்தான் நடக்கும். கருணாநிதி குடும்பம் தொடர்ந்து ஏகபோகமாக எல்லாத் தொழில்களிலும் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஏற்கனவே அவர்கள் கொள்ளையடித்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் நடுத் தெருவுக்கு வரப்போவதில்லை. அல்லது எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் திவாலாகவும் போவதில்லை. கருணாநிதி குடும்பம் ஒன்றும் சாதாரணக் குடும்பம் இல்லை நடுத் தெருவில் வந்து நிற்பதற்கு. அவர்கள் பெரு முதலாளிகளாக வளர்ந்திருப்பவர்கள்.  முதலாளித்துவ ஆட்சி அமைப்பில் முதலாளிகளுக்கிடையில் போட்டி நிலவும், ஒருவரை ஒருவர் காலை வாரிவிட முயற்சிப்பார்கள். முடியாத போது கைகோர்த்துக் கொண்டு எல்லை பிரித்துக் கொள்ளையடிப்பார்கள்.

தேன் எடுத்தவன் புறங்கையை நக்க மாட்டானா?:

தேன் எடுத்தவன் புறங்கையை நக்க மாட்டானா? இது அண்ணா கால திமுக வினர் ஊழலுக்கு போட்ட சப்பைக் கட்டு. முன்பெல்லாம் புறங்கையை நக்கியதற்கே வீட்டிற்கு அனுப்பினார்கள். இன்று தேன் கூடு கட்டும் மரத்தையே பேர்த்து எடுத்துச் சென்றால் அடுத்து தேன் எடுக்கக் காத்துக் கிடக்கும் எதிர்கோஷ்டியினர் சும்மா விடுவார்களா? கூட்டணி அமைத்தார்கள் கூச்சல் போட்டார்கள் எதிரியை விரட்டியடித்து விட்டார்கள். எதிரிகள் ஓடினாலும் தேன் கூடு கட்டுவதற்கு ஒரு சில மரங்களை விட்டுவைத்துதான் சென்றுள்ளார்கள். ஒரு சில இடங்களில் மரங்கள் இல்லை என்றாலும் ஆற்றுப் படுகைகளிலும், பாலங்களிலும், சாலை ஓரங்களிலும், அலுவலக கட்டடங்களிலும் தேன் கூடு கட்டும் வாய்ப்புகள் தொடர்ந்து இருக்கத்தான் செய்கின்றன.  தேன் எடுக்க புதிய ஆட்கள் தெம்போடு, இளமைத் துடிப்போடு, கைகளில் தீப்பந்தங்களை ஏந்திக் கொண்டு வரத்தான் போகிறார்கள். சற்று வலுவான முகமூடியோடு வருவார்கள். எல்லாம் ஒரு எச்சரிக்கைக்குத்தான் தேனீக்கள் கொட்டிவிடக்கூடாதல்லவா!.

ஆற்றுப் படுகையில் கிடைக்கும் தேனுக்குத்தான் அதிக மவுசாம். பாலாறு, தென்பெண்ணை, காவிரி, தாமிரவருணி ஆற்றுப்படுகைகளில் ஏராளமாக தேன் கிடைக்கிறது. சென்னை மட்டுமல்ல. கேரளாவுக்கும் போகிறதாம். கடல் கடந்து மொரிசியசுக்கும் ஏற்றுமதியாகிறதாம் அதுவும் சென்னை துறைமுகம் வழியாகத்தான் போகிறதாம்.

ஆற்று மணற்கொள்ளை:

கட்டடத் தொழில் வளர வேண்டுமானால் மணல் தேவை. மணலை ஆற்றிலிருந்துதான் எடுத்தாக வேண்டும். மணல் கொள்ளையை தடுத்துவிட்டால் கட்டடத் தொழிலுக்கு மூடுவிழாதான் நடத்தவேண்டும். ஆறா? கட்டடமா? எதைப்பாதுகாப்பது? வீடு கட்டுபவருக்கு ஆற்றைப்பற்றி கவலையில்லை. வீடுதான் முக்கியம். விவசாயிக்கு வீடு கட்டுபவனைப்பற்றிக் கவலையில்லை. அவருக்கு நீர்தான் முக்கியம். இருவரையும் காக்க வேண்டுமானால் கட்டடம் கட்ட மணலுக்குப் பதிலாக மாற்று தொழில் நுட்பம் தேவை. அது இப்போதைக்கு யாரிடமும் இல்லை. இந்தச் சூழலில் ஆளும் கட்சியின் மணல் கொள்ளை பற்றி எதிர்கட்சிகள் பேசுவது 'அவன் மட்டும் சம்பாதிக்கிறானே' என்கிற ஆதங்கம் தானோயொழிய ஆற்றைப் பாதுகாக்க அல்ல.

வெற்றியைக் கொண்டாடிய அதிமுகவினரிடம் இது பற்றி பேசிய போது திரு திருவென முழித்தார்கள். வேறென்ன செய்வார்கள் அவர்கள்? அதற்கு மேல் அவர்களுக்கு சிந்திக்கத் தெரியாது. இதுதான் ஜெயா - விஜயகாந்த் போன்ற அரசியலவாதிகளின் பலம்.

இதுவரை மணல் கொள்ளை பற்றி கூப்பாடு போட்ட அதிமுக இனி மணல் கொள்ளையை தடுத்துவிடப் போகிறதா? திமுக காரன் கொள்ளையடிப்பதை வேண்டுமானால் தடுக்கலாம். மணல் கொள்ளையையே முழுவதுமாக தடுத்துவிட்டால் கட்டடத் தொழிலை இழுத்து மூடவேண்டியதுதான். இது நடக்கப் போவதில்லை. மணலுக்கு மாற்று காணாத வரை மணல் கொள்ளை தொடரத்தான் போகிறது. ஆற்று நீர் வளம் வற்றத்தான் போகிறது. மணல் கொள்ளை கைமாறுமேயொழிய அது ஒருக்காலும் நிற்கப் போவதில்லை.

ஆற்றுப் படுகைகளிலும், பாலங்களிலும், சாலை ஓரங்களிலும், அலுவலக கட்டடங்களிலும் தேன் எடுக்க வருவார்கள். முடிந்த மட்டும் குடிப்பார்கள். தேன் குடித்தவன் புரை ஏறித் தும்மும் போது தெறிக்கும் எச்சில் துளிகள் காற்றில் மிதந்து வந்து வாய் பிளந்து நிற்கும் மக்கள் நாவில் பட்டு இனிக்கும் போது எல்லாம் மறந்து போகும். என்ன இருந்தாலும் இலவசத்திற்கு மயங்காதோர் உண்டோ?

4 comments:

 1. ”இப்போது வெற்றி பெற்றுள்ள நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் இன்றைய சொத்து மதிப்பு எவ்வளவு? ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் இதே நியைில்தான் இருப்பாரா?”

  அதிமுக வின் வெற்றியை இனிப்பு வழங்கி வெடி வெடித்துக் கொண்டாடிய அதிமுக பிரமுகரிடம் கேட்டேன்.

  ”தற்போதைய அவரின் தொழில்மூலம் வரும் வருவாயைத் தவிர அதற்கு மேல் சம்பாதிக்கமாட்டாரா?” என்றும் கேட்டேன்.

  ”அது எப்படி? தேன் எடுத்தவன் புறங்கையை நக்க மாட்டானா?” என போட்டாரே ஒரே போடாய்.

  ReplyDelete
 2. //ஆற்றுப் படுகைகளிலும், பாலங்களிலும், சாலை ஓரங்களிலும், அலுவலக கட்டடங்களிலும் தேன் எடுக்க வருவார்கள். முடிந்த மட்டும் குடிப்பார்கள். தேன் குடித்தவன் புரை ஏறித் தும்மும் போது தெறிக்கும் எச்சில் துளிகள் காற்றில் மிதந்து வந்து வாய் பிளந்து நிற்கும் மக்கள் நாவில் பட்டு இனிக்கும் போது எல்லாம் மறந்து போகும். என்ன இருந்தாலும் இலவசத்திற்கு மயங்காதோர் உண்டோ?//

  Beautifully told. Uvamaanam arumai.

  ReplyDelete