Sunday, April 8, 2018

ஐ.ஐ.டி தரமும் அண்ணா பல்கலைக்கழகமும்!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து, தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வரும் மோடி அரசுக்கு எதிராக தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கர்நாடகவைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்ததன் மூலம் வெந்த புண்ணில் வேல் பாச்சுகிற வேலையை செய்திருக்கிறது மோடி அரசு.

ஏற்கனவே இசைப் பல்கலைக்கழகத்திற்கு கேரளாவைச் சேர்ந்த பிரமிளா தேவியும், டாக்கடர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு ஆந்திராவைச் சேர்ந்த சூரியநாராயண சாஸ்திரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்தமிழகத்தில், தமிழக மாணவர்களுக்காக செயல்படும் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து வெளிமாநிலத்தவரை துணை வேந்தர்களாக நியமிப்பதன் நோக்கம் என்ன?

இது குறித்து தொலைக்காட்சிகளில் பல்வேறு விவாதங்களும் நடத்தப்பட்டன. காவிரிநீர் போராட்டத்தை திசைதிருப்புவதற்கான ஒரு நடவடிக்கை எனவும், பார்ப்பன சக்திகள் கல்வி நிலையங்களை ஆக்கிரமித்து கல்வியை பார்ப்பன மயமாக்கும் ஒரு நடவடிக்கை எனவும் தமிழக மக்கள் சார்பாக வாதாடியவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு 170பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக்கூடவா அதற்கான தகுதி இல்லை என கேள்விகளை எழுப்புகின்றனர்.

நியூஸ்18, தந்தி டி.வி, சன் நியூஸ்  ஆகிய தொலைக்காட்சிகளில் இது குறித்து நடந்த விவாதங்களில் அருள்மொழி (தி.), பாலு (பா..), ரமேஷ்பிரபா (பத்திரிக்கையாளர்), மனோதங்கராஜ் (தி.மு.), பச்சையப்பன் (தமிழறிஞர்), நெடுஞ்செழியன் (கல்வியாளர்), உள்ளிட்டோர் தமிழக மக்களின் சார்பாக வாதிட்டனர். தமிழ் தெரியாத ஒருவரால் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் 572 உறுப்புக் கல்லூரிகளை எப்படி திறமையாக நிர்வகிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

சீனிவாசன் (பா..), பத்ரி சேஷாத்ரி (சமூக ஆர்வலர்), பாடம் நாராயணன் (சமூக ஆர்வலர்), அரசகுமார் (பா..) உள்ளிட்டோர் தகுதி, திறமை, நேர்மையின் அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக நியமனங்களை நியாயப்படுத்தி தமிழக மக்களுக்கு எதிராகவும் வாதிட்டனர்.

இத்தகைய நியமனங்களை தமிழர்-தமிழரல்லாதோர் பிரச்சனையாக பார்ப்பதா? அப்படி பார்ப்பது இனவெறியைத் தூண்டுவதாகாதா? வேறு மாநிலத்தவரை தமிழகத்தில் நியமனம் செய்வதை எதிர்த்தால் பிற மாநிலங்களில் தமிழர்களை நியமிப்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா? நடுவண் அரசின்கீழ் இயங்கும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒருவர்கூட தமிழர் இல்லை என்பதும் ஒரு எதார்த்தமான உண்மை. இந்த நிலையில் பிறமாநில அரசுகளின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் தமிழர்களை துணை வேந்தர்களாக நியமிக்கவா போகிறார்கள்?

பார்ப்பனர்கள் வாதிடுவதைப் போல இத்தகைய நியமனங்களை தகுதி, திறமை, நேர்மையின் அடிப்படையில் பார்ப்பதுதான் சரியானதா? பிறப்பால் பார்ப்பனரல்லாதவர்கள்கூட தகுதி, திறமை, நேர்மை குறித்து பேசுகிறார்களே என கேள்வி எழுப்பலாம்.  பிறப்பால் பார்ப்பனர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பார்ப்பன இந்து மதக்கோட்பாடுகளை நியாப்படுத்தும் எவரும் பார்ப்பனியத்தை நிலை நாட்டும் பார்ப்பனர்களே.

மேலே குறிப்பிட்டுள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள மூவரும் பிறப்பால் பார்ப்பனர்கள் என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது. தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்ட பிறகுதான் தமிழகத்தில் இத்தகைய நியமனங்கள் நடந்தேறுகின்றன. இந்தியாவின் பிற பகுதிகளில் கல்வியை பார்ப்பன மயமாக்கும் நோக்கத்திற்காக இத்தகைய நியமனங்களை ஏற்கனவே பா..க அரசு செய்து வருகிறது.

பார்ப்னர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகத்தான் அவர்கள் தகுதி, திறமை, நேர்மை மற்றும் ஊழலற்ற நிர்வாகம் குறித்து கூப்பாடு போட்டு வருகின்றனர். பார்ப்பனர்கள் எவ்வளவுதான் புத்திசாலிகளாக இருந்தாலும் அவர்கள் கையில் நிர்வாகத்தை ஒப்படைப்பது சந்தேகத்திற்கிடமின்றி தவறு என அம்பேத்கர் எச்சரிக்கிறார்@.

ஒரு நல்ல அரசு ஒரு திறமையான அரசைவிடச் சிறந்தது. பார்ப்பனர்கள் திறமையான அரசு பற்றி பேசுகிறார்கள். பார்ப்பனரல்லாதோர் கட்சி நல்ல அரசு குறித்து பேசுகிறது. எந்த ஒரு அரசும் அனுதாபத்துடன் செயல்படாவிட்டால் நன்மைகளைச் செய்ய முடியாது. பார்ப்பனர்கள் மட்டுமே பொறுப்பில் இருந்தால் அந்த நிர்வாகம் அனைவரிடமும் அனுதாபத்துடன் செயல்படாது என்கிறார் அம்பேத்கர்@.

மற்ற பொதுமக்களைவிட, தன்னை மேன்மையானவனாகக் கருதுபவன் ஒரு பார்ப்பன். இயற்கையிலேயே தனது சாதியினருக்குச் சாதகமாக செயல்படுபவன். மக்களின் மீது அக்றையில்லாததால் ஊழலுக்கு பலியாகிறவனாக இருக்கும் இப்படிப்பட்ட பார்ப்பனன் எப்படிச் சிறந்த நிர்வாகியாக இருக்க முடியும்? என கேள்வி எழுப்புகிறார் அம்பேத்கர்.@

திறமையே எல்லாம் என்ற நிலையை பார்ப்பனர்கள் எடுப்பதற்குக் காரணம் கல்வியில் அவர்கள் முன்னணியில் இருப்பதால்தான். திறமையை மட்டுமே அளவுகோலாக வைப்பதன்மூலம் அரசுப் பணிகளை ஏகபோகமாக பார்ப்பனர்கள் கைப்பற்றிக் கொள்கின்றனர்.@

திறமைதான் எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது என்றால் ஒரு ஆங்கிலேயரையோ, பிரெஞ்சு, ஜெர்மன் நாட்டவரையோ வேலைக்கு அமர்த்துவதில் தவறு ஏதும் இருக்க முடியாதே என்கிறார் அம்பேத்கர்.@ இதன்படி அண்ணா பல்கலைக்கழத்திற்கு திறமையானவர்தான் வேண்டும் என்றால் கர்நாடகாவில் தேடுவதைவிட அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ தேடலாமே!

அண்ணா பல்கலைக்கழகத்தை ஐ.ஐ.டி தரத்திற்கு உயர்த்துவேன் என்கிறார் சூரப்பா. ஒரு அமெரிக்கரை துணைவேந்தராக நியமித்தால் அவர் நேரடியாக உலகின் முதல்தர பல்கலைக்கழகமாக உயர்த்தி விடுவாரே!

அரசு வேலைகளில் பார்ப்பனர்களிடத்தில் சூத்திரர்களை வைத்தால் பார்ப்பனர்கள் மற்ற எல்லோரைவிடவும் உயர்ந்தவர்கள் என்கிற மனு தர்மத்தை நிலை நாட்ட முடியாது என்பதால்தான் தகுதி, திறமை, ஊழலற்ற நிர்வாகம் என்கிற போர்வையில் பார்ப்பன மனுதர்மத்தை நிலை நாட்டுவோரை கொள்கை முடிவு எடுக்கும் அரசு உயர் பதவிகளில் நியமித்து வருகின்றது பா.ஜ.க அரசு.

அண்ணா பல்கலைக்கழகம் ஐ.ஐ.டி தரத்திற்கு உயர்த்தப்படும் என்பதும், ஏற்கனவே ஐ.ஐ.டி அக்ரகாரத் தரத்தில் இருப்பதும் வேறு வேறு அல்லவே!.

@:பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 25 (தமிழ்), பக்கம்: 81 - 83

No comments:

Post a Comment