Saturday, July 5, 2014

கோவணம்!

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி உறையூர் நாச்சியார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் நடுத்தர வயது ‘இளைஞன்’ ஒருவன் கர்ஜித்துக் கொண்டிருந்தான். அவன் அண்ணாவைப் புகழ்ந்த போது சிறந்த சொற்பொழிவாளனாக - நெப்போலியனின் வீரத்தைப் புகழ்ந்த போது  தமிழர்களை உய்விக்க வந்த வீரனாக - ஷேக்ஸ்பியரின் மேற்கோள்களை அள்ளித் தெளித்த போது ஒரு சிறந்த இலக்கியவாதியாக - பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும். அவன் கட்டியிருந்த எடுப்பான கரை வேட்டியும், அணிந்திருந்த வெள்ளைச் சட்டையும், தோளில் நீண்டு தொங்கிய கருப்புத் துண்டும் அவனை ஒரு அரசியல்வாதியாக காட்டியதைவிட வருங்கால தமிழகத்தின் அடையாளம் இவன்தான் என பலரும் கருதும் வண்ணம் இருந்தன.

இருபது ஆண்டு காலம் அய்யனின் தயவில் டெல்லியிலே சிங்கமென கர்ஜனை செய்தவன் இனிமேலும் அய்யனிடம் அண்டியிருக்க வாய்ப்பில்லை என்பதால் தனக்கான கூட்டத்தைத் தேடி பம்பரமாய் சுழலத் தொடங்கிய காலம் அது. மேடைகளில் அல்லேலூயாக்களின் நடிப்பை விஞ்சும் ஆற்றல் கொண்டவன் இவன். இந்த ஆற்றலே இவனை நோக்கி இளைஞர்களை ஈர்க்க வைத்தது.

நானும் அப்பொழுது இளைஞன்தான். ஆனால் ஏனோ அவனது ஆற்றல் என்னை ஈர்க்கவில்லை. மாறாக அவனது உடையும், மேடையில் அவன் வெளிப்படுத்திய உடல் மொழியும் (மேனரிசம்), அவனது பேச்சின் தொனியும் ஒரு நாடக நடிகனைத்தான் எனக்கு நினைவூட்டின.

காலங்கள் உருண்டோடின. நான் உறையூரில் உணர்ந்ததையே பிற்காலத்தில் மற்றவர்களும் உணரத் தொடங்கியிருக்கக்கூடும். அதனால்தானோ என்னவோ கூடாராம் காலியாவதும் காலியான இடத்தை நிரப்ப அவ்வப்பொழுது நாடகத்தின் வசனங்களை மாற்றுவதும் அவனுக்கு வாடிக்கை ஆகிவிட்டது.

இவன் வாழும் பூமியோ கடலை ஒட்டிய கரிசல் காடு. இந்தக் கடலை நம்பி ஏராளமான மீனவர்கள் வாழ்ந்து வந்தனர். வலைகளை உலர்த்தவும் இளைப்பாறவும் இந்தக்கடலில் இருந்த ஒரு சிறு தீவு இவர்களுக்கு பெரிதும் உதவியது. ஆனால் அது தற்போது அண்டை நாட்டுக்காரன் வசமாகிவிட்டதால் மீனவர்கள் மீளாத்துயரில் ஆழ்ந்தனர்.

மக்களின் பிரச்சனைகள் சிக்கலானால் சினிமாக்காரன் அதை கதையாக்கி காசாக்கிக் கொள்வான். அரசியல் நடிகன் என்றால் அதையே பதவிக்கான படிக்கல்லாக மாற்றிக் கொள்வான். அதனால்தான் இவனும் அந்தத் தீவை மீட்காமல் ஓயமாட்டேன் என தொடர்ந்து கர்ஜித்தான்.

அதே போல சேதுக்கால்வாய் திட்டம் வந்தால் இனி தென் தமிழகமே தொழில் பூங்காவாய் பூத்துக் குலுங்கும் என்றான். சேதுக்கால்வாய்க்காக அவன் வீரிட்டபோது இராமன் பாலத்தில்கூட விரிசல் ஏற்பட்டது. கால்வாயை வெட்டாமல் இனி உறங்குவதில்லை என சேதுகால்வாய்க்காக ஊர் ஊராய் மேடையேறி வீரவசனம் பேசினான்.

இவனது வசனங்கள் வெற்றுக் கோஷங்களாய் மேடையோடு முடங்கிப் போயின. டெல்லிக் கோட்டைக்குச் செல்ல பயணச் சீட்டு என்னவோ வந்த பாடில்லை.

மீண்டும் வசனம் மாறியது. மது அரக்கனை ஒழித்துக்கட்ட குமரி முதல் சென்னை வரை நடையாய் நடந்தான். அப்படி நடந்த போது அசதி அவனை வாட்டியது. கண்கள் மருக மயங்கி விழும் நிலையில் முந்தானையின் ஈரம் முகத்தில் பட்டு கண்விழித்தான். எதிரே வந்து நின்ற ஒரு அம்மணியைக் கண்டு ஆனந்தம் அடைந்தான். முன்பு ஒரு முறை இந்த அம்மணி தன்னை காராகிரகத்தில் பிடித்துத் தள்ளியிருந்தாலும் தற்போது தன் நெஞ்சில் ஈரத்தை வார்த்ததால் அந்த அம்மணியை நன்றி உணர்வோடு பார்த்து விட்டு நடை பயணத்தைத் தொடர்ந்தான். சென்னையை நெருங்கியபோது திரும்பிப் பார்த்தான். இவனோடு வந்த சிலர் அந்த அம்மணியின் முந்தானையை பிடித்துக் கொண்டே எதிர் திசையில் சென்றுவிட மற்றவர்களோ சாலை ஓர மரநிழலிலேயே தங்கிவிட இவன் மட்டும் நிற்கதியாய் விடப்பட்டதைக் கண்டு துவண்டு போனான்.

வயதில் எழுபதை நெருங்கினாலும் தான் ஒரு இளைஞன் என்பதை அவ்வப் பொழுது நிரூபிக்க முயன்றான். அதற்காக முண்டா பனியன் - அரை டிரவுசரோடு வாலிபாலும் விளையாடிப் பார்த்தான். ஆனால் காற்றடித்த பந்தைக்கூட எதிர் கொள்ள முடியாமல் குப்புற விழுந்தான். தட்டுத் தடுமாறி மீண்டும் எழுந்தான்.

மேடை கிட்டிய போதெல்லாம் கருப்புத் துண்டை வலது தோளுக்கும் இடது தோளுக்குமாய் மாற்றி மாற்றி இழுத்து விடும் போது அது நமக்கு முதுகு அரிப்பைச் சொரியும் ஏற்பாடாய்த் தோன்றினாலும் அவனுக்கு அது பழக்கமாகிவிட்டது. இன்னும் எத்தனைக் காலம்தான தோள் துண்டை இழுத்துக் கொண்டிருப்பது என எண்ணத் தொடங்கினான். வயது மட்டுமல்லாமல் அரசியல் வாழ்வும் வயோதிகத்தை தொட்டுவிட்டதோ என அஞ்சினான். கால் போன போக்கிலே வாட்டத்துடன் செல்லத் தொடங்கினான்.

அவன் ஒரு கானகத்தை நெருங்கியபோது மலையிலிருந்து அருவி கொட்டும் சத்தம் கேட்டு அதை நோக்கி நடந்தான். தாரை தாரையாய் கொட்டும் அருவியைக் கண்டு மயங்கினான். கொட்டிய தாரைகள் அனைத்தும் நேர்த்தியாகக் கோர்க்கப்பட்ட மணி மாலையாய் இவனது கண்களுக்குத் தோன்றின. அருவி ஓடிய பாதையில் இவனும் ஓடினான். அந்த அருவி ஒரு தாமரை தடாகத்தில் சங்கமித்தது.

ரிஷிகளும் முனிவர்களும் அங்கே நீராடிக் கொண்டிருந்தனர். சில முனிவர்கள் அம்மணமாகவும், ஒரு சில ரிஷிகள் காவி கோவணத்தோடும் காட்சி அளித்தனர். மற்ற சிலரோ கோட்டு சூட்டு அணிந்தும், பைஜாமா குர்தாவோடும் இருந்தனர். இவர்கள் வேறு வேறு உடைகளில் இருந்தாலும் இவர்களின் முகம் மட்டும் நரமாமிசம் உண்ணும் கழுகுகளையே நினைவு படுத்தின. தாமரைத் தடாகம்கூட குருதி கலந்து காவியாய் காட்சியளித்தது.

அந்தத் தடாகமே பார்ப்பதற்கு அச்சமூட்டுவதாகத் தோன்றியது. தடாகத்தில் இறங்கத் தயங்கினான். “இது புனித அருவி நீர்! தடாகத்தில் இறங்கி முங்கினால் இளமை திரும்பும்! மறுமலர்ச்சி அடைவாய் நீ!” என இரு கரம் நீட்டி அழைத்தான் பைஜாமா குர்தாவோடு இருந்த ஒரு தாடிக்காரன்.

தாடிக்காரன் அழைத்த பாங்கில் இவன் கிரங்கிப் போனான். தோளில் தொங்கிய கருப்புத் துண்டை தூக்கி எறிந்தான். அது மீண்டும் எடுக்க முடியாத அளவுக்கு தூர இருந்த 'சங்கி' முள்ளில் சிக்கிக் கொண்டது. சட்டை – பனியனையும், வேட்டியையும் உருவி கரையில் எறிந்தான். கோவணத்தோடு தாமரை தடாகத்தில் குதித்தான். தாமரைத் தடாக நீரில் நீந்தி மகிழ்ந்தான். தடாக நீரில் ரத்த வாடை வீசினாலும் அது அவனுக்கு புது ரத்தம் பாய்ச்சுவதாகவே கருதினான். இளமை திரும்பி கட்டிளம் காளைாகி விட்டதாகக் கருதி உற்சாக மிகுதியில் குதூகலித்தான்.

குதூகலம் இவனை மீண்டும் கர்ஜிக்க வைத்தது. இவன் கர்ஜனையைக் கண்ட காவிக்கூட்டமும் உற்சாகத்தால் கூத்தாடியது. ‘ஆகா! நமக்கு பெருங்கூட்டம் சேர்ந்துவிட்டது’ என நம்பி சேதுக்கால்வாயைப் பற்றி கர்ஜிக்க வாயைத் திறந்த போது “உஷ்!” என வாயை மூடினான் தாடிக்காரன். “கடல் தீவுக்குப் போவோம்!” என கர்ஜித்த போது அதற்கு தாடிக்காரனும் புன்னகைத்து தலையசைத்தான். இது ஒன்றே போதும். “யாருக்குத் தேவை சேதுக் கால்வாய்! இனி அது உதவாது!” என புது வியாக்கியானம் கொடுத்து அந்தர் பல்டி அடித்தான்.

‘கடல் தீவுக்குப் போவோம்!’ என இவன் செய்த கர்ஜனை மலை முகடுகளில் முட்டி மோதி தமிழகமெங்கும் எதிரொலித்தது. “வெற்றி நமதே!” இனி டெல்லிக்குச் செல்ல பணச்சீட்டு உறுதி  என எண்ணி கோவணத்தோடு கரையேறி கழற்றி எறிந்த உடைகளைத் தேடினான். முள்ளில் சிக்கிய கருப்புத் துண்டு சுக்கு நூறாகி எடுக்க முடியாமல் நைய்ந்து போயிருந்தது. வேட்டி சட்டையைத் தேடினான். காணவில்லை. அவை ஏற்கனவே அருவியில் அடித்து செல்லப்பட்டதை அப்பொழுதுதான் உணர்ந்தான்.

கோவணத்தோடு கரிசல் காட்டுக்குச் சென்றால் மக்கள் காரிதுப்புவார்களே எனக்கருதினானோ என்னவோ அருவியின் போக்கில் சென்றால் வேட்டி சட்டை கிடைத்துவிடும் என நம்பி அதன் போக்கிலேயே சென்றான். உடை மட்டும் கிடைக்கவில்லை. மேலும் சென்று பார்க்கலாம் என முயன்றபோது அவன் கடலுக்குள் வெகு தூரம் வந்து விட்டதை உணர்ந்தான்.

அதற்குள் ஒருமாத காலம் உருண்டோடி விட்டது. இவனது டெல்லி பயணத்திற்கும் பயணச்சீட்டு கிடைக்கவில்லை. இப்போது இவன் இருப்பதோ நடுக்கடலில். இனி எந்தப் பக்கம் செல்வது எனப் புரியவில்லை. சற்று தூரத்தில் ஒரு தீவு தெரிந்தது. அந்தத் தீவுதான் ஏற்கனவே அண்டை நாட்டுக்காரன் வசமாகியிருந்த தீவு. அதை நோக்கி நீந்தத் தொடங்கினான்.

“ஏய்! யாரப்பா நீ? அங்கே எல்லாம் போகக்கூடாது” என்ற குரல் கேட்டு தலையை உயர்த்திப் பார்த்தான். எதிரே ஒரு படகில் தாமரை தடாகத்தில் பார்த்த அதே தாடிக்காரன் நின்றிருந்தான். தாடிக்காரன் கையில் இப்பொழுது செங்கோல் மின்னியது.

“அய்யா! நான் மிகவும் களைத்துப் போயிருக்கிறேன். தண்ணீரிலேயே தத்தளிப்பதால் உடல் ஜில்லிட்டுப் போயிக்கிறது. அந்தத்தீவு பக்கத்தில்தானே இருக்கிறது. அங்கே சென்று இளைப்பாறுவதற்கு உங்களது தயவு தேவை. நீங்களும் சற்று உடன் வாருங்களேன்! தடாகத்தில் நீராடியபோது அங்கே போவதற்கு நீங்கள்கூட தலையசைத்தீர்களே!” என்றான்.

ஆனாலும் தாடிக்காரன் இவனது பேச்சைக் கேட்பதாகத் தெரியவில்லை. தாடிக்காரனின் பேச்சை மீறிச் செல்லவும் இவனுக்கு துணிச்சல் இல்லை. மிகுந்த மனவேதனையோடு மீண்டும் வந்த வழியே நீந்தி கரை சேர்ந்தான். தாமரை தடாகத்தில் இறங்கியதால் உடைகளைப் பறிகொடுத்து கோவணத்தோடு இருந்த இவனது நிலையைக் கண்டு மக்கள் காரி துப்பினர்.

”தோளில் தொங்கிய துண்டும் போச்சு. வேட்டி சட்டையும் போச்சு. கோவணத்தோடு இனி எப்படி மற்றவர்கள் முகத்தில் முழிப்பது!” என மனம் நொந்து போய் ஒரு புளிய மரத்து நிழலில் ஒதுங்கினான். அந்த அம்மணி அருகில் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா என ஒரு கணம் எண்ணிப்பார்த்தான். ‘அதற்கெல்லாம் இனி வாய்ப்பில்லை. காலம் கடந்து விட்டது. இனி வாழ்வதில் அர்த்தமில்லை’ என முடிவெடுத்து கோவணத்தின் ஒரு முனையில் சுருக்கு முடிச்சுப் போட்டு அதை கழுத்தில் மாட்டிக் கொண்டு மறுமுனையை மரக்கிளையின் மீது வீசினான்.

தொடர்புடைய பதிவுகள்:

2 comments:

  1. இப்படி கேவலப்பட்டும் அவனுக்கு இன்னுமா பகுத்தறிவு இருக்கும்.

    ReplyDelete
  2. சரியானப் படபிடிப்பு

    ReplyDelete