மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெயின் அருகில் உள்ள கத்தியா நகரத்தைச்
சேர்ந்த 27 வயதான தீண்டத்தகாதவரான இராம்பிரசாத் பாம்னியா தனது திருமணத்தையொட்டி 02.04.2018 அன்று குதிரை மீது ஊர்வலம் வந்தபோது ராஜபுத்திர சாதிவெறியர்கள் அவர் மீது
கற்களை வீசியதோடு பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். சாதி
வெறியர்களின் தாக்குதலிலிருந்து இராம்பிரசாத்தை பாதுகாக்க காவல் துறை உதவியுள்ளனர். இதில்
வேடிக்கை என்னவென்றால் இராம்பிரசாத்தே ஒரு காவலர்தான். காவல்
துறையில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவருக்கே இந்த நிலை என்றால் சாமான்யர்களின்
நிலை பற்றி சொல்லவா வேண்டும்.
இராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் பகோரா கிராமத்தைச் சேர்ந்த புராராம்
பர்மார். குஜராத்தில் அரசு ஊழியராகப் பணிபுரியும் இவர் ஒரு தீண்டத்தகாத சாதியைச்
சேர்ந்தவர். இவரது மகன் பரத் தனது திருமணத்தையொட்டி 2014 ம் ஆண்டு ஏப்ரல்
மாதத்தில் குதிரை மீது ஊர்வலம் வந்ததற்காக ராஜபுத்திர சாதி
வெறியர்களால் பரத் தாக்கப்பட்டதோடு கடந்த நான்கு ஆண்டுகளாக இவரது குடும்பம் ஊர்
விலக்கம் செய்யப்பட்டுள்ளது. அதோடு இவருக்கு ரூ.5000 அபராதமும் விதித்துள்ளனர் ராஜபுத்திர சாதி வெறியினர்.
உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்தவர் சன்ஜய் ஜாதவ். இவர்
அலிகர் கல்லூரி மாணவர். தனது திருமணத்தையொட்டி குதிரை மீது ஊர்வலம் நடத்த பாதுகாப்புக் கோரிய
போது கஸ்கந்த் மாவட்ட மாஜிஸ்ரேட்டும் மற்றும் கிராம சர்பஞ்சும் அனுமதி மறுத்ததால்
இவர் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். உள்ளூர்
காவல் துறையினரை அனுகுமாறு உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியது. மாவட்ட
மாஜிஸ்ரேட் தாகூர் சாதியைச் சேர்தவர். குதிரை ஊர்வலத்தை பொதுத்தெரு வழியாக அனுமதிக்க
முடியாது என்றும் வேண்டுமானால் சுமார் 800மீ தூரமுள்ள மாற்றுப்பாதையில் செல்லலாம் எனவும்
காவல்துறை கூறியதால் அவர் உயர்நீதி மன்றத்தை நாடவுள்ளார்.
இன்னும் இரண்டு வாரத்தில் அவரது திருமணம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் துவாலியா கிராமத்தைச்
சேர்ந்த இராம்பால் பலாய் ஒரு தீண்டத்தகாத சாதியைச் சார்ந்தவர். தனது மகள் நன்கு படித்தவர் என்பதால் மகளின் திருமணத்தை இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விமரிசையாக நடத்தத் திட்டமிட்டார்.
திட்டமிட்டபடி தனது மகளை மணக்கப் போகும் மாப்பிள்ளையை குதிரை மீது ஊர்வலமாக
அழைத்து வந்தபோது ஜாட் சாதி வெறியர்கள் ஊர்வலத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இராம்பால்
காவல் துறை உதவியை நாடினாலும் இந்த தாக்குதல் திருமண விழாச் சூழலையே சீர்குலைத்து
விட்டது என வேதனையோடு தெரிவிக்கிறார் இராம்பால் பலாய். தாங்கள்தான்
மனிதர்கள், தீண்டத்தகாத நாங்கள் எல்லாம் விலங்குகள்
என ஜாட் சாதியினர் கருதுகின்றனர். இந்த வழக்கை தான் விடப்போதில்லை என்றும் ஜாட்
சாதி வெறியர்களை சட்ட நீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் இராம்பால் கூறுகிறார்.
மத்தியப்
பிரதேச மாநிலம் ரத்லாம் என்ற ஊரில் 10.05.2015 அன்று தீண்டத்தகாத இளைஞர் ஒருவர் தனது திருமணத்தையொட்டி
குதிரையில் ஊர்வலம் வந்தபோது உயர் சாதி வெறியர்கள் அவரைத் தாக்கியதோடு
குதிரையையும் கைப்பற்றிச் சென்றனர்.
அதன் பிறகு காவல் துறை பாதுகாப்புடன் அவர் தலையில் ஹெல்மட் அணிந்து தனது
ஊர்வலத்தை நடத்தினார்.
வட மாநிலங்களில் தீண்டத்தகாதவர்கள் மீது தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்கள் உயர்
சாதி வெறியர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. தீண்டத்தகாவர்கள் முறுக்கு மீசை வைக்கக் கூடாதாம். ஷேடு
உள்ள ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாதாம் திருமணங்களில் பாட்டுக் கச்சேரி வைக்கக் கூடாதாம். இப்படித்தான் கூப்பாடு போடுகின்றனர் வடஇந்திய உயர் சாதி வெறியினர்.
குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டம், டிம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் ரத்தோட் (வயது 21). தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த இவர் 8
மதங்களுக்கு முன்பு குதிரை ஒன்று வாங்கினார். தனது
வயலுக்கு இவர் தனது குதிரையில் சென்று வருவார். தீண்டத்தகாதவர் குதிரையில் செல்லக் கூடாது,
நடந்துதான் செல்ல வேண்டும் என இதற்கு உயர் சாதி வெறியர்கள் மிரட்டல் விடுத்து வந்த
நிலையில் 29.03.2018 அன்று இரவு மர்ம நபர்களால் அடித்துக்
கொல்லப் பட்டார். (ஏப்ரல் 1, 2018 தமிழ் இந்து)
தீண்டத்தகாத சாதிப் பையன்கள் ஜீன்ஸ் பேண்ட் போட்டுக் கொண்டு தங்களது சாதிப்
பெண்களை வளைத்துப் போடுகிறார்கள் என இங்குள்ள வன்னியர் சாதி வெறியர் இராமதாஸ், கொங்கு கவுண்டர் சாதி வெறியர் ஈஸ்வரன் உள்ளிட்ட பிற உயர்சாதி வெறியர்கள்
கொஞ்சமும் வெட்கமின்றி பிதற்றி வருவது நாம் அறிந்ததே. இதன்
பொருள் என்ன? தீண்டத்தகாதவன் ஜீன்ஸ் பேண்ட் போடக் கூடாது என்பதுதானே!. வட
இந்திய சாதி வெறியர்களும் தென் இந்திய சாதி வெறியர்களும் இதில் ஒன்று படுகிறார்கள்
என்றால் அதற்குக் காரணம் என்ன?
பேஷ்வா பார்ப்பனர்கள் மராட்டியத்தில் ஆட்சியிலிருந்த போது பம்பாயில்
தீண்டத்தகாதவர்கள் சுத்தமான துணிகளை உடுத்த அனுமதிக்கப் படவில்லை. கந்தல் துணிகளைத்தான் உடுத்த வேண்டும். தீண்டப்படாதவர்களுக்கு
துணிகள் விற்கும் போது அந்தத் துணிகளை கந்தலாக்கியும் அழுக்கடையச் செய்தும்
விற்பதில் கடைக்காரர்கள் கவனமாக இருந்தார்கள். பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 25 (தமிழ்),
தீண்டத்தகாதவர்கள் பிணத்தின் துணியைத்தான் உடுத்த வேண்டும் (மனு 10-52) என மனு வகுத்து வைத்த விதிதான் இன்று
ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது என நீள்கிறது.
தீண்டத்தகாதவர்கள் நாயையும் குரங்கையும் மட்டும்தான் வளர்க்கலாம். மாடு முதலியவற்றை வளர்க்கக் கூடாது (மனு 10-51). என மனு வகுத்து வைத்த விதிதான்
இன்று தீண்டத்தகாதவர் குதிரை வளர்ப்பதை குற்றமாக பார்க்கிறது.
பேஷ்வாக்கள் ஆட்சியில் தலை நகரமான புனே நகரில் மாலை 3 மணி முதல் காலை 9 மணி வரை அனுமதிக்கப்படவில்லை.
காரணம் இந்த நேரத்தில் ஏற்படும் நீண்ட நிழல் பார்ப்பான் மீது பட்டு
விட்டால் தீட்டாகி விடுமாம். ஒரு பார்ப்பான்
வருவது தெரிந்தால் தீண்டத்தகாதவன் தரையில் குப்புறப் படுத்து தனது நிழல்
பார்ப்பான் மீது விழுவதை தவிர்க்க வேண்டும்.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 25 (தமிழ்),
நிழல் பட்டாலே தீட்டுப்பட்டுவிடும் என்று வளர்க்கப்பட்ட ஒருவன் தற்போது குதிரையில்
ஒரு தீண்டத்தகாதவன் கம்பீரமாக செல்வதை ஏற்றுக் கொள்வானா? இந்த மனநிலைதான் தற்போது பிரதீப் ரத்தோட்டை கொலை செய்யத் தூண்டியுள்ளது.
தீண்டத்தகாதவர்கள் குதிரை மீது ஊர்வலம் வருவதை தடுக்கச் சொல்கிறது. இது அப்பட்டமான தீண்டாமையின் நேரடி வடிவமாகும்.
இந்தியக் கிராமங்களில் தீண்டத்தகாதவர்கள்
* நிலம், கால்நடைகள் போன்ற செல்வங்கள்
சேர்ப்பது குற்றம்
* சுத்தமான உடை உடுப்பது, ஷீ அணிவது, கைக் கடிகாரம் அணிவது அல்லது தங்க நகை அணிவது குற்றம்
* ஓர் இந்துவின் முன்னால் நாற்காலியில் அமர்வது குற்றம்
* கிராமத்தின் வழியே குதிரை மீதோ, பல்லக்கிலோ அமர்ந்து செல்வது குற்றம்
* கிராமத்தின் வழியே ஊர்வலத்தை நடத்திச் செல்வது குற்றம்.
* சுத்தமான உடை உடுப்பது, ஷீ அணிவது, கைக் கடிகாரம் அணிவது அல்லது தங்க நகை அணிவது குற்றம்
* ஓர் இந்துவின் முன்னால் நாற்காலியில் அமர்வது குற்றம்
* கிராமத்தின் வழியே குதிரை மீதோ, பல்லக்கிலோ அமர்ந்து செல்வது குற்றம்
* கிராமத்தின் வழியே ஊர்வலத்தை நடத்திச் செல்வது குற்றம்.
இப்படி தீண்டத்தகாத சாதியினர் மீது பல்வேறு நிபந்தனைகளை
விதித்து அதன்படிதான் அவர்கள்
வாழ வேண்டும் என விதி வகுத்து
வைத்தனர் உயர் சாதியினர் என அன்றைய இந்தியச் சூழலை
அம்பேத்கர் பதிவு செய்துள்ளார்.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 25 (தமிழ்), பக்கம் 36-37.
பார்ப்பனர்களா நேரடியாக தாக்குகின்றனர் என சிலர் வாதிடக் கூடும். மனுநீதியை ஒரு வாழ்க்கை நெறியாக உருவாக்கியவர்கள் பார்ப்பனர்களே. அவர்கள் வகுத்து வைத்த நீதியைத்தான் மற்ற எல்லோரும் கடைபிடிக்க வேண்டும்
என சட்டம் வகுத்தவர்களும் அவர்களே. இவர்கள் வகுத்த சட்டங்களை
ஒரு மன்னன் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அந்த மன்னனையே தண்டிக்கும்
அதிகாரத்தை பார்ப்பனர்கள் கொண்டிருந்தனர்.
கீழ்சாதியைச் சேர்ந்த ஒரு மனிதன் பேராசை காரணமாக மேல் சாதித் தொழிலைச் செய்து
வாழ்ந்தால் மன்னன் அவனுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து அவனை நாடு கடத்த
வேண்டும் (மனு: 10-96)
சுருக்கமாகச் சொன்னால் மேல்சாதிக்காரனைப் போல ஒரு கீழ்சாதிக்காரன் வாழ
முயலக்கூடாது என்பதுதான் மனுவின் சட்டம்.
இந்தச் சட்டத்தை மன்னன் செயல்படுத்த வேண்டும் என மனு கட்டளையிடுகிறான்.
சாதிகள் குழப்புவதைத் தடுப்பதன் மூலம் …… மன்னனின்
அதிகாரம் வளர்கிறது. அவன் இவ்வுலகிலும் மறு உலகிலும் நற்பேறு
பெருகிறான் (மனு: 8-172)
பார்ப்பன வர்ணாசிரம சட்டங்களை அமுலாக்குவதில் மன்னன் எவ்வாறு நடந்து கொள்ள
வெண்டும் என மனு மன்னனுக்கு எடுத்துக் கூறுகிறான்.
மன்னன் தனது விருப்பு வெறுப்புகளைக் கருதாமல் யமனைப் போலவே செயல்பட வேண்டும். அதாவது அவன் மரண நீதி தேவைதையான யமனைப் போல பாரபட்சமற்றவனாக இருக்க
வேண்டும் (மனு: 8-173)
இந்த விசயத்தை மன்னனின் புனிதமான கடமை உணர்வுக்கு விட்டுவிட மனு விரும்பவில்லை. மன்னனுக்கு இதை மனு கடமையாக்குகிறான். மன்னனுக்கு
பின்வருமாறு கட்டாயப் பொறுப்பை மனு அளிக்கிறான்.
மன்னன், வைசியனை வர்த்தகம்,
கடன் கொடுத்தல், நிலத்தில் சாகுபடி செய்தல், கால்நடை வளர்த்தல் ஆகிய தொழில்களைச் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.
சூத்திரனை இரு பிறப்பாளர்களுக்குப் பணிவிடை செய்யுமாறு உத்தரவிட
வேண்டும். (மனு: 8-410)
மனு இது குறித்து மேலும் கூறுகிறான்.
வைசியர்களும் சூத்திரர்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யுமாறு
மன்னன் கவனமாக கட்டாயப்படுத்த வேண்டும். ஏனென்றால்
இந்த இரண்டு சாதிகளும் தங்கள் கடமைகளிலிருந்து விலகினால் இந்த உலகம் முழுவதிலுமே
பெரும் குழப்பம் ஏற்படும். (மனு: 8-418)
வைசியர்கள் சூத்திரர்களுக்கே இந்த நிலை என்றால் நான்கு வர்ணத்திற்கு வெளியே தள்ளப்பட்ட
தீண்டத்தகாதவர்களின் நிலை பற்றி கூறவா வேண்டும்.
மன்னன் இந்தக்கடமைப் பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் என்ன செய்வது? அத்தகைய மன்னனை ஒழித்துவிட வேண்டும் என்கிறான் மனு. காரணம்
நால்வருண சட்டம் மனுவின் கருத்துப்படி எல்லாவற்றிலும் உயர்ந்தது.
சத்திரியர்கள் பிராமணர்களிடம் எந்த விதத்திலாவது அகந்தையுடன் நடந்து கொண்டால்
பார்ப்பனர்களே அவர்களைத் தண்டிப்பார்கள்; ஏனென்றால்,
சத்திரியர்கள் பார்ப்பனர்களிடமிருந்துதான் தோன்றினார்கள். (மனு: 9-320).
சத்திரியர்கள் பார்ப்பானர்களிடத்திலிருந்து தோன்றியதால் அவர்கள் பார்ப்பனர்களுக்கு
அடங்கிப் போகிறார்கள். (மனு: 9-321).
இப்படி, மன்னனுக்கு மேலாக நின்று கொண்டு நால்வருண
தர்மத்தை பார்ப்பனர்கள் நடைமுறைப்படுத்தியதன் விளைவாகத்தான் பார்ப்பன இந்து
மதத்தில் ஏற்றத்தாழ்வான படிநிலைச் சாதி அமைப்பு முறையும் ஒவ்வொரு சாதிக்கான தர்மமும்
இன்றுவரை நிலைபெற்று நீடிக்கின்றன.
தொடர்புடைய
பதிவுகள்
- மாப்பிள்ளை
குதிரையில் வந்தால் குற்றமா?
- Why Dalits are fighting for the right to ride a horse - Times of India
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!