Saturday, March 20, 2021

மனுவின் வழியில் குறைந்த பட்ச ஊதியம்! தொடர்-4

யாரெல்லாம் தொழிலாளி?

யார் யார் எல்லாம் தொழிலாளி (worker), யார் யார் எல்லாம் ஊழியர்கள் (employee) என்கிற வரையறையிலேயே குழப்பங்கள் உள்ளன. ஊழியர்கள் மற்றும் தொழிலாளி வரையறைக்குள் பயிற்சியாளர்கள் வரமாட்டார்கள் என்கின்றன சில சட்டத் தொகுப்புகள். யார் தொழிலாளி என்பது பற்றி சில சட்டத் தொகுப்புகள் வாய் திறக்கவில்லை. ஆனால் மாதிரி நிலை ஆணைகளில் பயிற்சியாளர்களும் தொழிலாளர்கள்தான் என்கின்றனர்.


அப்ரண்டிஸ் பயிற்சியாளர்கள் மற்றும் ‘நீம்’ (NEEM) பயிற்சியாளர்கள்தான் எல்லா ஆலைகளிலும் பயிற்சியாளர் என்ற போர்வையில் பெருமளவில் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இனி பயிற்சியாளர்களுக்கு எது நடந்தாலும் கண்டு கொள்ளாமல் கை கழுவுவதற்கேற்பவே சட்டத்தில் மேற்கண்டவாறு குழப்பமாக வரையறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

‘நீம்’ பயிற்சியாளர்கள் (NEEM-National Employability Enhancem,ent Mission) என்ற பெயரில், திறன் வளர்ப்பு என்ற போர்வையில் 16 வயது முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்களின் உழைப்பைச் சுரண்ட அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் சட்டத்தில் ஏற்கனவே திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஏஜெண்டுகள் மூலம் அமர்த்தப்படும் இவர்களுக்கு எந்தச் சட்டப் பாதுகாப்பும் கிடையாது. இவர்கள் பற்றி புதிய சட்டத் தொகுப்பில் ஒரு வார்த்தைகூட குறிப்பிடப்படவில்லை.


குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வழிகாட்டும் மனு


அடிமட்ட ஊதியத்தை (floor wages) விட குறைந்த பட்ச ஊதியம் (minimum wage) குறைவாக இருக்கக்கூடாது என்று கூறி அடிமட்ட ஊதியம் ஒன்றை அரசு தீர்மானிக்கும் என்கிறது ஊதியத் தொகுப்புச் சட்டம் (பிரிவு-9). அதன்படி தற்போது மத்திய அரசு தீர்மானித்திருக்கும் அடிமட்ட ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.178. இதை 26 ஆல் பெருக்கி மாதம் ரூ.4628 என நிர்ணயித்திருக்கிறது. மாதத்தில் 30/31 நாட்கள் வருகிறதே! மீதி 4/5 நாட்களுக்குப் பட்டினி கிடப்பதா என்று கேட்காதீர்கள். கேட்டால் இதுவே அதிகம் என்பார் மோடி.

 

குறைந்த பட்ச ஊதியத்தை எப்படி நிர்ணயிப்பது என்பது பற்றி ஊதியத் தொகுப்புச் சட்டத்தின் விதிகளில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது (பிரிவு-3). கணவன், மனைவி, இரு குழந்தைகளளை உள்ளடக்கியதுதான் ஒரு குடும்பம் என்கிறது விதி. உழைத்துச் சம்பாதிக்க முடியாத வயதான தாய்-தந்தை, மாமனார்-மாமியார்  இருந்தால் அவர்களை யார் பராமரிப்பது? அவர்களை கொன்றுவிடச் சொல்கிறாரோ மோடி!


குழந்தைகள் இருவரையும் ஒரு நபராகக் கணக்கில் கொண்டு குடும்பத்தில் மூன்று பெரியவர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டுமாம். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டால் அரை வயிறு போதும் என்கிறார்களோ?


ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 2700 கலோரி உணவும், குடும்பத்திற்கு ஆண்டுக்கு 66 மீட்டர் துணியும் தேவையாம். உணவுக்கும் துணிக்கும் ஆகும் செலவில் 10 சதவீதம் வீட்டு வாடகைக்கு ஒதுக்க வேண்டுமாம். 2700 கலோரி அதிகம் என்று சொல்லி அதை 2400 ஆகக் குறைக்க வேண்டும் என்றுவேறு பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தற்போதைய தகவல்


கேஸ், மின்சாரத்திற்கு குறைந்த பட்ச ஊதியத்தில் 20 சதவீதம் ஒதுக்க வேண்டுமாம். குழந்தைகள் கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு மற்றும் கல்யாணம்-கருமாதி உள்ளிட்ட எதிர்பாராத செலவுகளுக்குக் குறைந்த பட்ச ஊதியத்தில் 25 சதவீதம் ஒதுக்க வேண்டுமாம்.


தற்போதைய நிலவரப்படி குறைந்த பட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.375 என்று கணக்கிட்டால், ஒரு மாதத்திற்கு ரூ.9750 கிடைக்கும். இங்கேயும் 26 ஆல்தான் பெருக்க வேண்டுமாம். 4/5 நாட்கள் வயிறைக் காயப்போடு என்கிறார்கள்.

 

குறைந்த பட்ச ஊதியம் ரூ10000 என்று வைத்துக் கொண்டால் கீழ்கண்டவாறுதான் நீங்கள் செலவு செய்ய வேண்டும்.


உணவு மற்றும் துணி @45%      = ரூ.4500

வீட்டு வாடகை @10%            = ரூ.1000

கேஸ், மின்சாரம் @20%           = ரூ.2000

கல்வி, மருத்துவம் இதர @25%    = ரூ.2500


இந்தத் தொகையை வைத்துக் கொண்டு வாழ முடியுமா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. ஆனால் உங்களை யார் வாழச் சொன்னது என்று அவர்கள் கேட்கிறார்களே!


பொறியியல் பட்டதாரிக்கே இன்று பத்தாயிரம் கிடைப்பதில்லை. ஆனால் மாதம் ரூ.67000 சம்பாதிக்கும் பார்ப்பனர் உள்ளிட்ட முற்பட்ட வகுப்பினரை ஏழை என்று வரையறுக்கிறது உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கை.


”ஏவல் புரியும் வேலைக்காரர்களுக்கு தக்கபடி மன்னன் அன்றாடம் சம்பளம் ஏற்படுத்த வேண்டும்” (மனு 7-125). தினக்கூலி (daily wage) முறைக்கு மனுதான் வழிகாட்டுகிறான்.


கீழ்மட்ட வேலையாட்களுக்கு அன்றாடம் ஒரு பணமும், ஆறு மாதத்திற்கு இரண்டு துணியும், மாதத்திற்கு ஒரு துரோண நெல்லும் சம்பளமாக அரசன் தீர்மானிக்க வேண்டும் (மனு 7-126). குறைந்தபட்சக் கூலியைத் தீர்மானிப்பதற்கும் மனுவே வழிகாட்டுகிறான்.


இன்றைய ஆட்சியாளர்களும் மனுவை வழிகாட்டியாகக் கொண்டுதான் குறைந்தபட்சக் கூலியைத் தீர்மானிக்கின்றனர் என்பதற்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?


தொடரும்


பொன்.சேகர்

வழக்குரைஞர்

 

குறிப்பு: இராணிப்பேட்டை BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆற்றிய உரை.


தொடர்புடையப் பதிவுகள்:


No comments:

Post a Comment