Wednesday, 20 May 2026

சனாதனம் அறிவோம்: பகுதி-3, நேற்று முதல் இன்று வரை

அறநெறி நூல்களும் இந்து மதமும்

உலகில் உள்ள முதன்மை மதங்கள் பலவற்றிற்கும், அவற்றைப் பின்பற்றும் தனிமனிதர்களுக்கான வாழ்வியல் ஒழுக்கங்களை, அதாவது கடமைகளை வகுத்துத் தர குறிப்பிட்ட ஒற்றை மதநூல் அடித்தளமாக இருக்கிறது. உதாரணமாக, கிறிஸ்தவத்திற்குப் புனித பைபிளும், இஸ்லாத்திற்குத் திருக்குர்ஆனும் வழிகாட்டுகின்றன.

இந்து மதம் ஒரே நிறுவனர் அல்லது ஒற்றை மதநூலை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு அல்ல; பல நூல்கள், மரபுகள், தத்துவப் பிரிவுகளின் தொகுப்பாக உள்ளது. நான்கு வேதங்கள், 18 முதன்மையான தர்ம சாஸ்திரங்கள், 18 புராணங்கள், இரண்டு இதிகாசங்கள் (இராமாயணம், மகாபாரதம்), மற்றும் அதன் துணை நூலாக பகவத் கீதை என ஒரு பிரம்மாண்டமான நூல்களின் வரிசையே இந்து மதத்தின் பின்னணியாகக் கூறப்படுகிறது.


மனுதர்ம சாஸ்திரம்: இந்துக்களின் சட்டம்

இத்தனை நூல்களையும் சாமான்ய இந்துக்கள் படித்து, தாங்கள் செய்ய வேண்டிய அன்றாட வாழ்வியல் கடமைகளைப் (தர்மம் என்றால் கடமை என்று பொருள்) கடைப்பிடிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று. எனவே, சமயக் கடமை, தத்துவங்களைப் பற்றிப் பேசுவதற்கு வேதங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட 18 தர்மசாஸ்திரங்களில் ஒன்றுதான் மனுதர்ம சாஸ்திரம். இது வர்ணாசிரம சமூக ஒழுங்கை வகுத்து, இந்துக்களின் வாழ்வுக்குரிய நீதி நியாயங்களை விதிகளாக விளக்கும் நூல் என்பது மிகை அல்ல.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பிற்காலத்தில் பக்தி இலக்கியக் காலகட்டத்தில் தோன்றிய சைவ, வைணவ நூல்களையும் சனாதன ஆதரவாளர்கள் இந்தப் பட்டியலில் தங்களுக்குச் சாதகமாகச் சேர்த்துக் கொள்கின்றனர். இருப்பினும், சனாதனத்தின் உண்மையான வேர்களை அறிய நாம் இங்கு அலசப் போவது மனுதர்ம சாஸ்திரத்தை மட்டுமே.

வரலாற்று ரீதியான அலசல்களும் கலை மூலமான எதிர்ப்பும்

மனுதர்மம் என்பது நமக்குப் புதிய ஒன்றல்ல. இதற்குக் முன்பே மகாத்மா ஜோதிராவ் புலே, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் உள்ளிட்ட எண்ணற்ற சமூகச் சீர்திருத்தப் போராளிகள், தங்கள் காலத்து நடைமுறைகளோடு பொருத்தி மனுதர்மத்தை ஆழமாக விமர்சித்துள்ளனர். அவர்கள் நடத்திய தத்துவார்த்தப் போராட்டத்திற்குக் காரணம், இந்த மனுதர்மத்தின் வழியே சமூகத்தில் விதைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகளும், பாகுபாடுகளும், தீண்டாமையும்தான்.
சிந்தனையாளர்களின் எழுத்துக்கள் ஒருபுறமிருக்க, கலை வடிவங்களும் இதற்கு எதிராகக் கடுமையான விவாதங்களை முன்வைத்துள்ளன:
  • எழுத்து: முல்க் ராஜ் ஆனந்தின் 'தீண்டத்தகாதவன்' போன்ற நாவல்கள்.
  • நாடகம்: கே.ஏ. குணசேகரனின் 'பலி ஆடுகள்' போன்ற மேடைப் படைப்புகள்.
  • திரைப்படம்: கலைஞரின் வசனத்தில் வெளிவந்த 'பராசக்தி' தொடங்கி அண்மையில் வந்த தெலுங்கின் 'ஷியாம் சிங்கா ராய்' வரை எண்ணற்ற திரைப்படங்கள் சனாதனத்தின் சடங்குகளையும், ஒடுக்குமுறைகளையும் ஆழமாக விமர்சித்துக் காட்டியுள்ளன.
செயற்கை நுண்ணறிவு காலத்திலும் தொடரும் சனாதனம்

நாம் இன்று தொழில்நுட்பப் புரட்சி மிக்க செயற்கை நுண்ணறிவு (AI) காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றும் சனாதன நடைமுறைகளில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சிக்கு வந்த பிறகு, மனுதர்மம் வலியுறுத்தும் சனாதன தர்மத்தை வெவ்வேறு வடிவங்களில், சில பாரம்பரிய சடங்குகள் மற்றும் மத அடையாளங்கள் அரசியல் மற்றும் கலாசார வெளிகளில் அதிகமாக முன்னிறுத்தப்படுகின்றன. 

மேலும், இந்திய வம்சாவளி சமூகங்கள் வாழும் பல நாடுகளிலும் சாதி பாகுபாடு குறித்த விவாதங்கள் மற்றும் சட்டப்பூர்வ புகார்கள் எழத் தொடங்கியுள்ளன. சாதியும், தீண்டாமையும் ஏற்றுமதியாகி உலகமயமாகி வருகின்றன.

இத்தகைய சூழலில், சனாதனம் குறித்து ஆழமாகத் தெரிந்து கொள்வது இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியமானது என்று நான் கருதுகிறேன்.

மனுதர்மத்தை வாசிக்கும் பொழுது, அது ஏதோ பழைமையான புத்தகம் போலத் தெரியவில்லை; மாறாக, அன்றாட வாழ்வில் இன்று நாம் கடைப்பிடிக்கும் பல செயல்களுக்கான காரணங்களை அது நமக்குப்புரிய வைக்கிறது. இன்றைய இந்தியச் சமூக அமைப்பை நம் கண் முன்னே நிறுத்துகிறது. என்றோ—கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு—எழுதப்பட்ட ஒரு சட்டம், இன்றும் எப்படி நடைமுறையில் நமது வாழ்வின் ஒரு அங்கமாக, நம் சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டாமா?

மனுதர்மத்தின் கட்டமைப்பு

மனுதர்ம சாஸ்திரம் மூல வடிவில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தாலும், அது ஆங்கிலத்திலும் தமிழிலும் பலரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கோமாண்டூர் இராமாநுஜாசாரியர் மொழிபெயர்ப்பில் 1919-ஆம் ஆண்டு வெளியான மனுதர்ம சாஸ்திரப் பதிப்பைத் திராவிடர் கழகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இது தவிர, திரிலோக சீதாராம் அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பும் (அலைகள் வெளியீட்டகம்), பல்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன.

மனுதர்ம சாஸ்திரம் மொத்தம் 12 அத்தியாயங்களையும், 2685 ஸ்லோகங்களையும் கொண்டது. அதன் கட்டமைப்பு இதோ:

அத்தியாயம் - தலைப்பு - ஸ்லோகங்களின் எண்ணிக்கை:

1. படைப்பியல்: உலகம், உயிர்களின் தோற்றம் …119

2.கல்வியும், கடமைகளும்: ஆசிரியர், மாணவர் …249

3.இல்லறவியல்: திருமணம், இல்லறம், விருந்தோம்பல் …286

4.பொருளியலும் தனிமனித ஒழுக்கமும்: பார்ப்பனர்களுக்கான விதிகளும் மற்றும் பொது விதிகளும்…260

5.உணவு – சுத்தம் – மகளிர்: உண்ணத்தக்கவை, உண்ணத் தகாதவை, தீட்டு-தீட்டுக் கழித்தல், மகளிருக்கு உரியவை …169

6.சன்னியாசம் :...97

7.அரசு நீதி: மன்னனின் கடமை, நாட்டு நிர்வாகம், போர் …226

8.சட்டம் ஒழுங்கு - நீதி நிர்வாகம்: குற்றங்கள், வழக்குகள், தண்டனைகள் …420

9.ஆண் பெண்களின் அறம்: திருமணம், மகப்பேறு, பாகப்பிரிவினை, குற்றங்கள், தண்டனைகள் …336

10.சாதிகள்: தோற்றம், அந்தஸ்து, வாழ்விடம், தொழில்…131

11.கழுவாய் (பிராயச்சித்தம்): விதிகள், வேள்விகள், பாவங்கள், பிழைகள் … 266

12.வினைப்பயன் (கர்ம பலன்): தீ வினை, நல்ல வினை …126

மனுதர்மத்தில் உள்ள ஒவ்வொரு ஸ்லோகமும் உண்மையில் என்ன சொல்கிறது? அது சொல்லும் விதிகள் அறிவியல் பூர்வமானதா அல்லது அறிவியலுக்குப் புறம்பானதா? அவை இந்துக்கள் எல்லோருக்கும் பொதுவானதா அல்லது பாரபட்சம் நிறைந்ததா? என்கிற நோக்கில், நான் அறிந்த வரையில் அவற்றை எளிய தர்க்கத்துடன் அடுத்தடுத்த பகுதிகளில் விளக்க முயற்சிக்கிறேன்.

அத்தியாயம் - I : படைப்பியல்
(தொடரின் அடுத்த பகுதியில் விரிவான ஸ்லோக விளக்கங்களுடன் சந்திப்போம்...)

ஊரான்

Sunday, 17 May 2026

சனாதனம் அறிவோம்: பகுதி – 2, மாற்றமடையும் அறநெறியும் மாறாத சனாதன தர்மமும்!

தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழல் மிகவும் அசாதாரணமானது. “சனாதனத்தை ஒழிப்போம்” என்ற குரல்கள் ஒருபுறம், அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற குரல்கள் மறுபுறம் என இரண்டும் தீவிரமாக மோதிக்கொண்டிருக்கின்றன.

இந்தச் சூழலில், “சனாதனத்தைப் பற்றி இப்போது பேச வேண்டுமா?” என்ற கேள்வி எழலாம்.

சனாதனம் என்பது வெறும் பழங்கால மத ஏடு அல்ல; அது வருண-சாதி கட்டமைப்பு, வாழ்விடம், தொழில், கல்வி, மற்றும் நீதி நிர்வாகம் என இன்றுவரை நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூக ஒழுங்குமுறை. எனவே, அதைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.


அரசியல் மாற்றமும் சனாதன எதிர்ப்பு முகாமும்

தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள விஜய் தலைமையிலான அணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்திருப்பது விவாதங்களை உருவாக்கியுள்ளது. விஜய் அரசியலுக்கு வந்தபோது அவரை விமர்சித்த அதே திருமாவளவன், இன்று அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசுவது சனாதன எதிர்ப்பு முகாமில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சனாதன எதிர்ப்பு என்பது வெறும் தேர்தல் கருவியா அல்லது கொள்கை உரைகல்லா? என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.

அறம் மற்றும் தர்மம்: அடிப்படை வேறுபாடு

இந்த விவாதத்தைத் தொடங்கும் முன், ‘அறம்’ மற்றும் ‘தர்மம்’ என்ற இரண்டு சொற்களுக்கு இடையே உள்ள பாரிய வேறுபாட்டை நாம் உணர வேண்டும். அறம் என்பது தமிழ் மரபுச் சொல்; தர்மம் என்பது சமஸ்கிருத மரபுச் சொல்.

1.அறநெறி (Ethics): ஒரு மனிதனின் அக மற்றும் புற ஒழுக்கத்தை வலியுறுத்துவது அறம். "மனத்துக்கண் மாசிலன் ஆதல்" (குறள் 34) என்பதே தமிழ் அறத்தின் அடிப்படை. அறம் என்பது காலச் சூழலுக்கு ஏற்ப மாறக்கூடியது. ஏற்கனவே கடைபிடித்த ஒன்று தவறாக இருக்கும் பட்சத்தில், அதை விடுத்து புதிய நல்வழியை வகுத்துக் கொள்வதே அறம். இது தனிமனித மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கிறது; மாற்றத்திற்கு இடமளிக்கிறது.

2.சனாதன தர்மம் (Sanatana Dharma): ஆனால் சனாதனம் முன்வைக்கும் 'தர்மம்' என்பது மாற்றத்திற்கு அப்பாற்பட்டது. பிறந்த குலத்திற்கு ஏற்ப, வருணத்திற்கு ஏற்ப, சாதிக்கு ஏற்ப மனுதர்மம் வகுத்த விதிகளை மாற்றமின்றி கடைபிடிப்பதே தர்மம் எனப்படுகிறது. இது தவறு என்று பிறரால் சுட்டிக்காட்டப்பட்டாலும், இதை மாற்றிக்கொள்ள வழியே கிடையாது. அதனால்தான் சனாதனம் தன்னை 'என்றும் நிலைத்திருப்பது' (Eternal - அழிவில்லாதது) என்று சொல்லிக்கொள்கிறது. இது மதம் என்கிற நிறுவனத்தின் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

வள்ளுவத்தின் வழிகாட்டுதலும் சாஸ்திரத்தின் தடையும்

அறநெறி வாழ்க்கை வாழ்வுக்கு ஆக்கம் தரும் என்றும், அதைக் கைவிடுவது கேடு என்றும் வள்ளுவர் எச்சரிக்கிறார் (குறள் 32). அறவாழ்க்கையின் பயன் இன்பமாகும் (குறள் 39).

ஆனால் சனாதனமோ, "சாஸ்திரம் விதித்ததைச் செய்; எதைச் செய்யக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறதோ அதைத் தட்டிக்கேட்காமல் தவிர்" என்கிறது. நாம் செய்யும் ஒரு செயல் பிறருக்கு என்ன கேடு விளைவிக்கும் என்று கூட அலசிப் பார்க்காமல், சனாதனம் சொல்வதை எப்படிச் சரி என்று ஏற்க முடியும்?

அறம் என்பது பிறருக்குத் தீங்கு ஏற்படாமல் வாழச் சொல்கிறது; தீங்கு ஏற்படுமாயின் அதை மாற்றிக் கொள்ளச் சொல்கிறது. ஆனால், பிறருக்குத் தீங்கு விளைந்தாலும், ‘சாஸ்திரம் சொன்னது’ என்பதற்காக அதை மாற்றாமல் பின்பற்றச் சொல்கிறது சனாதன தர்மம்.

ஏன் மனுதர்ம சாஸ்திரத்தை ஆராய வேண்டும்?

மனித சமத்துவத்திற்கும், பிறப்பின் அடிப்படையிலான சமூகக் கட்டமைப்பிற்கும் இடையிலான இந்த மோதலைப் புரிந்துகொள்ள, மனுஸ்மிருதியை நேரடியாக வாசிப்பதோடு, அது நடைமுறையில் எவ்வாறு இன்றும் நிலவுகிறது என்று அறிய வேண்டியது அவசியம்.

எனவே இந்தத் தொடரில் மனுதர்மத்தின்:
  • ஒவ்வொரு ஸ்லோகமும், அதன் நேரடிப் பொருளும்.
  • அவை உருவாக்கிய சமூகத் தாக்கம் மற்றும் வரலாற்றுச் சூழல்.
  • இன்றைய நவீன மனித உரிமை மற்றும் சமத்துவக் கோணத்தில் அதன் முரண்பாடுகள்.
ஆகியவற்றை விரிவாகப் பார்க்கப் போகிறோம். எது மனிதநேயத்துக்கு ஏற்றது? எது சமத்துவத்திற்கு எதிரானது? என்பதைத் திறந்த மனதோடு விவாதிப்போம்.

சமநீதியையும் மனித சமத்துவத்தையும் தேடும் அனைவரும் இந்த உரையாடலுக்கு வரவேற்கப்படுகிறார்கள்.

தொடரும்…

ஊரான்

Saturday, 16 May 2026

சனாதனம் அறிவோம்: பகுதி - 1, ஆதியும் அந்தமும் இல்லாத, என்றும் நிலைத்திருக்கும் அது எது?

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் "சனாதனத்தை ஒழிப்போம்" என்று பேசியது, இன்று மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது. சனாதன ஆதரவாளர்கள் இதனை "இந்து மதத்திற்கு எதிரானது", "கோயில்களை ஒழிப்பதற்கான பேச்சு" என்று திசை திருப்பி, சாமானிய மக்களிடையே உதயநிதிக்கு எதிரான ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க முயல்கிறார்கள். சாமான்ய மக்களுக்கும்கூட உதயநிதி பேசுவது தவறோ என்று எண்ணத் தோன்றுகிறது. சனாதனம் குறித்து அவர்களுக்குச் சொல்லப்படும் விளக்கங்கள்தான் இதற்குக் காரணம்.


சனாதன ஆதரவாளர்களின் மழுப்பலான விளக்கங்கள்

சனாதனம் என்றால் "ஆதியும் அந்தமும் இல்லாதது", "முடிவில்லாதது", "என்றும் நிலைத்திருப்பது" (eternal) என்று விளக்கமளிக்கிறார்கள். சரி, அப்படி நிலைத்திருப்பது, முடிவில்லாதது, அழிவில்லாதது எது என்று கேட்டால், அவர்களிடம் பதில் இல்லை. குஷ்பு முதல் அனிதா குப்புசாமி வரை பலரும், "பொட்டு வைப்பது, பூச் சூடிக்கொள்வது, கோலம் போடுவது, கோயிலுக்குப் போவது" தான் சனாதனம் என்று பாமரத்தனமான விளக்கங்களை அளிக்கின்றனர்.

உண்மையில், சனாதனத்தை பாதுகாக்கும் கருத்தியல் வட்டாரங்களுக்கு சனாதனம் என்றால் என்னவென்று நன்றாகவே தெரியும். ஆனால், உண்மையைச் சொன்னால் மக்கள் அவர்களை வெறுப்பார்கள் என்பதால், அவர்களும் இந்த மேற்கண்ட மேலோட்டமான விளக்கங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார்கள்.

தர்மம் இன்றி சனாதனம் இல்லை

'சனாதனம்' என்ற சொல்லுக்கு 'என்றும் இருப்பது' என்று பொருள் கொண்டாலும், 'தர்மம்' என்ற சொல்லோடு சேர்த்து 'சனாதன தர்மம்' என்று சொல்லும்போதுதான் அதன் முழுப் பரிமாணமும் விளங்கும். இந்த 'தர்மம்' என்ற சொல் இல்லாமல் சனாதனத்தைப் பற்றிப் பேசவே முடியாது.

'தர்மம்' என்றால் ஒழுக்க நெறி, அறநெறி, கடமை என்று பொருள். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், தனது வாழ்வில் அவன் கடைப்பிடிக்க வேண்டிய நீதிநெறிகள் என்னவென்று போதிக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளையே இங்கே தர்மம் என்கிறார்கள். 

மனித வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிகளை வள்ளுவம் 'திருக்குறளில்' போதிக்கிறது.

கிறிஸ்தவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இயேசுநாதர் 'பைபிளில்' வழங்கியுள்ளார்.

இஸ்லாமியர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை அல்லாஹ் 'குர்ஆனில்' வகுத்திருக்கிறார்.

அப்படியானால், இந்துக்களுக்கான அறநெறிகளை எங்கே தேடுவது? 

அவை வேதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாசங்கள், ஆகமங்கள் என நூற்றுக்கணக்கான ஏடுகளில் சிதறிக்கிடக்கின்றன.

மனுதர்மம்: சனாதனத்தின் செயல் வடிவம்

நூற்றுக்கணக்கான ஏடுகளில் உள்ள நெறிமுறைகளைத் தேடி கடைபிடிப்பது கடினம் என்பதால், அவற்றையெல்லாம் தொகுத்து 'மனுஸ்மிருதி' அல்லது ‘மனுதர்ம சாஸ்திரம்’ அல்லது ‘சனாதன தர்மம்’ என்ற பெயரில் மனு என்பவன் வழங்கினான். இந்த 'மனுதர்ம சாஸ்திரம்' தான் இந்துக்களின் வாழ்க்கை நெறிமுறை, தண்டனை முறைகள் மற்றும் பரிகாரங்கள் குறித்துப் பேசுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், மனுதர்ம சாஸ்திரத்தைப் புரிந்துகொண்டால் சனாதனம் என்றால் என்ன என்பது தானாகவே விளங்கிவிடும்.

சனாதனம் என்பது வெறும் பொட்டு வைப்பதோ, பூ வைப்பதோ அல்ல; அது மனு வகுத்த ஒரு சமூகக் கட்டமைப்பு. ஆதி அந்தம் இல்லாத என்றும் நிலைத்திருக்கும் இந்துக்களின் அந்த வாழ்வியல் தர்மம் அதாவது நெறிமுறை என்னவென்று சாதாரண இந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

தொடர்வோம்...

சனாதனம் குறித்துச் சாமான்ய மக்களும் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில், சனாதன தர்மத்தைப் போதிக்கக்கூடிய மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ள ஒவ்வொரு ஸ்லோகமாக எடுத்து, விரிவாக அலசத் திட்டமிட்டுள்ளேன். சனாதனத்தின் உண்மையான முகத்தைத் திரைவிலக்கிக் காட்டும் இத்தொடர் இனி தொடரும்.

சனாதனம் அறிவோம்!

ஊரான்

Friday, 15 May 2026

நாவிதர், வண்ணார் சாதிகளின் வாழ்வியலில் மாற்றம் நிகழ்ந்தது எப்படி?

சாதியம் என்பது வெறும் மனோபாவம் சார்ந்தது மட்டுமல்ல; அது ஒரு பொருளாதாரக் கட்டமைப்பு. இந்தியாவில் குறிப்பிட்ட சாதியினர் குறிப்பிட்ட தொழில்களைத்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயமும், அந்தத் தொழில்கள் இழிவாகக் கருதப்பட்டதும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணமாய் அமைந்தன. 

ஆனால், கடந்த 40, 50 ஆண்டுகளில் இந்தச் சாதியக் கட்டமைப்பில், குறிப்பாக நாவிதர்கள் மற்றும் வண்ணார்கள் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றம், இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கு மிக முக்கியமானது. 


புத்தர் முதல் சித்தர்கள், வள்ளலார், பெரியார் என தொடர்ச்சியாகச் சாதிய இழிவுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த போதிலும், இந்த மாற்றத்திற்கு அடிப்படைக் காரணம்—வெறும் மனமாற்றமோ, மேடைப் பேச்சுகளோ மட்டும் அல்ல; மாறாக, உற்பத்திக் கருவிகளில் ஏற்பட்ட வளர்ச்சியும், அதன் விளைவாக உற்பத்தி உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களுமே ஆகும்.

சாதிகளின் உற்பத்தி: மனுவின் தந்திரமும் வரலாற்று இருட்டடிப்பும்

சாதிகளின் தோற்றம் மற்றும் அதற்கான தொழில்கள் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டன என்பதை நாம் வரலாற்றுப் பூர்வமாகவும், தத்துவார்த்தப் பூர்வமாகவும் பார்க்க வேண்டும். சாதிகளின் உற்பத்தி குறித்து மனுஸ்மிருதி மிகத் தந்திரமான ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறது. நான்கு வருணங்களுக்கு இடையிலான கலப்பில் பிறந்தவர்களை (சங்கரா ஜாதிகள்), மனு புதிய வகைச் சாதிகளாக வகைப்படுத்துகிறான். 

அவ்வாறு வருணக் கலப்பில் உண்டான புதிய சாதிகளுக்கு என்று பிரத்யேகத் தொழில்களையும், (மனு: 10 வது அத்தியாயம்) சமூகப் படிநிலையில் அவர்களுக்கான கீழான இடத்தையும் மனுதர்மம் திட்டமிட்டு நிர்ணயித்தது.

ஆனால், இந்தத் தொழில்கள் எல்லாமே மனித குல வரலாற்றில் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல் உருவானவை என்பதை மனு தர்மம் மூடி மறைக்கிறது.
  • சவரத் தொழிலின் தோற்றம்: தொடக்க கால மனிதன்—அதாவது இரும்பு கண்டுபிடிக்கப்படாத, கத்தி போன்ற கருவிகள் கண்டறியப்படாத காலத்தில்—முடிகளைச் சவரம் செய்வதற்கான வாய்ப்பே கிடையாது. அப்பொழுது மனிதன் இயற்கையான நீண்ட முடியுடனும் தாடியுடனும்தான் வாழ்ந்திருக்க வேண்டும். இரும்பு உலோகம் கண்டறியப்பட்டு, கத்தி போன்ற உற்பத்திக் கருவிகள் உருவாக்கப்பட்ட பிறகே சவரம் செய்கிற தொழிலும், அதற்கான தேவையும் மனித சமூகத்தில் தோன்றியிருக்க முடியும். ஆனால், வரலாற்றுப் பூர்வமாக உருவான இந்தத் தொழிலை, ஒரு குறிப்பிட்ட சாதியினர்தான் செய்ய வேண்டும் என்று வருணக் கலப்பின் அடிப்படையில் மனு தர்மம் இதை ஒரு சாதித் தொழிலாக மாற்றியது. (மனு-8, 47)
  • சலவைத் தொழிலின் தோற்றம்: அதேபோல்தான் ஆடைத் தொழிலும். மனிதன் பருத்தி நூலைக் கண்டுபிடித்த பிறகுதான் நாகரிக ஆடைகள் தோன்றியிருக்க வேண்டும். ஆடைகள் தோன்றி, மனிதன் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகே, அதை வெளுப்பதற்கான (துவைப்பதற்கான) தேவையும் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும். தொடக்க காலத்தில் ஆடை வெளுப்பது, துவைப்பது போன்ற வேலைகளை அவரவர் தத்தமது தேவைகளுக்காகத் தாங்களேதான் செய்திருக்க வேண்டும். ஆனால், இதையும் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே உரிய இழி தொழிலாக ஒதுக்கியது வருணக் கலப்பில் ஏற்பட்ட சாதி அடிப்படையிலான அடக்குமுறைதான்.

இவ்வாறு, மனித குல வளர்ச்சியில் உருவான தொழில்நுட்பங்களை, குறிப்பிட்ட மனிதர்களின் மீது நிரந்தர இழிவாகச் சுமத்தியதுதான் வருணக் கோட்பாடு.

அடிமைத்தனத்தின் வடிவம்: 'இலவச' சேவை முறை

மனு வகுத்த இந்தச் சாதியக் கோட்பாட்டின் நீட்சியாகவே, சுமார் நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, கிராமப்புறங்களில் சவரம் செய்வதும் துணி வெளுப்பதும் வெறும் 'தொழிலாகப்' பார்க்கப்படாமல், அவை மேலாதிக்கச் சாதிகளுக்கான 'இலவசச் சேவையாகவே' பார்க்கப்பட்டன.

அன்றாட உழைப்புக்கான கூலி பணமாக வழங்கப்படவில்லை. காலையிலோ மாலையிலோ ஆதிக்கச் சாதியினரின் வீடுகளுக்குச் சென்று, “ஏகாளி வந்திருக்கேம்மா” என்று குரல் எழுப்பி அவர்கள் போடும் பழைய களி, கூழ் அல்லது மிச்சமான சோற்றை வாங்கிச் செல்லும் அவல நிலை இருந்தது. நாவிதர்களின் நிலையும் இதுதான். ஆண்டு முழுமைக்குமான உழைப்பிற்கு, நெல் அறுவடை காலங்களின் போது 'ஒரு கட்டு நெல்' தர்மமாக வழங்கப்படும்.

தொழில் நிமித்தமாக மற்றவர்களையும், துணிகளையும் தொட வேண்டியது இருந்ததால் இவர்களை சூத்திரச்சாதிகளில் ஆகக் கீழ்நிலையில் வைத்து தீண்டத்தக்கவர்களாக  நடத்தினார்களே ஒழிய அது உண்மையான மனித மரியாதையோ அல்லது உழைப்புக்கான அங்கீகாரமோ அல்ல; அது எஜமானன்-அடிமை உறவின் நீட்சி.

மாற்றத்தை ஏற்படுத்திய உற்பத்திக் கருவிகள்

சமூகத்தில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள், நகரமயமாதல் மற்றும் மக்கள் புலம்பெயர்தல் (Migration) ஆகியவை இந்த 'இலவச' மற்றும் 'பண்ணை' அடிமைமுறைச் சேவைக்கு முற்றுப்புள்ளி வைத்தன.

கிராமத்துச் சாதியக் கட்டுப்பாட்டை உடைத்துக் கொண்டு மக்கள் நகரங்களை நோக்கிப் புலம்பெயர்ந்த போது, 'சேவை' என்பது 'வணிகமாக' மாறியது. 

சவரக் கடைகளும் (Saloons), சலவைக் கடைகளும் (Laundries) தனியாக உருவெடுத்தன. 'வீட்டு வாசலில் வந்து நின்ற உழைப்பாளி' என்ற நிலை மாறி, 'உழைப்பாளியின் கடைக்குத் தேடிச் சென்று காசு கொடுத்துச் சேவை பெறும்' புதிய உற்பத்தி உறவு உருவானது. இது அவர்களுக்குப் பொருளாதார விடுதலையையும், ஓரளவு தார்மீக மரியாதையையும் தந்தது.

சுயமரியாதையை மீட்டெடுத்ததில் நவீன தொழில்நுட்பத்தின் பங்கு

உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி இவர்களின் உழைப்புச் சுரண்டலை மேலும் குறைத்தது. குறிப்பாக, துணி துவைக்கும் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி—வாஷிங் மெஷின் (Washing Machine), அயன் பாக்ஸ் (Iron Box), நவீன சோப்புகள் மற்றும் பிரஷ்கள்—பலரையும் தங்களின் துணிகளைத் தாங்களே துவைத்துக் கொள்ள ஊக்கப்படுத்தியது. இதனால், வண்ணார் சமூகத்தினர் மீதான ஆதிக்கச் சாதிகளின் நேரடிச் சார்புநிலை குறைந்தது.

ஆனால், சவரம் செய்யும் தொழில் (Hairdressing) மட்டும் இன்னும் முழுமையாகச் சுயமாகச் செய்து கொள்ளும் அளவுக்கு மாறவில்லை. இன்றும் அதற்கு மனித உழைப்பு இன்றியமையாததாக உள்ளது. 

ஆயினும், நவீனக் கருவிகளின் வரவும், குளிரூட்டப்பட்ட சலூன்களின் பெருக்கமும் அந்தத் தொழிலை ஒரு நவீனத் தொழில்துறையாக (Grooming Industry) மாற்றி, அதன் மீதிருந்த சாதியக் கறையைக் கணிசமாகக் குறைத்துள்ளன.

மனுதர்மம் பிறவிச் சட்டமாக உறுதிப்படுத்திய சாதித்தொழிலை, உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியே இன்று வருமானமாகவும், சுயமரியாதையாகவும் மாற்றியமைத்துள்ளது என்பதற்கு இதுவே சான்று.

முடிவுரை

நாவிதர் மற்றும் வண்ணார் சாதி மக்களின் சாதிய இழிவு இன்று பெருமளவு குறைந்து போனதற்கு, உற்பத்தி முறைகளில் ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார மாற்றங்கள், நகரமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நீண்டகால சமூக நீதிப் போராட்டங்கள் முக்கியக் காரணங்களாகும்.

கருத்தியல் ரீதியான விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், நடைமுறையில் சாதியத்தை ஒழிக்க வேண்டுமானால், சாதி சார்ந்த உழைப்பு முறைகளை நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு மாற்றி அமைக்க வேண்டும்.

உற்பத்தி உறவுகளும் உற்பத்திக் கருவிகளும் நவீனமயமாகிப் பொதுமைப்படுத்தப்படாதவரை, சாதியப் படிநிலைகளை முழுமையாக உடைக்க முடியாது என்பதை இந்தச் சமூக மாற்றங்கள் நமக்கு அழுத்தமாக உணர்த்துகின்றன.

ஊரான்

அலுப்பா? அல்லது உழைப்பை உதாசீனப்படுத்தும் மேட்டிமைத்தனமா?

"என்னைப்போல என் பிள்ளையும் கஷ்டப்படக் கூடாது" — இந்த ஒரு வரி, இன்று இந்தியாவின் ஆகப் பெரும்பாலான உழைக்கும் மக்களின் தாரக மந்திரமாக மாறிவிட்டது. 

விவசாயி, தச்சர், முடிதிருத்துபவர், மேஸ்திரி, துப்புரவுப் பணியாளர், தற்காலிக (Contract) ஆலைத் தொழிலாளி, சத்துணவு ஆயா, வீட்டு வேலை செய்பவர் என இந்தப் பட்டியல் நீளமானது.


உடல் உழைப்பைக் கோரும் அல்லது மேலதிகாரிகளின் இழிவான அடக்குமுறைக்கு உள்ளாகும் ஒவ்வொரு கடைநிலை ஊழியரின் கனவும் இதுதான்: "என் வாரிசு எப்படியாவது ஒரு ஏசி அறையில், கஷ்டமில்லாத வேலையில் ஒரு டாக்டராகவோ, ஒரு இன்ஜினியராகவோ, ஒரு அரசு அதிகாரியாகவோ, ஒரு ஐடி துறை ஊழியராகவோ அமர்ந்துவிட வேண்டும்."

எப்படியாவது முன்னேறுவதற்குத்தான் நீட் (NEET) தேர்வு உள்ளிட்ட மோசடிகளும், அரசு வேலை பெறுவதற்கான கையூட்டுகளும் அன்றாடம் அரங்கேறுகின்றன. வழிவகை தெரியாதவர்கள், வாய்ப்புக் கிட்டாதவர்கள் மட்டுமே இந்த மோசடிப் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவதில்லை.

ஆனால், ஒரு சமூகவியல் பார்வையில் இந்தக் கனவை நாம் ஆழமாகப் பரிசீலிக்கும்போது, அதன் பின்னால் இருக்கும் சுயநலமும், சமூகத்தின் கோழைத்தனமும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

எஞ்சி நிற்கும் கேள்வி: கஷ்டப்படப் போவது யார்?

எல்லோருமே கஷ்டப்படாத, மேசை நாற்காலி (White-collar) வேலைகளுக்குச் சென்றுவிட்டால், இந்த நாட்டின் உற்பத்தியை யார் செய்வது? விவசாய நிலத்தில் யார் இறங்குவது? தொழிற்சாலைகளின் இயந்திரங்களை (Machinist/Turner) யார் இயக்குவது? துப்புரவுப் பணி உள்ளிட்ட பொதுச் சேவைகளை யார் வழங்குவது? இங்கே உடல் உழைப்பு கோரும் தொழில்கள் மரியாதையற்றதாக ஏன் மாற்றப்பட்டுள்ளன?

உழைப்பைக் கௌரவமாகப் பார்க்காத ஒரு சமூகம், உற்பத்தியை முற்றிலும் இழந்து, வெறும் நுகர்வுச் சமூகமாக மட்டுமே மாறிப்போகும் ஆபத்து இதில் அடங்கியுள்ளது.

அலுப்பா? அல்லது உழைப்பை உதாசீனப்படுத்தும் 'மோட்டிவேஷனா'?

"நம் பிள்ளையாவது தப்பிக்கட்டும்" என்ற இந்த எண்ணம், உழைப்பால் வந்த 'உடல் அலுப்பு' அல்ல. இது, உழைப்பை இந்தச் சமூகம் உதாசீனப்படுத்துவதால் விளைந்த 'மன அலுப்பு'.
இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று: இந்தக் கடின உழைப்புகளுக்குச் சமூகத்தில் ஏன் உரிய மரியாதையும், தகுந்த வருவாயும் கிடைக்கவில்லை? என்று சிந்தித்து, அதற்கு எதிராகப் போராடுவதற்குப் பதிலாக, ‘எப்படியாவது’ (Shortcuts) தப்பித்து ஓட நினைக்கும் ஒரு 'போலி மோட்டிவேஷன்'தான் இன்று கல்விச் சந்தையால் விற்கப்படுகிறது.

போராட்டக் குணத்தை இழந்த கோழைத்தனம்

இந்தச் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களின் சொந்த வாரிசுகளின் விசயத்தில், சுயநலமான முடிவுகளையே எடுக்கின்றனர்.

வாயளவில், சாதியப் பாகுபாடுகளையும், வர்க்கப் பாகுபாட்டையும் சாடுவோர்கூட, நடைமுறையில் உடல் உழைப்பை இழிவாகவே பார்க்கின்றனர். "படிப்பது இராமாயணம், இடிப்பது இராமர் கோயில்" என்ற கதையாக, உழைக்கும் வர்க்கத்தின் பிள்ளைகள்கூட தங்களின் வர்க்க உணர்வை இழந்து, முதலாளித்துவக் கனவுகளை நோக்கி ஓடப் பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.

போராட மறுக்கும் கோழைத்தனம்: ஒரு தச்சரின் உழைப்புக்கோ, ஒரு துப்புரவுப் பணியாளரின் சேவைக்கோ ஏன் ஐடி (IT) ஊழியருக்கு அல்லது அரசு ஊழியருக்கு இணையான ஊதியமும், சமூக அந்தஸ்தும் வழங்கப்படுவதில்லை? உடல் உழைப்பிற்கு உரிய மரியாதை தராத இந்த அமைப்பிற்கு எதிராக, உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தராத, சுரண்டலுக்கு எதிராகக் கூட்டுப் போராட்டம் நடத்துவதுதான் சமூக நீதியே தவிர, என் பிள்ளை மட்டும் "எஜமானன் நாற்காலியில்" அமர வேண்டும் என்று எண்ணுவதும் அதை எந்த வழிமுறையிலாவது அடைந்துவிட வேண்டும் என்ற நடைமுறையும் ஒரு கூட்டுச் சமூகக் கோழைத்தனம் (Social Cowardice) அன்றி வேறல்ல.

முடிவுரை

இன்றைய கல்வி என்பது மனிதனைச் செழுமைப்படுத்தும் ஒரு கருவி அல்ல; அது உழைப்பில் இருந்து தப்பித்து ஓடுவதற்கான ஒரு 'நுழைவுச் சீட்டு' (Exit Ticket) மட்டுமே.

உழைப்புக்குரிய மரியாதையும், நியாயமான ஊதியமும் ஒவ்வொரு தொழிலுக்கும் கிடைக்கும் வரை, இந்தச் சமூகத்தில் உண்மையான சமத்துவம் மலரப் போவதில்லை. உழைப்பை இழிவுபடுத்துவதை விடுத்து, உழைப்பின் மதிப்பை — அதாவது உரிய மரியாதை மற்றும் ஊதியத்துடன் — மீட்டெடுப்பதற்கான தார்மீகக் கடமை நம் அனைவருக்கும் உண்டு. இல்லையெனில், ஒட்டுமொத்தச் சமூகமும் உழைப்பை உதாசீனம் செய்யும் ஒரு கூட்டத்தை உற்பத்தி செய்வதில்தான் முடியும்.

ஊரான்

Wednesday, 13 May 2026

உலகமயமாகும் தீண்டாமை: அம்பேத்கரின் கணிப்பும் அமெரிக்காவின் எதார்த்தமும்

“Hindus migrating to other regions on earth carry the caste system with them. Caste thereby becomes a world problem” என்று அண்ணல் B. R. Ambedkar அவர்கள் 1916ஆம் ஆண்டு எழுதிய Castes in India: Their Mechanism, Genesis and Development என்ற ஆய்வில் எச்சரித்தார்.

“இந்துக்கள் உலகின் பிற பகுதிகளுக்குக் குடிபெயரும்போது, சாதி முறையையும் உடன் எடுத்துச் செல்கின்றனர்; இதனால் சாதி என்பது உலகப் பிரச்சினையாக மாறுகிறது” என்ற இந்தக் கருத்து, இன்று புதிய அரசியல் மற்றும் மனித உரிமைச் சூழலில் மீண்டும் பேசு பொருள் ஆகி உள்ளது.

Hardev Sahay, a representative of the Dalit organization Begumpura Cultural Society of New York, speaks at the rally in support of the caste discrimination bill, in Jackson Heights, Queens, in New York, on April 13, 2026. Credit: Yashica Dutt

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அமெரிக்காவின் New York மாநில சட்டமன்றத்தில் சாதிப் பாகுபாட்டைத் தடை செய்யும் சட்ட முன்வடிவுகள் விவாதிக்கப்படுவது, அம்பேத்கரின் அந்த எச்சரிக்கை எவ்வளவு துல்லியமானது என்பதை வெளிப்படுத்துகிறது.

வேலைவாய்ப்பு, பணியிடம், வீட்டு வசதி குடியிருப்பு போன்ற இடங்களில் “caste discrimination” என்பதை தனித்துவமான மனித உரிமை மீறலாக அங்கீகரிக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. (PolicyEngage)

நியூயார்க் சட்ட முன்வடிவு: சாதி ஒரு உலக மனித உரிமை விவகாரம்

2025ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட New York Assembly Bill A6920 மற்றும் New York Senate Bill S6531 ஆகிய சட்ட முன்வடிவுகள், “சாதி” என்பதைக் குறிப்பாக மனித உரிமைச் சட்டப் பாதுகாப்புக்குள் கொண்டு வர முயல்கின்றன. இந்த மசோதாக்கள், வேலைவாய்ப்பு, வீட்டு வசதி மற்றும் பொது சேவைகளில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. (PolicyEngage)

சட்டத்தின் ஆதரவாளர்கள், தற்போதைய அமெரிக்க எதிர்ப்பாகுபாடு சட்டங்களில் ancestry அல்லது ethnicity போன்ற பிரிவுகள் இருந்தாலும், “caste” என்பதைத் தெளிவாகச் சேர்ப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பையும் புகார் அளிக்கும் தெளிவான அடிப்படையையும் வழங்கும் எனக் கூறுகின்றனர். (MyRepTracker)

இந்த விவாதம் தற்செயலாக உருவானதல்ல. அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்குள் சாதி அடையாளங்கள் தொடர்ந்தும் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, Cisco Systems நிறுவனத்தில் தலித் ஊழியர் ஒருவரால் தொடரப்பட்ட வழக்கு, உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. அந்த வழக்கில், இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த மேல்சாதி நிர்வாகிகள் பணியிடத்தில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. (MyRepTracker)

மேலும், Equality Labs வெளியிட்ட ஆய்வு, அமெரிக்காவில் வாழும் தலித் சமூகத்தினரிடையே வேலை, கல்வி மற்றும் மதச் சூழல்களில் பாகுபாடு நிலவுவதாகக் கூறியது. இந்த ஆய்வுகள் மற்றும் வழக்குகள், சாதி என்பது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை மட்டுமல்ல; புலம்பெயர் சமூகங்களின் வழியாக உலகளாவிய சமூகச் சிக்கலாக மாறிவிட்டது என்ற விவாதத்தை வலுப்படுத்தின. (MyRepTracker)

சனாதனக் கட்டமைப்பும் புலம்பெயர் சாதியமும்

அமெரிக்காவில் சாதிப் பாகுபாட்டை நடைமுறைப்படுத்துவது அமெரிக்க சமூகமே அல்ல; இந்திய துணைக்கண்டத்திலிருந்து குடிபெயர்ந்த சமூகங்களுக்குள் உருவாகியுள்ள அதிகார உறவுகள்தான். இந்தச் சூழலில், இந்து தேசியவாத மற்றும் சனாதன அரசியலை முன்னிறுத்தும் சில அமைப்புகள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக Rashtriya Swayamsevak Sangh மற்றும் Vishwa Hindu Parishad போன்ற அமைப்புகள், பாரம்பரிய இந்து சமூக ஒழுங்கை வெளிநாடுகளிலும் கலாச்சார அடையாளமாகப் பாதுகாக்க முயல்கின்றன என்ற விமர்சனங்கள் அமெரிக்க சமூக ஆய்வாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. (prismreports.org)

இதற்கெதிராக, சில இந்திய-அமெரிக்க அமைப்புகள் “சாதிப் பாகுபாட்டிற்கு எதிரான சட்டங்கள் ஏற்கனவே உள்ளன; caste என்பதை தனியாகச் சேர்ப்பது இந்துக்களை குறிவைக்கும் அரசியல் நடவடிக்கையாக மாறக்கூடும்” என்றும் வாதிடுகின்றன. (Reddit)

ஆனால், சட்ட ஆதரவாளர்கள் முன்வைக்கும் எதிர்வாதம் முக்கியமானது: சாதி அடையாளம் காரணமாக ஒடுக்குமுறையை அனுபவிப்பவர்கள் தங்களது அனுபவத்தைச் சட்டரீதியாக பெயரிட்டு கூற முடியாத நிலைதான் பிரச்சினை என்பதே அவர்கள் வலியுறுத்தும் மையப்புள்ளி.

எனவே “caste” என்ற சொல்லைத் தெளிவாகச் சட்டத்தில் சேர்ப்பது, பிரச்சினையை மறைப்பதல்ல; அதனை அங்கீகரிப்பதாகும். (NEPYORK)

‘தலித்’ என்ற சொல்லும் ‘தீண்டாமை’ என்ற அனுபவமும்

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பொதுவாக “தலித்” என்று அழைக்கும் அரசியல் மரபு உருவாகியிருந்தாலும், அந்தச் சொல்லுக்குள் உள்ள சமூக முரண்பாடுகளைப் புறக்கணிக்க முடியாது.

தமிழகத்தில்:
  • அருந்ததியர்களுக்கு எதிரான ஆதிதிராவிட ஆதிக்க மனப்பான்மை,
  • ஆதிதிராவிடர்களைத் தாழ்வாகக் காணும் சில தேவேந்திர குல வேளாளர் அணுகுமுறைகள்,
  • ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குள் நிலவும் உள்அதிகார அரசியல்
போன்ற நிகழ்வுகள்,

“ஒடுக்கப்பட்டோர்” என்ற ஒரே அடையாளத்துக்குள் கூட சமத்துவமின்மை நீடிப்பதைக் காட்டுகின்றன.

இதனால்தான் அம்பேத்கர் தனது எழுத்துக்களில் “Dalit” என்ற சொல்லைவிட “Untouchables” என்ற சொல்லைப் பெரும்பாலும் பயன்படுத்தினார். அவருக்கு முக்கியமானது, தனித்தனி சாதிப் பெயர்களல்ல; மனிதனைத் தீண்டத்தகாதவன் எனக் குறிக்கும் சமூக அமைப்பின் கொடூரம்தான்.

முடிவுரை

நியூயார்க் மாநிலத்தில் சாதிப் பாகுபாட்டை எதிர்க்கும் சட்ட முன்வடிவுகள் விவாதிக்கப்படுவது, சாதி என்பது இந்திய எல்லைக்குள் மட்டும் அடங்கிய பிரச்சினையல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பேத்கர் கூறிய “சாதி உலகப் பிரச்சினையாக மாறும்” என்ற எச்சரிக்கை இன்று அரசியல் எதார்த்தமாக மாறியுள்ளது.

சாதி என்பது வெறும் தனிநபர் மனப்பான்மை அல்ல; அது மதம், மரபு, சமூக அதிகாரம் மற்றும் பண்பாட்டு மேலாதிக்கம் ஆகியவற்றோடு பின்னிப் பிணைந்த கட்டமைப்பு. 

எனவே, சாதியை எதிர்ப்பது என்பது வெறும் ஒழுக்கப் பிரச்சினையல்ல; மனித சமத்துவத்தை மறுக்கும் அந்த அமைப்பை விமர்சன ரீதியாக அடையாளம் காண்பதுமாகும்.

அமெரிக்காவில் உருவாகும் இந்த சட்ட விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனை இன்னும் உலக அரசியலில் உயிரோடு இருப்பதை மீண்டும் நினைவூட்டுகின்றன.

ஊரான்

மேலதிக விவரங்களுக்கு: 

Tuesday, 12 May 2026

கோவணம் ஆகிறதா சிவப்பும் நீலமும்?

ஒரு காலத்தில் உடைகள் என்பவை வெறும் கௌரவம் மட்டுமல்ல, அவை மிகவும் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய சொத்துகளாகவும் இருந்தன. பள்ளிச் சிறுவர்களுக்கு டவுசர்கள், விவசாயிகளுக்கு பட்டாபட்டி - வேட்டிகள் இவைதான் அன்றைய நடைமுறை. ஆனால், அதே பள்ளிச் சிறுவர்கள் கூட வயலில் தாய் தந்தையருக்கு உதவி செய்யச் செல்லும்போது, டவுசரை கழற்றி வைத்துவிட்டு கோவணத்தோடுதான் உதவுவார்கள்.


உழைக்கும் விவசாயிகளுக்குக் கோவணம் என்பது அன்றாடத் தேவை. காசு கொடுத்து வாங்கும் வேட்டிகள் இரும்புப் பெட்டிக்குள் பத்திரமாகப் பூட்டி வைக்கப்படும்; அது வெளியில் எங்காவது செல்லும்போது மட்டுமே பயன்படும். பட்டாபட்டி வயல் வேலை இல்லாத நேரங்களில் அணியக் கூடியது. பயன்படுத்தாத போது இது கூட கொடியில் பத்திரமாக தூங்கிக் கொண்டிருக்கும். ஆனால், உழைப்பின் சின்னமான கோவணம் மட்டும் எரவானத்தில் சொருகப்பட்டு ஏளனமாகப் பார்க்கப்படும்.

காலப்போக்கில் வேட்டி இத்துப் போகும்போது, அது கரித்துணியாகவோ அல்லது கோவணமாகவோ உருமாறும். ஆனால், அந்த உருமாற்றத்திற்கும் ஒரு காலாவதி தேதி உண்டு. கரித்துணி சில நாட்களும், கோவணம் சில வாரங்களும் மட்டுமே தாக்குப் பிடிக்கும். ஒரு கட்டத்தில் அது எதற்கும் பயன்படாது என்ற நிலை வரும்போது, அதன் நிறம் சிவப்பாக இருந்தாலும் சரி, நீலமாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த நிறமாயினும் அது குப்பைத் தொட்டிக்குத்தான் போய்ச் சேர வேண்டும்.

உழைப்பின் வியர்வையைத் தாங்கிய துணிகள் அவை எந்த நிறமாயினும் கூட அவற்றிற்கு ஒரு மரியாதை இருந்த காலம் போய், இன்று சந்தையைப் பொருத்தே நிறங்களும் தங்கள் மதிப்பைப் பெறுகின்றன.

எனக்குப் பிடித்ததும் சிவப்பும் நீலமும்தான். அதற்காக கோவணம் ஆன பிறகு உச்சிமுகர முடியுமா? 

ஊரான் 

தொடர்புடைய பதிவுகள் 

Monday, 11 May 2026

வலி... வலியது!

உலகில் ஆகச்சிறந்த மொழி ‘வலி’தான்.
அந்த வலியைத் தன் உடம்பில் படாமலேயே, பிறர் படும்போது தன் இதயத்தில் உணர்வதுதான் உண்மையான மனிதநேயம்.


ஒருவன் அழுகையைத் தன் கண்ணீராக்கி, ஒருவன் ரத்தத்தைத் தன் நெஞ்சில் துடிப்பாக்கும்போதுதான் சமூகம் உயிர்த்தெழுகிறது. 

இந்த உணர்வு இல்லையென்றால், இந்த உலகம் நெடுநாட்களுக்கு முன்பே அழுகிப் புழுத்து நாற்றமெடுத்துப் போயிருக்கும்.

கலை தரும் வலியின் அதிர்வுகள்

நாம் ஜவுளிக்கடை ஊழியர்கள் அல்ல. ஆனால் வசந்தபாலன் இயக்கிய அங்காடித்தெரு படத்தில், இருக்கை இல்லாமல் மணிக்கணக்கில் கால் கடுக்க நிற்கும் தொழிலாளர்களின் வலி நம் கால்களில் இறங்கவில்லையா?

நாம் சாலை விபத்தில் அடிபட்டவர்கள் அல்ல. ஆனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்காகப் போராடும் ஒரு மனிதனைப் பார்க்கும்போது நம் உடல் பதறி, நெஞ்சு துடிப்பதில்லையா?

அலெக்ஸ் ஹேலி எழுதிய வேர்கள் நாவலைப் படிக்கும்போது, நாம் ஆப்பிரிக்க அடிமைகளாக இல்லாவிட்டாலும், அவர்களின் முதுகில் விழும் ஒவ்வொரு சவுக்கடியும் நம் நெஞ்சைப் பிளப்பதில்லையா?

ஈழத்தில் கொத்துக்கொத்தாகச் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் உடல்களின் வலியும், இன்று காசாவில் பசியால் துடிக்கும் குழந்தைகளின் அலறலும் நம் இரத்தத்தில் ஓடுகிறதுதானே?

இதுதான் மனிதம்.

வர்க்கம் கடந்த தோழமை

மனித வரலாற்றில் பெரிய மாற்றங்கள் அனைத்தும், பிறர் வலியைத் தன் வலியாக உணர்ந்த மனிதர்களால்தான் நிகழ்ந்தன.

பாட்டாளி வர்க்கத்தின் வலியைத் தன் உயிரில் உணர்ந்ததால்தான், பணக்காரரான ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸ்-ஆல் காரல் மார்க்ஸ் உடன் கைகோர்க்க முடிந்தது.

தீண்டத்தகாதவர்களின் வலியைத் தன் மனதில் ஏற்றதால்தான், பல உயர்சாதி இளைஞர்கள் சாதி-தீண்டாமையை எதிர்த்து வீதிக்கு வந்தனர்.

ஒரு காவல்துறை ஆய்வாளர், ஒரு சாதாரண கான்ஸ்டபிளை மணிக்கணக்கில் நிற்க வைத்து அவமானப்படுத்தும்போது, அந்த அதிகாரத் திமிருக்கு எதிராக நம் மனம் கொதிக்கிறது. இங்கே வலி வர்க்கத்தையோ, சாதியையோ, மதத்தையோ பார்த்து வருவதில்லை.

வலியை அரசியலாக்கும் இன்றைய போக்குகள்

ஆனால் இன்றைய அரசியல் மிகவும் வேதனையளிக்கிறது.
பிறர் வலியை உணர்வதற்குப் பதிலாக, அதை அடையாள அரசியலின் சந்தைக்குள் அடைத்து விற்பனை செய்யும் மனநிலை வலுப்பெற்று வருகிறது.

நேற்றுவரை “சனாதனத்தின் பிள்ளைதான் விஜய்” என்று முழங்கிய அதே 'முற்போக்கு' முகங்கள், இன்று பதவி மோகத்தில் “ஆட்சியில் பங்கு... அதிகாரத்தில் பங்கு” என்று கரம் கோர்க்கின்றன.

இதை விமர்சித்தால், “உனக்கு வேங்கைவயலின் வலி தெரியுமா?” என்று திசைதிருப்புகின்றனர்.

ஒரு மனிதன் அனுபவித்த வலியின் முழு ஆழத்தை, அதை அனுபவித்தவனே முழுமையாக உணர முடியும் என்பது உண்மைதான். ஆனால் அதனால் பிறர் அந்த வலியை உணரவே முடியாது என்று சொல்லிவிட்டால், மனிதநேயத்தின் அடிப்படையே சிதைந்து போகாதா?

எந்தச் சனாதன அமைப்புகள் தீண்டாமையையும் மனித இழிவையும் உருவாக்கினவோ, அந்தச் சக்திகளோடு சமரசம் செய்துகொண்டே, அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையே ‘பிற்போக்குவாதிகள்’ என முத்திரை குத்தினால் அவர்களுடைய மனமும் ஒருநாள் வலிக்காதா?

“பட்டியலினத்தைச் சேர்ந்தவனாக ஒருவன் இல்லையென்றால் தீண்டாமையின் வலியை உணர முடியாது” என்ற வாதம், வரலாறு முழுவதும் பிறர் வலியைத் தன் வலியாக ஏற்றுப் போராடிய எண்ணற்ற மனிதர்களின் தியாகத்தை அவமதிப்பதோடு, இன்றும் கூட அந்த உணர்வோடு களத்தில் நிற்பவர்களை அந்நியப்படுத்தும் அபாயத்தையும் உருவாக்குகிறது.

வலியைப் போக்கும் அரசியல் வேண்டும்

“அவனவன் வலியை அவனவன்தான் உணர முடியும்” என்றால், பிறகு அடுத்தவர்களின் வலியைப் போக்கப் போராடும் இயக்கங்களும், கட்சிகளும், தியாகங்களும் எதற்காக?

அடுத்தவனின் வலியைத் தன் சொந்த வலியாகக் கருதுபவன்தான் உண்மையான போராளி. ஆனால் பதவியும் அதிகாரமும், பிறர் வலியை உணரும் இதயத்தை மங்கச் செய்யும் போது, அரசியல் இயக்கங்கள் தங்கள் ஆன்மாவையே இழக்கத் தொடங்குகின்றன.

வலி என்பது சாதி, வர்க்க, மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது. அடுத்தவனின் வலியைத் தன் வலியாக உணரும் இதயம்தான் உண்மையான மனித இதயம்.

வலியை அரசியலாக்காமல் —
வலியைப் போக்கும் அரசியலே இந்த மண்ணுக்கு அவசியம்.

ஊரான்