Wednesday, December 4, 2024

எதிரிகளை மிரள வைத்த இட ஒதுக்கீடு வரலாறு! -3

மூன்று மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பாலங்கள் நொடிப்பொழுதில் 
பெருவெள்ளத்தில் 
அடித்துச் செலப்படுகின்றன;
கட்டடங்கள் மண்ணில் புதையுண்டு மறைகின்றன. இன்று நாம் படைக்க முயலும் வரலாறு, நம் கண்முன்னாலேயே காணாமல் போகும் போது, பழைய வரலாறுகளை மட்டும் எங்கே தேடுவது?

ஏடறிந்த வரலாறு ஒரு இரண்டாயிரம் ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால்கூட, இந்தக் காலகட்டத்தில் எத்தனைப் பேரிடர்களை வரலாறு சந்தித்திருக்கும்? அத்தனையையும் தாண்டி இன்னமும் வரலாறு பேசப்படுகிறது என்றால் அதற்கு பேரிடர்களை வென்று நின்று, எஞ்சியிருந்த ஓலைச்சுவடிகளும் கல்வெட்டுகளும் சிலைகளும் செப்பேடுகளும்தான் அடிப்படை. நயவஞ்சகர்களால் அழிக்க நினைத்து, ஆற்றில் வீசப்பட்ட போதும், சீறிப்பாய்ந்த வெள்ளைத்தை எதிர்த்து வெளியே வந்தவையல்லவா நம்  பாட்டனின் படைப்புகள்?
 
இடையில், தமிழ் இலக்கியங்களை ஓரங்கட்டி, புராணப் புரட்டுகளும், ஜோதிடமும் ஜாதகமும், சாஸ்திரங்களும் பஜனைப் பாடல்களும் 'அறிவு'க்கான அடையாளமாய் மாறிப்போய், அதைக்கூட பாமரன் படிக்கக் கூடாது என காதில் ஈயம் காய்ச்சி ஊற்றும் அச்சுறுத்தல் நிலவிய காலத்தில்தான் நாம் தற்குறிகளாய் ஆக்கப்பட்டோம்.
 
நமது பாட்டன் முப்பாட்டன்களுக்கு கா படி அரை படி, மரக்கா கலம், காலேரிக்கா, அரைரிக்காவைத் தவிர வேறெதுவும் தெரிந்திருக்கவில்லை. 
'எழுத்தறிவித்தவன் இறைவன்' என்று ஒரு பக்கம் பாடிக்கொண்டே, அந்த இறைவனை மட்டும் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு, எழுத்தை நாம் கோட்டை விட்டோம். இது ஒரு வரலாற்றுத் துயரம்.
 
வெள்ளைக்காரன் நுழைந்த பிறகு வரலாற்றின் கதவுகள் திறக்கப்பட்டன. உ.வே.சா வும் சுவடிகளைத் தேடி ஓடினான். பரண்களிலும் எரவானங்களிலும் உறங்கிய ஓலைச்சுவடிகள் உயிர் பெற்றன. புதையுண்ட பானைகளும் ஓடுகளும் மேலெழுந்து வந்தன.
 
கல்வெட்டுகளும் செப்பேடுகளும், சிற்பங்களும் சிலைகளும், பானைகளும் ஓடுகளும் பேசத் தொடங்கின. தமிழனின் வரலாறு மீண்டெழுந்து நடை பழகியது. தொன்மை வாய்ந்த தமிழனின் சங்ககால வாழ்வியல் இலக்கியங்களையும், அதன் செழுமையையும் கண்டு வியந்து நின்றோம்.

***

பெருங்கூட்டமாய் இருந்த போதும், வேட்டையாடும் கொடிய விலங்குகளால் துரத்தப்பட்ட மான்கள், மாடுகள், ஆடுகளைப் போல மருண்டு, மிரண்டு, பேந்தப் பேந்த முழித்த நம் மக்கள், கல்வி எனும் ஆயுதம் கையில் கிடைத்தவுடன், எதிர்த்து நின்று முறைத்துப் பார்க்கும் இன்றைய காலத்தில், 

தாங்கள் தாக்கப்படுவதாகப் பாதுகாப்புக்கோரி, அரை டிரவுசரின் நாடாவைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு, அழுகுரல் எழுப்புகின்ற நிலைக்குக் கொடிய விலங்குகள் 
தள்ளப்பட்டது எப்படி? 

ஒருபக்கம், கல்வி எனும் ஆயுதம் கொண்டு உலகையே தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, ஒன்பது கட்டங்களுக்குள் தன் வாழ்வைத் தேடி, துரத்தும் கொடிய விலங்குகளிடமே அடைக்கலமாகும் அவலம் மறுபக்கம் இருக்கத்தான் செய்கிறது. இதை வேறு ஒரு சமயத்தில் பார்ப்போம்.

எதிரிகளை மிரள வைத்த எண்ணற்றோரில், எந்நாளும் போற்றப்பட வேண்டிய ஐயா ஆனைமுத்து அவர்கள், நாம் தலை நிமிர்ந்த வரலாற்றையும், அதில் அவரது பங்களிப்பையும், "மண்டல் குழு பரிந்துரை, மக்கள் நாயக உரிமைப் போர்! வகுப்புரிமை வரலாறு" என்னும் சிறு நூலில் நமக்குத் தொகுத்துத் தந்துள்ளார்.

அது குறித்து வரும் நாட்களில் பார்ப்போம். 

தொடரும் 

ஊரான்

No comments:

Post a Comment