Sunday, February 23, 2025

பாராஞ்சி: ஒரு வகைமாதிரி சனாதன கிராமம்!

"வேண்டும் பெரியார்! மீண்டும் பெரியார்!" என்ற தலைப்பில் இராணிப்பேட்டை மாவட்டம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாராஞ்சி முகாம் சார்பாக, பாராஞ்சி கிராமத்தில் இன்று (23.02.2025) நடைபெறும் தெருமுனைக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தோழர் வாலாசா வல்லவன் அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்.


பெரியார் குறித்து சீமான் அவதூறாகப் பேசிய பிறகு, சீமான் மறைந்து கொண்டிருக்கிறான்; பெரியார் பிறந்து கொண்டிருக்கிறார். இறந்துபோன ஒரு கிழவன் மீண்டும் அவதாரம் எடுப்பதையும், உயிரோடு உருமும் ஒரு கிடாத்தடியன் புதைந்து போவதையும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் உணர்த்துவதாகவே நான் கருதுகிறேன். 

கூட்டத்திற்குச் செல்லலாமா என்ற எண்ணம் எழுந்தவுடன், கூகுள் வரைபடத்தில் பாராஞ்சியைத் தேடினேன். வரைபடம் விரிவடைய விரிவடைய சோளிங்கபுரம்-அரக்கோணம் நெடுஞ்சாலைக்கு வடக்கே ஊரும், தெற்கே  காலனியும் இருப்பதைப் பார்த்த போது மனுதர்ம சாஸ்திரப்படி கட்டமைக்கப்பட்ட ஒரு கிராமமாக இன்றும் பாராஞ்சி காட்சி அளிக்கிறது.

ஊருக்கு வடமேற்கே பாராஞ்சி ஏரி அமைந்துள்ளது. ஏரியின் உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் தென்கிழக்காக நீள்கிறது. 

சண்டாளர்களுக்கு (பறையர்கள்) வீடு ஊருக்கு வெளியே இருக்க வேண்டியது (மனு: 10.51) என்கிற மனுவின் வரையறைப்படி, பாராஞ்சியிலும் ஊருக்கு வெளியே, பீடை திசையான தெற்கில்தான் சேரி அமைந்துள்ளது. 

பருவ காலங்களில் மேற்கு திசைக் காற்று சேரிக்குள் புகுந்து ஊருக்குள் வரக்கூடாது என்பதற்காகவும், மேற்கும்-வடக்கும் மேடாக இருப்பதனால் ஏரியின் உபரி நீரோ மழை நீரோ சேரிக்குள் வழிந்தோடி ஊருக்குள் வராமல் இருப்பதற்கும் ஏற்பதான் தெற்கு அல்லது தென்கிழக்கு திசையில் பள்ளமான பகுதிகளிலேயே சேரிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாராஞ்சி சேரியும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஊர்-சேரி வேறுபாடு மட்டுமல்ல, ஊருக்குள்ளும் இதே கட்டமைப்புதான்
பாராஞ்சியிலும் உள்ளது. கிழக்கு-மேற்காக அமைந்துள்ள ஊர் தெருக்களில், வடக்கே ஐயங்கார் தெருவும், அதற்கு தெற்கே உடையார் தெருவும் அமைந்துள்ளது. உடையார் (அகமுடைய முதலியாரை உடையார்கள் என்பார்கள்)  தெருவுக்குக் கீழேதான் வன்னியர் தெரு உள்ளது. 


இந்து மத சாதியப் படிநிலை அமைப்பில் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என்பதனால் அவர்கள் மேலேயும், அதற்கு அடுத்த படி நிலையில் உடையார்கள் இருப்பதனால் அதற்குக் கீழேயும், வன்னியர்கள் இவர்களுக்கும் கீழானவர்கள் என்பதனால் கிழக்கேயும் என  தெருக்கள் அமைந்துள்ளன.

இங்கேயும் மேடு-பள்ளம், மேற்கு-கிழக்கு என்கிற யுக்தி கையாளப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றாலும், பிராமண தெருவிற்கு மேற்கே அழகிய மணவாள சுந்தர நாராயண பெருமாள் கோவிலும்,  கிழக்கே கிருஷ்ணன் கோவிலும், உடையார் தெருவிற்கு கீழே பாதாளத்தம்மன் கோவிலும் அமைந்துள்ளது. சேரியில்கூட ஒரு பெருமாள் கோவில் இருக்கிறது. 

பாதாளத்தம்மனைத்தவிர மற்ற மூன்றுமே பெருமாளின் அவதாரங்கள்தானே? இந்துக்கள் அனைவரும் ஒன்று என்றால் ஒரே கோயில் போதாதா? ஏன் மூன்று கோயில்கள்? மேல் சாதிக்காரன வணங்கும் கோவிலுக்குள் கீழ்சாதிக்காரன்
வந்து விடக்கூடாது என்கிற ஏற்பாடுதான் இது. 

வைசிய வர்ணத்தைச் சேர்ந்த ஒருவன் உபநயனம் (பூணூல் கல்யாணம்) செய்து கொண்டால்தான் அவன் இருபிறப்பாளனாக ஆகி வைசியனாகத் தொடர முடியும். உபநயனம் செய்து கொள்ளாத பார்ப்பன, சத்திரிய, வைசிய வர்ணத்தினரை விராத்திய ஜாதி (மனு: 10: 20-24) என்று வகைப்படுத்துகிறான் மனு. இவர்கள் சாதியில் கீழானவர்கள் ஆகிறார்கள். 

உரிய காலத்திற்குள் உபநயனம் செய்து கொள்ளாத வைசிய வர்ணத்தைச் சேர்ந்தவனின் வாரிசுதான் ஆசாரி என்கிறது மனுதர்ம சாஸ்திரம். என்னதான் இன்று ஆசாரிகள் பூணூல் போட்டுக் கொண்டு தங்களை வைசியர்களாகக் காட்டிக்கொள்ள முனைந்தாலும் அவர்கள் மனுதர்ம சாஸ்திரப்படி கீழான சாதி என்பதனால் ஊரில் அவர்களுக்கு இடம் இல்லை என்பதைத்தான் இந்த ஊரில் தனியாக வெளியே உள்ள ஆசாரித் தெரு உணர்த்துகிறது.

மனுதர்ம சாஸ்திரப்படி, இன்று, விந்திய மலைக்குத் தெற்கே, அதாவது தென்னிந்தியாவில், பார்ப்பனர், சூத்திரர் என இரு வர்ணங்கள் மட்டுமே உண்டு என்பது தனி ஒரு செய்தி.

சேரிக்காரன் ஊர் தெரு வழியாகச் சென்றால் தெரு தீட்டாகிவிடும் என்பதாலும், சேரி வழியாகச் ஊர்க்காரன் சென்றால் செல்பவன் தீட்டுப்பட்டு விடுவான் என்பதனாலும் ஊர்காரர்கள் சேரிக்குள் நுழைந்தோ அல்லது சேரிக்காரர்கள் ஊருக்குள் நுழைந்தோ மற்ற ஊர்களுக்குச் செல்லும் வகையில் பொதுச்சாலை இருக்காது. அவ்வாறு நிகழாமல் இருப்பதற்கான பொதுச் சாலைதான் சோளிங்கபுரம்-அரக்கோணம் சாலை. இது ஊருக்கும் சேரிக்குமான (பை பாஸ்) புறவழிச் சாலை. மனுதான் புறவழிச் சாலைகளின் பிதா மகன்.

ஊருக்குள்ளும் இதுதான் நிலை. பிற சாதிக்காரர்கள் பார்ப்பனர்களின் தெருவுக்குள், அதாவது அக்ரகாரத்திற்குள் நுழைந்து செல்லும்படி பாதை அமைத்திருக்க மாட்டார்கள். அங்கேயும் புறவழிச் சாலைகள்தான்‌. இதை பாராஞ்சியிலும் பார்க்க முடியும். 

சாதியப் படிநிலை ஏற்றத்தாழ்வுகளையும் தீண்டாமையையும் கடைபிடிப்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு வகை மாதிரி சனாதன கிராமம்தான் பாராஞ்சி. இந்திய கிராமங்கள் அனைத்தும் இப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஐயம் இருப்பின், நீங்கள் பயணிக்கும் ஒவ்வொரு கிராமத்தின் வடிவமைப்பையும் பரிசீலனை செய்து பாருங்கள். அவை பாராஞ்சியைப் போலத்தான் இருக்கும்.

இத்தகைய கிராமக் கட்டமைப்புகள் தொடரும் வரை, சாதியப் பிணக்குகளும், தீண்டாமையும், மோதல்களும் நடந்து கொண்டுதான் இருக்கும். மாற்று? தற்போதைய கிராமங்கள் தரைமட்டமாக்கப்பட்டு அதற்கு மாற்றாக, நகரிய (town shop), வீட்டு வசதி வாரிய (housing board), சமத்துவபுரம் போன்ற குடியிருப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஊர் சேரி பாகுபாடின்றி அனைவருக்கும் குலுக்கல் முறையில் இங்கே  வீட்டுமனைகளும் / வீடுகளும்
ஒதுக்கப்பட வேண்டும். 

சமூக நீதி ஏணியின் படிக்கட்டுகளில் இதுவும் ஒன்று என்றால் அது மிகையல்ல.

ஊரான்

No comments:

Post a Comment