இனிய
மாலைப் பொழுதை நோக்கி நன்பகல் மெல்ல நகர நகர, சாமியானா பந்தலில் இருந்த இருக்கைகள் நிரம்பத் தொடங்கின.
இருக்கைகள் போதாது என்பதை உணர்ந்த விழா ஏற்பாட்டாளர்கள் மேலும் இருக்கைகளை வரவழைக்க
சாமியானாப் பந்தலைத் தாண்டியும் இருக்கைகள் விரிந்தன. அங்கே கூடியிருந்தோர் ஐநூறுக்கும்
மேலே. சலசலப்பில்லை: ஆர்க்கெஸ்ட்ரா அலம்பல் இல்லை. அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள்
குசலம் விசாரித்துக் கொள்ள இடையூறில்லை.
சாமியானா
பந்தலின் ஒரு முனையில் எளிய மேடை. நிகழவிருக்கும் விழா குறித்து 3x4 அடி அளவில் ஒரு
சிறிய விளம்பரம், பார்வையாளர்களோடு உறவாட ஒலிபெருக்கி என எல்லாம் கச்சிதமாய் அமைந்திருந்தன.
பிற்பகல்
மூன்று மணிக்கு விழாத்தலைவர் மேடை ஏறினார். விழா நாயகர்களையும் அவர்களின் பெற்றோர்களையும்
வாழ்த்துரை – சிறப்புரை வழங்கவிருக்கும் பேச்சாளர்களையும் மேடைக்கு அழைத்தார்.
முகப்பூச்சும்,
நெற்றிப் பொட்டும் அவளை ஒட்டவில்லை. சீவி சிங்காரித்து மல்லி-முல்லையால் அவள் தன்னை
மூடிக்கொள்ளவில்லை. தோடும் தொங்கட்டானும் அவளைத் தொடவில்லை. ஒட்டியானமும் அட்டியானமும்
அவளை அண்டவில்லை. கை வளையல் - கொலுசுகள் எப்போதோ ஓரங்கட்டப்பட்டதால் அவைகளையும் இவளிடம்
பார்க்க முடியவில்லை. எளிய உடை, கழுத்துகூட காலியாகத்தான் இருந்தது. மாமிகளும்-தோழிகளும்
மேக்கப்பில் மணமகளையே விஞ்சும் காலமிது. ஆனால் இங்கே அலங்கோலம் ஏதுமின்றி அவள் அவளாகவே
இருந்ததால் அவள்தான மணமகள் என அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் ஏதுமில்லை.
இதுவரை
உணவுப் பந்தலில் உணவு பரிமாறிய கையோடு எடுப்பான நடையுடன் மேடை ஏறினாள் மணப் பெண். அவளோடு
மணமகனும் இயல்பான உடையோடு மேடை ஏற, எங்கும் ஒரே கரவொலி. வாழ்க்கைத் துணையராய் இணையவிருக்கும்
இவர்கள்தான் இன்றைய கதாநாயகர்கள்.
மேடையில்
எல்லோருக்கும் ஒரே மாதியான பிளாஸ்டிக் நாற்காலிகள்தான்.
வரவேற்புரை,
தலைவர் உரை, வாழ்த்துரை, சிறப்புரை என விழா தொடர்ந்தது.
மாலை
மணி ஐந்து. ஊரையே மிரள வைக்கும் ராகுவின் ஞாயிறு நேரமிது! கோழைகள் வேண்டுமானால் இந்த
ராகுவுக்கு அஞ்சி நடுங்கலாம். ஆனால் இங்கே செஞ்சூரியன்கள் சிம்மாசனம் ஏறியதால் சிம்மாசனக்
கால்களில் கிரகச் சக்கரம் சிக்கி சுக்கு நூறாய் நொறுங்கியதால் விட்டால் போதும் என தலை
தெறிக்க ஓட்டம் பிடித்தான் ராகு.
மணமக்கள்
மாலையை எடுத்து ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டு, “இத்தருணம் முதல் இனி நாங்கள் வாழ்க்கை
இணையர்கள்!” என உறுதி ஏற்க மீண்டும் ஒரு முறை கரவொலி. “வாழ்க மணமக்கள்”! எனும் வாழ்த்தொலி விண்ணை முட்ட
வாழ்க்கை இணை ஏற்பு இனிதாய் நிறைவேறியது.
உள்ளப்
பொருத்தம் இங்கே ஐய்க்கியமாதனால் ஜாதகப் பொருத்தம் சாக்கடையில் வீசப்பட்டது., முகூர்த்த
நாளையும் முகூர்த்த நேரத்தையும் பிடித்துக் கொண்டு இவர்கள் அடுத்தவர்களை அலைகழிக்கவில்லை.
‘ஐய்யோ ஒரே நாளில் இத்தனை முகூர்த்தமா? எதற்குச் செல்வது? எவ்வளவு மொய் அழுவது?’ என
இங்கே யாரும் அங்கலாய்க்கவில்லை. மாலை நேர வரவேற்பா, காலை நேர முகூர்த்தமா! எதற்குச்
செல்வது என்கிற பதட்டம் இல்லை. அறக்க பறக்க ஓடி திரும்ப வேண்டிய அவசரமில்லை.
கால்கடுக்க
நின்று போட்டோ ஷோவுக்கு போஸ் கொடுத்து வருகையைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை.
அரைமணி
நேர கலைநிகழ்ச்சிக்குப் பிறகு இனிதாய் விழா முடிந்தது. வாங்கிய கடனுக்கும், வாங்கப்
போகும் கடனுக்கும் கவர் தேடும் காலமிது. மனித உறவுகளை பண உறவால் முடிச்சுப்போடும் அவலம்
இங்கே அரங்கேறவில்லை. உறவுகளும் தோழமைகளும் இங்கே ஒருங்கே சங்கமித்திருந்ததால் மொய்
எழுதும் வேலையுமில்லை. அறிவுப் பசிக்கு நூல்கள் மட்டுமே பரிமாறப்பட்டன.
புளுகு
மூட்டையை சுமந்து கொண்டு காசு யாசிக்கும் புரோகிதனுக்கு இங்கே வேலையில்லை. கெட்டி மேளமில்லை.
பெண்ணைக் கட்டிப்போடும் தாலிக் கயறும் இல்லை. தலை குனிய மெட்டியுமில்லை. நகையில்லை.
நட்டில்லை. தட்சணையும் சீரும் இல்லை. இரு உள்ளங்கள் இணைவதற்கு இவை ஏதும் தேவையில்லை
என பொட்டில் அடித்தாற்போல பதியவைத்த நிகழ்வு இது.
சாவகாசமாய்
காலையில் புறப்பட்டுச் சென்று, பிற்பகல் விழாவில் பங்கெடுத்துக் கொண்டு அதே சாவகாசத்தோடு ஊர் திரும்ப உதவிய விழா இது.
கதிரவனின்
செங்கதிர் மணமக்களைத் தழுவி மேற்கு நோக்கி மறைய முப்பதாண்டுகளுக்கு முன் நடந்த எம்
இணை ஏற்பின் நினைவுகளும் இவ்விழாவில் சங்கமிக்க எம் இல்லம் நோக்கி மெல்லிருளில் மறைந்தோம்!
தொடர்புடைய பதிவுகள்:
No comments:
Post a Comment