Thursday, May 13, 2021

கோமியம் கரோனாவைத் துரத்துமா?

முகநூல் மற்றும் வாட்ஸ்அப் பக்கங்களைப் புரட்டினாலே, நேற்றுவரை உறவாடிய உறவுகள், நண்பர்கள், தோழர்களின் மரணச் செய்திகள். விரல் நடுங்குகிறது. நெஞ்சம் பதறுகிறது. 

பிரிந்த உயிர்களின் 'ஆன்மா' சாந்தி அடையட்டும் என்ற ஆறுதலால் இழப்பை ஈடு செய்து விட முடியுமா?  நாம் இழப்பது  வெறும் உயிர்கள் அல்ல; நேற்றுவரை இந்த நாட்டை வளப்படுத்த உழைத்த உழைப்பாளிகள். 

கரோனா எனும் பேரிடர் யாரை இழுத்துச் செல்லும் என்று சொல்ல முடியாது. ஏழை எளியோர் மட்டுமல்ல, மருத்துவ வசதிகளைப் பெறக்கூடிய வசதி படைத்தவர்களைக்கூட கரோனா விட்டுவைப்பதில்லை. 

தடுப்பூசிப் போட்டால் தப்பித்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கை ஒரு புறம், தடுப்பூசி போட்டுக்கொண்டால் நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சம் மற்றொருபுறம் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

ஆவி பிடி,  மூலிகை குடி, சூடாகக் குடி, சத்தாகச் சாப்பிடு என எண்ணற்ற ஆலோசனைகள் நம்மை ஆக்கிரமிக்கின்றன. எல்லாம் செய்தும் இழப்பைத் தடுக்க முடியவில்லையே? ஏன்?

கரோனாவை குணப்படுத்த முடியும் என அறுதியிட்டுச் சொல்ல முடியாத ஒரு சூழலில் நாம் இருக்கிறோம். முகக் கவசம், சமூக இடைவெளி, தனித்திரு போன்ற நடைமுறைகளால் தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை மட்டும்தான் எஞ்சி  நிற்கிறது. இது நடைமுறைச் சாத்தியமற்றதுதான் என்றாலும் இதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு முறை சுனாமி பேரிடரால் பாதிக்கப்பட்டவன் அடுத்த சுனாமியிலும் அடித்துச் செல்லப்படுகிறான் என்றால் அவன் முதல் சுனாமியில் எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்றுதானே பொருள்?

கரோனாவைப் பொறுத்தவரை அதுதான் இன்று இந்தியாவின் நிலை. கரோனாவைக் கோமியத்தால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் ஆட்சிக்கட்டிலில் உள்ளவரை நம்மை யாராலும் காக்க முடியாது.

'நமக்கு நாமே' என்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை. எச்சரிக்கையாயிருங்கள்.

பொன்.சேகர்

No comments:

Post a Comment