Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts

Sunday, 23 August 2015

பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்?

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8

”ஏற்றத்தாழ்வைதான் மனுதர்மம் எடுத்துரைக்கிறது. இந்த மனு தர்மப்படி பிராமணர்களுக்கு எல்லாச் சலகைகளும் அளிக்கப்படுவதுடன், சூத்திரர்களுக்கு மனிதப்பிறவி என்ற உரிமைகூட வழங்கப்படவில்லை. பிராமணன் அவனது உயர்ந்த பிறவியின் காரணத்தினால் மட்டுமே மற்ற எல்லோரையும்விட எல்லா விசயத்திலும் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான்.”

“இந்தியாவில் எல்லா மாகாணங்களிலும் சமஸ்தானத்தில் எல்லாம் துறைகளிலும் அரசுப் பணிகளில் அனேகமாக பிராமணர்களின் ஆதிக்கமே முற்றிலும் ஏகபோகமாக இருந்தது. அரசுப் பணிகளில் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு வகுப்பினருக்கு - அதாவது பார்ப்பனர்களுக்கு - மட்டும் ஏக போகம் இருக்கக்கூடாது என்ற தெளிவான குறிக்கோளின் அடிப்படையில் பிராமணரல்லாதவர்களின் கட்சி தொடங்கப்பட்டது. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் - அதாவது அரசுப் பணிகளில் எல்லாச் சாதியினருக்கும் பிரதிநிதித்துவம் - என்று அறியப்பட்ட கொள்கையை இக்கட்சி முன்வைத்தது. அதாவது குறைந்த தகுதியுடையவர்களை அரசுப் பணிகளில் வேலைக்கு அமர்த்தும் போது பிராமண வகுப்பினர்களைவிட, பிராமணர்கள் அல்லாதவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டுமென்ற  கோட்பாடுதான் அது. இந்தக் கொள்கையில் எந்தவிதத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு தனிப்பட்ட வகுப்பினரின் கைப்பிடியில் - அதாவது பார்ப்பனர்களின் கைப்பிடியில் - அந்த வகுப்பினர் எவ்வளவுதான் புத்திசாலிகளாக இருந்தாலும் ஒரு நாட்டின் நிர்வாகத்தையே கொடுப்பது சந்தேகத்துக்கிடமின்றி தவறு.”

“ஒரு நல்ல அரசு ஒரு திறமையான அரசைவிடச் சிறந்தது என்ற கருத்தைப் பிராமணர்கள் அல்லாதவர்கள் கட்சி கொண்டிருந்தது. இது சட்டமன்றத்துக்கும் ஆட்சித் துறைக்கும் மட்டுமல்லாது நிர்வாக விசயங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நிர்வாகத்தின் மூலமே, ஓர் அரசு மக்களுடன் நேரடித் தொடர்பு கொள்கிறது. எந்த ஒரு அரசும் அனுதாபத்துடன் செயல்படாவிட்டால் நன்மைகளைச் செய்யமுடியாது. பிராமணர்கள் மட்டுமே பொறுப்பில் இருந்தால் அந்த நிர்வாகம் அனைவரிடமும் அனுதாபத்துடன் செயல்பட முடியாது.”

“மற்ற பொதுமக்களைவிட தன்னை மேன்மையாகக் கருதுபவன் ஒரு பிராமணன். மற்றவர்களை தாழ்ந்த சாதியினர், சூத்திரர்கள் என இகழ்பவன். அவர்களுக்கு எதிராக செயல்பட்டு இயற்கையிலேயே தன் வகுப்பினர்களுக்குச் சாதகமாக செயல்படுபவன். மக்களின் மீது அக்கறையில்லாததால் ஊழலுக்கு பலியாகிறவனாக இருக்கும் இப்படிப்பட்ட ஒரு பிராமணன் எப்படிச் சிறந்த நிர்வாகியாக இருக்க முடியும்? மற்ற எந்த அன்னியர்களையும் போலவே அவனும் இந்தியப் பொதுமக்களுக்கு அன்னியனே!”

“இதற்கு மாறாக சுத்த சுயம்புவான திறமையே எல்லாம் என்ற நிலையைப் பிராமணர்கள் எடுக்கிறார்கள். கல்வியில் அவர்கள் முன்னணியில் இருப்பதன் காரணத்தால் இந்தத் துருப்புச் சீட்டைத்தான் வெற்றிகரமாகப் பயன்படுத்த முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். திறமை மட்டுமே அளவுகோலாக இருந்தால் அரசுப் பணிகளை இந்த அளவுக்கு ஏகபோகமாக வைத்திருக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.”

”திறமைதான் எல்லாவற்றையும் விட மிக முக்கியமானதென்றால் ஒரு ஆங்கிலேயரையோ, பிரெஞ்சு, ஜெர்மன் அல்லர் துருக்கி நாட்டவரையோ வேலைக்கு அமர்த்துவதில் எந்தத் தவறும் இருக்க முடியாது.”

“நிர்வாகத்தில் எல்லா வகுப்பினரின், பிரிவினரின் கூட்டமைப்பும் இருந்தால்தான் அது ஒரு நல்ல நிர்வாகமாக அமையுமென்று பிராமணரல்லாத கட்சியினர் எண்ணினர். நிர்வாகத்தில் பிராமண ஆதிக்கத்தை நீக்கும் ஆர்வத்தில் இந்தக் கொள்கையை அமலுக்கு கொண்டுவருவதில் அரசுப்பணிகளில் பிராமணர்கள் மற்றும் பிராமணர் அல்லாதவர்களிடையே ஒரு சமநிலை ஏற்படுத்தும் முயற்சியில் குறைந்த அளவு திறமை என்ற வரையறைக்கு தங்களை உட்படுத்திக் கொண்டனர்.”

கல்வியாளரும், அரசியல்வாதியும், சமூகச்சீர்திருத்தவாதியுமான டாக்டா் ஆர்.பி.பரஞ்சிபே அவர்கள் பம்பாய், சென்னை ராஜதானி மற்றும் மத்திய மகாணங்களில் ஆட்சிபுரிந்து வந்த பிராமணரல்லாத கட்சிகள் பற்றி வெளியிட்டிருந்த ஒரு மிகச் சிறந்த நையாண்டிச் சித்திரத்தை மேற்கோள் காட்டி மனுதர்மத்தின் வெட்கங்கெட்ட தன்மையையும், இழிவையும் அம்பலப்படுத்தி அதைத் தலைகீழாக திருப்பிக் காட்டியிருக்கிறார் அம்பேத்கர்.

”பிராமணரல்லாதவர்கள் கட்சி புதிதாக ஒன்றையும் செய்து விடவில்லை. மனுஸ்மிருதியைத் தலைகீழாக மாற்றினர். அதைத் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டார்கள். மனு சூத்திரர்களுக்கு எந்த இடத்தைக் கொடுத்தாரோ அந்த இடத்தை பிராமணர்களுக்குக் கொடுத்தார்கள்.”

”ஒருவன் பிராமணன் என்பதற்காகவே மனு அவனுக்கு சலுகைகள் அளிக்கவில்லையா? சூத்திரர்கள் உரிமைகள் பெற தகுதி பெற்றிருந்தும் மனு அந்த உரிமைகளை மறுக்கவில்லையா? இப்பொழுது, சூத்திரர்கள் என்பதற்காகவே சில சலுகைகள் அளித்தால் அதைப் பற்றி குறைகூற முடியுமா? அது அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் இந்த விதிக்கு முன் உதாரணம் இல்லாமல் இல்லை. மனு ஸ்மிருதிதான் அந்த உதாரணம். பிராமணரல்லாதவர் கட்சி மீது யார் கல்லெறிய முடியும்? பிராமணர்கள் பாவம் செய்யாமலிருந்தால் அவர்களால் முடியும். ஆனால், மனு ஸ்மிருதியை உயர்த்திப் பிடிக்கும், வணங்கிப் போற்றும் அவர்கள் பாவிகள் இல்லை என்று சொல்ல முடியுமா? மனு தர்மத்தின் ஏற்றத்தாழ்வுக் கொள்கைக்கு ஒரு சிறந்த சவுக்கடிதான் டாக்டர் பரஞ்சிபேவின் கட்டுரை.”

”ஒரு சூத்திரனின் நிலையில் ஒரு பிராமணனை வைத்தால் அவன் எப்படி அதை எதிர் கொள்வான் என்பதை இதைவிட எதுவும் படம் பிடித்துக் காட்ட முடியாது.”

”இந்தக் கொள்கை பிராமணர்களைப் பெருங்கோபத்திற்குள்ளாக்கியது. அவர்கள் கோபத்தின் உச்சியில் இருந்தனர்.”

(ஆதாரம்: பாபசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25)

இந்த, பிராமணரல்லாதவர்களின் கட்சிதான் பிறகு நீதிக் கட்சியானது. அதன்பிறகு தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகமானது. அதன் நீட்சியாக திராவிட முன்னேற்றக் கழகமாக அண்ணா தலைமையில், பிறகு கருணாநிதி தலைமையில் ஆட்சிக் கட்டிலில் ஏறியது. இவர்கள் அனைவருமே – அதாவது திராவிடக் கட்சிகள் - பிராமணரல்லாதவர்களின் கட்சி முன்வைத்த அரசு வேலைகளில் வகுப்புவாரி விகிதாச்சார முறையை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு காட்டி வந்தனர்.

அன்று தொடங்கிய கடுங்கோபம் இன்னமும் தொடர்கிறது. எச்.ராஜா உள்ளிட்ட பார்ப்பனர்கள் ஏன் பெரியாரை வன்மத்தோடு எதிர்க்கிறார்கள்? கருணாநிதியை ஏன் கரித்துக் கொட்டுகிறார்கள்? திராவிட அரசியலை ஒழித்துக் கட்ட வேண்டும் என ஏன் கூப்பாடு போடுகிறார்கள் என்று இப்பொழுது புரிகிறதா? திராவிடக் கட்சிகள் நாத்திகம் பேசுவதால்தான் – இந்து மதத்தைச் சாடுவதால்தான் - இவர்கள் மீது பார்ப்பனர்களுக்கு கோபம் என்பதெல்லாம் ஒரு முகமூடிதான். இந்து மதத்தைச் சாடுவதால்தான் கோபம் என்றால் புத்தர் மீதல்லவா பார்ப்பனர்கள் கடுங்கோபம் கொள்ள வேண்டும்.

அரசு வேலைகளில், பிராமணர்களிடத்தில் சூத்திரர்களை வைத்ததால்தான் அவர்களுக்கு பெரியார் மீதும், கருணாநிதி மீதும், திராவிடக் கட்சிகள் மீதும் கடுங்கோபம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

தொடர்புடைய பதிவுகள்:
நமஸ்காரம்சொல்லத் தடை! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 7
வாழ்ந்து வரும் கடந்த காலம்! தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 6

ஜாதி கேட்காமல் வீடு வாடகைக்குத் தருவியா? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! - 5

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 4

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 3

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 2

தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்!

அன்புமணியைத் துரத்தும் இளவரசனின் ஆவி!

மனு இன்னும் மடியவில்லை!


எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!

Saturday, 14 May 2011

தேன் எடுத்தவன் புறங்கையை நக்கமாட்டானா?


தமிழகத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக வினர் ஆங்காங்கே பட்டாசுகளைக் கொளுத்தினர். இன்று காலை பல அலுவலக வாயில்களில் பட்டாசு கொளுத்தியதோடு 'சாக்லெட்' உள்ளிட்ட இனிப்புகளையும் வழங்கினர். ஒரு சிலர் மிகவும் நெருங்கிய தங்கள் நண்பர்களுக்கு, அவர்கள் மாற்றுக் கட்சியினராய் இருந்தாலும்கூட இலட்டு, மக்கன் பேடா, ஜிலேபி, மைசூர்பாகு உள்ளிட்ட இனிப்புகளை வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். இப்படி இனிப்பு வழங்கியவர்களுக்கு அரசியலால் சொந்த ஆதாயம் எதுவும் இல்லை என்றாலும் தங்கள் சொந்தக் காசிலேயே இவற்றைச் செய்கின்றனர்.

எதற்காக இதெல்லாம் என்று கேட்ட போது "குடும்ப ஆதிக்கம், குடும்ப அரசியல் ஒழிஞ்சிச்சில்ல" இதுதான் அவர்களின் பதில். கருணாநிதி குடும்பம் நுழையாத இடமே கிடையாது. எல்லா இடங்களிலும் நுழைந்து கொள்ளையடித்தார்கள். "குடும்பமே கொள்ளையடிப்பதை எப்படி சகித்துக் கொள்ள முடியும?" இதுதான் இவர்களிடம் கோபமாக வெளிப்பட்ட பதில். இதே உணர்வுதான் மக்களிடமும் இருந்துள்ளது என்பது தேர்தல் முடிவுகளில் பிரதி பலித்தது.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மணல் கொள்ளை, இலங்கை பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனை, அலைக்கற்றை ஊழல் என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதில் திமுக கூட்டணி மண்ணைக் கவ்வியதற்கு முக்கிய காரணம் குடும்ப அரசியல்தான். 

எல்லை பிரித்துக் கொள்ளையடிப்பார்கள்:

கருணாநிதி குடும்பம் இலட்சம் கோடிகளில் கொள்ளையடித்தால் மந்திரிகள், மாவட்டங்கள் சில கோடிகளையும் வட்டங்கள், கவுன்சிலர்கள், அல்லக்கைகள் சில இலட்சங்களையும் வாரிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் அலைக்கற்றையில் அள்ளினால் இவர்கள் மணற் கொள்ளையில் வாரினார்கள். அள்ளுவதற்கும் வாருவதற்கும் வாய்ப்பு ஆளுங்கட்சியினருக்கு மட்டும்தான் என்பதுதானே நமது நாட்டு நடைமுறை. பொருளாசை கொண்ட எவர்க்கும் இதைப் பார்க்கின்ற போது பொறாமையும் கோபமும் வருவது சொத்துடைமைச் சிந்தனையின் இயல்புதானே.

நேர்மையான முறையில் பொருள் ஈட்டி, ஒரு நிலம் வீடு மனை வாங்கினாலோ, பிள்ளைகளை படிக்க வைத்தாலோ, சற்றே ஆடம்பரமாக திருமணம் செய்தாலோ அங்காளிக்கும் - பங்காளிக்கும், எதிர் வீட்டுக்காரனுக்கும் - அக்கம் பக்கத்து வீட்டுக் காரனுக்கும் பொருத்துக் கொள்ள முடிவதில்லை. பொறாமையால் பொருமுகிறான். இதுதானே சொத்துடைமைச் சமுதாயம் நம்மிடம் தோற்றுவித்துள்ள மன நிலை. அப்படி இருக்கும் போது கருணாநிதி குடும்பத்தைப் பார்த்து யாருக்குத்தான கோபம் வராது. 

தற்போதைய ஆட்சி மாற்றத்தால் ஒரே ஒரு மாற்றம்தான் நடக்கும். கருணாநிதி குடும்பம் தொடர்ந்து ஏகபோகமாக எல்லாத் தொழில்களிலும் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஏற்கனவே அவர்கள் கொள்ளையடித்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் நடுத் தெருவுக்கு வரப்போவதில்லை. அல்லது எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் திவாலாகவும் போவதில்லை. கருணாநிதி குடும்பம் ஒன்றும் சாதாரணக் குடும்பம் இல்லை நடுத் தெருவில் வந்து நிற்பதற்கு. அவர்கள் பெரு முதலாளிகளாக வளர்ந்திருப்பவர்கள்.  முதலாளித்துவ ஆட்சி அமைப்பில் முதலாளிகளுக்கிடையில் போட்டி நிலவும், ஒருவரை ஒருவர் காலை வாரிவிட முயற்சிப்பார்கள். முடியாத போது கைகோர்த்துக் கொண்டு எல்லை பிரித்துக் கொள்ளையடிப்பார்கள்.

தேன் எடுத்தவன் புறங்கையை நக்க மாட்டானா?:

தேன் எடுத்தவன் புறங்கையை நக்க மாட்டானா? இது அண்ணா கால திமுக வினர் ஊழலுக்கு போட்ட சப்பைக் கட்டு. முன்பெல்லாம் புறங்கையை நக்கியதற்கே வீட்டிற்கு அனுப்பினார்கள். இன்று தேன் கூடு கட்டும் மரத்தையே பேர்த்து எடுத்துச் சென்றால் அடுத்து தேன் எடுக்கக் காத்துக் கிடக்கும் எதிர்கோஷ்டியினர் சும்மா விடுவார்களா? கூட்டணி அமைத்தார்கள் கூச்சல் போட்டார்கள் எதிரியை விரட்டியடித்து விட்டார்கள். எதிரிகள் ஓடினாலும் தேன் கூடு கட்டுவதற்கு ஒரு சில மரங்களை விட்டுவைத்துதான் சென்றுள்ளார்கள். ஒரு சில இடங்களில் மரங்கள் இல்லை என்றாலும் ஆற்றுப் படுகைகளிலும், பாலங்களிலும், சாலை ஓரங்களிலும், அலுவலக கட்டடங்களிலும் தேன் கூடு கட்டும் வாய்ப்புகள் தொடர்ந்து இருக்கத்தான் செய்கின்றன.  தேன் எடுக்க புதிய ஆட்கள் தெம்போடு, இளமைத் துடிப்போடு, கைகளில் தீப்பந்தங்களை ஏந்திக் கொண்டு வரத்தான் போகிறார்கள். சற்று வலுவான முகமூடியோடு வருவார்கள். எல்லாம் ஒரு எச்சரிக்கைக்குத்தான் தேனீக்கள் கொட்டிவிடக்கூடாதல்லவா!.

ஆற்றுப் படுகையில் கிடைக்கும் தேனுக்குத்தான் அதிக மவுசாம். பாலாறு, தென்பெண்ணை, காவிரி, தாமிரவருணி ஆற்றுப்படுகைகளில் ஏராளமாக தேன் கிடைக்கிறது. சென்னை மட்டுமல்ல. கேரளாவுக்கும் போகிறதாம். கடல் கடந்து மொரிசியசுக்கும் ஏற்றுமதியாகிறதாம் அதுவும் சென்னை துறைமுகம் வழியாகத்தான் போகிறதாம்.

ஆற்று மணற்கொள்ளை:

கட்டடத் தொழில் வளர வேண்டுமானால் மணல் தேவை. மணலை ஆற்றிலிருந்துதான் எடுத்தாக வேண்டும். மணல் கொள்ளையை தடுத்துவிட்டால் கட்டடத் தொழிலுக்கு மூடுவிழாதான் நடத்தவேண்டும். ஆறா? கட்டடமா? எதைப்பாதுகாப்பது? வீடு கட்டுபவருக்கு ஆற்றைப்பற்றி கவலையில்லை. வீடுதான் முக்கியம். விவசாயிக்கு வீடு கட்டுபவனைப்பற்றிக் கவலையில்லை. அவருக்கு நீர்தான் முக்கியம். இருவரையும் காக்க வேண்டுமானால் கட்டடம் கட்ட மணலுக்குப் பதிலாக மாற்று தொழில் நுட்பம் தேவை. அது இப்போதைக்கு யாரிடமும் இல்லை. இந்தச் சூழலில் ஆளும் கட்சியின் மணல் கொள்ளை பற்றி எதிர்கட்சிகள் பேசுவது 'அவன் மட்டும் சம்பாதிக்கிறானே' என்கிற ஆதங்கம் தானோயொழிய ஆற்றைப் பாதுகாக்க அல்ல.

வெற்றியைக் கொண்டாடிய அதிமுகவினரிடம் இது பற்றி பேசிய போது திரு திருவென முழித்தார்கள். வேறென்ன செய்வார்கள் அவர்கள்? அதற்கு மேல் அவர்களுக்கு சிந்திக்கத் தெரியாது. இதுதான் ஜெயா - விஜயகாந்த் போன்ற அரசியலவாதிகளின் பலம்.

இதுவரை மணல் கொள்ளை பற்றி கூப்பாடு போட்ட அதிமுக இனி மணல் கொள்ளையை தடுத்துவிடப் போகிறதா? திமுக காரன் கொள்ளையடிப்பதை வேண்டுமானால் தடுக்கலாம். மணல் கொள்ளையையே முழுவதுமாக தடுத்துவிட்டால் கட்டடத் தொழிலை இழுத்து மூடவேண்டியதுதான். இது நடக்கப் போவதில்லை. மணலுக்கு மாற்று காணாத வரை மணல் கொள்ளை தொடரத்தான் போகிறது. ஆற்று நீர் வளம் வற்றத்தான் போகிறது. மணல் கொள்ளை கைமாறுமேயொழிய அது ஒருக்காலும் நிற்கப் போவதில்லை.

ஆற்றுப் படுகைகளிலும், பாலங்களிலும், சாலை ஓரங்களிலும், அலுவலக கட்டடங்களிலும் தேன் எடுக்க வருவார்கள். முடிந்த மட்டும் குடிப்பார்கள். தேன் குடித்தவன் புரை ஏறித் தும்மும் போது தெறிக்கும் எச்சில் துளிகள் காற்றில் மிதந்து வந்து வாய் பிளந்து நிற்கும் மக்கள் நாவில் பட்டு இனிக்கும் போது எல்லாம் மறந்து போகும். என்ன இருந்தாலும் இலவசத்திற்கு மயங்காதோர் உண்டோ?

Friday, 4 March 2011

ஊர்ப் பயணம்! கலைஞருக்கு 'ஓட்டு' விழுமா?

நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து, தனியார்ப் பேருந்தைப் போலல்லாமல் விரைவிலேயே நகரைக் கடந்து மாநில நெடுஞ்சாலையில் விரைந்து சென்றது. காலை நேரம் என்பதால் அதிகாலையிலேயே எழுந்து பயணத்திற்காகத் தூக்கத்தைக் தொலைத்தவர்கள் சிலர் தூங்கிக் கொண்டும், சிலர் பேசிக் கொண்டும், ஒரு சிலர் கண்களை மூடியவாறு காதுகளில் 'ஹியர் ஃபோனை' மாட்டிக் கொண்டு தாங்கள் விரும்பிய பாடல்களைக் கேட்டுக் கொண்டும் வந்தனர். தூக்கம் கெட்டிருந்தாலும் நான் பேருந்துப் பயணத்தின் போது தூங்குவதில்லை.  பயணங்கள் தரும் பாடங்கள் நிறைய இருக்கே.

கண்ணுக்கெட்டிய தூரம் எங்கு பார்த்தாலும் பசுமை நிறைந்த நெல் வயல்களும், கரும்புத் தோட்டங்களும், வாழை மரங்களும் கண்களைக் குளிர வைக்கும் போது தூக்கம் எப்படி வரும்?

அடுத்து வட்டத் தலைநகர் வந்தது. இறங்கி அடுத்தப் பேருந்தில் ஏறி பயணமானேன். முப்பது கி.மீ. தூரப் பயணம். விரைவுப் பேருந்து என்பதால் உரிய நேரத்தில் சென்று விடும். எனது கிராமத்துக்குச் செல்லும் நகரப் பேருந்தை பிடித்து விடலாம் என்ற மகிழ்ச்சியோடு இருந்தேன். இன்னும் பத்து நிமிடம் பயணித்தால் நான் செல்லவேண்டிய இடத்தை அடைந்துவிடலாம் என எண்ணிய போது ஓட்டுநர் பேருந்தை ஓரம் கட்டினார். 

எனக்கு சற்றே கலக்கம். அது ஒரு சிறிய கிராமம். எதற்கு இங்கே ஓரம் கட்டுகிறார் என எண்ணிக் கொண்டிருந்த போது ஓட்டுநரும் நடத்துநரும் அருகில் இருந்த சிறிய சிற்றுண்டியகத்திற்குச் சென்றார்கள். அவர்களோடு 'பேண்ட்' சட்டை போட்டவர்களும் செல்லவே நானும் சென்றேன். நான்கு இட்லி, இரண்டு வடை. மொத்தமே பத்து ரூபாய்தான். போதுமானதாக இருந்தது. காரச் சட்னி, தேங்காய்ச் சட்னி, சாம்பார் என தூக்கலாய்தான் இருந்தது. ஓட்டுநர்களும் நடத்துநர்களும் சாப்பிடுகிறார்கள் என்றால் சும்மாவா?

தேசிய நெடுஞ் சாலைகளில் உள்ள ஒரு சில 'மோட்டல்களை' நினைத்துப் பார்த்தேன். அவைகள் பசியாற்றும் 'ஓட்டல்கள்' அல்ல. தொலைதூரப் பயணிகளை மறித்து காசு பறிக்கும் வழிப் பறி கொல்லையர்களின் கூடாரங்கள்.

இரண்டு மொடக்குக்குக்கூட ஆகாத டீ, பாதி சோடா மாவு மற்றும் ஆமணுக்குக் கொட்டையால் குஷ்பு இட்லியாக மாறிய ரேசன் அரிசி. இட்லி ஆறிப் போனால் நாறிவிடும் என்பதால் சூடாகத்தான் கொடுப்பார்கள். ஆவி பறக்கும் இட்லியைப் பார்த்த உடனே நம்மாளு மயங்காமலா இருப்பான். அதுவும் நல்லிரவு லேசான குளிரும் சேரும் போது விடவா முடியும். இட்லி சூடாக இருக்கும் போது பூப் போலத்தான் இருக்கும். குடலின் ஈரம் பட்டு 'கொன்ச்சிங்' ஆன இட்லி கடினமாகி குடலை கெட்டியாய் பிடித்துக் கொள்ளும். அதன் விளைவை பிறகு தவிர்க்கவா முடியும்?

இங்கு விலையோ மூன்று மடங்கு. 'லீ மெரிடியனில்'கூட உணவருந்திவிட்டு பத்து ரூபாயை மிச்சப் படுத்தி வெளியே வந்து நகரப் பேருந்தில் வீடு போய்ச் சேரலாம். ஆனால் 'மோட்டல்களுக்குச்' சென்றால் 'பர்சு' காலி. 'ஏ.டி.எம் கார்டு' இருந்தால் ஊர்ப் பயணம் தொடரலாம். இல்லை என்றால் ஊராவது பயணமாவது வேலை கிடைத்து விட்டது எனக் கருதி அங்கேயே 'செட்டிலாகலாம்'.

உள்ளே சென்றால்தானே காசைப் பறிக்கிறார்கள். வெளியிலேயே 'பிஸ்கட் பாக்கெட்' ஒன்றை வாங்கித் தின்று தண்ணீர் குடித்தால் போதும் எனக் கருதி வாங்கச் சென்றால் விலையோ எகிறிக் கிடக்கும். ஐந்து ரூபாய் 'பிஸ்கட்' ஏழு ரூபாயாம். எங்கே சென்று முறையிடுவது? காய்ந்த தொண்டையை இரண்டு ரூபாய் 'பாக்கெட்' தண்ணீரால் ஈரப்படுத்தி பயணத்தைத் தொடர வேண்டியதுதான், ஊர்ப் போய்ச் சேர்ந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று. 

காலை சிற்றுண்டி முடித்து பேருந்து புறப்பட்டது. நடத்துநரிடம் பேச்சுக் கொடுத்தேன். "முன்ன மாதிரி கஷ்டமில்ல சார்", "ரோடு நல்லாயிருக்கு" என்றார். ஓராண்டுக்கு முன்பே மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்ட சாலை. பல தேசிய நெடுஞ்சாலைகளைவிட மேம்பட்ட தரத்தோடு போடப்பட்டிருந்தது. இப்பொழுது அதில் பயணிப்பது அலாதி சுகம்தான்.

இதே சாலையில் கடந்த நாற்பது ஆண்டுகளாக அவ்வப் பொழுது பயணித்துள்ளேன். முப்பது கிலோ மீட்டருக்கு மூன்று மணி நேரம் ஆகும். 'கார்ப்' பந்தயங்களை நடத்த காடு மேடுகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. குறை மாத கர்ப்பிணிகள் முப்பது கிலோ மீட்டரிலேயே நிறைமாதமாகி குழந்தைகளைப் பெற்றெடுப்பதும் உண்டு. கூடுதலாக ஒரு இட்லியை வயிற்றில் திணித்து அவசரமாய்ப் பேருந்தில் பயணிக்கும் வயதுப் பெண்கள் பேருந்து குலுக்கும் குலுக்கலில் வாந்தி எடுத்து பிறரின் சந்தேகத்திற்கு ஆளாவதும் உண்டு. இன்று நெடுஞ்சாலைகள்தான் மேம்பட்டுள்ளன. கிராமச் சாலைகளில் பயணித்தால் மூன்று கிலோமீட்டர் பயணத்திலேயே மேற்கண்ட அதிசயங்கள் நிகழும். 

எனது ஊருக்குச் செல்லும் கூட்டுச் சாலை வந்தது. காலை மணி ஒண்பதைத் தாண்டிவிட்டது. நகரப் பேருந்து சென்று விட்டது. ஏழு கி.மீ தூரம் எப்படிச் செல்வது? படிக்கும் காலத்தில் பெரும்பாலும் நடந்தே செல்வேன், இள வயசு.

அப்பொழுதெல்லாம் வாடகை சைக்கிள் கடை ஒன்று இருக்கும். உடனே திரும்புவதாக இருந்தால் சில நேரங்களில் சைக்கிள் எடுத்துச் செல்வேன். திரும்புவதற்கு ஒன்றிரண்டு நாட்கள் ஆகும் என்றால் சைக்கிளை யார் திரும்ப ஒப்படைப்பது? இரண்டு நாள் வைத்திருந்து எடுத்து வரலாம் என்றால் நாள்வாடகை கொடுத்து கட்டுப்படியாகுமா? அதனாலேயே பெரும்பாலும் நடந்தே சென்றுவிடுவேன்.

வாடகை சைக்கிள் கடைகளைல்லாம் இன்று பழங்கதைகளாகி வருகின்றன. கிராமமோ, நகரமோ 'ஸ்பிலண்டர்களும்' 'பல்ஸ்சர்களும்' சீறிப் பாயும் காலம் இது. ஊர்ப்பக்கம் செல்லும் ஒரு வாகனத்தில் ஒட்டிக் கொண்டேன். ஊரைச் சென்றடைந்தேன். ஏரி நிறைந்திருந்தது. நெல் வயல்களும், கரும்புத் தோட்டங்களும் கண்களைக் குளிர வைத்தன. எல்லாம் இந்த ஆண்டு பெய்த நல்ல மழையால் ஏற்ப்பட்டதன் விளைவு.

தேர்தல் வருகிறது. கருணாநிதி ஆட்சி என்றால் மழைகூட பெய்யாது என்பது காலங்காலமாய் இருக்கும் கிராமத்து நம்பிக்கை. இந்த அறியாமைதானே சில தேர்தல்களில் எம்ஜியாருக்கும் ஜெயலலிதாவுக்கும் கோட்டைக் கதவுகளை திறக்க உதவின.

மேம்பட்ட நெடுஞ்சாலைகளால் ஊர்ந்து சென்ற வாகனங்கள் இன்று சீறிப்பாய்கின்றன. சாதாரண மக்களையும் விழி பிதுங்க வைத்த தக்காளி, பூண்டு, வெங்காயம், உள்ளிட்ட காய்கறிகளின் விலை வெகுவாய்க் குறைந்துவிட்டன. கருணாநிதியின் தயவால் குறையவில்லைதான். இது விளைச்சல் காலம். இருந்தாலும் ஜெயலலிதாவுக்கு இது சாதகம் இல்லையே.

எதைச் சொல்லி எதிர்க்கட்சிகள் ஓட்டுக் கேட்பார்கள்?. கருணாநிதிக்கு 'ஓட்டு' விழுமா? கூட்டணி பலமாய்ப் போட்டாலும் ராஜா-கனிமொழியின் கூட்டு கலைஞரின் கோட்டைக் கனவுக்கு வேட்டாய் மாறுமா? ஐயம் தொடர்கிறது.

ஊர்ப் பயணமும் தொடரும். மீண்டும் சந்திப்போம்!