Saturday, June 14, 2014

எச்சிலால் கங்கையை நிரப்புவோம்!



எச்சில் துப்புவதால் கங்கை போன்ற நதிகள் மட்டுமல்ல சிறு ஓடைகள்கூட ஒருபோதும் மாசடையாது. எச்சில் துப்புவதற்கேன்றே யாரும் நதிகளை நாடிச் செல்வதில்லை. பல் துலக்கும் போதோ அல்லது குளிக்கும் போதோதான் வாயைக் கொப்பளித்து துப்புவார்கள். இத்தகையச் செயல்களை கோவில் குளங்களிலும் கிணறுகளிலும்கூட நாம் பார்க்க முடியும்.

எச்சில் துப்புவதனால் கங்கை அசுத்தமாகிவிடும் என்பதைவிட எச்சில் துப்புவதனால் கங்கையின் புனிதம் கெட்டுவிடும் என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தப் பொருளில்தான் கங்கையில் எச்சில் துப்புவதைப் பார்க்கிறது பா.ஜ.க நடுவண் அரசு. கங்கையை சுத்தப்படுத்துவது அல்லது தூய்மைப்படுத்துவது என்பதைவிட புனிதப்படுத்துவதே இந்த அரசின் நோக்கமாக இருக்கிறது. அதனால்தான் ஆலைக்கழிவுகளையும், நகராட்சிக் கழிவுகளையும் கொட்டி நதிகளை நாசப்படுத்துவோர் மீது பாய்வதற்குப் பதில் எச்சில் துப்புவோர் மீது பாயத் தயாராகிக் கொண்டிருக்கிறது அரசு.

செரிமானத்திற்கு அவசியத் தேவையாகக் கருதப்படும் உமிழ்நீரைத்தானே  எச்சில் என்கிறோம். உணவு உண்ணும் போது வாயை நன்றாக மூடிக்கொண்டு மென்றால்தான் அதிக உமிழ்நீர் சுரக்கும்; இந்த உமிழ்நீரே செரிமானத்தை ஒழுங்கு படுத்தி நமது உடல் நலத்தைக் காக்கும். நமது உடலைப் பேணும். இந்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீர் எப்படி எச்சிலானது?

பணக்காரன் ஏழையின் உமிழ்நீரை எச்சிலாகப் பார்ப்பதைப் போல தாழ்த்தப்பட்டவனின் உமிழ்நீரை உயர்சாதிக்காரன்  எச்சிலாகப் பார்க்கிறான். வர்க்கமும் சாதியுமே இங்க உமிழ்நீரை எச்சிலாக மாற்றியிருக்கிறதோ!

எச்சில் வெறும் உமிழ்நீரோடு மட்டும் தொடர்புடையதல்ல. சாப்பிட்ட பிறகு வீசி எறியப்படும் இலையை எச்சி இலை என்கிறோம். தண்ணீர் குவளையோ அல்லது தேனீர்க் குவளையோ வாயில் பட்டுவிட்டால் எச்சில் குவளை என்கிறோம். சொந்த சாதிக்காரன் எச்சில் படுத்திவிட்டால் கழுவினாலே போதும். எச்சில்பட்ட குவளை பரிசுத்தமாகிவிடும். ஆனால் தாழ்த்தப்பட்டவன் எச்சில் படுத்திவிட்டால் கழுவினாலும் எச்சில் போகாது. அது எச்சிகரை படிந்ததாகவே கருதப்படும். அதனால்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தேனீர்க்கடைகளில் தனிக்குவளை வைக்கப்படுகிறது.

கிளி கடித்த மாங்காயும், குரங்கு கடித்த கொய்யாவும் இனிப்பைத் தருகிறது. ஆனால் தாழ்த்தப்பட்டவன் எச்சில் மட்டும் அருவெறுப்பைத் தருகிறது. ‘காக்கா கடி’யில்கூட சாதி இருக்கிறது.

ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுவிட்டால் அவள்  கடைசி வரை கரைபடிந்தவாளகவே கருதப்படுகிறாள். வேறு வார்த்தையில் சொன்னால் அவள் புனிதமற்றவள். அதே போலத்தான் எச்சிக்கரை படிந்த குவளையும் புனிதத் தன்மையை இழந்து விட்டதாக பார்க்கப்படுகிறது.
  
புனிதம் மதத்தோடு தொடர்புடையது. இந்து – இஸ்லாம் - கிருஸ்துவம் உள்ளிட்ட அனைத்து மதங்களுக்கும் புனிதம் பொருந்தும் என்றாலும். இங்கே கங்கை இந்து மதத்தின் புனிதமாக கருதப்படுகிறது. மினரல் வாட்டரில் நீங்கள் முங்கி எழுந்தாலும் அது புனித நீராடல் ஆகிவிடாது. ஆனால் கூவத்தைவிடக் கேவலமான நிலையில் கங்கை இருந்தாலும் அந்தக்  கங்கையில் முங்கி எழுந்தால் அது புனித நீராடலாகிவிடும். புனிதமே இங்குப் பிரதானமானது; காக்கப்பட வேண்டியது. அதனால்தான் எச்சில் துப்பினால் கங்கையின் புனிதம் கெட்டுவிடும் என்பதால் அபராதம் - சிறை பற்றி பேசுகிறது அரசு.

எச்சில் மதத்தோடு மட்டுமல்ல இந்து மதத்தைப் பொருத்தவரை அது தீண்டாமையோடும் தொடர்புடையது. எச்சிலும் – புனிதமும் - தீண்டாமையும் இந்து மத நெறிமுறைகளோடு பின்னிப் பிணைந்த ஒன்று. தீண்டாமையும் புனிதமும் நீடிக்கும் வரை எச்சில்தான் நமக்குப் புனிதமானது. புனிதம் பேசும் இடங்களிலெல்லாம் கங்கையாய் பெருகட்டும் நமது எச்சில்!

1 comment: