தூத்துக்குடி, பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற்ற பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் சென்னை பின்னி ஆலைத் தொழிலாளர்களின் போராட்டங்கள், உரிமைகளுக்கான போராட்டங்களாக மட்டுமன்றி ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டமாகவும் உருவெடுத்த 1910 முதல் 1930 வரையிலான காலகட்டத்தில்தான் இழப்பீடுச் சட்டம் (1923), தொழிற்சங்கச் சட்டம் (1926) கொண்டு வரப்பட்டன. நிலை ஆணைகள் சட்டம் 1946 ல் கொண்டு வரப்பட்டது.
அதன் பிறகு தொழிற் தகராறுச் சட்டம் (1947), தொழிற்சாலைகள் சட்டம் (1948), குறைந்த பட்ச ஊதியச் சட்டம் (1948), சேம நலநிதிச் சட்டம் (1952), போனஸ் சட்டம் (1965), தனியார் செக்யூரிட்டி முறைப்படுத்துதல் சட்டம் (2005) என ஐம்பதுக்கும் மேற்பட்ட மத்தியச் சட்டங்களும், இருநூறுக்கும் மேற்பட்ட மாநிலச் சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. பல்வேறுப் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் மூலமாகவே இத்தகையச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இவை தொழிலாளர்களின் நலன்களை ஓரளவுக்குப் பாதுகாப்பதனால்தான் இந்தச் சட்டங்கள் தொழிலாளர் நலச் சட்டங்கள் என்று அழைக்கப்பட்டன.
முதலாளிகள் தொழில் தொடங்கவும், தொடர்ந்து
தொழில் நடத்தவும் பழையச் தொழிலாளர் சட்டங்கள் இடையூறாக இருப்பதால் தங்களுக்குச் சாதகமாகத் திருத்தங்கள்
கொண்டு வரவேண்டும் என அவர்கள் தொடர்ந்து கூப்பாடு போட்டு வந்த நிலையில், முதலாளிகளுக்குச்
சாதகமாகவே மோடி அரசு தற்போது தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது.
முதலாளிகள் தொழில் தொடங்குவதையும், தொடர்ந்து தொழில் நடத்துவதையும் இந்தச் சட்டத் திருத்தங்கள்
எளிமைப்படுத்தி உள்ளன என்கின்றனர் முதலாளிகள். அதனால் இனி அதிக ஆலைகள் தொடங்கப்படும்
என்றும் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் கூறுகின்றனர். இது உண்மையா?
1990 களில் புதிய தாராளவாதக் கொள்கை அமுல்படுத்தப்பட்ட
பிறகு சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம், உள்ளிட்ட இடங்களில் நோக்கியா, ஃபோர்டு, நிசான்,
மோட்டரோலா, சாம்சங், செயிண்ட் கோபெயின், BMW என எண்ணற்ற பன்னாட்டுக் கம்பெனிகள் ஆலைகளைத்
தொடங்கி பருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தன. இந்தக் காலகட்டத்தில் பழைய
சட்டங்கள்தானே அமுலில் இருந்தன. தொழில் தொடங்குவதற்கு இந்தச் சட்டங்கள் தடையாக இருந்தன என்றால்
இத்தனை நிறுவனங்கள் எப்படி தொடங்கப்பட்டிருக்க முடியும்? அவர்கள் எப்படி இன்றுவரை தொடர்ந்து
பெருத்த இலாபத்துடன் தொழில் நடத்த முடியும்?
பழைய சட்டங்கள் இருந்த போதே நோக்கிய நிறுவனம்
தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி பல அயிரம் கோடி லாபத்தை அள்ளிச் சென்றது. ஹண்டாய்
நிறுவனமோ சுமார் 2000 நிரந்தர ஊழியர்களுக்குச் சராசரியாக மாதம் ரூ.25000 முதல் ரூ.87000
வரை ஊதியம் கொடுக்கிறது. ஆனால் சுமார் 5000 பயிற்சியாளர்கள் மற்றும் 4000 ஒப்பந்தத்
தொழிலாளர்களுக்கு சராசரியாக சுமார் ரூ.15000 ஊதியம் கொடுத்து பெருவாரியான தொழிலாளர்களைச்
சுரண்டி வருகிறது. இந்தச் சூழலில் புதிய சட்டங்கள் யாருக்குச் சாதகம் என்பதை சட்டத்திற்குள்
சென்று பார்த்தால்தான் தெரியும்.
புதிய சட்டத் தொகுப்புகள்
1. ஊதியச் சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம்,
போனஸ் சட்டம் மற்றும் சம ஊதியச் சட்டம் ஆகிய நான்கு சட்டங்களின் தொகுப்புதான் ”ஊதியத் தொகுப்பு” (Code on Wages 2020) என்ற பெயரில்
வந்துள்ளது.
2. தொழிற்சங்கச் சட்டம், நிலை ஆணைகள் சட்டம்
மற்றும் தொழிற் தகராறுச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களின் தொகுப்புதான் ”தொழில் உறவு தொகுப்பு” (Industrial Relations Code)
என்ற பெயரில் வந்துள்ளது.
3. இழப்பீடுச் சட்டம், ஈட்டுறுதிச் சட்டம், சேம நலநிதிச் சட்டம், வேலைவாய்ப்புச் சட்டம், மகப்பேறுச் சட்டம், பணிக்கொடைச் சட்டம் உள்ளிட்ட ஒன்பது சட்டங்களின் தொகுப்புதான் ”சமூகப் பாதுகாப்புத் தொகுப்பு” (Code on Social Security) என்ற பெயரில் வந்துள்ளது.
4. தொழிற்சாலைகள் சட்டம், தோட்டத் தொழிலாளர்
சட்டம், சுரங்கச் சட்டம், மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம், ஒப்பந்தத் தொழிலாளர்
சட்டம், துறைமுகத் தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட பதின்மூன்று சட்டங்களின் தொகுப்புதான்
”பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள்
தொகுப்பு” (Occupational Safety, Health and Working Conditions Code) என்ற
பெயரில் வந்துள்ளது.
மேற்கண்ட நான்கு தொகுப்புகளுக்குள் அடங்கிய
பழைய சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டுவிட்டன.
சட்டத் திருத்தங்கள் மீது மக்கள் தங்களது
கருத்துக்களை தெரிவிக்கலாம் என 30 முதல் 45 நாட்கள் வரை அவகாசம் தருவதாகக்கூறி, கரோனா
நோய்த் தொற்று காலத்தில் மக்கள் இதன் மீதெல்லாம் கவனம் செலுத்தமாட்டார்கள் என்பதைத்
தெரிந்தே, அவசர அவசரமாக மேற்கண்டச் சட்டங்களைக் கொண்டு வந்தள்ளது மோடி அரசு. இச்சட்டங்கள்
யாவும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அரசிதழில் வெளியிட்டுவிட்டனர். அதேபோல
இச்சட்டங்களுக்கான விதிமுறைகளையும் உருவாக்கிவிட்டனர். கடைசியாக கடந்த டிசம்பரில்
”தொழில் உறவு” தொகுப்புச் சட்டத்தோடு தொடர்புடைய மாதிரி நிலை ஆணைகளையும் உருவாக்கிவிட்டனர்.
கரோனா காலத்தில்தான் வேளாண் சட்டங்கள்
கொண்டு வரப்பட்டன. அதன் ஆபத்துகளைப் புரிந்து கொண்ட விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் அதே
காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் மீது கருத்துக்
கூறவோ, எதிர்த்துப் போராடவோ இந்தியத் தொழிலாளி வர்க்கம் குறிப்பாக தொழிற்சங்கங்கள்
இன்று வரை தவறி உள்ளன என்பது ஒரு கசப்பான உண்மைதான்.
01.04.2021 முதல் தொழிலாளர்களுக்கான புதிய
சட்டத் தொகுப்புகள் அமுலுக்கு வரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னமும் இந்தியத் தொழிலாளி
வர்க்கம் விழித்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
தொடரும்
பொன்.சேகர்
வழக்குரைஞர்
குறிப்பு:
இராணிப்பேட்டை BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த
தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆற்றிய உரை.
தொடர்புடைய பதிவுகள்:
No comments:
Post a Comment