மனிதக் காதலை திசை மாற்றிய பக்தி இயக்கம்
சனாதனம் என்றால் பழைமையானது; சனாதன தர்மம் என்றால் பழைமையான நீதி நெறி என்று பொருள். ‘நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை; சமூகத்திற்குப் பொருத்தமான நீதி நெறிகளை அன்றே வகுத்து வழிகாட்டி உள்ளார்கள். பழைய நீதி நெறிகளை கடைபிடிக்கத் தவறியததால்தான் நாட்டில் கேடுகள் பெருகிவிட்டன. எனவே சனாதன தர்மத்தை நிலைநாட்டுவதன் மூலம்தான் நற்சமூகத்தை மீட்டெடுக்க முடியும்” என்பதுதான் சனாதன தர்மத்தை உயர்ந்ததாகக் கருதுவோரின் கருத்து. பார்ப்பனர்கள் மட்டுமல்ல பார்ப்பனியத்துக்கு பலியாகிப் போன பலரின் கருத்தும் இதுதான்.
சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட நெறிமுறைகளையே தமிழர்கள் தங்களது மரபாகப் பார்க்கின்றனர். சங்க இலக்கியங்கள் சனாதனக் கருத்துக்களை வலியுறுத்தவில்லை என்பது யாவரும் அறிந்த ஒன்று. அப்படியானால் சனாதன தர்மத்தை எங்கிருந்து, எப்படிப் புரிந்து கொள்வது? பார்ப்பன இந்து மத நூல்களான, சுருதிகள் என்று சொல்லக்கூடிய ரிக்-யஜூர்-சாம-அதர்வன உள்ளிட்ட 4 வேதங்களிலும், ஸ்மிருதிகள் என்ற சொல்லக்கூடிய மனு-யாக்ஞவல்கியர்-அங்கிரஸ்-ஆபஸ்தம்பர் உள்ளிட்ட 18 தர்ம சாஸ்திரங்களிலும், நாரத-பாகவத-கருட-லிங்க-நாரத-சிவ-ஸ்கந்த-விஷ்ணு உள்ளிட்ட 18 புராணங்களிலும். இதிகாசங்கள் என்று அறியப்படுகிற இராமாயணம், மகாபாரதம் மற்றும் பகவத் கீதையிலும் சனாதன தர்மம் குறித்த விவரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதில் பகவத் கீதை ஸ்மிருதி வகையைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்து மதத்தைச் சார்ந்த ஒருவன் எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எப்படிச் செய்யக் கூடாது என்பதை ஸ்மிருதிகள் வலியுறுத்துகின்றன. இதில் முதன்மையானது மனுஸ்மிருதி. அதனால்தான் இது சட்டமாகவும் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. மேற்கண்ட நூல்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்ததால் பார்ப்பனர்கள் மட்டுமே அவற்றை விரித்துக் கூறும் ஆற்றல் பெற்றவர்களாக இருந்ததால் அவர்கள் சமூகத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டார்கள்.
மனுவின் காலம் கி.பி 185 க்குப் பிறகு என அறியப்பட்டாலும் சமணம் செழித்தோங்கிய களப்பிரர் ஆட்சி (கி.பி 250-575) வீழ்ச்சி அடைந்த காலகட்டத்தில்தான் தமிழர் வாழ்வில் மனு ஸ்மிருதி கோலோச்சத் தொடங்கி உள்ளது. சண்டாளர்கள் தீயவர்களாகக் கருதப்பட்டார்கள் என்கிற பாஹியான் (கி.பி 400) கூற்றிலிருந்தும், தோட்டிகள் நகருக்கு வெளியே வாழ்ந்தார்கள் என்கிற யுவான் சுவாங் (கி.பி 620) கூற்றிலிருந்தும், அறிய முடிகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் (கி.பி 400-600) தீண்டாமையும் புகுத்தப்பட்டிருக்கிறது.
களப்பிரர் காலம்வரை படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் மனிதனுக்கும் மனிதனுக்குமான காதலை அடிப்படையாகக் கொண்டவை. பக்தியினால் முக்தி எளிதாகும்; இம்மை மறுமைப் பயன்களை எளிதில் பெறலாம் எனக் கூறி சமணத்தையும் பௌத்தத்தையும் அழிப்பதற்காக சைவமும் வைணவமும் தோற்றுவித்த பக்தி இயக்கம், மனிதனுக்கும் மனிதனுக்குமான காதலை, தெய்வத்துக்கும் மனிதனுக்குமானக் காதலாக திசை மாற்றியது. கி.பி ஆறாம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் இல்லாதிருந்த விநாயகர் வணக்கம் பிற்கால நூல்களிலேயே காணப்படுகிறது. சனாதன தர்மம் தமிழகத்தில் ஆழமாகக் கால் பதிக்க பக்தி இயக்கமும் ஒரு காரணமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. பின்னாளில் சைவத்துக்கும் வைணவத்துக்குமான மோதல் என்பது தனிக்கதை.சனாதன தர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்எஸ்-பா.ஜ.க கும்பல் தமிழகத்தில் கால்பதிக்க முயலும் இத்தருணத்தில் சனாதன தர்மம் குறித்தப் புரிதல் காலத்தின் கட்டாயம் என்பதால் அது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்.
தொடரும்
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment