Wednesday, January 19, 2011

ஏலச் சீட்டு மோசடி! ஏய்ப்பவர்கள் யார்?

"தீபாவளிக்கு ஸ்வீட் தருவதாக சீட்டு மோசடி எஸ்.பி., ஆஃபீஸில் குவிந்த பொதுமக்கள்!


ஈரோடு: தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் மோசடி புகாரின் முன்னோடியாக  மூன்று ரூபாய் கட்டினால் பாத்திரம் தருவதாக கூறி ஆயிரக்கணக்கான மக்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்தவர் மீது எஸ்.பி., அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மனு கொடுத்தனர்.

தீபாவளி பண்டிகையை மையமாக வைத்து, வாரந்தோறும் 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சீட்டு கட்டுவது, இனிப்பு மற்றும் கார வகை சீட்டு, தங்கக்காசு சீட்டு, வீட்டு உபயோகப் பொருட்கள் சீட்டு என பல்வேறு வகையான சீட்டுகள் சேர்க்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் பணம் கட்டும் மக்கள், சரியாக தீபவாளி சமயத்தில் பணமோ, பொருளோ கிடைக்காமல் மோசம் போகின்றனர்.ஈரோடு நகரில் நூதன முறையில் சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த சம்பவம் நடந்தது.முதல் நாள் மூன்று ரூபாய் கட்ட வேண்டும். மறுநாள் 3.50 ரூபாய், மூன்றாவது நாள் நான்கு ரூபாய் என ஒவ்வொரு நாளும் 50 பைசா வீதம் உயர்த்தி சீட்டு கட்ட வேண்டும். தினமும் குலுக்கல் மூலம் ஒருவருக்கு பொருட்கள் பரிசு வழங்கப்படும்.

ஈரோடு நகரில் புதுமை காலனி, வி.வி.சி.ஆர்., நகர், வளையக்கார வீதி, சூளை, சூரம்பட்டி, எம்.ஜி.ஆர்., காலனி, அய்யனாரப்பன்கோவில் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களிடம் இவ்வாறு சீட்டுப்பணம் வசூலித்து, லட்சக்கணக்கான ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று எஸ்.பி., ஜெயசந்திரனிடம் புகார் மனு கொடுத்தனர்.

பொதுமக்கள் கூறியதாவது:வி.வி.ஆர்.சி., நகரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் சீட்டு வசூலித்தார். 110 ரூபாய், 540 ரூபாய் என இரு வகையான சீட்டு நடத்தினார்.அவருக்கு 50 வயது இருக்கும். அவருடன் 40 வயது மதிக்கத்தக்கவரும் பணம் வசூலிக்க வருவார். மூன்று ரூபாய் என்பதால் ஒருவரே நான்கு, ஐந்து சீட்டுகள் கட்டினர்.தினமும் ஒருவருக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும். குலுக்கலில் விழாதவர்கள், அடுத்த நாள் 3.50 ரூபாய், அதற்கு அடுத்த நாள் நான்கு ரூபாய் என படிப்படியாக உயர்த்தி கட்ட வேண்டும். இதுவரை 31 நாட்கள் 430 ரூபாய் வரை கட்டி விட்டோம். ஆயிரக்கணக்கான மக்கள் லட்சக்கணக்கில் பணத்தை கட்டியுள்ளனர். சீட்டு நடத்தியவர் திடீரென மாயமாகி விட்டார். வீட்டையும் காலி செய்து விட்டார். பொருட்கள் தருவதாக கூறி ஏமாற்றியவரை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்"  தினமலர், 18.01.2010

இது ஒரு வகை மாதிரிதான். இது போன்ற மோசடிகள் பலப் பல...

"தீபாவளி சீட்டு மோசடி: போலீசில் புகார். அதிகம் ....

"சீட்டு மோசடி: தம்பதி கைது.... 

"கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே தீபாவளி பரிசு சீட்டு நடத்தி ரூபாய் 50 லட்சம் மோசடி செய்து விட்டு தலைமறைவான கணவன்,...

"சீட்டு மோசடி, போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு, ... புகார் மனுவை கொடுத்துவிட்டு திரும்பினார்கள் இந்த மோசடி குறித்து ...

"தீபாவளி சீட்டு மோசடி: கணவன் மனைவி கைது.....

"அரக்கோணத்தில் சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி செய்த நபரை, பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ...

"தொடர்கிறது சீட்டு மோசடி; பறிகொடுத்தவர்கள் புகார் ... திருப்பூர் : சீட்டு என்ற பெயரில் மோசடி செய்பவர்களிடம் ஏமாறும் ...

"தேவகி கூறும்போது, ரோஜாபாய் தீபாவளி- பொங்கல் சீட்டுநடத்துவதில் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார். ..

"வியாசர்பாடியில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி; முன்னாள் பெண் அதிகாரி கைது.

"நாகர்கோவில்: ஏலச்சீட்டு நடத்தி 10 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, ஏலச்சீட்டு ... 

"சென்னையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி அளவுக்கு மோசடிசெய்த பலசரக்குக் கடை வியாபாரிகள் திடீர்மாயமாகி விட்டனர். ...

"சென்னை : சீட்டு, பண்டு மற்றும் பண இரட்டிப்பு திட்டங்கள் மூலம் பொதுமக்கள் பணம் பல கோடி ரூபாயை ஏமாற்றிய மூவர் மீது ...

"ஊரப்பாக்கத்தில் சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி....

"விழுப்புரத்தில் சீட்டு கம்பெனி நடத்தி ரூ.9 லட்சம் மோசடி: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் கைது.....

சீட்டு மோசடிகளை பட்டியலிட்டால் இணையத்தின் பக்கங்கள் போதாது!

இப்படி தமிழகமெங்கும் ஆண்டு முழுக்க நடைபெறும் ஒரு மோசடித் தொழில்தான் இந்த சீட்டு நடத்தும் தொழில். இச்செய்திகள் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் வராத நாளே கிடையாது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்த மோசடித் தொழில் நடந்துகொண்டுதான் வருகிறது. முன்பெல்லாம் ஆயிரக்கணக்கில் இருந்த மோசடி இப்பொழுதெல்லாம் பல லட்சங்களிலிருந்து கோடிகளை எட்டி உள்ளது. காமன்வெல்த்,  ஸ்பெக்ட்ரம் ஊழல்களெல்லாம் ஆயிரக்கணக்கான கோடி முதல் இலட்சக்கணக்கான கோடிகளை எட்டும் போது ஏலச்சீட்டு மோசடி மட்டும் ஆயிரங்களில் இருந்தால் நியாயமா? அதனால்தான் இவர்களும் இலட்சங்களையும் கோடிகளையும் தொடுகிறார்கள்.

இத்தனை மோசடிகள் நடந்த பிறகும் நம் மக்கள், சாதாரண ஏழைகளிலிருந்து நடுத்தர மற்றும் மேட்டுக் குடி வரைக்கும் திரும்பத் திரும்ப ஏன் ஏலச்சீட்டில் சேருகிறார்கள்? ஏமாற்றப்படுவோம் என்று தெரிந்தே இத்தகைய திட்டங்களில் சேருவதன் சூட்சமம் என்ன?

இத்தகைய ஏலச்சீட்டுகள் நடத்தப்படாத இடங்களே கிடையாது. குக்கிராமம் தொடங்கி சிறு நகரங்கள், பெரு நகரங்கள், அலுவலகங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என எங்கும் நீக்கமற வியாபித்திருக்கும் ஒரு தொழில்தான் இந்த சீட்டுத் தொழில்.

பட்டாசு பண்டு, ஸ்வீட் பண்டு, சபரி மலைச் சீட்டு, அண்டா-குண்டா-பாத்திரம் என சிறு தேவைகளுக்காக நடத்தப்படும் சாதாரண சீட்டுகளிலிருந்து பிள்ளைகளின் உயர் கல்வி, சொந்த பிளாட் - வீடு, மகளின் திருமணம் என மிக முக்கிய தேவைகளுக்காக நடத்தப்படும் ஏலச்சீட்டுகள் என பல வகையான சீட்டுகளில் மக்கள் சேருகிறார்கள்.

சீட்டில் சேர்ந்துள்ள ஒருவருக்கு முதல் மாதத்திலேயே திடீர் பணத் தேவை ஏற்பட்டுவிடும். அதனால் என்ன செய்கிறார்? முதல் சீட்டை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார். இதைத் தெரிந்து கொள்ளும் பிறர் வேண்டும் என்றே தள்ளுத்தொகையை அதிகமாக்கி ஒரு இலட்ச ரூபாய் சீட்டை, ரூ.60 000 தள்ளுத் தொகை போக மீதி ரூ 40000 த்துக்கு சீட்டை எடுக்க வைக்கிறார்கள். அடுத்த மாதம் இன்னொருவருக்கு நெருக்கடி வரும். அந்த சீட்டையும் அதே போல ஏற்றிவிடுவார்கள். இது ஒவ்வொரு மாதமும் நடக்கும் கூத்து. கடைசி ஒன்றிரண்டு சீட்டுக்காரர்கள் அதிக ஆதாயம் அடைவார்கள். ஒரே ஆண்டில் போட்ட பணம் இரட்டிப்பாகும். 

அடுத்தவனின் துன்பத்தையும்,துயரத்தையும் காசாக்கும் கயமைத்தனத்தைவிட இதில் வேறென்ன பார்க்க முடிகிறது? 

பொருளுக்காக நடத்தப்படும் சீட்டுகளிலும் இதே கதைதான். வெளி மார்க்கெட்டில் ரூ1000 த்துக்குக் கிடைக்கும் ஒரு பொருள் இத்தகைய சீட்டுகளில் சேர்ந்தால் ரூ 100 க்கு கிடைகிறதே! அவனால் எப்படி இந்த விலைக்குத் தரமுடிகிறது என்று யோசிக்கிறார்களா? அப்படியே யோசித்து தெரிந்து கொண்டாலும் எங்கே யாரை ஏமாற்றினால் நமக்கென்ன? நமக்கு 100 ரூபாய்க்கு கிடைத்தால் சரி என்ற மன நிலைதான் மேலோங்கி இருக்கிறது. 

இப்பொழுது சொல்லுங்கள். சீட்டு நடத்துபவன் மட்டுமா மோசடிக்காரன்? 

பணம் சேமிக்க அஞ்சலகங்களிலும் அரசு வங்கிகளிலும் எத்தனையோ திட்டங்கள் இருக்கும் போது ஏலச்சீட்டுக்காரர்களை நோக்கிச் செல்வதே அங்கே ஆதாயம் அதிகம் என்பதால்தான். அஞ்சலகங்களிலும் மோசடி நடக்கத்தான் செய்கிறது. இங்கே முதல் போட்டவன் கண்டிப்பாக பணத்தைத் திரும்பப் பெற வழிகள் உண்டு. ஆனால் தனியார் சீட்டுகளில் மோசடி நடந்தால் பட்டை நாமம்தான்.

இது ஒரு ஊழல் மனப் பாங்கு.  a corrupted mind.  அதனால் சீட்டு மோசடியில் ஏமாந்தவர்கள் பேட்டி கொடுக்கும் போது இவர்கள் மீது எனக்கு பரிவு ஏற்படுவதில்லை. அதற்காக ஏமாற்றியவன் மீது கோபம் ஏற்படாமல் இல்லை. சீட்டு நடத்துபவன் தெரிந்தே போசடி செய்கிறான். ஆனால் ஏமாறுகிறவர்களோ தாம் ஒரு வகையில் பிறரை ஏய்க்கிறோம் என்று தெரியாமலேயே மோசடி செய்கிறார்கள்.

சீட்டு நடத்துவதை ஒழிக்காமல் இத்தகைய மோசடிகளை ஒருக்காலும் ஒழிக்க முடியாது. சட்டங்களாலும் காவல்துறையின் கெடுபிடிகளாலும் சீட்டு நடத்துவதையும், சீட்டு மோசடிகளையும் ஒழித்துவிட முடியாது. பொது மக்களின் முயற்ச்சியே இத்தகைய தொழிலையும் மோசடிகளையும் ஒழித்துக் கட்டும். 

2 comments:

  1. காலம் காலமாக மடையன்கள் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி இப்படி பணத்தைக் கோட்டை விடுகிறார்கள். என்ன செய்ய? இதை தடுக்க பதிவுலகம் ஒரு ஒருங்கிணைந்த பிரசாரம் ஆரம்பிக்கலாம்.

    ReplyDelete
  2. நன்றி! சிறந்த ஆலோசனை. முயற்சிப்போம்.

    ReplyDelete