Tuesday, October 8, 2024

முற்போக்கு பேசினாலே முகஞ்சுளிக்கும் ஈனச் சமூகம் இது!

 
அறிவியலை
பொறியியலை
இயற்பியலை
இயங்கியலை
பகுத்தறிவை
ஏன்தான் படித்தோம்
என 
சில நேரம் 
அவநம்பிக்கையின் ரேகைகள்
மெய்யெங்கும் படர்துண்டு!

ஒரு வேளை,
படிக்காமல் இருந்திருந்தால்
ஆடுகளைக் கோழிகளைப் போல
மாடுகள் மான்களைப் போல
பறவைகள் பன்றிகளைப் போல
கூட்டத்தோடு கூட்டமாய்
கூடிக் குலாவி
குதூகலித்து
இதுதான் வாழ்க்கை என
காலத்தைக் 
கடத்தியிருக்கலாமோ 
என
சமயங்களில் மருள்வதுண்டு!


பரவி விரவியிருக்கும்
பிற்போக்கின் வேர்களில்
முற்போக்குக் துளிர்க்குமா?
ஒரு வேளை துளிர்த்தாலும்
அது
பற்றிப் படற துணையின்றி
துளிர்க்கும் போதே
துவளும் நிலைதானே எங்கெங்கும்!

உண்மை பேசும் 
அறிஞர்களின் உயிரைப் 
பறிக்கும் உலகமிது
நம்மை மட்டும் 
விட்டுவிடுமா என்ன?
அறிவியல் பேசியோரை 
அன்று 
சிறைப்படுத்திச்
சிதைத்தார்கள்
இன்று 
உலவ விட்டு 
வதைக்கிறார்கள்.

முற்போக்கு பேசினாலே
முகஞ்சுளிக்கும்
ஈனச் சமூகம் இது!
என்றுதான் மாறுமோ 
இந்த இழிநிலை?

ஏக்கத்துடன்,
ஊரான்

No comments:

Post a Comment