ஆஸ்திரேலியாவின்
புனித வின்சென்ட் வளைகுடா அருகில் அடிலெய்டில் இன்று மாலை ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் உலகக்
கோப்பை போட்டியில் விராத்கோலியின் அதிரடியில் உருவான கிரிக்கெட் சுனாமி பசுபிக்
கடலைத்தாண்டி இந்தியாவில் மகிழ்ச்சி அலைகளை அள்ளிக் கொட்டியதால் மக்கள் திக்குமுக்காடிவிட்டார்களாம்.
இந்த அலை ஒரே நொடியில் இந்திய மக்களின் தேசபக்தியை இமயத்தின் உச்சிக்கே கொண்டு
சென்றுவிட்டதால் இந்த தருணத்தில் தேச ஒற்றுமையை பாதுகாக்கவும் தேசத்தின் பெருமையை
நிலைநாட்டவும் தலைவர்கள் வாழ்த்து மழைகளை பொழியத் தொடங்கிவிட்டனர். பாருங்களேன்! கலைஞர்கூட
இந்த மகிழ்ச்சி அலையில் மிதக்கும் போது சாமான்யர்கள் எல்லாம் எம்மாத்திரம்?
இரண்டு
நாட்களாக இந்தியாவை உலுக்கிய காதலர் தினக் கொண்டாட்டங்களும் - எதிர்ப்புகளும்கூட
இந்த கிரிக்கெட் சுனாமியில் காணாமல் போய்விட்டனவோ! காதலர் தினக் கொண்டாட்டங்கள்
வேண்டுமானால் வருவதும் போவதுமாக இருக்கலாம் ஆனால் எதிர்ப்புகள் மட்டும் எப்போதும் தொடரவே
செய்கின்றன. ஏன் எதிர்ப்புகள் மட்டும் தொடர்கின்றன?
காதலை
எதிர்ப்பவர்கள் காதலையும் காதல் திருமணங்களையும் எதிர்க்கவில்லையாம். திட்டமிட்ட
காதலையும் நாடகக் காதலையும் மட்டும்தான் எதிர்க்கிறார்களாம். அறியாப் பருவத்தில்
காதலித்தால் ”எது சரி! எது தவறு!” என்பது தெரியாதாம். 25 வயதுக்கு மேல் பக்குவம் வந்த
பிறகு காதலிக்கலாமாம்; படித்துவிட்டு காதலிக்கலாமாம்; வேலைக்குச் சென்று பிறகு
வாழ்க்கையில் செட்டில் ஆனபிறகும் காதலிக்கலாமாம். ஆனால் அப்படிக் காதலித்தாலும் பெற்றோர்
ஒப்புதலின்றி திருமணம் செய்து கொள்ளக்கூடாதாம்?
காதல்
திருமணங்களில் 5% மட்டுமே வெற்றி பெறுகின்றனவாம். 95% காதல் திருமணங்கள்
தோல்வியில்தான் முடிகின்றனவாம். மணமுறிவு கேட்டு நீதிமன்றங்களை நாடுவோர்
பெரும்பாலும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தானாம். காதலித்து திருமணம் செய்து
கொண்டு பிறகு கைவிட்டுவிட்டால் கேட்க நாதி இல்லையாம். காதலில் தோற்ற பெண்கள் வயிற்றில்
கருவை சுமந்து கொண்டு வாழ வழியற்று தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்களாம். காதலால்
சமூகத்தில் பதட்டம் ஏற்பட்டு சமூக அமைதி குலைகிறதாம்.
இவர்கள்
சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான். மனைவியை - குழந்தையை - தாயை - தங்கையை - தகப்பனை - அண்ணனை
- அக்காளை - ஆயாவை - நாயை - பேயை - கழுதையை - குதிரையை இப்படி யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் காதலிக்கலாமாம். அதாவது அன்பு செலுத்தலாமாம்; நேசிக்கலாமாம். யாரும் எதிர்க்கப் போவதில்லையாம். இப்படி கேப்பையில் நெய்வடிகிற மாதிரி இவர்கள் பேசுவதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். பார்ப்பனன், முதலியான், பிள்ளையான், கவுண்டன், நாயுடு, ரெட்டி, செட்டி, வன்னியன்,
கள்ளன், தேவன், நாடான், முத்தரையன், கோனான் உள்ளிட்ட பிற OC-BC- MBC உள்ளிட்ட பிற உயர் சாதிப்
பெண்களை தாழ்த்தப்பட்ட வாலிபர்கள் காதலித்துவிடக் கூடாது. குலநாசம் - அதாவது சாதிநாசம் ஆகிவிடக்கூடாது என்பதுதான் இவர்களின் ஒரே கவலை.
இதை
வெளிப்படையாகச் சொல்வதற்குக்கூட அஞ்சும் இந்தக் கோழைகள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு
யார் காரணம்?
அடுத்த
பதிவில் பார்ப்போம்.
தொடர்புடைய பதிவுகள்:
No comments:
Post a Comment