Monday, March 19, 2012

அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! .... தொடர் - 2

எங்கு நோக்கினும் பொறாமை

மண்ணும் – நீரும், விதைத்திருக்கிற நெல்லும் ஒன்றே ஆனாலும் அண்ணனின் நிலத்தில் அதிக விளைச்சல் என்றால் தம்பிக்குப் பொறாமை. 

தான் வளர்க்கும் பசு சினைகூட பிடிக்காத போது பங்காளியின் பசு இரண்டு கன்றுகளை ஈன்றால் அங்காளிக்குப் பொறாமை. 

கோயில் - குளம் எனச் சுற்றித் திரிந்தாலும் தன் வயிற்றில் ஒரு புழு - பூச்சிகூட தங்காத போது நாத்தனாருக்கு மட்டும் பத்து மாதத்தில் அழகியக் குழந்தை - அதுவும் ஆண் குழந்தை பிறந்து விட்டால் மதனிக்குப் பொறாமை. 

நேற்றுவரை நட்பாய் இருந்த பள்ளித் தோழன் திடீரென தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறான். இருவரும் வேறு வேறு கல்லூரிகளில் படித்திருந்தாலும் பள்ளிக்கூட நட்பை விடாமல் தொடர்ந்தவர்கள். இருவருக்குமே வேலை கிடைக்காத வரை நட்பு தொடர்கிறது. ஒருவனுக்கு மட்டும் வேலை கிடைத்துவிட்டால் மற்றவனுக்கு பொறாமை. பள்ளிக்கூட நட்பும் அத்தோடு முடிவுக்கு வருகிறது. 

ஒரே படிப்பு; ஒரே நிறுவனத்தில் வேலை. ஆனால் பதவி உயர்வில் தன்னை மிஞ்சும் சக ஊழியன் மீது பதவி உயர்வு கிடைக்காதவனுக்குப் பொறாமை. 

வேலைக்குச் சேர்ந்து முப்பது ஆண்டுகள் ஆனாலும் சொந்தமாய் ஒரு வீடு இல்லையே என ஏங்கிக் கொண்டிருக்கும் ஆலை ஊழியருக்கு வேலைக்குச் சேர்ந்த மூன்றே ஆண்டுகளில் உடன் பணிபுரியும் சக தொழிலாளி சொந்தமாய் ஒரு வீடு வாங்கி விட்டால் சொந்த வீடு கனவு காணும் ஆலைத் தொழிலாளிக்குப் பொறாமை. 

தனது மகன் நாற்பது மதிப்பெண்கள் பெறுவதற்கே திண்டாடும் போது பக்கத்து வீட்டுப் பையன் எண்பது மதிப்பெண்கள் எடுத்தால் அவன் மீது நாற்பது மதிப்பெண்கள் பெற திண்டாடும் மாணவனின் தாய்க்குப் பொறாமை. 

தான் ஒருதலையாய் காதலிக்கும் கல்லூரி மாணவி வேறு ஒருவனை நேசிக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவன் மீது இவனுக்குப் பொறாமை. 

‘அழகாய்’ இருக்கும் சக மாணவி மீது ‘அழகில்லாத’ கல்லூரி மாணவிக்குப் பொறாமை. 

கேசவர்த்தினிகளைத் தேய்த்துத் தேயத்து கூந்தலை வளர்க்க முயன்று தோற்றுப் போனவர்கள் நீண்ட கூந்தல் உள்ளவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள். 

மீசை வளராத காளைகளுக்கு அரும்பு மீசைக்காரனைப் பார்த்தால் பொறாமை. 

தங்களது தெருவுக்கு கிடைக்காத சாலை-மின்விளக்கு-ரேசன் கடை-குடிநீர்க் குழாய் உள்ளிட்ட வசதிகள் அடுத்தத் தெருக்காரனுக்கு கிடைக்கும் போது வசதிகள் கிடைக்காத தெருக்காரனுக்குப் பொறாமை. 

பொங்கல் விழாவையொட்டி தங்களது ஊரில் நடந்த கபடிப் போட்டியில் அடுத்த ஊர்க்காரர்கள் கோப்பையைத் தட்டிச் சென்றால் போட்டி நடத்திய ஊர்க்காரர்களுக்கு கோப்பையை தட்டிச் சென்ற ஊர்க்காரர்கள் மீது பொறாமை. 

அண்ட வந்த அடுத்த மாநிலத்துக்காரன் வசதியில் தன்னை விஞ்சும் போது மண்ணின் மைந்தனுக்குப் பொறாமை. 

கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றுவிட்டால் பாகிஸ்தான் மீது இந்தியனுக்குப் பொறாமை.

விளைச்சல் - கால்நடைகள் - குழந்தைப்பேறு - படிப்பு - வேலை வாய்ப்பு - பதவி உயர்வு - சொந்த வீடு - அழகு - காதல் - திறமை - விளையாட்டு என எதுவாக இருந்தாலும் இது வரை ஏதும் இல்லாதிருந்தவன் இனி இவைகளைப் பெற்றுவிடக்கூடாது அல்லது தன்னிடம் இல்லாதது மற்றவனிடம் இருக்கக்கூடாது அல்லது தன்னைவிட அடுத்தவனிடம் அதிகமாகிவிடக்கூடாது என்று பார்க்கிற மன நிலையையே மனிதன் வளர்த்துக் கொண்டிருக்கிறான்.

இங்கே அடுத்தவன் என்பது முதலில் தனது உறவுக்காரர்களையும்; அதற்கடுத்து, அக்கம் பக்கத்தில் வாழ்வோரையும்; அதற்கடுத்து, பணியிடத்தில் உள்ளோரையும்; அதற்கடுத்து, நண்பர்களையும்; அதற்கடுத்து, அடுத்தத் தெரு - அடுத்த ஊர் - அடுத்த மாநிலம் - அடுத்த நாட்டினரையும் குறிக்கும். இந்த வரிசைக்கிரமத்தில்தான் இவர்களின் பொறாமையின் உக்கிரமும் அமைகிறது.

அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை, மாமியார்-மருமகள், நாத்தனார்கள் என எந்த உறவையும் இந்தப் பொறாமை விட்டு வைக்கவில்லை.

பக்கத்து வீடு - எதிர் வீடு, மேல்வீடு - கீழ்வீடு, அடுத்த தெரு - அடுத்த ஊர், அண்டை மாநிலம் - அண்டை நாடு என சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவி இருக்கிறது இந்தப் பொறாமை. 

பாமரன் முதல் படித்தவன் வரை, ஏழை முதல் பணக்காரன் வரை, சிறுவர் முதல் முதியவர் வரை இப்படி ஆண் - பெண் பால் வேறுபாடின்றி எங்கும் இந்தப் பொறாமை வியாபித்திருக்கிறது. 

பள்ளி - கல்லூரி மாணவர்கள், தொழிலாளி - முதலாளி, அதிகாரி - ஊழியர், விவசாயி - வியாபாரி என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது இந்தப் பொறாமை. 

பொறாமை என்று வந்துவிட்டால்…… 

சளித்தொல்லையால் அவதிப்படும் பக்கத்து வீட்டுக் குழந்தையின் இருமலும் தும்மலும் கூட இவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். 

எங்கோ இருந்து காற்றில் மிதந்து வரும் தலைமுடிகூட இது மேல்வீட்டுக்காரி வேண்டும் என்றே நம்மீது போட்டது என முடிவு செய்து கீழ் வீட்டுக்காரி மேல்வீட்டுக்காரியை சண்டைக்கு இழுக்கிறார். 

பள்ளத்தை நோக்கி வழிந்தோடும் மழை நீர் தன்வாசல் பக்கம் எப்படி வரலாம் என பக்கத்து வீட்டுக்காரரை சண்டைக்கு இழுப்பவர்களும் தெருவுக்குத் தெரு இருக்கிறார்கள்! 

காற்றில் கரைந்து காணாமல் போகும் அடுப்புப் புகைக்குக்கூட அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தன்னை காரணமாக வைத்து சண்டையிட்டுக் கொள்வதைப் பார்க்கும் போது வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. 

மேல் வீட்டுக்காரனின் பிஞ்சுக் குழந்தையின் மெல்லிய காலடிகள்கூட கீழ் வீட்டுக்காரனுக்கு பேரிடியாய் எதிரொலிக்கிறது. 

தற்செயலாய் கை தவறி விழும் தேனீர்க் குவலையின் ஓசைகூட கீழ்வீட்டுக்காரனின் காதுகளை செவிடாக்கி விட்டதாக மாடியில் குடியிருப்பவனிடம் கூப்பாடு போடுகிறான்.

உள்ளத்தில் பொறாமை எண்ணம் மேலோங்குவதால் சண்டைகளும் சச்சரவுகளும் மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டன.

பொறாமைக்கு ஆட்படாதவர்கள் சொற்பமே. 'நியாயமாக' இருப்பதாகக் கருதிக் கொள்ளும் சிலரிடமும், அறிந்தோ - அறியாமலோ சில சமயங்களில் அவர்களிடமும் பொறாமை குணம் வெளிப்படத்தான் செய்கிறது.ஆகப் பெரும்பாலானோரை ஆட்டிப் படைக்கும் இந்தகையப் பொறாமை குணம் மக்களிடையே எப்போது தோன்றியது? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன?

தொடரும்....

தொடர்புடைய பதிவு:
அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! ----- தொடர் ....1
http://hooraan.blogspot.in/2012/03/1.html

Thursday, March 15, 2012

அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! ----- தொடர் ....1

இத்தொடரை 09.01.2012 அன்று தொடங்கினேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் தொடர முடியவில்லை. இத்தொடரை முடித்து விட்டு அடுத்த தலைப்புக்குச் செல்ல முடிவெடுத்துள்ளேன். எனவே முதல் பகுதியை ஒரு முறை மீள்பதிவு செய்கிறேன். 

நன்றி!
ஊரான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
அண்டை வீட்டுக்காரரின் பொறாமை! 
பழனியப்பனுக்கு வயது 54. சென்னை-கொரட்டூரில் உள்ள தனியார் காகித உற்பத்தி ஆலையில் பணிபுரிபவர். அம்பத்தூருக்கு அருகில் உள்ள கருக்கு கிராமத்தில் தனது மனைவி நாகவள்ளியுடன வசித்து வருகிறார். நாகவள்ளிக்கு வயது 50. முப்பது வயதிலேயே விவாகரத்து வாங்கிக் கொண்ட மகள் ராஜேஸ்வரியும் இவர்களோடுதான் தங்கியுள்ளார்.

சென்னைவாசி என்றாலும் பழனியப்பனுக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. சென்னையின் விலைவாசியோ, போக்குவரத்து நெரிசலோ, ஜெயாவின் பேருந்து கட்டண உயர்வோ இவரது வெறுப்புக்குக் காரணமில்லை. நிரந்தரமான வருவாய் இருந்தும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. நிம்மதியைத் தேடி இவர் அடிக்கடி கோவில் கோவிலாக வெளியூருக்கு யாத்திர சென்றுவிடுவார்.

பக்தி முத்தியதாலோ அல்லது ஆன்மீக நாட்டத்தாலோ இவர் யாத்திரை செல்வதில்லை. பக்கத்து வீட்டுக்கார்களுடன்  தனது மனைவி அடிக்கடி சண்டை போடுவதை சகிக்க முடியாமல்தான் பழனியப்பன் யாத்திரை சென்றுவிடுகிறார். 

கடந்த வாரம் யாத்திரை முடிந்து வீட்டிற்குள் நுழைந்தாரோ இல்லையோ தனது சண்டைக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என வலியுத்துகிறார் நாகவள்ளி. அதற்கு பழனியப்பன் மறுக்கிறார். அது மட்டுமல்ல, அண்டை வீட்டுக்காரர் தனது மனைவி மீது புகார் கொடுக்க காவல் நிலையம் சென்ற போது பழனியப்பனும் உடன் சென்றதாகத் தகவல். அதனால் ஆத்திரம் அடைந்த நாகவள்ளி கணவனைத் திட்டித் தீர்க்கிறார். 

பழனியப்பனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; ஆத்திரமடைகிறார். வீட்டில் இருந்த கடப்பாரையால் மனைவியின் மண்டையைப் பிளக்கிறார். பலத்த அடிபட்ட நாகவள்ளி சற்று நேரத்தில் மாண்டு போகிறார். பிறகு தனது மகள் ராஜேஸ்வரியையும் பழனியப்பன் கொலை செய்கிறார். 

இது கதையல்ல. கடந்த வியாழன் அன்று சென்னையில் நடந்த உண்மைச் சம்பவம்.

இங்கே கொலை செய்கிற அளவுக்குச் செல்வது அசாதாரணமானதுதான். ஆனால் அக்கம் பக்கத்து வீட்டாருடன் சண்டை என்பது இச்சமூகத்தில் மிகச் சாதாரணமானது.

இத்தகைய சண்டை-சச்சரவுகளுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது பொறாமை. 

"Neighbour's envyOwner's Pride" இது ஒனிடா (ONIDA) நிறுவனத்தின் பிரபலமான விளம்பரம். அதாவது ஒனிடா நிறுவனத்தின்  தொலைக்காட்சி உள்ளிட்ட எந்தப் பொருளை ஒருவர் வைத்திருந்தாலும் அது "அண்டை வீட்டுக்காரரின் பொறாமை; (பொருளின்) சொந்தக்காரரின் பெருமை" என பறை சாற்றிக் கொள்ளலாம் என்பது அதன் பொருள்.

இந்தப் பொறாமை அண்டை வீட்டாரோடு நிற்பதில்லை.

Neighbour என்ற ஆங்கிலச் சொல்லிற்கு -
அயலவர்; 
அருகிலுள்ளவர்; 
அக்கம் பக்கத்திலுள்ளவர்;
அண்டை வீட்டார்; 
அடுத்திருப்பவர்; 
அடுத்த தெருவினர்;
பக்க ஊரினர்; 
அண்டை நாட்டினர்
என சென்னை பல்கலைக்கழக "ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம்" பொருள் கூறுகிறது.
இதில் அண்டை மாநிலத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால், இதே Neighbour க்கு அதே சொற்களஞ்சியத்தில்
நட்புணர்ச்சியுடையவர்:
பாசமுடையவர்: 
பாசத்துக்குரியவர்
என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில் Neighbour யாராக இருந்தாலும் நட்போடும் பாசத்தோடும் இருக்க வேண்டும் என்று பொருள் கொள்வதே பொருத்தமானதாக இருக்க முடியும்.

பாசத்தோடும் நட்போடும் பழக வேண்டியவர்களை ஒனிடா வந்து பொறாமை கொள்ள வைத்துவிட்டதோ!  ஆனால் ஒனிடா பொருள் இல்லாத போதும் பொறாமை குடி கொண்டுள்ளதே,  அண்டை வீட்டாருடன் சண்டை சச்சரவுகள் நீடிக்கின்றனவே! என்ன காரணம்?


-----தொடரும்