Saturday, June 15, 2019

அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!.......இறுதிப் பகுதி

அதிகாலை மூன்று மணி. சொந்தமெல்லாம் வந்தாச்சு. பசுவும் கன்றும் வண்டியிலே வந்து இறங்கியாச்சு. கணவனும் மனைவியும் வேட்டி புடவை அலங்காரத்துடன் முகூர்த்தத்திற்குத் தயார். ஆம். கணவனும் மனைவியும் இங்கே மீண்டும் ஒரு முறை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். எதுக்கு இதெல்லாம்? உஷ். வாயை மூடு!

எல்லாப் பொருளும் தயாரா என மீண்டும் ஒரு முறை சோதிக்கிறான். ஏதாவது ஒன்று குறைந்தாலும் இந்த நேரத்தில் எங்கே போய் தேடுவது என்பதைவிட அது இல்லாமல் பூஜை செய்தால் ஏதாவது ஆகிவிடுமோ என்கிற அச்ச உணர்வு அவனை துரத்துகிறது. பதட்டமடைகிறான். மணி நான்கு ஆகியும் ஐயர் வரவில்லை. நேரம் ஓடிக் கொண்டிருந்தது. ஐயர் வந்த பாடில்லை. மேலும் படபடப்பு. தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அவுட் ஆப் கவரேஜ் என்றது அலை பேசி. பதட்டம் மேலும்கூட அக்கம் பக்கம் நிற்பவர்கள்கூட யார் என்று அவனுக்குத் தெரியவில்லை. வேர்த்து விறு விறுத்துப் போனது. ஒரு வழியாக ஐந்து மணிக்கு ஐயர் வந்த போது பெரு மூச்சு விட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.

அக்கினி வளர்க்க செங்கற்களை அடுக்கி அடுப்பை தயார் செய்தார் ஐயர். அடுத்து வாழை இலையை விரித்து அரிசியைப் பரப்பி கழுத்துள்ள பித்தளைக் குவலையை வைத்து அதன் மேல் தேங்காயை குத்தி நிறுத்தி வெற்றிலையோடு குறுக்கும் நெடுக்குமாக நூலால் கட்டுப் போட்டார். நீங்கள் எல்லாம் நூலுக்கு கட்டுப்பட்டவர்கள்தான் என்பதை சொல்லாமல் உணர்த்தியது அவர் போட்ட கட்டு. எடுபிடி வேலைகளுக்கு ஒரு அப்ரண்டிஸ் ஐயரும் உடன் வந்து ஐயரின் ‘தொழிலை’ கச்சிதமாய்க் கற்றுக் கொண்டிருந்தார்.

ஹோம குண்டத்தில் தீ மூட்டினார் ஐயர். தவக்ளா தளதளா தவக்ளா தளதளா என ஐயர் மந்திரம் சொல்ல அதையே இவனும் சொல்ல முயற்சிக்க அடுத்த மந்திரத்திற்குத் தாவினார் ஐயர். அவன் சொல்வது இவனுக்குப் புரியவில்லை. இவன் சொல்வது அவனுக்குப் புரியவில்லை. ஒட்டு மொத்தத்தில் எவருக்கும் புரியாத ஒரு பாஷையில் மந்திரத்தை ஓதி ஆறு மணக்கு ஹோமத்தை முடித்தார். காலை 4-6 மணிதான் ஹோமத்திற்கான நேரம். அதை மீறினால்….பிறகு அண்டகாசுரன்தான்.

பசு கன்று இரண்டையும் வீட்டின் உள்ளே ஓட்டி வந்தனர். சாணியும் போடவில்லை. மூத்திரமும் போக வில்லை. ஏற்கனவே வண்டிப் பயணத்தின் போதே எல்லாவற்றையும் கழிந்திருக்கும் போல. வெளியில் கட்டச் சொல்லி வாயில் எதை எதையோ திணித்தார்கள்.

கணவன்-மனைவி இருவரும் ஜோடியாக அமர்ந்தனர். இருவருக்கும் கல்யாணத்தை செய்து வைத்தார். இதற்குள் ஒரு அரை மணி நேரம் ஓடிவிட்டது. மீண்டும் பசுவையும் கன்றையும் புட்டத்தில் குத்திக் கொண்டே உள்ளே ஓட்டி வந்தனர். சாணி-கோமியம் கான்டிராக்ட் கண்டிஷன் என்பதால் இவற்றைத் தருவது  மாட்டு ஏஜென்டின் கடமை. அய்யய்யோ! மாடு என்று சொல்லி விட்டேனே! ஏதேனும் தோஷம் வந்து விடுமோ! இதற்குப் பரிகாரம் செய்தாக வேண்டுமே!. ஐயருக்கான அடுத்த கலெக்சன் ரெடி.

மணி ஏழை நெருங்கும் நேரம். புட்டத்தில் குத்துன குத்தில் தர்..தர..தர..தர் என பசுவிடமிருந்து கோமியம் கொட்ட அதை ஒரு பாத்திரத்தில் நிரப்பிக் கொண்டனர். கோமியத்தோடு தட்தட்டென சாணம் போட ஏதோ பொண்டாட்டி பிரசவித்ததைப் போல பூரிப்படைந்தான் வீட்டுக்காரன். வீடு முழுக்க கோமியம் தெளிக்க முகூர்த்தமும் சரியாய் 7 மணிக்கு முடிந்தது. 6-7 மணிதான் முகூர்த்த நேரம். இதையும் மீறக்கூடாது என்பது பார்ப்பான் வகுத்த விதி. மீறினால்…. அண்டகாசுரன்தான். வீட்டைக் கட்டிப் பார். கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்பார்களே. அது இதுதானோ!

வந்தவர்களுக்கு பந்தி பரிமாறப்பட்டது. அட இவ்வளவு காலையிலேவா? என கேட்கக் கூடாது. வாஸ்து பசியோடு காத்துக் கிடக்கிறானல்லவா.
ஒரு வழியாய் கிரகப் பிரவேசம் பேஷா முடிந்தது.

ஏதோ வீட்டைக் கட்டினோமா. குடி போனோமா என்றில்லாமல் எதற்கு இவ்வளவு பூஜை புனஸ்காரங்கள்? இங்கே இரண்டு முக்கியமான நிகழ்வுகள் கவனிக்கப்பட வேண்டியவை. ஒன்று பசுமாட்டை வீட்டிற்கு உள்ளே ஓட்டி வருவது. மற்றொன்று வீடு முழுக்க கோமியம் தெளிப்பது. இவை இரண்டும் தீட்டுக் கழிப்பு நிகழ்வுகள். புது வீட்டில் எதற்காக தீட்டுக் கழிக்க வேண்டும் என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த வீட்டைக் கட்டிய தொழிலாளர்களில் சண்டாளர்கள் அதாவது பறையர்கள் இருக்கலாம். வீடு வேலை நடக்கும் போது இவர்களில் யாராவது அங்கு வந்து போயிருக்கலாம். அப்படி அவர்கள் வந்து போனதினாலே வீடு அசுத்தமாகி விட்டது. அதாவது தீட்டாகி விட்டது. இதற்காகத்தான் இந்த நிகழ்வுகள். எனவே மேற்படி முறையில் புது மனை புகு விழா நடத்துவது என்பது ஒரு தீட்டுக் கழிப்பு நிகழ்வே!

இப்படித்தான் நடத்த வேண்டும் என்பது மனு வகுத்து வைத்த சட்டம். மனு சொல்கிறான்.

“வீடு முதலானவற்றிற்கு சண்டாளச் சாதிகளால் அசுத்தம் நேரிட்ட போது விளக்குதல், மெழுகுதல், கோமூத்திரம் தெளித்தல், கொஞ்சம் மேல்மண்ணையெடுத்தப்பாற் போடுதல், பசு மாட்டையொருநாள் வசிக்கும்படி செய்தல் இவ்வைந்தினாலும் அந்த பூமி பரிசுத்தப்படுகிறது”   (மனு 5-124)

மேற்கண்ட முறையில் கிரகப் பிரவேசம் செய்வது தீண்டாமையை கடைபிடிக்கும் ஒரு வன் கொடுமை. அதற்காக இதை ஏற்பாடு செய்த வீட்டு உரிமையாளரையும் செய்து வைத்த ஐயரையும் ஏன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யக் கூடாது?

இன்று இந்தப் பூசை புனஸ்காரங்களை சண்டாளர்களே செய்வதுதான் ஆகக் கொடுமையிலும் கொடுமை.

முற்றும்.

ஊரான்

குறிப்பு: 1. சண்டாளன் என்பவன் தீண்டத்தகாத பறையன் என்கிறான் மனு. சூத்திர ஆணுக்கும் பார்ப்பன பெண்ணுக்கும் பிறந்தவன்தான் சண்டாளன் (மனு 10-30)

2. மனு 5-124 மிக ஆழமான, நுட்பமான பொருள் கொண்டது. அதை நடைமுறையில் இன்றும் நாம் காண முடியும். இது குறித்து வேறு ஒரு சமயத்தில் விரிவாகப் பேசலாம்.

3. இந்தக் கட்டுரைத் தொடர் நண்பர் ஒருவரின் இல்லத் திறப்பு விழாவில் உரையாற்றுவதற்காக தயார் செய்யப்பட்டது.

தொடர்புடைய பதிவுகள்:

No comments:

Post a Comment