பல்வேறு தலைப்புகளில் ஜெமினியோடு (AI) நடைபெற்ற உரையாடலைத் தொடர்ந்து, ஜெமினியால் இந்தப் படத்திற்கு ஒரு மரபுக் கவிதை தர முடியுமா என நண்பர் கனகராஜ் கேட்டார்.
பொன்.சேகர்:
இந்தப் படத்திற்கு ஒரு அழகான மரபுக் கவிதை தேவை. வடித்துத் தரமுடியுமா?
ஜெமினி:
நிச்சயமாக, பசுமை நிறைந்த வயல்வெளியில் பாரம்பரிய உடையில் இருக்கும் இந்தப் பெண்ணின் அழகையும், மண்ணின் மணத்தையும் போற்றும் வகையில் ஒரு மரபுக் கவிதை இதோ:
மண்ணின் செல்வம்
“பச்சை விரித்த பட்டு வயலினிலே பருவத் தமிழ்மகள் காலடிதான் - அச்சப் புருவம் வளைத்து நிலமகளின் மேனி திருவடி தொழுது நின்றாளே!
அள்ளி முடித்தக் கொண்டை - அதில் அழகிய மாலை சூடிடவே - துள்ளி மண்ணின் வாசம் மனமெங்கும் வீச வண்ணப் புடவை மின்னியதே!
உழைக்கும் கரங்கள் உயரக் - காக்கும் இயற்கை அன்னையின் அருளாலே - தழைக்கும் பயிர்கள் யாவும் கவிதை சொல்லப் பாரினில் இதுவே சொர்க்கமன்றோ!”
கவிதையின் சுருக்கம்: இந்தப் பாடல் வயலின் பசுமையையும், அங்கு நின்றிருக்கும் பெண்ணின் பாரம்பரிய அழகையும், உழைப்பின் மேன்மையையும் சிறப்பித்துக் கூறுகிறது.
கனகராஜ்:
கவிதை 'ஓ' எனலாம். ஓஹோ என்று சொல்ல இயலவில்லை. அச்சப் பார்வை தெரியவில்லை அவளிடம். எதுகைக்காக சொல்லப்பட்டிருக்கிறது.
கொண்டை அள்ளி முடியப் படவில்லை. கற்பனைதான் கவிதையே. பரவாயில்லை. எனது கருத்தைவிட ஞானசேகரன் கருத்துதான் ஆய்ந்த ஆழம் நிறைந்ததாக இருக்கும்.
ஞானசேகரன்:
மரபு கவிதை -
மரபு: பண்பாடு, பழக்கவழக்கங்கள், பாரம்பரியம் இவை எல்லாம் மரபுக்குள் அடங்கும்.
கவிதை - அதற்கான இலக்கண (யாப்பிலக்கணம்) வழிகாட்டலுக்கு உட்பட்டு இயற்றப்படுவது.
இலக்கணம் - சொல்லப்படும் கருத்து என்றும் மாறாமலும், அதன் பரிமாற்றம் சிதையாமலும் இருக்க இயற்றப்பட்ட வழிகாட்டல்.
ஆழ்ந்த மொழியறிவு, ஆழ்ந்த கருத்து, இவற்றுடன், கற்பனை, ஓசை இயைபு, தாளம் (இசை), ... இவை மற்றும் மரபுடன் இலக்கண வழிகாட்டலுக்கு உட்பட்டு எழுதப்படுவது மரபுக்கவிதை.
மரபுக்கவிதை இயற்றியவர்கள் முத்தமிழ் (இயல், இசை, நாடகம்) அறிவிலும் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கு தமிழ் இலக்கியங்கள் சான்று.
கருத்தாழத்திற்கு, திருக்குறள்.,
கற்பனைக்கு கம்பராமாயணம், இவை எடுத்துக்காட்டுகள்.
திருமாவளவன்:
செயற்கை நுண்ணறிவு எழுதும் கவிதைகள் சொற்களின் கோர்வை, சற்று எதுகை மோனையுடன். அவ்வளவே.
இன்னும் சொல்ல இலக்கணத்தில் எவ்வளவோ இருந்தாலும் ஏதோ சொன்னோம் என்றில்லாமல் நல்லா நறுக்குன்னுதான் சொன்னீங்க.. இயற்கைக்கு செவிசாய்க்க செயற்கைக்கு வழி ஏது? செயற்கை மணதிற்கு மனம் ஏங்கல் ஆகாது.
***
இதைத் தொடர்ந்து, அதே கவிதையை ஜெமினியிடம் கொடுத்து,
பொன்.சேகர்:
"யாப்பு சீர் உள்ளிட்ட இலக்கணம் அதில் அடங்கியுள்ளதா?" எனக் கேட்டேன்.
ஜெமினி:
நீங்கள் பகிர்ந்துள்ள "மண்ணின் செல்வம்" கவிதை படிப்பதற்கு மிகவும் இனிமையாகவும், காட்சிப்படுத்தல் (Imagery) நிறைந்தும் உள்ளது.
இக்கவிதையில் யாப்பு மற்றும் சீர் உள்ளிட்ட இலக்கண அமைப்புகள் எந்த அளவில் அமைந்துள்ளன என்பதைப் பின்வருமாறு பார்க்கலாம்:
1. பா வகை (Metrical Form)
இது பெரும்பாலும் 'சிந்து' அல்லது 'நவீன இசைப்பாடல்' (Lyric Poetry) வடிவில் உள்ளது. மரபு ரீதியாகப் பார்த்தால், இது அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தின் சாயலைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அடியும் ஆறு சீர்களைக் கொண்டு, ஒரு சீரான ஓட்டத்துடன் (Rhythm) நகர்கிறது.
2. சீர் (Feet)
ஒவ்வொரு அடியிலும் சீர்கள் சீராகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- உதாரணமாக: பச்சை / விரித்த / பட்டு / வயலினிலே / பருவத் / தமிழ்மகள் (6 சீர்கள்).
- இந்தச் சீர்கள் பெரும்பாலும் 'இயற்சீர்' மற்றும் 'வெண்சீர்'களாக அமைந்து, வாசிப்பதற்கு எளிமையான இசையமைப்பைத் தருகின்றன.
3. தொடை நயம் (Rhyme and Alliteration)
4. கவிதையின் சிறப்பம்சமே அதன் ஓசை நயம் தான்:
- எதுகை (Second letter rhyme):
- பச்சை - அச்சப் (இரண்டாம் எழுத்து 'ச்' ஒன்றி வந்துள்ளது).
- அள்ளி - துள்ளி (இரண்டாம் எழுத்து 'ள்' ஒன்றி வந்துள்ளது).
- மோனை (First letter rhyme):
- பச்சை - பட்டு - பருவ (முதல் எழுத்து 'ப' ஒன்றி வந்துள்ளது).
- மண்ணின் - மனமெங்கும் - மின்னியதே (ம/மி வரிசை).
5. தளை (Linkage)
மரபு இலக்கணப்படி கறாராகப் பார்த்தால், சீர்களுக்கு இடையே அமையும் 'தளை' சில இடங்களில் தளர்வாக உள்ளது (இது நவீன கவிதைகளில் இயல்பானது). இருப்பினும், கவிதையை இசை வடிவில் பாடும்போது அதன் 'சந்தம்' (Tempo) சிதையாமல் மிக அழகாக அமைகிறது.
6.அணி இலக்கணம் (Figures of Speech)
- தற்குறிப்பேற்ற அணி: இயற்கை அன்னை அருளுவதாகவும், பயிர்கள் கவிதை சொல்வதாகவும் கவிஞர் தன் கருத்தை இயற்கையின் மேல் ஏற்றிச் சொல்லியிருப்பது சிறப்பு.
- உருவக அணி: வயலைப் 'பட்டு' விரித்ததாக உருவகப்படுத்தியிருப்பது கவிதைக்கு அழகு சேர்க்கிறது.
சுருக்கமாக: உங்கள் கவிதையில் யாப்பு இலக்கணத்தின் அடிப்படை கூறுகளான எதுகை, மோனை மற்றும் சீர் அளவு மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது மரபு சார்ந்த சந்தக் கவிதைக்கும், நவீன புதுக்கவிதைக்கும் இடைப்பட்ட ஒரு "பாவடிவம்" (Poetic form). பாடலாகப் பாடுவதற்கு இது மிகவும் ஏற்றது.
***
அதே கவிதைக்கு ஒரு படமும் கேட்டேன். இதோ ஜெமினி கொடுத்த படம்.
ஞானசேகரன்:
செயற்கை நுண்ணறிவுச் செயலிகளுக்கு யாப்பிலக்கணம் தெரிந்தாலும், அதிக சொற்களுடன் எதுகை-மோனை ஆற்றல் (அதாவது, ஒலி ஒற்றுமை) இருந்தாலும்,
கருத்தாழம் நிறைந்த சொற்களைத் தேர்ந்து எடுத்தல், குறைந்த சொற்களில் அதிகப் பொருளை உள்ளடக்கும் திறன்(செறிவு), கற்பனை (காட்சிகளை மனதில் உருவாக்குதல்), பண்பாடு, ஒழுக்கம், ஒழுக்கமின்மை இவற்றின் வேறுபாடுகள், இப்படி இன்னும் பல மனிதனுக்கே உரிய குணங்கள், உணர்வுகள், இயல்புகள், அவற்றுக்குக் கிடையாது. இவற்றுடன் தெய்வ பக்தியையும் (பக்தி உணர்வு) சேர்த்துக் கொள்ளலாம்.
செறிவுக்கு ஐயன் திருவள்ளுவனுக்கு ஈடு இணை கிடையாது. (திருக்குறளை வியப்புடன் படித்தது வருகிறேன்) கற்பனைத் திறனுக்குக் கம்பர்! (கம்பர் பற்றியது எனக்கு கேள்வியறிவு மட்டும்).
பொன்.சேகர்:
சிறப்பு. மொழித்திறன் மிக்க படைப்புகளில் கம்பனின் காவியமும் ஒன்று; ஆனால் அது என்னை ஈர்க்கவில்லை. ஒரு படைப்பின் வடிவமும் உள்ளடக்கமும் வாழ்விற்குப் பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே அது பாமர மக்களாலும் போற்றப்படும். அந்த வகையில் வள்ளுவன் வாழ்வியலாக வாழ்கிறான். கம்பனோ, மொழிப்புலமை மிக்கச் சிலரின் நினைவில் மட்டுமே நிற்கிறான்; அவர்களும் அவனைப் பெரும்பாலும் காசுக்காகவே பாடுகின்றனர்.
கனகராஜ்:
எதையும் திரும்பத் திரும்பப் படித்தால் புதிய பரிமாண விளக்கம் கிடைப்பதுடன் மனப்பாடமும் ஆகும். மேலும் சிலர் மட்டுமே கம்பன் மொழிப் புலமை உள்ளவர்களின் நினைவில் மட்டுமே நிற்கிறான். அதிகமாக ஈடுபாட்டுடன் வாசித்தால் நாமும் புலமை அடையலாம். மேலும் சிலர் காசு பார்க்கின்றனர். அவர்கள் காசு பார்த்தாலும் நமக்கு செவி இன்பம் தருகிறார்கள். நமக்கு இதனால் நாமும் படிக்கலாமே என்ற ஆர்வமும் கூடுகிறது அல்லவா!
பொன்.சேகர்:
கலையும் இலக்கியமும் வெறும் இரசனைக்கானதாக மட்டும் இருக்கக் கூடாது; அவை குறளைப் போல மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதற்கானதாக இருக்க வேண்டும். இதுவே எனது துல்லியமான பார்வை.
ஞானசேகரன்:
கம்பரின் கற்பனைகளில் ஒன்று.
"சொல் ஒக்கும் கடிய வேகச்
சுடு சரம் கரிய செம்மல்
அல் ஒக்கும் நிறத்தினாள்மேல்
விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது
அப்புறம் கழன்று கல்லாப்
புல்லார்க்கு நல்லோர் சொன்ன
பொருள் என போயிற்று அன்றே!"
முனிவர்கள் சொல், சொல்லிய பொழுதில் (உடன்) பலிக்கும். அதாவது, உடனடியாக நிகழும் (ஒளியின் வேகத்தைவிட அதிவேகம்). அந்த வேகத்தில் ராமன் எய்த அம்பு கரிய நிறத்தை உடைய தாடகையின் வைரத்தில் ஆன குன்று போன்ற மார்பின் மீது நுழைந்து அங்கு தங்காமல் முதுகின் வழியாக வெளியில் சென்றது. என்ன வேகத்தில் தெரியுமா?
கல்வி அறிவில்லாதவருக்கு நல்லோர் சொன்ன அறம் பற்றிய விளக்கம் போல.
ரசித்து மகிழ்ந்த பாடல்களில் ஒன்று.
நல்ல கருத்துகளும் உண்டு.
"மலர்ந்தும் மலராத தாமரை போல
முகம் மலர்ந்தும் மலராதான்;
அலர்ந்தும் அலராதான்;
அரசு எனும் பதவி
அமையவும் அமைவதில்லை
அவன் உள்ளத்தினில்.”
அந்த பாடல், தந்தை பட்டாபிசேகத்தை அறிவித்த தருணத்தில் இராமனின் மனநிலையைக் கூறுகிறது.
தான் அரசன் ஆகப் போகிறோம் என்ற மகிழ்ச்சி, பெருமிதம், கர்வம், எதுவும் இன்றி, அரசனுக்குத் தலை மகனாகப் பிறந்துவிட்டதால் அது தன் கடமை என்று அமைதியாக ஏற்றுக் கொண்டான். அதனால்தான் அரசு உனக்கு இல்லை என்ற பொழுது அவனை துளியும் பாதிக்கவில்லை.
இந்த கருத்தை ஒரு படிப்பினையாகப் பார்க்கிறேன். அதாவது, எந்தச் சூழ்நிலையிலும் உணர்சசிக்கு ஆளாகாமல் நடுநிலையுடன் இருத்தல்.
நல்ல கருத்துதானே?
பொன்.சேகர்:
இத்தகைய படைப்புகளில் சில நல்ல கருத்துகள் இருப்பதை நான் மறுக்கவில்லை; ஆனால், அவை வெகுமக்களின் வாழ்வியலைப் பண்படுத்த உதவுகிறதா என்பதே எனது அளவுகோல். உள்ளதை உள்ளபடி பேசுபவை, ஆதிக்கப் பிரிவினரைப் போற்றுபவை, தர்மத்தின் பெயரால் ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துபவை, மக்களின் துயரத்தைப் போக்க வழிசொல்பவை என இலக்கியத்தில் பல வகைகள் உண்டு. இதில் எது 'வெகுமக்கள் இலக்கியம்' என்பதை அடையாளம் காண்பதே முக்கியம்.
இலக்கிய வகைப்பாடுகள்:
- யதார்த்தவாத இலக்கியம்: "உள்ளதை உள்ளபடி பேசுபவை" (எ.கா: சில நவீன நாவல்கள்)
- ஆதிக்க இலக்கியம்: "ஆதிக்கப் பிரிவினரை ஏற்றிப் போற்றுபவை" (எ.கா: பல மன்னர் காலக் காவியங்கள்).
- பிற்போக்கு இலக்கியம்: "தர்மநெறி என்ற பெயரில் ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துபவை" (எ.கா: வருண தர்மத்தைப் போற்றும் நூல்கள்).
- மக்கள் இலக்கியம்: "மக்களின் துன்பதுயரங்களைப் போக்க வழி கூறுபவை" (எ.கா: திருக்குறள், சித்தர்பாடல்கள்).
"இலக்கியம் என்பது ஒரு போதையாக இல்லாமல், ஒரு மருந்தாக இருக்க வேண்டும்." கம்பன் போன்றவர்களிடம் ரசனை இருந்தாலும், அது "ஆதிக்கப் பிரிவினரை ஏற்றிப் போற்றும்" அல்லது "ஏற்றத்தாழ்வுகளைக் கடவுள் பெயரால் நியாயப்படுத்தும்" எல்லைக்குள் நின்றுவிடுவதால், அது வெகுமக்களுக்கானது அல்ல.
தொகுப்பு
ஊரான்
~2.jpg)

No comments:
Post a Comment