Wednesday, June 12, 2019

அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!......தொடர்-2


என்னதான் சொல்கிறது வாஸ்து சாஸ்திரம்?

வீட்டு மனையை 64 அல்லது 81 கட்டங்களாக சதுர வடிவில் பிரிக்க வேண்டுமாம். இந்தக் கட்டங்களில் பல்வேறு தேவர்கள் வசிக்கிறார்களாம் கட்டங்களின் மையப் பகுதிக்குப் பெயர் பிரம்மஸ்தானமாம். இங்கு மட்டும் 45 தேவர்கள் வசிக்கிறார்களாம்.


வடக்கே குபேரனும் தெற்கே யமனும் கிழக்கே ஆதித்தனும் மேற்கே வருணனும் வசிக்கிறார்களாம். ஏற்கனவே தேவர்கள் வசிக்கிற இடத்தில் நாம் எப்படி குடியிருப்பது என கேள்வி எழுகிறதா? கேள்வி எழவே கூடாது. அவர்கள் உங்களுக்கு நன்மை செய்யத்தான் இருக்கிறார்கள். எதை எதை எங்கே வைக்கிறீர்கள் என்பதைப் பொருத்து அவர்கள் உங்களுக்கு நன்மை செய்வார்கள். தவறாக வைத்தால் கேடு செய்வார்கள். 


அக்கினி மூலையில் (தென் கிழக்கு) சட்டியை வை என்கிறான் வாஸ்து. அங்கே அடுப்பு வைத்து சமைத்தால்தான் சோறு வேகுமாம். இல்லை என்றால் நீங்கள் வெந்து – நொந்து போவீர்களாம். மேலும் இந்த மூலையில் படுக்கவே கூடாதாம். படுத்தால் தூக்கமே வராதாம்.

உழைத்துக் களைத்தவன் தன் ஆழ்ந்த உறக்கத்தால் ஓடும் ரயிலின் ஓசையையே தனது மூச்சுக் காற்றால் விஞ்சுவது பாவம் அந்த வாஸ்துவுக்குத் தெரியாது போலும். காட்டிலேயும் மேட்டிலேயும் போய்ப் பார். உழைப்பவன் எப்படி உறங்குகிறான் என்று. உறக்கத்திற்கும் மூலை பற்றி பேசுவது மூளையற்றவர்களின் வேலை.

அடுத்து ஈசான மூலையில் (வட கிழக்கு) அண்டாவை வை என்கிறான். எதற்கு? தண்ணீர் நிறப்பத்தான். அங்குதான் நல்ல நீர் வளம் இருக்குமாம். ஆத்தூரிலே வாஸ்துவைக் கேட்டுத்தான் போர் போடுகிறான் ஓராயிரம் அடிக்கு மேலே. பானியைக் காணோம். பவுடர்தான் மிஞ்சியது. எதற்கும் உதவாது என்றாலும் அதைக்கூட உன் வாயுபகவான்தான் அள்ளிச் சென்றான்.

அடுத்து வாயு மூலையில் (வட மேற்கு) நம்மை குந்தச் சொல்கிறான். எதற்கு? அங்கே குந்தினால்தான் வாயு பகவான் தன் பரிவாரங்களோடு வெளியே வருவாராம். இல்லை என்றால் எனிமா கொடுத்து எடுக்க வேண்டி வருமாம். காலையில் சென்னை ரயிலடி ஓரங்களைப் போய்ப் பார். தட தட ஓசையிலும் தடங்கலின்றி தள்ளுகிற உழைப்பாளிக்கு ஏதடா வாயு மூலை?

அடுத்து பித்ரு மூலையில் (தென் மேற்கு) படுக்கையைப் போடனுமாம். அங்கே கூடினால்தான் குழந்தை பாக்கியம் உண்டாம். எல்லாம் பார்த்தவர்கள் பயனேதுமின்றி மருத்துமனை படிக்கட்டுகளில் காத்துக் கிடக்கிறார்கள் எதிர்கால வாரிசுக்காக. ஏதும் பார்க்காதவனுக்கோ ஓலைக் குடிசையிலும் ஒன்றுக்குப் பத்தாய் பெருகுகிறது வாரிசு.

 
படத்தில் உள்ளவாறு வாஸ்து குப்புறப் படுத்தானாம். இதை வைத்து மூலைகளுக்கு நாமகரணம் சூட்டி அதற்கு மேலே பலன்களை ஏற்றுகிறார்கள். கேட்கிறவன் கேனப்பயலா இருக்கிற வரைக்கும் கேப்பையில் நெய் வடியத்தானே செய்யும்.

இப்படி மூலைக்கு ஒரு பலனைச் சொல்லி நம்மை முட்டாளிக்கி, ‘மீறினால்’ என்ன நடக்கும் தெரியுமா? என அச்சமூட்டி தன் ‘நூல்’ பையை நிரப்பிக் கொள்கிறது ஒரு கூட்டம். அச்சமூட்டி பணம் பறிப்பதுதானே திருடர்களின் வேலை. திருடனையை வீட்டிற்கு அழைத்து வந்து அள்ளிக் கொடுக்கிறவன் இருக்கிறவரைக்கும் வாஸ்துவுக்கு மரணமேது!

தொடர்புடைய பதிவுகள் 


2 comments:

  1. இப்போவெல்லாம் பையை நிரப்பு கொள்பவர்கள் திராவிட குஞ்சுகள் தான்

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கட்டுரைக்கு தொடர்பற்ற பதிலாக இருக்கிறதே!

      Delete