Showing posts with label சாமியானா. Show all posts
Showing posts with label சாமியானா. Show all posts

Wednesday, 3 February 2016

தலை தெறிக்க ஓட்டம் பிடித்த ராகு!

இனிய மாலைப் பொழுதை நோக்கி நன்பகல் மெல்ல நகர நகர, சாமியானா பந்தலில் இருந்த இருக்கைகள் நிரம்பத் தொடங்கின. இருக்கைகள் போதாது என்பதை உணர்ந்த விழா ஏற்பாட்டாளர்கள் மேலும் இருக்கைகளை வரவழைக்க சாமியானாப் பந்தலைத் தாண்டியும் இருக்கைகள் விரிந்தன. அங்கே கூடியிருந்தோர் ஐநூறுக்கும் மேலே. சலசலப்பில்லை: ஆர்க்கெஸ்ட்ரா அலம்பல் இல்லை. அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் குசலம் விசாரித்துக் கொள்ள இடையூறில்லை.

சாமியானா பந்தலின் ஒரு முனையில் எளிய மேடை. நிகழவிருக்கும் விழா குறித்து 3x4 அடி அளவில் ஒரு சிறிய விளம்பரம், பார்வையாளர்களோடு உறவாட ஒலிபெருக்கி  என எல்லாம் கச்சிதமாய் அமைந்திருந்தன.

பிற்பகல் மூன்று மணிக்கு விழாத்தலைவர் மேடை ஏறினார். விழா நாயகர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் வாழ்த்துரை – சிறப்புரை வழங்கவிருக்கும் பேச்சாளர்களையும் மேடைக்கு அழைத்தார்.

முகப்பூச்சும், நெற்றிப் பொட்டும் அவளை ஒட்டவில்லை. சீவி சிங்காரித்து மல்லி-முல்லையால் அவள் தன்னை மூடிக்கொள்ளவில்லை. தோடும் தொங்கட்டானும் அவளைத் தொடவில்லை. ஒட்டியானமும் அட்டியானமும் அவளை அண்டவில்லை. கை வளையல் - கொலுசுகள் எப்போதோ ஓரங்கட்டப்பட்டதால் அவைகளையும் இவளிடம் பார்க்க முடியவில்லை. எளிய உடை, கழுத்துகூட காலியாகத்தான் இருந்தது. மாமிகளும்-தோழிகளும் மேக்கப்பில் மணமகளையே விஞ்சும் காலமிது. ஆனால் இங்கே அலங்கோலம் ஏதுமின்றி அவள் அவளாகவே இருந்ததால் அவள்தான மணமகள் என அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

இதுவரை உணவுப் பந்தலில் உணவு பரிமாறிய கையோடு எடுப்பான நடையுடன் மேடை ஏறினாள் மணப் பெண். அவளோடு மணமகனும் இயல்பான உடையோடு மேடை ஏற, எங்கும் ஒரே கரவொலி. வாழ்க்கைத் துணையராய் இணையவிருக்கும் இவர்கள்தான் இன்றைய கதாநாயகர்கள்.

மேடையில் எல்லோருக்கும் ஒரே மாதியான பிளாஸ்டிக் நாற்காலிகள்தான்.  

வரவேற்புரை, தலைவர் உரை, வாழ்த்துரை, சிறப்புரை என விழா தொடர்ந்தது.

மாலை மணி ஐந்து. ஊரையே மிரள வைக்கும் ராகுவின் ஞாயிறு நேரமிது! கோழைகள் வேண்டுமானால் இந்த ராகுவுக்கு அஞ்சி நடுங்கலாம். ஆனால் இங்கே செஞ்சூரியன்கள் சிம்மாசனம் ஏறியதால் சிம்மாசனக் கால்களில் கிரகச் சக்கரம் சிக்கி சுக்கு நூறாய் நொறுங்கியதால் விட்டால் போதும் என தலை தெறிக்க ஓட்டம் பிடித்தான் ராகு.

மணமக்கள் மாலையை எடுத்து ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டு, “இத்தருணம் முதல் இனி நாங்கள் வாழ்க்கை இணையர்கள்!” என உறுதி ஏற்க மீண்டும் ஒரு முறை கரவொலி.  “வாழ்க மணமக்கள்”! எனும் வாழ்த்தொலி விண்ணை முட்ட வாழ்க்கை இணை ஏற்பு இனிதாய் நிறைவேறியது.

உள்ளப் பொருத்தம் இங்கே ஐய்க்கியமாதனால் ஜாதகப் பொருத்தம் சாக்கடையில் வீசப்பட்டது., முகூர்த்த நாளையும் முகூர்த்த நேரத்தையும் பிடித்துக் கொண்டு இவர்கள் அடுத்தவர்களை அலைகழிக்கவில்லை. ‘ஐய்யோ ஒரே நாளில் இத்தனை முகூர்த்தமா? எதற்குச் செல்வது? எவ்வளவு மொய் அழுவது?’ என இங்கே யாரும் அங்கலாய்க்கவில்லை. மாலை நேர வரவேற்பா, காலை நேர முகூர்த்தமா! எதற்குச் செல்வது என்கிற பதட்டம் இல்லை. அறக்க பறக்க ஓடி திரும்ப வேண்டிய அவசரமில்லை.

கால்கடுக்க நின்று போட்டோ ஷோவுக்கு போஸ் கொடுத்து வருகையைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயமில்லை.

அரைமணி நேர கலைநிகழ்ச்சிக்குப் பிறகு இனிதாய் விழா முடிந்தது. வாங்கிய கடனுக்கும், வாங்கப் போகும் கடனுக்கும் கவர் தேடும் காலமிது. மனித உறவுகளை பண உறவால் முடிச்சுப்போடும் அவலம் இங்கே அரங்கேறவில்லை. உறவுகளும் தோழமைகளும் இங்கே ஒருங்கே சங்கமித்திருந்ததால் மொய் எழுதும் வேலையுமில்லை. அறிவுப் பசிக்கு நூல்கள் மட்டுமே பரிமாறப்பட்டன.

புளுகு மூட்டையை சுமந்து கொண்டு காசு யாசிக்கும் புரோகிதனுக்கு இங்கே வேலையில்லை. கெட்டி மேளமில்லை. பெண்ணைக் கட்டிப்போடும் தாலிக் கயறும் இல்லை. தலை குனிய மெட்டியுமில்லை. நகையில்லை. நட்டில்லை. தட்சணையும் சீரும் இல்லை. இரு உள்ளங்கள் இணைவதற்கு இவை ஏதும் தேவையில்லை என பொட்டில் அடித்தாற்போல பதியவைத்த நிகழ்வு இது.

சாவகாசமாய் காலையில் புறப்பட்டுச் சென்று, பிற்பகல் விழாவில் பங்கெடுத்துக் கொண்டு  அதே சாவகாசத்தோடு ஊர் திரும்ப உதவிய விழா இது.

கதிரவனின் செங்கதிர் மணமக்களைத் தழுவி மேற்கு நோக்கி மறைய முப்பதாண்டுகளுக்கு முன் நடந்த எம் இணை ஏற்பின் நினைவுகளும் இவ்விழாவில் சங்கமிக்க எம் இல்லம் நோக்கி மெல்லிருளில் மறைந்தோம்!

தொடர்புடைய பதிவுகள்:

Monday, 1 February 2016

பசிக்குதான் உணவே தவிர பகட்டுக்கு அல்ல!

31.01.2016 ஞாயிறு அன்று நன்பகல் நகரப் பேருந்துக்காக நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள ஒரு கிராமப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். அருகாமை நகரிலிருந்து 12.45 மணிக்கு வரவேண்டிய நகரப் பேருந்து உரிய நேரத்தில் வரவில்லை. நான் செல்லுகின்ற அதே ஊருக்கு வரவேண்டிய நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாங்கள் செல்ல வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சென்று விட்டீர்களா? என்றார்.

நான் எந்தப் பேருந்துக்காக காத்திருந்தேனோ அந்தப் பேருந்து -  நிலையத்திற்கு அரைமணி நேரம் தாமதமாக வந்ததாகவும் தற்போது அவர் அந்தப் பேருந்தில் உட்கார்ந்திருப்பதாகவும் பேருந்து சற்று நேரத்தில் புறப்பட்டுவிடும் என்றும் கூறினார்.

ஒரு பதினைந்து நிமிடத்தில் பேருந்து வந்தது. பேருந்தில் ஏறி எட்டு ரூபாய் கொடுத்து பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு பயணித்தேன். செல்ல வேண்டிய இடம் 14 கி.மீட்டர் தூரம்தான் என்றாலும் அரைமணி நெரம் ஆகிவிட்டது. தமிழகத்தின் தொலைதூர கிராமங்களுக்கு – அதாவது குக்கிராமங்களுக்கு – தமிழக போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணிப்பவர்களுக்குத் தெரியும் ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது என்று!

சமீபத்திய மழை தமிழகத்தை புரட்டிப் போட்டிருந்தாலும் நான் பயணித்த சாலையையொட்டி இருந்த பகுதிகளில் நெற்பயிர்கள் அரிதாக இருந்ததைக் கண்டு இப்பகுதியில் இயல்பைவிட குறைவான மழைதான் பெய்துள்ளது என்பதை புரிந்து கொண்டேன். ஆனாலும் மாந்தோப்புகள் பூக்கத்  தொடங்கியிருந்தன. தென்னைகள் புத்துயிர் பெற்றிருந்தன. இவைதான் இப்பகுதியில் முக்கிய விவசாயம் என்பது புரிந்தது. முல்லைக்குத் தேர் கொடுத்த மண் என்பதால் இங்கு மல்லிக்குக் குறைச்சல் இல்லை. சில இடங்களில் மங்கையரை மகிழ்வித்த மல்லிகைக் கட்டைகள் பூவிழந்து அடுப்படிக்குத் தயாராகிக் கொண்டிருந்தன.

பொதுவாக கிராமச் சாலைகளின் இருமருங்கிலும் கிராமத்திற்குள் நுழையும் இடங்களில் நரகல் அப்பியிருக்கும். ஆனால் இங்கு அப்படி எதுவும் இல்லை. மாறாக மிளகாய்ச் செடி நடுவதற்கு செப்பனிடப்பட்ட புழுதிக் கொல்லையைப் போல சுத்தமாய் காட்சியளித்தன சாலை ஓரங்கள்.  

நாங்கள் இறங்க வேண்டிய கிராமம் வந்தது. பேருந்தில் இருந்து இறங்கியபோது ஒரு சிலரை நிச்சயம் சந்திப்போம் என கருதி வந்தத் தலைகளைக் கண்டதில் அகமகிழ்ச்சி. நாங்கள் செல்ல வேண்டிய இடம் இன்னும் ஒரு கி.மீ தூரம் என்பதால் குறுக்குச் சாலையில் பாதங்களில் அம்மண்ணின் பொடி படிய நடந்தோம்.

மண்சாலை முடிந்து மீண்டும் தார்ச்சாலை. அதில் ஒரு அரை கி.மீ தூரம் நடந்தோம். அழுக்குச் சட்டைக்கு பழகிப்போன காளை ஒன்று என்முடன் வந்த உஜாலாவாய் வந்தவரை முட்ட முயன்ற போது காளைக்குச் சொந்தக்காரர் அதன் தாம்புக் கயிரை கெட்டியாய் இழுத்துப் பிடித்ததால் அவர் தப்பித்தார்.

இன்னும் குளிர் காலம் முடியவில்லை என்றாலும் உச்சி வெயில் உரைக்கத் தொடங்கியது. நாங்கள் செல்லும் இடம் குறித்த ஏக்கம் எம்மை ஆக்கிரமித்திருந்ததால் உச்சி வெயில்கூட உரைந்து போனது. கதிரவனின் உரைபனி எம் நெஞ்சை ஈரமாக்கியதால் களைப்பும் அலுப்பும் எம்மை அண்டவில்லை.

கண் எட்டும் தூரத்தில் ஒரு பேருந்தும் ஒரு சிற்றுந்தும் தொலைதூரம் பயணித்த களைப்பில் சாலையின் ஓரம் ஓய்வை நாடியிருந்தன. மாலையில் ஒளிக்கதிர்களை வீசுவதற்காக குழல்விளக்குகள் சாலைஓரம் நின்று கொண்டு கதிரவனின் ஒளிகீற்றுகளை உள்வாங்கிக் கொண்டிருந்தன.

கதிரவனின் ஒளிக்கற்றைகள் கண்களை கூசச் செய்தாலும் வண்ணத் தோரணங்கள் சாலையின் ஓரமாய் ஒதுங்கி நின்று லேசான காற்றில் அசைந்தாடி கூசும் கண்களுக்கு நாங்கள் செல்ல வேண்டிய திசையைக் காட்டின.

தார்ச்சாலையிலிருந்து வலதுபக்கமாக வண்ணத் தோரணங்கள் காட்டிய வழியில் மெல்ல நடந்த போது அங்கே வண்ணமயமாய் அமைக்கப்பட்டிருந்த சாமியானா நாங்கள் வந்து சேர வேண்டிய இடத்தை உறுதி செய்தது.

மேடையை ஒட்டி அமைந்திருந்த சாமியானா பந்தலின் நிழலில் சிலர் உட்கார்ந்திருந்தனர். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கடையை சிலர் மொய்த்துக் கொண்டு புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தனர். புழுதியைப் புரட்டிப் போடும் இடத்தில் புத்தகங்களைப் புரட்டியது ஓர் அரிய நிகழ்வுதானே!

என்னதான் உள்ளம் மகிழ்ந்திருந்தாலும் உணவு நேரம் என்றால் உடல் வாடித்தானே போகிறது. மணி பிற்பகல் இரண்டை நெருங்கிவிட்டதால் நேராகப் பந்திக்குச் சென்றோம். மற்றொரு சாமியானா பந்தலுக்கீழே வாடகைக்கு எடுத்துவரப்பட்ட நாற்காலி – மடிப்பு மேசை என எளிய திறந்தவெளி டைனிங் எம்மை ஈர்த்தது. பந்தியில் இலை விரித்தோம். கொஞ்சம் கேசரி, ஒரு போண்டா, தேவையான அளவு பிரிஞ்சி சோறு, அதற்கு பொருத்தமாக வெங்காய பச்சடியும் சாம்பாரும் என பகல் விருந்து எளிமையாய், அதே நேரத்தில் திருப்தியாய் முடிந்தது. ஒவ்வோரு இலையிலும் ஒரு பருக்கைகூட வீணாகவில்லை. பசிக்குதான் உணவே தவிர பகட்டுக்கு அல்ல என்பதை உணரவைத்த விருந்து.


தொடரும்….