Saturday, March 26, 2016

“பாரத் மாதா கீ ஜே!” சொல்லலாமா? கூடாதா?

மகாராஷ்டிர சட்டமன்றத்தில் ‘பாரத் மாதா கீ ஜே!’ எனச் சொல்ல மறுத்ததற்காக ஆல் இண்டியா மஜ்லிஸ்-ஏ-இத்தேஹதுல் முஸ்லிமின் கட்சியைச் சேர்ந்த வாரிஸ் பதான் என்னும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

‘பாரத் மாதா கீ ஜே!’யில்தான் தேசப்பற்று இருக்கிறதாம். ‘பாரத் மாதா கீ ஜே’ என ஒருவன் சொல்லிவிட்டால் அவன் தேசப்பற்று உள்ளவனாம். சொல்லாதவனெல்லாம் தேசத்துரோகியாம். அதனாலே, `இந்தியாவில், ‘பாரத் மாதா கீ ஜே’ என்று சொல்லாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம்’’ என்று மத்திய அமைச்சர் ஒருவர் சொல்கிறார்.

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்கள் தற்போது "நாங்கள் ஜெய் ஹிந்த் அல்லது பாரத் மாதா கீ ஜே!” என்ற கோஷத்தை எழுப்புவோம்' என்று கூறத் தொடங்கிவிட்டார்களாம். அதனாலே தேசியம் குறித்த விவாதத்தில் பாஜகவுக்கு சித்தாந்த ரீதியிலான வெற்றி கிடைத்துவிட்டதாம். இப்படி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி தெரிவிக்கிறார்.

ஆனால் தேசியம் குறித்தும் ‘பாரத் மாதா கீ ஜே!’ குறித்தும் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

“இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மதித்து நடப்பதும், இந்திய நாட்டிற்காக உழைப்பதும், நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதும்தான் தேசப்பற்று” என்கிறார் ஒரு தொழில் முனைவோர்.

“ஒருவன் தான் அணிந்திருக்கும் டி-சட்டையில் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என எனக் குத்திக் கொள்வதில் இல்லை தேசப்பற்று. மாறாக சாதி-மத-இன வேறுபாடுகளை மறந்து இந்தியர்கள் அனைவரையும் சமமாக மதித்து நடத்துவதிலும், ஊழல் மற்றும் மதவாதத்திற்கு எதிராக குரல்கொடுப்பதிலும் இருக்கிறது தேசப்பற்று” என்கிறார்  ஒரு டாஸ்மாக் ஊழியர்.

“கடல்தான் எனக்கு சோறு போடுகிறது; உடை தருகிறது; எனது குழந்தைகளுக்கு படிப்புத் தருகிறது. எனது குடும்பத்தையே வழி நடத்துகிறது; எனவே கடல்தான் எனக்குத் தாய். கடல் தாய்க்குப் பிறகுதான் ‘பாரத மாதா’, சாமிகள், கோவில்கள் இன்ன பிற.,இன்ன பிறவெல்லாம். என்னைப் பொருத்தவரை கடல்தான் தேசத்தைவிடப் பெரியது” என்கிறார் ஒரு மீனவர்.

“தெருக்களையும், கழிவறைகளையும் சுத்தம் செய்யும் ஒரு துப்புறவுத் தொழிலாளிக்கு, தன்மானத்திற்காகப் போராடும் ஒரு தலித்துக்கு, ”‘பாரத் மாதா கீ ஜே!’” என்பது பொருளற்ற ஒன்று. பல நூற்றாண்டுகளாக ஆதிக்கச் சாதியினரின் வன்கொடுமைகளுக்கு ஆட்பட்டுவரும் தலித்துகளுக்கு ‘பாரத் மாதா கீ ஜே!’ என்கிற முழக்கம் ஒரு இழிவான முழக்கமாகும். தலித்துகள் மீது அநீதியையும், தீண்டாமையையும் கடைபிடிக்கும் சாதி அமைப்பு முறை தொடர வேண்டும் என விரும்புகின்றவர்கள்தான் ‘பாரத மாதா’ பற்றி பேசுகின்றனர். என்னைப் பொருத்தவரை தேசப்பற்று என்பது இந்த நாட்டில் வாழ்பவர்களைப் பற்றி பேசுவதும், சமத்துவம், சமூக நீதி, சுதந்திரம் மற்றும் ஊழலற்ற தம்மை பற்றி பேசுவதுமாகும். இடை நீக்கம் செய்யப்பட்ட MLA வாரிஸ் பதான் மட்டுமல்ல நான்கூட ‘பாரத் மாதா கீ ஜே!’ சொல்ல மாட்டேன் என்கிறார் ஒரு துப்புறவுத் தொழிலாளி.


செய்தி ஆதாரம்: THE HINDU 27.03.2016. நன்றி!

4 comments:

  1. நானும் கூட ‘பாரத் மாதா கீ ஜே!’ சொல்ல மாட்டேன்

    ReplyDelete
    Replies
    1. தீண்டாமையை கடைபிடிப்பதும் ‘பாரத் மாதா கீ ஜே!’ சொல்வதும் ஒன்றுதான்.

      Delete