மகாராஷ்டிரா மாநிலம் நாகபுரியைச் சுற்றியுள்ள பருத்தி விவசாயிகள் 400 பேர் தாங்கள் உற்பத்தி செய்த 20 ஆயிரம் குவிண்டால் பருத்தியை 2014 ம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ணா ஆலையின் நிர்வாகி சுனில் பிரபாகர் தலாதுலேவுக்கு விற்பனை செய்துள்ளனர். அதற்கான தொகை ரூ.8 கோடியை சுனில் பிரபாகர் தலாதுலே இதுவரை விவசாயிகளுக்குத் தரவில்லை. சுனில் பிரபாகர் தலாதுலே மீது வார்தா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அந்த நபரும் கைது செய்யப்பட்டார். ஆனால் பணம் மட்டும் இதுவரை விவசாயிகளுக்குப் போய்ச் சேரவில்லை.
இதில் சராசரியாக ஒரு விவசாயிக்குச் சேர வேண்டிய தொகை ரூ2 லட்சம். இது ஒரு குடும்பத்தின் ஓராண்டு உழைப்பு மட்டுமல்ல அவர்கள் வாங்கிய கடனும் இதில் அடங்கும்.
உழைப்பின் பலன் தங்களுக்கு கிட்டவில்லை; அதனை ஒருவன் அபகரித்துவிட்டால் அவர்கள் எப்படி வாழ முடியும்? இது குறித்து மாநில - மத்திய அமைச்சர்களிடம் முறையிட்டும் பலன் ஏதும் இல்லை. கடைசியில் நாகபுரியிலுள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் முன்பு இந்த 400 விவசாயிகளும் தீக்குளிப்பு போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகளின் போராட்டக் குழுத் தலைரவர் ராம் நாராயண் பாடக் அறிவித்துள்ளார்.
ரூ.8 கோடியை அபகரித்தவன் அந்த ஆலையின் நிர்வாகி மட்டுமல்ல. அவன் ஒரு ஆர்எஸ்எஸ் நிர்வாகி. அதனால்தான் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
விவசாயிகளோடு விவசாயிகளாக இவர்களும் தற்கொலை செய்து கொள்ளாமல் சுனில் பிரபாகர் தலாதுலே ஒரு ஆர்எஸ்எஸ் நிர்வாகியாக இருந்த போதும், மகாராஷ்டிரா மாநிலத்திலும் மத்தியிலும் பா.ஜ.க ஆட்சிகள் நடந்தபோதும் சுனில் பிரபாகர் தலாதுலே வுக்கு எதிரான விவசாயிகளின் இந்தப் போராட்ட நடவடிக்கை பாராட்டக் கூடியது.
இப்பொழுது புரிகிறது மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் விவசாயிகளின் தற்கொலைகள் ஏன் அதிகமாக நடக்கிறது என்று! ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகமும் அங்கேதானே இருக்கிறது!
ஆர்எஸ்எஸ் இருக்கும் வரை சுனில் பிரபாகர் தலாதுலேக்கள் இருப்பார்கள். சுனில் பிரபாகர் தலாதுலேக்கள் இருக்கும் வரை விவசாயிகளின் தற்கொலைகளும் தொடரும்.
(செய்தி ஆதாரம்: தினமணி 28.02.2016)
தொடர்புடைய பதிவுகள்:
No comments:
Post a Comment