Sunday, January 6, 2019

தாயின் பெருமை!

தாய்ப்பசு தனது கன்றை ஈன்றவுடன் அதன் மீது படிந்துள்ள சளி போன்ற சவ்வு உள்ளிட்ட கழிவுகளையும் மற்ற பிற அழுக்குகளையும் தனது நாவாலேயே நக்கி நக்கி சுத்தப்படுத்துவதைப் பார்க்கும் போது ஒரு சிலருக்கு வேண்டுமானால் அது அருவறுப்பாகத் தோன்றலாம். தத்தித் தத்தித் தள்ளாடி, கன்று வளர்ந்து தானாகவே தன்னை பராமரித்துக்கொள்ளும் வரையில் இந்த அரவணைப்பு தொடர்கிறது. வளர்ந்த கன்று மூப்படைந்து தள்ளாடும் போது தாய்ப்பசுவின் அரவணைப்பை எதிர்பார்க்க முடியாது.

தாயின் மடியிலிருந்து வெளியே வரும் நம்மை ஒரு மருத்துவச்சியோ அல்லது ஒரு செவிலியரோதான் முதலில் சுத்தப்படுத்துகிறார்கள். அதன் பிறகு நாமும் தவழ்ந்து தவழ்ந்து, தள்ளாடி தள்ளாடி, எழுந்து நடந்து, வளர்ந்து சுயமாய் செயல்படும் அளவுக்கு நாம் வளரும் வரை நமது தாய் நம்மை பராமரிக்க என்னமாய் பாடுபடுகிறாள்!

குழந்தையின் மலமோ - மூத்திரமோ, சளியோ வாந்தியோ அது எதுவானாலும் தாயின் மடியில் போனாலும், தரையில் போனாலும் அக்கழிவுகளை தனது கழிவுகளாகக் கருதுவதால்தான் இவைகள் ஒரு தாய்க்கு அருவறுப்பை ஏற்படுத்துவதில்லை.  அதனால்தான் ஓராயிரம் முறை போனாலும் தயக்கம் ஏதுமின்றி தனது கைகளாலேயே அனைத்தையும் அள்ளி சுத்தம் செய்கிறாள். கைகளால் தொடுவதால் தொற்று வந்து வந்துவிடுமோ என அவள் அஞ்சுவதில்லை. அதற்காக கையுறை எதையும் அணிந்து கொள்வதுமில்லை.

குழந்தையின் ஒழுகும் மூக்குச்சளியை பார்த்துவிட்டு மற்றவர் தங்களது பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொள்ளும் போது, தாய் மட்டும் தனது குழந்தையின் ஒழுகும் மூக்குச் சளியை தனது வலது கையின் இடது கை வாட்டப்படாது என்பதால் கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரல்கள் இரண்டையும் ஒரு சேர மூக்கின் மீது அணைத்தார்போல மிருதுவாய் அழுத்தி சளியை வழித்து தூர எரிந்துவிட்டு தனது முந்தானையால் துடைத்து விடுவாளே அவள் அல்லவோ தாய்!

எங்கோ பிறந்தவனை இணையாய் ஏற்றதனால், கருவுற்று, ஒரு குழந்தைக்குத் தாயாகி, அக்குழந்தையும் வளர்ந்து ஆளாகி தனிக்குடித்தனம் சென்ற பிறகு தாய் தள்ளாடும் வயதைத் தொடுகிறாள். மூப்பின் காரணமாக தனக்கு வாய்த்த இணையும் இவளோடு தள்ளாடும் போது யாரை யார் தாங்கிப் பிடிக்க! தாய்மை எப்போதும் போற்றுதலுக்குரியதல்லவா! அதனால்தானோ என்னவோ, தனக்கு வாய்த்த இணையே இப்போது இந்தத் தாய்க்கு மற்றோரு குழந்தையாகிறான். அன்று எட்டு மாத குழந்தையை பராமரித்தவள் இன்று எண்பது வயது குழந்தையை பராமிரிக்க வேண்டியவளாகிறாள்.

அந்தக் குழந்தையின் மூக்குச் சளி ஒரு பிஞ்சுக் குழந்தையின் சளி. அதில் நாற்றம் அவ்வளவாக இருக்காது. ஆனால் இந்தக் குழந்தையின் மூக்குச் சளியோ - மூக்குச் சளி மட்டுமல்ல, தொண்டைச் சளி மார்ச்சளியும் சேர்ந்த முற்றிய நாற்றமடிக்கும் கெட்டிச் சளி. அந்தக் குழந்தையின் சளியை துணியால் துடைத்தாலே போதும். ஆனால் இந்தக் குழந்தையின் கோழை கலந்த கட்டி கட்டியாய் கொத்துக் கொத்தாய் கொட்டும் சளியை நீருள்ள கிண்ணம் ஒன்றிலோ அல்லது கேரி பேக்கிலோபிடிக்க வேண்டும். தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்ட சளியை வெளிக்கொணர இந்தக் குழந்தை படும் அவஸ்தையைப் பார்க்கும் போது அதுஸ்டிக்டா பல்மோனாரியாவை1 நினைவு படுத்தும். சளியை வெளிக் கொணர இக்குழந்தை தொண்டையை காறும் போது எழும் ஓசை பிறருக்கு படு பயங்கரமாய் இருக்கும். அதைக் கேட்க சகியாமல் பிறரோ தங்களது காதுகளை பொத்திக் கொள்வார்கள். அருகில் இருந்தால் சளியைப் பார்க்க சகிக்காது என்பதால் ஓடி ஒளிந்து கொள்வார்கள்.

அந்தக் குழந்தையின் மலமோ பால் வாடையுடன் கூடிய இளகிய மலம். அதிகம் நாற்றம் இருக்காது. இந்தக் குழந்தையின் மலமோ நாற்பட்டுப்போனதால் மூக்கையே துளைக்கும் துர்நாற்றம் கொண்டிருக்கும். அந்தக் குழந்தையின் மலத்தை தண்ணீர் விட்டு அலம்பினாலே துணியில் ஒட்டிக் கொண்டவைகூட சுலபமாய் நீங்கிவிடும். ஆனால் இந்தக் குழந்தையின் மலம் துணியில் அப்பிக் கொண்டால் அதை நீக்க கட்டை துடைப்பம் வேறு தேவைப்படும். மலம் வருவது முன்கூட்டியே தெரிந்தால்கூட அண்டர்பேடையாவது2 (under pad) வைக்கலாம் - துடைக்கும் வேலை சற்றே சுலபமாகும். என்ன செய்ய? இந்தக் குழந்தைக்குத்தான் மலம் வருவதே தெரியாதே! அந்தக் குழந்தையின் குதத்தை வெதுவெதுப்பான நீரைக் கொண்டு அலம்பினாலே போதும். ஆனால் இந்தக் குழந்தையின் குதத்தை பஞ்சைக் கொண்டு பதமாய் துடைக்க வேண்டும்.

அந்தக் குழந்தையின் மூத்திரம் வெது வெதுப்பாய் இருக்கும். ஆடைகள் நனைந்தாலும் சிறிது நேரத்தில் உலர்ந்துவிடும். வாடையும் மறைந்து விடும். ஆனால் இந்தக் குழந்தையின் மூத்திரத்தில் பல்வேறு உப்புகளின் மூலக்கூறுகள் கலந்திருப்பதால் ஆடைகள் உலர்ந்தாலும் நாற்றம் மட்டும் மறையாது.

அந்தக் குழந்தையின் உடுப்புகள் அனைத்தும் மூத்திரத்தாலும் மலத்தாலும் முங்கிப் போய் அலசிப்போட தாயால் முடியவில்லை என்றால் ஆயாக்களை அமர்த்திக் கொள்ளலாம். ஆனால் இந்தக் குழந்தையின் துணிகள் மூத்திரத்தாலும் மலத்தாலும் முங்கிப் போனால் அலசிப் போட எந்த ஆயாவையும் நாட முடியாதே!

அந்தக் குழந்தையின் உயிர்ப் பொருள் மாறுபாடு (metabolism) வளர்ச்சிக்குரியது. குழந்தை வளர வளர தாயின் பாரம் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கும். ஆனால் இந்தக் குழந்தையின் உயிர்ப் பொருள் மாறுபாடோ அழிவை நோக்கியது. தடியூன்றும் வயதில் இந்தத் தாயின் பாரம் கூடிக் கொண்டே போகும்.

அந்தக் குழந்தைக்கு பற்கள் இன்னும் முளைத்திருக்காது. சாதத்தைப் பிசைந்து உருட்டி வாய் கொள்ளுமட்டும் திணித்தாலும் குழந்தை அதை விழுங்கி விடும். ஆனால் இந்தக் குழந்தையின் பற்களோ இற்றுப் போனவை. சாதத்தைப் பிசைந்தால் மட்டும் போதாது, அதைக் கஞ்சியாக்கி ஒவ்வொரு மொடக்காக வாயில் மெல்ல மெல்ல ஒரு மேசைக் கரண்டி கொண்டு ஊட்ட வேண்டும்.

அந்தக் குழந்தைக்கு உணவு தொண்டையில் அடைத்துக் கொண்டு புரை ஏறினால் தலையில் தட்டலாம். ஆனால் இந்தக் குழந்தைக்கு கஞ்சி உள்ளே செல்லாமல் விக்கினால் தலையில் தட்டக்கூடாது. நெஞ்சுக்கூட்டை  மென்மையாய் வருடி விட வேண்டும். அந்தக் குழந்தைக்கு பிடிக்கிறதோ இல்லையோ, எல்லா வகையான உணவுகளையும் வலுக்கட்டாயமாக ஊட்டலாம் அந்தக் குழந்தை வளர வேண்டுயதல்லவா? ஆனால் இந்தக் குழந்தைக்கு எது ஒத்துக் கொள்கிறதோ அதை மட்டும்தான் உண்ணக் கொடுக்க வேண்டும் இந்தக் குழந்தை உயிரோடு இருக்க வேண்டுமல்லவா?

அந்தக் குழந்தைக்கு காய்ச்சல் என்றால் மார்போடு அணைத்து கதகதப்பைக் கொடுப்பாள் தாய். ஆனால் இந்தக் குழந்தைக்கு காய்ச்சல் என்றால் பாராசெட்டாமோலைத் தவிர வேறெதையும் இந்தத் தாயால் தரமுடியாதே! இந்த பாராசெட்டாமோலைக்கூட தொண்டைக்குள்ளே தள்ள இந்தத் தாய் படாத பாடு பட வேண்டும். வாயில் ஊற்றப்படும் தண்ணீர், மாத்திரை போடுவதற்கு முன்பே உள்வாங்கிவிடும். வாயில் போடப்பட்ட மாத்திரை உமிழ் நீரில் ஊரி அதன் கசப்புத் தன்மையால்  குபுக்கென்று வெளியே வந்து விழும். எப்பாடு பட்டாவது பாராசெட்டாமோலை திரும்ப வாய்க்குள் தள்ளிவிடுவாள் இந்தத் தாய்.

அந்தக் குழந்தைக்கும் சில சமயம் வாயிலிருந்து எச்சில் வழியும். அதை துணி கொண்டு அழுத்தித் துடைப்பாள் தாய். இந்தக் குழந்தைக்கு எச்சில் வழியாது -  கொட்டிக் கொண்டே இருக்கும். அதை அழுத்தித் துடைத்தால் உதட்டுத் தோலும் சேர்ந்தே பிய்ந்து வரும் என்பதால் உதட்டை மென்மையான துணி கொண்டு ஒற்றி ஒற்றி எடுக்க வேண்டும் அதுவும் அடிக்கடி.

அந்தக் குழந்தையின் தாயால் முடியவில்லை என்றால் அந்தத் தாய்க்குத் தாய் வந்து உதவி செய்வாள். ஆனால் இந்தக் குழந்தையின் தாயால் முடியவில்லை என்றால் எந்தத் தாயை இவர் நாடுவார் பாவம்! ஒரு வேளை தான் பெற்ற மகள் ஒருத்தி இருந்தால் அவ்வப்போது இந்தத் தாய்க்கு உதவிக்கரமாவது நீட்ட முடியும்.

அந்தக் குழந்தை இவ்வுலகில் பிரவேசித்தவுடன் ஓய்வு தேவைப்படும் போது தாயின் மடியில்தான் தலை வைத்து உறங்குகிறது. இந்தக் குழந்தைகூட தாயின் மடியில்தான் தலைவைத்து ஓய்வை நாடுகிறது - இவ்வுலகை விட்டுச் செல்லும் போது.

கடந்த பதினான்கு ஆண்டுகளாக கடுமையான நுரையீரல் (COPD) பாதிப்பால் மூச்சுவிட மிகவும் சிரமத்திற்குள்ளாகியும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்பால் பெருஞ்சுரப்பி (prostate gland) கோளாரினால் மூத்திரக் குழாய் சுருக்கப்பட்டதனால் மூத்திரம் வெளியேறுவதற்காக சிறுநீர் இறக்குங் குழாயை (SPC catheter) சுமந்து கொண்டு, தனது இறுதி காலத்தில் நடக்கவும் முடியாமல் தரையில் ஒரு குழந்தையைப் போல தவழ்ந்து தவழ்ந்து இறுதியில் அசைய முடியாமல் படுக்கையிலேயே கிடந்த எனது தந்தைதான் இந்தக் குழந்தை. எனது தாய்தான் இந்தத்தாய்.

இந்தக் குழந்தைதான் மார்ச் 2, 2013 சனிக்கிழமை அன்று தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டது.

இப்படிப்பட்ட குழந்தைகளைப் பார்த்து போய்த் தொலையாதாஎன சிலர் எண்ணும் இக்காலத்தில்தான், தனது பச்சிளம் குழந்தையை பறிகொடுத்தவளைப் போல கண்கள் குளமாகி விக்கித்து நிற்கிறாள் எனது தாய்!

ஓடி ஆடி ஓயாது உழைத்த இந்தத் தாய் கடந்த பிப்ரவரியில் மயங்கி சுருண்டு கீழே விழுந்தாள். அன்றிலிருந்து அவள் மற்றுமொரு குழந்தையானாள். விழுந்த அன்றிலிருந்து இக்குழந்தையின் ஒரு பாதி செயலிழந்து போனதால் தான் பிறந்த மண்ணுக்கேச் சென்ற இக்குழந்தைக்கு தனது மகளும் மருமகனுமே தாயும் தந்தையுமானார்கள். இந்த மகளும் மருமகனும் இல்லை என்றால் அவள் என்றோ காற்றில் கலந்திருப்பாள். இந்த மகள் இந்தத் தாய்க்கு மூன்றாவது மகள். மருமகனோ தனது சொந்த அண்ணன் மகன்.

ஒரு பாதி செயலிழந்து போனாலும், பல்துலக்காமல், குளிக்காமல் இக்குழந்தைக்கு அன்றைய பொழுது தொடங்காது. குரல்வலையும் தளர்ந்து போனதால் மலம்-மூத்திரம் வந்தால்கூட இந்தக் குழந்தையால் தெரிவிக்க முடியாது என்பதால். மூத்திரப் பையும் டயாபெரும் (diaper)3 இக்குழந்தைக்கு உற்ற துணையாகின. சைகை மட்டமே இக்குழந்தையின் பேச்சு மொழியானது.
எனது தாய் முனியம்மாள்

இக்குழந்தையின் சைகை மொழியைப் புரிந்து கொண்டு, அவ்வப்பொழுது மூத்திரப்பையை காலி செய்து, அன்றாடம் இக்குழந்தைக்கு பல்துலக்கி, மலத்தால் அப்பிப்போன டயாபெரை நீக்கி, பிறகு வெந்நீரில் குளிப்பாட்டி புது டயாபெர் அணிவித்து, அழுக்குத் துணிகளை அலசிப்போட்டு அதன் பிறகு தேவையான அளவு உணவும் கொடுத்து எப்படியும் இக்குழந்தை எழுந்து நடக்கும், தம்மிடம் பேசும் என்கிற நம்பிக்கையோடு இக்குழந்தையைப் பராமரித்தனர் இவளது மகளும் மருமகனும்.

மாதங்கள் கடந்தன. ஆனால் இக்குழந்தையால் கடைசிவரை எழவே முடியவில்லை. மாறாக இந்தக் குழந்தையும் 05.01.2019 அன்று தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டது. எரிந்து காற்றிலே கலந்து போன எனது தாயை நான் வானத்திலே தேடிக் கொண்டிருக்றேன் அவள் முகம் தெரியாதா என்று!

“நீ என்னை வானத்தில் தேடாதே. முடங்கிப்போன முதியோர்களை சுமப்பதால் என்ன பயன் எனக் கருதும் இக்காலத்தில், என்னை தனது குழந்தையைப் போல பார்த்துக் கொண்ட எனது மகளையும் மருமகனையும் பார். நான் தெரிவேன்!” என மாந்தமையின் பெருமையை உணர்த்திவிட்டுப் போயிருக்கிறாள் எனது தாய். 
-------------------------------------------------------------
1. தொண்டைக் குழியில் ஒட்டிக் கொண்ட சளியை வெளிக் கொணர பெரிதும் பயன்படும் ஹோமியோபதி மருந்து
2 & 3 நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருப்பவர்கள் மலம் கமிக்கும் போது பயன்படுத்தப்படும் பஞ்சு நிரப்பப்பட்ட ஒரு வகை துணி 

தொடர்புடைய பதிவுகள்
எனது தந்தையின் இறுதி மூச்சு!
கணவனே குழந்தையாய்.....

3 comments:

  1. Hi tο every body, it's my first ɡo too see of tһis webpaɡe; this web site incluⅾes amazing and truly excellent data in favor
    of visitors.

    ReplyDelete
  2. I waѕ suggeѕted this blog by my ϲousin. I'm not sᥙre whether this
    poѕt isѕ written by him as nobody еlse know such detailed about my trouble.
    You aree wonderful! Thanks!

    ReplyDelete