முன்பெல்லாம்
ஏப்ரல் மாதத்திலேயே கோடை மழை பெய்யும். இப்பொழுதெல்லாம் வெப்பச் சலனத்தையும் காணோம்;
மேலடுக்குச் சுழற்சியையும் காணோம். கோடையில் வெப்பம் ஏன் சலனப்படுவதில்லை என்பதற்கான
காரணத்தைச் சொல்லாமலேயே பணி ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டார் இரமணன். தனக்குச் சலனம்1
என்றாலும் பிறர்க்குதவும் பண்பால்தான் கதிரவன் போற்றப்படுகிறானோ!
முன்பெல்லாம் சித்திரை
முதல் தேதியில் மானாவாரி நிலத்தில் பொன் ஏர் கட்டுவார்கள். தேங்காய் உடைத்துக் கற்பூரம்
கொளுத்தி எளிமையான வழிபாட்டுக்குப் பிறகு பச்சரிசியில் வெல்லம் கலந்து தேங்காய்ச் சில்லுடன்
கொடுக்கும் அந்தத் தின்பண்டத்தை நினைத்தாலே இன்றும் நாவில் எச்சில் ஊறும்.
அதைப்
பண்டம்2
என்று சொல்வதைவிட தீனி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இங்கே தயாரிக்கப்படும்
வெல்லம் கலந்த பச்சரிசி பரிமாற்றத்திற்கு உரியதல்லவே!
சித்திரையில்
உழுத நிலம் அவ்வப்பொழுது மறு உழவால் புரட்டப்பட்டு வேர்க்கடலை, கம்பு, சோளம், துவரை,
மொச்சை என மண்ணுக்கு ஏற்ப ஆனியிலே விதைப்பும் முடிந்து விடும். முளைவிட்டு விரிந்த
பயிர் பசுமையுடன் துளிர்க்கையிலே நம் நெஞ்சமெலாம் நனைந்துவிடும்.
மொச்சைக்கும்
துவரைக்கும் நடுவிலே கொஞ்சம் ‘பிச்சை’3யையும் போட்டு வைப்பார்கள் பின்னாளிலே ருசி பார்க்க.
இதோ
சித்திரை போய் வைகாசி – ஆனி கடந்து ஆடியும் வந்தாச்சு. இது தென்மேற்குப் பருவ மழைக்காலம்.
வேர்க்கடலைச் செடிகள் பூவிரித்து மண்நோக்கி பிஞ்சிறக்க காத்திருக்கும் காலமிது.
கேரளச்
சீமையிலே கொட்டித் தீர்த்த மழை மிச்சம் மீதி ஏதும் இருப்பின் அதுவே மேலெழுந்து மலைதாண்டி
மேலடுக்குச் சுழற்சியாய் இங்கொன்றும் அங்கொன்றுமாய் விசிறிவிட்டு காற்றாய் கலைந்து
போகும். மண் நனைந்து ஈரம் பூக்கும். கடலைச் செடியின் பிஞ்சுக் காம்புகள் மண்ணுக்குள்ளே
காயாய் முதிரும். மழை ஏதும் இல்லை என்றால் கடலைச் செடியின் பிஞ்சுக் காம்புகள் மண்ணைத்
தொடாமலேயே மலடாகிப் போகும்.
பொன் ஏரும் பச்சரிசி வெல்லமும் வெறும் கனவாய்
நினைவில் ஓட ஆடி முதல் நாளில் சென்னைக்குப் பயணமானேன் ஜெ.பி-யிலே.
வாலாசா
ரோடு இரயில் நிலையத்தில் காலையிலேயே பெருங்கூட்டம். சென்னைக் கடற்கரைவரை செல்லும் உள்ளூர்
மின்தொடர் வண்டிக்காகவும் அதைத்தொடர்ந்து சென்னை சென்ட்ரல்வரை செல்லும் சோலையார்ப்பேட்டை
விரைவு வண்டிக்காகவும்4 காத்திருக்கும் கூட்டம் அது.
சென்ட்ரலோடு
எம்.ஜி.ஆரையும் சேர்த்து சுமக்கும் பயணச் சீட்டை பாக்கெட்டில் சொறுகிய போது ஏதோ வேண்டாத
சுமையை சுமப்பதாக உணர்ந்தேன்.
மடிப்புச்
சட்டைகளையும் மடிசார்களையும் மட்டுமே சுமந்து சென்ற இரயில்கள் இப்பொழுதெல்லாம் ஆயிரம்
மடிப்புகளைக் கொண்ட அழுக்குச் சட்டைகளையே அதிகம் சுமக்கின்றன. உண்டி சிறுத்த அழகியப்
பெண்டிரும், மடித்துக் கட்டிய லுங்கியரும் சென்னை நோக்கி பயணிப்பது இப்பொழுதெல்லாம்
வழமையாகிவிட்டது. லுங்கி கட்டினால் ஏளனப் பார்வைக்கு ஆளாக நேரிடும் என்பதனாலேயே இளவட்டமெல்லாம் பேண்டுக்குத் தாவுகிறார்கள்.
வேளாண்மை பொய்த்து கிராமங்கள் வாழ வழி அற்றுப் போனதால் நேற்று வரை
நிலக்கிழாராய் நிலைத்திருந்தவன் இன்று பிழைப்பு தேடி கூலியாய் ஓடுகிறான் நகரை நோக்கி.
“முதலாளியம்,
நகரங்களின் ஆளுகைக்குள் நாட்டுப்புறத்தைக் கொண்டு வந்துவிட்டது. அது விரிந்து பரந்த
பெரு நகரங்களை உருவாக்கியுள்ளது. அது, நகரங்களைச் சார்ந்து நாட்டுப்புறம் இருக்க வேண்டிய
நிலையை ஏற்படுத்தியுள்ளது” என இன்றைய நடப்பைத்தான் மார்க்சும் ஏங்கெல்சும் 170 ஆண்டுகளுக்கு
முன்பே முன்னறிந்து கம்யூனிஸ்ட் அறிக்கையில் உரைத்தனரோ!
உற்பத்திக்
கருவிகள் வளர்ச்சி காணும் போது உழவு மாடும் ஏர் கலப்பையும் அற்றுப் போய், அவ்விடத்தில்
டிராக்டர்கள் நுழைவதை யாரால் தடுக்க முடியும்? உழவு மாடும் ஏர் கலப்பையும் இருந்த இடத்தை
இன்று டிராக்டர்கள் பிடித்துக் கொண்டாலும் உற்பத்தி என்னவோ சிறுவீத அளவிலேதான் தொடர்கிறது.
வேளாண்மை ஒரு தொழிலாய் உருவெடுத்து பெருவீத உற்பத்திக்கு மாறாதவரை நகரை நோக்கி ஓடுவதும்
குறையப் போவதில்லை.
வாலாசா
ரோடு, சோளிங்கர், சித்தேரி, அன்வர்திகான்பேட்டைகளில் நின்ற கூட்டத்தை வாரிச் சுருட்டி விரைந்தது ஜெ.பி. சூப்பர்
பாஸ்ட் இல்லை என்றாலும் தான் சுமக்கும் மக்களை காலதாமதத்திற்கான ஏளனத்திலிருந்து காக்கலாமே
என அரக்கோணத்தைத் தாண்டியவுடனே சூப்பர் பாஸ்ட்டாய் வேகமெடுத்தது ஜெ.பி.
காலை
ஜெ.பியும் மாலை ஜே.பியும் இல்லை என்றால் நிலக்கிழார்கள் எல்லாம் ‘நினைவில் வாழும்’
விதர்பாக்களாகி இருப்பார்கள். சினிமாவிலே சிக்குபுக்கு ரெயிலைப் பார்த்தவர்களுக்கு
இன்று ரெயிலே வாழ்க்கையாகிப் போனது.
தொடரும்
குறிப்பு
1.சலனம்
- கலக்கம், தும்பம்
2.பரிமாற்றத்திற்காக
உருவாக்கப்படும் எதுவுமே பண்டம்தான். பண்டம் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கப்படுவதில்லை.
பரிமாற்றத்திற்காகவும் உருவாக்கப்படுகிறது. பண்டம் என்பது வெறும் பொருள் மட்டுமே அல்ல,
அதற்கான விலையுடன் கூடியபொருளாக இருக்கிறது. இங்கே பச்சரியும் வெல்லமும் பயன்பாட்டுகுரிய
ஒன்றுதான் என்றாலும் அது பரிமாற்றத்திற்காக, விற்பனைக்காக உருவாக்கப்படவல்லை என்பதால்
அது பண்டமாகாது.
3.பிச்சை
– தர்ப்பூசணியை ‘பிச்சைக்காய்’ என்பார்கள் திருவண்ணாமலை மாவட்ட வேளாண் மக்கள்
4.சோலையார்ப்பேட்டையிலிருந்து
(Jolarpet) சென்னை வரை செல்லும் விரைவு வண்டியைத்தான் ஜெ.பி (JP) என்பார்கள்.
தொடர்புடைய
பதிவுகள்
No comments:
Post a Comment