நண்பகல் 12 மணி. பொன்னை உருக்கும் புரட்டாசி வெயில். வெண்மேகங்கள் கதிரவனின் கதிர்களை ஓரளவுக்குத் தடுத்தாட்கொண்டதால் வெப்பம் அவ்வளவாகத் தெரியவில்லை. ஊருக்குப் புறப்பட ஆயத்தமாகி, ‘பர்சைப்’ பார்த்தேன். இரண்டு இருபது ரூபாய் தாள்கள் மட்டுமே இருந்தன. ‘திருப்பத்தூர் நகரப் பேருந்து நிலையம்தானே செல்கிறோம்; 'ஏடிஎம்' இல் பார்த்துக் கொள்ளலாம்’ என்ற நம்பிக்கையோடு ஒரு இருபது ரூபாய் தாளைக் கொடுத்து 'ஷேர் ஆட்டோவில்' பேருந்து நிலையம் சென்றடைந்தேன்.
ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மாவட்டத் தலைநகரின் பேருந்து நிலையத்தில், 'ஏடிஎம்' இல்லாமலா போகும் என்ற நம்பிக்கையோடு, முதுகில் ஒரு 'ஏர்பேக்' தொங்க, கையில் ஒரு கட்டை பை சுமையுடன் 'ஏடிஎம்'ஐத் தேடினேன்; ஏமாற்றம்தான் மிஞ்சியது. விசாரித்தபோது வெளியில் உள்ளது என்றார்கள்.
கட்டை பையின் சுமை என்னை ஒரு பக்கம் இழுக்க, அதை சமாளித்துக் கொண்டு, இருநூறு மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு 'ஏடிஎம்' இல் உள்ளே நுழைந்த போது, ஒரு சிலர் உள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். வெளியே வந்தவர்கள், 'பணம் இல்லை' எனச் சொல்லியிருந்தால் உள்ளே சென்றிருக்கவே மாட்டேன். இத்தகையப் பண்புதான் இன்று இற்று வருகிறதே!
வேறு 'ஏடிஎம்' ஐ தேடிச் செல்ல வேண்டும் என்றால், எந்தப் பக்கம் சென்றாலும் குறைந்தது அரை கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். கையில் உள்ள சுமையையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியாது என்பதால், பேருந்து நிலையத்திலிருந்து வரும் பேருந்துகள் நிற்கும் இடம், அருகில் இருந்ததால், அங்கே சென்று, 'ஃபோன்பே' மூலம் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கையில். ஓரிரு அரசுப் பேருந்துகளில் ‘'ஃபோன்பே' வசதி உண்டா’ என்று கேட்டேன். ‘நம்பிக்கைதானே சார் வாழ்க்கை!’ என்று பலரும் சொல்வதை நாம் அடிக்கடி கேட்கிறோம்தானே? நான் மட்டும் நம்பிக்கை கொள்ளக்கூடாதா என்ன?
இதற்கிடையில், மற்றொரு வங்கிக் கணக்கிலிருந்து 'ஃபோன்பே' வசதி உள்ள எனது வங்கிக் கணக்கிற்கு பண மாற்றம் செய்து விட்டு, 'ஃபோன்பே' வசதி உள்ள ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். ஆனால், பணம் மட்டும் எனது கணக்கிற்கு இன்னமும் மாறவில்லை. ‘ஒரு ஐந்து நிமிடம்’ என நடத்துநரிடம் சொல்லிவிட்டு, பணம் வந்து விட்டதா எனத் திரும்பத் திரும்ப கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் அனுப்பிய பணம் மாறும் என்று இனியும் காத்திருப்பது உசிதமல்ல என்பதனால், உறவினருக்குத் தெரிவிக்க, அவர் :ஜிபே' மூலம் பணம் அனுப்ப, அதுவும் உடனடியாக மாறவில்லை. நடத்துநர் என்னைப் பார்க்க, பணம் வந்து விட்டதா என நான் கைப்பேசியைப் பார்க்க, அதற்குள் ஜோலார்பேட்டையும் வந்துவிட்டது.
‘வங்கிக்குப் பணம் மாறினால் சமாளித்துக் கொள்ளலாம், இல்லையென்றால் அடுத்த ஊரில் இறங்கிவிடலாம்’ என்ற முடிவோடு நடத்துநர் ஏதும் சொல்வதற்கு முன்பாகவே, நானே முந்திக்கொண்டு, ‘வாணியம்பாடிக்கு எவ்வளவு?’ என்று கேட்டேன். 20 என்றார். கையில் இருந்த 20 ரூபாயைக் கொடுத்து பயணச்சீட்டு பெற்றுக் கொண்டேன்.
'பர்சும்' காலி, 'ஃபோன்பே'வும் காலி என்றால், யாராக இருந்தாலும் படபடப்பு ஏற்படத்தானே செய்யும். நான் இங்கே நம்பிக்கை வைத்தது 'டிஜிட்டல்' பணப் பரிமாற்றத்தின் மீது. அது எனது தரப்பு நம்பிக்கைதானே ஒழிய, அதற்கு, கைப்பேசி 'சிக்னலும்', இரு வங்கிகளின் 'சர்வர்களும்' சரியாக இருக்க வேண்டும் அல்லவா?
கைப்பேசி 'சிக்கனல்' பலவீனமாக இருப்பதை என்னால் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், 'சர்வர்களின்' நிலையை நான் எப்படி அறிந்து கொள்ள முடியும்? இங்கே எனது நம்பிக்கை ஈடேறவேண்டுமானால், எதன் மீது நான் நம்பிக்கை வைக்கிறேனோ, அதைப்பற்றி நான் அறிந்திருக்க வேண்டும். இந்தப் புரிதல் இல்லை என்றால், ‘நம்பிக்கை நாசமாப் போச்சு!’ என விரக்தியில்தான் விழவேண்டிவரும்.
நான் அவசரமாகப் போக வேண்டியத் தேவை எதுவும் இல்லை. ‘பணம் வங்கிக்கு மாறினால் பயணத்தைத் தொடருவோம், இல்லை என்றால் வாணியம்பாடியில் இறங்கி, பணம் மாறும்வரை காத்திருப்போம் அல்லது அங்கே, அருகில் ஏதாவது 'ஏடிஎம்' இருந்தால் பணம் எடுத்துக் கொண்டு பயணிப்போம்’ என்று ஏற்கனவே முடிவெடுத்துவிட்டதால் இதற்காக நான் சோர்ந்து விடவில்லை.
***
தேர்வுகளில் தேர்ச்சி பெற, படித்தபின் விரும்பிய வேலை கிடைக்க, அவசரத் தேவைக்குக் கடன் பெற, நிலம் வீடு என ஆசைப்படும் குறிப்பிட்ட சொத்துக்களை வாங்க, உறவுக்காரப் பெண்ணை மணம் முடிக்க, பருவம் பொய்க்காமல் மழை பொழிய, நல்ல விளைச்சல் கிடைக்க, செய்யும் தொழிலில் இலாபம் ஈட்ட என இவற்றையெல்லாம் பெறுவதற்காக, அடைவதற்காக பிறர் மீதும், பிறவற்றின் மீதும் நம்பிக்கை கொள்ளாத மனிதன் இருக்க முடியாதுதானே?
நமது நம்பிக்கைகள் ஈடேற வேண்டுமானால், நாம் ஒன்றின் மீது நம்பிக்கை வைத்தால் மட்டும் போதாது; மாறாக, நாம் எதை, எவற்றை, யாரை நம்புகிறோமோ, அந்தத் தரப்பின் நிலையையும் புரிந்து கொண்டால், ‘நமது நம்பிக்கைகள் வீண் போய்விட்டன’ என்று துவண்டு விடாமல் அடுத்தடுத்த செயலுக்கு ஆயத்தமாவோம்.
போதிய காரணம் இன்றி, ஒருவர் ஒன்றை நம்புவது என்பது, பொதுவாகவே, அது ‘நம்பிக்கையின் இயல்பாகவே’ உள்ளது. இந்த இயல்பு காரணமாகத்தான், பலரும் கடவுள் உள்ளிட்ட சிலவற்றின் மீது நம்பிக்கை (faith) கொள்கின்றனர். ஆனால், ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு, அதன்மீது வைக்கும் நம்பிக்கை (belief) என்பதே சரியான நம்பிக்கையாக இருக்க முடியும் என நான் கருதுகிறேன். மேலும், ஒன்றைப் பற்றிய விவரங்கள் தெரியத் தெரிய, அதன்கூடவே, அதன் மீதான நம்பிக்கையும் மாறவே செய்யும்.
இருதரப்பு நம்பிக்கைகளும் ஒன்றுபடும்போது வேண்டுமானால் நம்பிக்கைகள் ஈடேறலாம். மற்றொரு தரப்பு என்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே, நான் நம்புவதால் மட்டுமே எனது நம்பிக்கை ஈடேறும் என்று எதிர்பார்ப்பது கானல் நீரே!
நம்பிக்கை குறித்த இத்தகையப் புரிதல் இல்லாததால், ‘ரொம்ப நம்பிருந்தேம்பா, ஏமாத்திட்டாம்பா! துரோகம் பண்ணிட்டாம்பா!’ என்று பேசுவோர் பலரையும் நம்மால் பார்க்க முடிகிறது. இவர்கள், எதை நம்புகிறார்களோ அதைப் பற்றிய அறியாமையே இதற்குக் காரணம். இத்தகையோரை, ‘நம்பிக்கையில் மட்டுமே நம்பிக்கை கொள்பவர்கள்’ எனக் கருதலாம். நடிகர் விஜயின் மீதான நம்பிக்கையும் இத்தகையதே! இத்தகைய நம்பிக்கைகளில் எல்லாம் கடைசியில் ஏமாற்றம் மட்டும்தான் மிஞ்சி நிற்கும்.
***
பெங்களூர் புறவழிச்சாலை மூங்கில் 'சர்க்கிள்' நெருங்கியபோது உறவினர் அனுப்பிய பணம் வந்து விட்டதை உறுதி செய்து கொண்டேன். ஆனால், நான் அனுப்பிய பணம் மட்டும் இன்னும் மாறவில்லை. 'ஃபோன்பே' மூலம் பயணச்சீட்டு பெற்றுக் கொண்டு, அதே பேருந்தில் வேலூருக்குப் பயணமானேன். வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிய உடன், உள்ளேயே இருந்த ஒரு 'ஏடிஎம்’ இல் 'கார்டைச்' சொருகி எனக்குத் தேவையான அளவு 100 ரூபாய் தாள்களுடன் பணத்தைப் எடுத்துக்கொண்டு இல்லம் இருக்கும் வாலாஜா நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தேன்.
ஊரான்
29.09.2025
No comments:
Post a Comment