Saturday, April 9, 2011

ஒரு தரம்... ரெண்டு தரம்...!

ஏலம் விடும் அதிகாரி டாம்பீகத்தோடு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார். அவருக்குப் பின்னால் அவரது பணியாட்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். 

ஏலம் எடுப்பதற்கான போட்டி தொடங்குகிறது. ஏல நிபந்தனைப்படி முன்பணம் (deposit) கட்ட வேண்டும். யார் யார் முன்பணம் கட்டி, ஏல நிபந்தகைளின்படி தகுதி பெற்றிருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும் என ஏல அதிகாரி அறிவிக்கிறார்.

ஏலத்தை வேடிக்கை பார்க்கவும், ஏலத் தொகையை அள்ளிச் செல்லவும் பொது மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஏலம் தொடங்குகிறது. குறைந்தபட்ச ஏலத் தொகை எதுவும் நிர்ணயிக்கப்படாததால் முதன் முறையாக ஏலத்தில் பங்கேற்கும் ஒருவர் எழுந்து... 

"பத்து ரூபாய்" என்கிறார். 

எல்லோரும் கொல்லென சிரிக்கிறார்கள். பாவம் இன்றைய ஏல நிலவரம் இவருக்குத் தெரியாது போல.

ஏலம் தொடர்கிறது.

"நூறு" 

"ஐநூறு"

"ஆயிரம்"

"வேட்டி" 

"சேலை"

"ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி"

"முதியோர்களுக்கு ஆயிரம்" 

"கல்யாணத்திற்கு இருபதாயிரம்"

"கற்பிணிகளுக்கு பத்தாயிரம்"

ஒருதரம்

ரெண்ட தரம்....

கூட்டத்தில் மௌனம்.

"மூக்குத்தி"

"சைக்கிள்"

"கேஸ் ஸ்டவ்"

"கலர் டி.வி"

"ரெண்டு ஏக்கர் நிலம்"

"வீட்டு மனை"

"வீடு"

"பம்பு செட்"

ஒருதரம்...

ரெண்ட தரம்...

இதெல்லாம் பழைய ஏலத்தில் கேட்டதுதானே என கூட்டத்தில் ஒரு வித சலிப்பு.


"முப்பத்தைந்து கிலோ அரிசி"

"மூணு பவுன்"

"மிக்சி"

"கிரைண்டர்"

ஒரு தரம்...

ரெண்டு தரம்...

கூட்டத்தில் ஆரவாரம் ஏதும் இல்லை. இன்னும் பெரிதாக எதிர்பார்க்கிறார்கள் போல.

"ஆட்டுக் குட்டி"

"கன்னுக் குட்டி"

"பன்னிக் குட்டி"

ஒரு தரம்...

ரெண்டு தரம்...

விவசாயிகள் நெளிகிறார்கள். சற்றே சலசலப்பு. 

"செல்போன்"

"லேப்டாப்"

கூட்டத்தில் உற்சாகம் ஏறுகிறது

"மோட்டார் பைக்"

"ஹீண்டாய் கார்"

ஒரு தரம்...

ரெண்டு தரம்...

ஏலம் சூடுபிடிக்கிறது. இன்னும் முடியவில்லை.

ஏலத் தொகை ஏற ஏற மக்கள் எகிறிக் குதிக்கிறார்கள். எல்லாம் இவர்களுக்குத்தானே. ஏல நிபந்தனையே அதுதானே!

ஏலம் விடுவது ஏப்ரல் 13 ந் தேதி வரை நீடிக்கும். இது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தில் தண்டல் வசூல் மற்றும் தோப்பு மகசூலை எடுத்துக் கொள்வதற்கான ஏலம். அதற்காக தமிழகத்தை 234 கூப்புகளாகப் பிரித்து ஏலம் விடுகிறார்கள். ஏலம் எடுப்பதில் கடுமையான போட்டி நிலவுகிறது.

சாதாரண ஏலத்தில் இரகசிய கூட்டணி அமைத்துதான் எதிரிகளை ஓரங்கட்டிவிட்டு ஏலம் எடுப்பார்கள். ஆனால் எப்படியாவது ஏலத்தை எடுத்தாக வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தல் ஏலத்தில் பகிரங்கமாகவே கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.  கூட்டணிக்குள் நுழைய முடியாதவர்கள் 'சீச்..சீ இந்தப் பழம் புளிக்கும்' என்ற கதையாக பாவம் ஏலத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். 

புளியந்தோப்பு, மாந்தோட்டம், தென்னந்தோப்பு, நாள் சந்தை, வாரச்சந்தை, வண்டி நிறுத்தம் (வண்டி ஸ்டாண்டு), பேருந்து நிலைய, இரயில் நிலைய கழிவறைகள் என ஏலத்தில் பல வகைகள் உண்டு. ஏலத் தொழில் என்பது 'லாரி புக்கிங் ஆபிஸ்' போல; ஒரு நாற்காலியும், ஒரு மேசையும் இருந்தால் போதுமானது. உட்கார்ந்த இடத்திலேயே காசு பார்க்கலாம். எனவே கடுமையானப் போட்டி இருக்கும் இத்தொழிலில் வெட்டு, குத்து, கொலைகள் எல்லாம் சர்வ சாதாரணம்.

உள்ளுர் அளவில் இந்தத் தொழிலில் கொட்டை போட்டவர்கள் படிப்படியாக முன்னேறி, மாநில அளவில் நடக்கும் ஏலத்தொழிலில் நுழைந்து, பிறகு அனைத்து இந்திய அளவில் ஏலம் எடுக்கும் அளவுக்கு உயருகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஏலம் என்பதால் சற்று நிதானத்துடன்தான் ஏலத்தில் பங்கு கொள்ள வேண்டும். ஏலம் தொடங்கிய பிறகு இத்தொழில் அணல் பறக்கும் போட்டியாக மாறிவிடும்.

ஏலம் எடுப்பவனுக்கு ஏலத் தொகையை சொல்லிச் சொல்லியே தொண்டை கம்மிப் போவதால் ஏலத் தொகையை பிரபலப் படுத்த இந்த முறை ஏராளமான அல்லக்கைகளை இறக்கியிருக்கிறார்கள். அவர்களுக்குக்கூட இப்பொழுதே தொண்டை கம்மி விட்டது. இருந்தாலும் இதில் வடிவேலு எல்லோரையும் முந்திக் கொண்டு சக்கை போடு போடுகிறாராம்.

உள்ளுர் அளவில் ஏலம் எடுப்பவனுக்கு ரூபாய் நோட்டுகளை எண்ணத் தெரிந்திருந்தால் போதும். அதற்கும் மேலே ஒரு 'பாக்கெட் நோட்டில்' அதைக் குறித்துக் கொள்ளுகின்ற அளவுக்கு 1, 2, 3 ..... என எழுதத் தெரிந்திருந்தால் போதும். இது இந்தத் தொழிலுக்குப் போதுமான தகுதிகள். இந்தத் தகுதிகளை வைத்துக் கோண்டே சில இலட்சங்களை ஏன் கோடிகளைக்கூட எடுத்து விடலாம். எப்படி என்றெல்லாம் கேட்கக் கூடாது. அது தொழில் இரகசியம். 

இலட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சிலர் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்குச் சென்று எம்.பி.எ (MBA) படிக்கிறார்கள். ஐ.ஐ.டி (IIT) போன்ற தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் படித்து மிக உயர்ந்த பட்டங்களைப் பெறுகிறார்கள்.  வேண்டுமானால் இவர்களால் சில இலட்சங்களை சம்பளமாகப் பெறமுடியும். ஆனால் அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். சுறுக்கமாகச் சொன்னால் இந்த சில இலட்சங்களுக்காக இவர்களை 'பெண்டு' எடுத்தவிடுகிறார்கள் முதலாளிகள்.

ஆனால், தேர்தல் ஏலத்தில் பத்தாம் வகுப்பு தேறினாலும், தேறாவிட்டாலும் பரவாயில்லை. உங்களால் கோடிகளை சுலபமாக ஈட்டமுடியும். ஐ.ஐ.டி படித்து இலட்சங்களில் சம்பாதிப்பவனைத் தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும். ஆனால் தேர்தல் ஏலத்தில் கோடிகளைக் கண்டவனை ஊர் ஊருக்குக் காண முடியும். நம்ப முடியவில்லை என்றால் இதோ சில 'சாம்பில்கள்'.

சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.வளர்மதி பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். அவர் தேர்தல் ஆணையத்திடம் காண்பித்துள்ள சொத்து மதிப்பு 3.35 கோடி ரூபாய். கணக்கில் காட்டாதது தனி. இவரது தொழில் சமூக சேவை.

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.தனசேகரன் பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். அவர் தேர்தல் ஆணையத்திடம் காண்பித்துள்ள சொத்து மதிப்பு 7.39 கோடி ரூபாய். கணக்கில் காட்டாதது தனி. இவரது தொழில் அரசியல் மற்றும் சமூக சேவை.

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். அவர் தேர்தல் ஆணையத்திடம் காண்பித்துள்ள சொத்து மதிப்பு 64.45 கோடி ரூபாய். கணக்கில் காட்டாதது தனி. இவரது தொழில் 'ரியல் எஸ்டேட்' மற்றும் விவசாயம்.

சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதி பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். அவர் தேர்தல் ஆணையத்திடம் காண்பித்துள்ள சொத்து மதிப்பு 5.77 கோடி ரூபாய். கணக்கில் காட்டாதது தனி. இவரது தொழில் அரசியல் மற்றும் சமூக சேவை.

ஏலச் சந்தையில் ஏலம் எடுக்கப் போட்டியிடும் பெரும்பாலானோர் கிட்டத்தட்ட இந்த வகையைச் சார்ந்தவர்களே.

படித்தவர்கள், விவரமானவர்கள், முன்அனுபவம் உள்ளவர்கள் இந்தத் தேர்தல் ஏலத்தில் கில்லாடிகளாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் படிக்காமலேயே கோடிகளைச் சம்மாதிக்கும் திறமை ஒரு 'பெஞ்ச் மார்க்கிங்தானே!'

இது நவீன கால ஏலம். ஏலத் தொகையை உயர்த்தினால் மட்டும் போதாது. ஏலத் தொகையில் திருப்தியடைந்து,யாருடைய ஏலத்தொகையை அதிகமானோர் விரும்பிப் பெறுகிறார்களோ அவரே ஏலத்தை எடுத்தவர் என அறிவிக்கப்படுவார்.

ஏலச்சீட்டில் நம்பி பணம் கட்டிவிட்டு ஏமாற்றிவிட்டான் என்று "குய்யோ முறையோ" எனக் கூச்சலிடுவதைப் போல இங்கே கூச்சலிட முடியாது. ஏலம் எடுத்தவன் நிபந்தனைப்படி ஏலத் தொகையை ஏமாற்றாமல் உங்களுக்குக் கொடுத்துவிடுகிறானே.

ஏலம் எடுத்தவன் கோடிகளில் புரள்கிறானே என பிறகு ஒப்பாரி வைக்கக் முடியாது. ஏலத்தில் ஏய்ப்பவன் மற்றும் ஏமாறுபவன்,  இருவரின் நோக்கமும் ஒன்றுதான்.அவனுக்கு அதிகம் என்பதைத் தவிர ஆதாயம் இருவருக்கும்தானே. பிறகு ஏன் ஆதங்கம்?

நீங்கள் தோட்டத்துக்குச் சொந்தக்காரனாக இருக்கலாம்.மண்ணின் மைந்தனாகக்கூட இருக்கலாம். அதெல்லாம் ஏலம் முடியும் வரைதான். ஏலம் முடிந்து ஏலத் தொகையையும் நீங்கள் பெற்றுவிட்டால் அதன் பிறகு உங்கள் தோட்டத்தில் நுழைய உங்களுக்கே அனுமதி கிடையாது. ஏலம் எடுத்தவனிடம் மண்டியிட்டால்தான் வீணாய்ப் போகும் முருங்கைக் கீரையைக்கூட கொஞ்சம் கிள்ளி வரமுடியும். அதுவும் சும்மா கிடைக்காது. ஐந்தோ பத்தோ வெட்ட வேண்டும்.

சொந்தத் தோட்டத்தை ஏலத்தில் பறிகொடுத்துவிட்டு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு ஏலம் எடுத்தவனிடம் இப்படி கை ஏந்தப் போகிறார்களோ நம் மண்ணின் மைந்தர்கள்?

-------------------------------------------------------------------------------------------------------------தொடர்புடைய பதிவு:

ஏலச் சீட்டு மோசடி! ஏய்ப்பவர்கள் யார்?

http://hooraan.blogspot.com/2011/01/blog-post_19.html

மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!


http://hooraan.blogspot.com/2011/03/blog-post_19.html

கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா? தெக்கத்தியானா?


http://hooraan.blogspot.com/2011/03/blog-post_29.html

எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!


http://hooraan.blogspot.com/2011/03/blog-post_26.html

கேப்டன் கேடட் ஆன கதை!


http://hooraan.blogspot.com/2011/03/blog-post_06.html

யாருக்கும் வெட்கமில்லை!


http://hooraan.blogspot.com/2011/03/blog-post_24.html14 comments:

 1. நல்ல பதிவு.
  நன்கு ஏலம் போகிறது.

  ReplyDelete
 2. //சொந்தத் தோட்டத்தை ஏலத்தில் பறிகொடுத்துவிட்டு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு ஏலம் எடுத்தவனிடம் இப்படி கை ஏந்தப் போகிறார்களோ நம் மண்ணின் மைந்தர்கள்?//

  கக்கன், ஜீவா, காமராஜ் போன்ற சுயநலமற்ற தலைவன் வரும்வரை. குடிபோதையில் தன்னிலை மறந்து திரியும் தமிழனுக்கு சொரணை வரும் வரை.

  ReplyDelete
 3. ஓகே,ஓகே.ஒரு டீ சாப்பிடுங்க -ஏலம் போட்டதுதான்.

  ReplyDelete
 4. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட Rathnavel,
  !சிவகுமார்!, B.MURUGAN,மற்றும் விடுதலை ஆகியோருக்கு நன்றி!

  "உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம்"

  இச் செய்தி எனக்கு விடுதலை (http://rootsredindia.blogspot.com/2011/04/blog-post_10.html) வலைப்பூவின் மூலம் தெரிய வந்தது.

  "ஆட்டுக் குட்டி"

  "கன்னுக் குட்டி"

  "பன்னிக் குட்டி"

  ”பிள்ளைக்குட்டி” என மேற்கண்ட இடுகையில் அரசியல்வாதிகள் இவ்வாறு வாக்குறுதி கொடுப்பதாக எழுதி அது பெண்களைக் கேவலப்புடுத்துவதாக இருக்கும் என்பதால் நீக்கி விட்டேன்.

  இலவசங்களை நோக்கி மக்கள் ஓடும் போது அது அங்கேதான் போய் நிற்கும் என நான் நினைத்தது உண்மையாகிவிட்டது.

  விடுதலைக்கு மீண்டும் ஒரு நன்றி!

  ReplyDelete
 5. நீங்கள் நகைச்சுவையாக எழுதியிருந்தாலும் இப்படியே தொடர்ந்தால் நாளை இதுதான் நடக்கும்..


  இந்த தேர்தலில் மக்கள் எழுதும் தீர்ப்பில் இருக்கிறது. இனி இந்தியாவின் எதிர்காலம்...

  ReplyDelete
 6. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தீர்ப்பை மாற்றித்தான் எழுதுகிறார்கள். ஆட்கள் மாறுகிறார்களேயொழிய அடிப்படை மாறுவதில்லையே!

  கே.ஆர்.பி.செந்தில் அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 7. //ஏலம் விடுவது ஏப்ரல் 13 ந் தேதி வரை நீடிக்கும். இது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தில் தண்டல் வசூல் மற்றும் தோப்பு மகசூலை எடுத்துக் கொள்வதற்கான ஏலம். அதற்காக தமிழகத்தை 234 கூப்புகளாகப் பிரித்து ஏலம் ///

  மிக அருமையாக இப்போதைய நிலையை உருவகித்து இருக்கிறீர்கள்..

  ReplyDelete
 8. மிக அருமையான எழுத்து திறமை உங்களுடையது... நையாண்டியுடன் யதார்த்ததை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்

  ReplyDelete
 9. ஏலத்தை நடத்துகிறவன் விட்ட “டமால் டுமீலில் டென்சனாயிருந்த எனக்கு உங்கள் பதிவு டென்சனை குறைத்தது நன்றி

  ReplyDelete
 10. உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட பாரத்... பாரதி...மற்றும் வலிபோக்கன் இருவருக்கும் நன்றி!.

  ReplyDelete
 11. சமூக சேவைக்கான சம்பளம் தாங்க இத்தனை கோடி. உங்களுக்கு இலவசமா லேப்டாப்பு கொடுக்கக் கூடாது போலிருக்கே .

  ReplyDelete
 12. ரைட்டு...
  இனி தொடர்ந்து வருகிரேன்..

  ReplyDelete
 13. மிகவும் இலாபகரமான ஒரு தொழிலாக சமூக சேவையை மாற்றியமைத்துவிட்டார்கள். உண்மையிலேயே யாராவது சமூக சேவை எனப்புறப்பட்டால "ஆதாயம் இல்லாமலா?" என்றுதான் பேசுவார்கள். வெட்கக் கேடு!

  கருத்துப் பகிர்வுக்கு நன்றி சிவகுமாரன் அவர்களே!

  வருகைக்கும் பின் தொடர்வதற்கும் நன்றி !* வேடந்தாங்கல் - கருன் *! அவர்களே!

  ReplyDelete