வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் விவசாயிகள் போராடுகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி 29.12.2020 தஞ்சை பேரணி-பொதுக் கூட்டத்தைத் தடுப்பதற்கான ஈனத் தனமான வேலைகளில் ஈடுபடுகிறது எடப்பாடி கும்பல். 'நானும் விவசாயிதான்' என்று கூப்பாடு போட்டுக் கொண்டே போராடுவோர் குரல்வளையை நெரிப்பதில் ரவுடிக் கும்பலையும் விஞ்சி விட்டது இந்தக் கும்பல்.
மோடி கொண்டு வரும் மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும், ஏன் ஜெயலலிதா எதிர்த்தவைகளைக்கூட எடப்பாடிக் கும்பல் ஆதரிப்பது ஏன்? பெரிய ரகசியம் ஒன்றுமில்லை. எல்லாம் பெட்டியைக் காக்கத்தான்.
நீட் தேர்வு: (National Eligibilty cum Entrance Test-NEET): 2016
மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு தொடர்பான வழக்கில் 2016 ஆம் ஆண்டில் தடை நீக்கப்பட்ட பிறகு, நீட் தேர்வு முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. மறைந்த ஜெயலலிதா நீட் தேர்வு முறையை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தார். ஆனால் இன்றைய எடப்பாடி கும்பல். நீட் தேர்வு முறையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் அனிதா, பிரதீபா உள்ளிட்ட பலரை நாம் இழந்தது மட்டுமல்ல ஏழை எளிய மக்களின் மருத்துவக் கனவுகளும் நாசமாகி வருகிறது.
ஜூலை 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை, 3, 5, 8 வகுப்புகளில் புதிதாக பொதுத் தேர்வு முறையை அறிமுகப்படுத்தி குலக்கல்விக்கு வித்திட்டுள்ளது மோடி அரசு. இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பு மட்டுமன்றி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி உரிமையை மத்திய அரசு பறித்து விடுகிறது. இதையும் ஆதரிக்கிறது எடப்பாடி கும்பல்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்: 2013
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொது வினியோகத் திட்டத்தில் மத்திய அரசு தலையிட்டு மாநில அரசுகளின் உரிமையை பறிக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் ஒருங்கிணைந்த பொதுவிநியோகத் திட்டம் (integrated management of public distribution system) என்ற பெயரில் "ஒரே நாடு, ஒரே ரேஷன்" என்கிற திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது. ஜெயலலிதா எதிர்த்து வந்த இந்தத் திட்டத்தைத்தான் இன்றைய எடப்பாடி கும்பல் 01.10.2020 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.
உதய் மின் திட்டம்: 2015
நிதி மற்றும் செயல் திறனை மேம்படுத்துவது என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் காலாண்டுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள வழிவகுக்கிறது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்படும் நிலக்கரியின் விலையை ஐந்து மடங்காக உயர்த்தி மின்கட்டணம் உயர்வதை தவிர்க்கவியலாத ஒன்றாக மாற்றியுள்ளது. மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் மாநில அரசின் நடவடிக்கைகள் மீது நேரடியாக மத்திய அரசு தலையிடுகிறது. இந்தத் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிகக்கடுமையாக எதிர்த்து வந்தார்.
இதன் தொடர்ச்சியாகத்தான் புதிய மின்சார சட்டத் திருத்தம் 2020 என்கிற மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது மோடி அரசு. ஏற்கனவே 2003 இல் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ஒரே துறையாக இருந்த மின் வாரியத்தை உற்பத்தி (generation), அனுப்புதல் (trasmission), பகிர்மானம் (distribution) என்று தனித்தனியாக பிரித்து தனியாருக்குத் தாரை வார்க்கும் அடிக்கல்லை நாட்டியது. அரசு மின்சாரத்தைத் தயாரித்து கம்பிகள் வழியாக அனுப்பினால், அதை எடுத்து வீடுகளுக்கு விநியோகம் செய்து கட்டணத்தைத் தீர்மானித்து தனியார் கொள்ளையடிக்க அனுமதி அளிக்கிறது புதிய மின்சார சட்டத் திருத்தம் 2020. மின் கம்பி அரசுக்கு, அதில் பாயும் மின்சாரம் அதானிக்கு என்பதுதான் இந்த சட்டத்தின் சாரம். இதற்கும் பச்சைக்கொடி காட்டுகிறது எடப்பாடி கும்பல்.
பணமதிப்பிழப்பு: 2016
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த 2016, நவம்பர் 8 நள்ளிரவை யாரும் மறக்க முடியாது. கருப்புப் பணம் ஒழியும், ஊழல் மறையும் எனக் கூவினார்கள். நடந்ததா? மாறாக நிச்சயக்கப்பட்டத் திருமணங்கள் நின்றன. சிகிச்சைக்குப் பணம் இன்றி நோயாளிகள் தவித்தனர். அன்றாட செலவுகளுக்காக வங்கி வாசலில் வரிசையில் நின்று மாண்டு போனவர்கள் ஏராளம். சிறுதொழில்கள் முடங்கியதால் தொழிலாளர்கள் கிராமங்களுக்கு விரட்டி அடிக்கப்பட்டனர். கட்டுமானத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஏற்றுமதிகள் குறைந்தன. சுமார் 90 லட்சம் பேர் வேலை இழந்தனர். இதை மட்டும் எடப்பாடி கும்பல் எதிர்த்து விட்டதா என்ன?
ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி : 2017மீண்டும் சிறு குறு தொழில்கள் நலிவடைந்தன. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். ஏற்றுமதிகள் பாதிப்படைந்தன. மாநில அரசுகளுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. இழப்பீட்டை ஈடுசெய்து கொள்ள 21 மாநில அரசுகள் ரூ.78,542 கோடி வெளியிலிருந்து கடன் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தது மோடி அரசு. இதனால் மாநில அரசுகள் கடன் சுமைக்குத் தள்ளப்பட்டன. மாநில அரசுகள் ஓட்டாண்டி ஆனாலும் பரவாயில்லை, தங்களது பெட்டி பாத்திரமாக இருந்தால் போதும் என்று மௌனம் காக்கிறது எடப்பாடி கும்பல்.
கால்நடை விற்பனைக்குத் தடை: 2017
கால்நடை வளர்ப்பு மற்றும் விற்பனையை ஒரு பண்ணைத் தொழிலாக மாற்றி கிராமப் பொருளாதாரத்தை கார்ப்பரேடடுகளிடம் ஒப்படைக்கும் கெட்ட நோக்கம் கொண்டது. கால்நடை விற்பனைக்கு வரி விதித்து கால்நடை வளர்ப்பின் மூலம் பயனடைந்த கிராமப்புற விவசாயிகளைக் கடுமையாக பாதிக்கும் திட்டம் இது. இப்படி ஒன்று இருப்பதே எடப்பாடி கும்பலுக்கு எங்கே தெரியப் போகிறது?
உணவு தானியத்திலிருந்து எரிபொருள் தயாரிப்புத் திட்டம்: 2018
உணவு தானியத்தில் இருந்து 30 சதவீத எரிபொருளை தயாரிப்பதற்கான அனுமதியை வழங்கும் திட்டம் இது. இதனால் கடும் உணவுப் பஞ்சம் ஏற்படும். இது மட்டும் தெரிந்து விடுமா என்ன எடப்பாடி கும்பலுக்கு?
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: 2018
இந்தியாவில் சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் 100 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி அளிக்கிறது இந்தத் திட்டம். இதன் மூலம் சிறு வணிகத்தை ஒழித்துக்கட்டி, பன்னாட்டுக் கம்பெனிகளின் கைகளில் இந்திய வணிகத்தை ஒப்படைக்கிறது. எவன் வந்தால் நமக்கென்ன? பெட்டி பத்திரமாக இருந்தால் போதும் என்பதைத்தவிர வேறென்ன செய்துவிடப் போகிறது எடப்பாடி கம்பெனி?
வேளாண் சட்டத்திருத்தங்கள் 2020
கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண்மையை கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரவும், கள்ளச்சந்தையை ஊக்கப்படுத்தி பதுக்கலுக்கு வழிவகுத்து உணவுப்பொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தவும் வழிவகை செய்துள்ளது மோடி அரசு. இதற்கு எதிராகத்தான் இன்றைக்கு விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர்.
மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு கொண்டுவரப்பட்ட மருத்துவ படிப்பில் நீட் பொதுத்தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கை, ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி, உதை மின் திட்டம் மற்றும் புதிய மின்சார சட்டத் திருத்தம், 'ஒரே நாடு ஒரே ரேஷன்' என்கிற பொது விநியோகத் திட்டம், புதிய வேளாண் சட்டங்கள் என எதை எடுத்துக்கொண்டாலும் இவை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலேயே அமைந்துள்ளன.
ஜெயலலிதா மிகக் கடுமையாக எதிர்த்து வந்த நீட் தேர்வு, பொது விநியோகத் திட்டம், உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்புத் திட்டம், ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட அனைத்தையும் அம்மா பெயரில் ஆட்சி நடத்தும் எடப்பாடி அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஜெயலலிதா எதிர்த்தவைகளை இவர்கள் ஆதரிப்பது ஏன்? பஞ்சாப் ஹரியானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து வரும் வேளையில் எடப்பாடி கும்பல் மட்டும் ஏன் ஆதரிக்கிறது? 'ரெய்டு' எனும் கத்தி அவர்கள் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருப்பதை தவிர வேறென்னவாக இருக்க முடியும்?
'ரெய்டு' எனும் கத்தி!
21.12.2016 அன்று தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம் மோகன் ராவ் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்கள் வீடு என 14 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு ரூ.48 லட்சம் பணம் ரொக்கமாகவும், 7 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. தலைமைச் செயலருக்கும் சேகர் ரெட்டி தொடர்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டது. சேகர் ரெட்டி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமானவர் என்றும் சொல்லப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் சேகர் ரெட்டியின் வீட்டில் கட்டுகட்டாக கைப்பற்றப்பட்டதை நாடே அறியும். ஆனால் பின்னாளில் அவர் குற்றமற்றவர் என்று விடுக்கப்பட்டார் என்பது தனிக்கதை.
07.04.2017 அன்று சென்னை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆகிய இடங்களில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில் ரூ. 5 கோடி அளவிற்கு ரொக்கமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
அம்மாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் இன்றைய ஆட்சியாளர்கள் ஜெயாவின் வழியிலே மக்கள் பணத்தை கோடி கோடியாக கொள்ளை அடித்து குவித்து வைத்துள்ளனர். இதையெல்லாம் தெரிந்து வைத்துள்ள மத்திய அரசு 'ரெய்டு' என்ற கத்தியைக் காட்டி இவர்களை மிரட்டி வருகிறது.
மோடியின் அடிமைகளாய் மாறிப்போய் அம்பலப்பட்டு, செல்வாக்கிழந்து இனியும் தமிழக அரசியலில் முகவரி இல்லாமல் முடங்கிப் போவோம் என்பதைத் தெரிந்து கொண்டுதான் தாங்கள் சுருட்டியப் பணத்தைப் பாதுகாத்துக்கொள்ள மோடி அரசு கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோதத் திட்டங்களையும், சட்டங்களையும் ஆதரித்து தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது எடப்பாடி கும்பல். அரசியல் அரங்கில் முகவரி இல்லாமல் உடனடியாக துடைத்தெறியப்படவேண்டிய கூட்டமிது.
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment