Wednesday, June 12, 2019

அண்டகாசுரனும் அடுக்குமாடி குடியிருப்பும்!


முன்னொரு காலத்திலே அண்டகாசுரன் என்றொரு அசுரன் இருந்தானாம். வருவோர் போவோரையெல்லாம் வம்புக்கு இழுப்பதுதான் அவனுக்கு வேலையாம். சண்டை போடாமல் அவனால் சும்மா இருக்க முடியாதாம். ஒரு நாள், சண்டைக்கு யாரும் கிடைக்காததால். சிவனையே சண்டைக்கு அழைத்தானாம். சிவன் என்ன லேசுபட்ட ஆளா. அழிப்பதுதானே அவனது தொழில். அதனால் அண்டகாசுரனோடு சிவன் மோதினானாம். இருவரும் பலமாக முட்டி மோதிக் கொண்ட போது அண்டகாசுரனுடைய நெற்றியிலிருந்து விழுந்த வேர்வைத் துளியிலிருந்து ஒரு கரிய பூதம் தோன்றியதாம். அந்த பூதத்திற்கு வாஸ்து என்று பெயராம்.

அது ஆகோரப் பசி கொண்ட பூதம் என்பதால் அண்டகாசுரனையே விழுங்கி விட்டதாம். பசி அடங்காமல் கண்ணில் பட்டதையெல்லாம் விழுங்கத் தொடங்கியதாம். அடுத்து இருப்பதோ லோகம் மட்டும்தான். இதைக் கண்டு அச்சமுற்ற தேவர்கள் பிரம்மாவிடம் முறையிட்டார்களாம். புதுவீடு கட்டுபவர்கள் சாஸ்திரப்படி வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்து சாப்பாடு போட்டால் பூதத்தின் பசியைப் போக்க முடியும் என வழி சொன்னானாம் பிரம்மா. படைப்புக் கடவுள் ஆயிற்றே. அவன் சொல்படிதானே பூதமும் நடந்து கொள்ள முடியும்.

வீடு கட்ட கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரம் பூதத்தின் பெயராலேயே அழைக்கப்பட்டு அதுவே வாஸ்து சாஸ்திரம் எனலாயிற்றாம். எனவே புது வீடு கட்டினால் வாஸ்து சாஸ்திரப்படி கட்டி கிரகப் பிரவேசம் செய்து சாப்பாடு போட வேண்டுமாம். வாஸ்து சாஸ்திரத்தை கடைபிடிக்காமல் வீடு கட்டி, பூஜை எதுவும் செய்யாமல் குடிபோனால் பூதத்தின் பசியை எப்படி போக்க முடியும்? அதுவும் குடி போகும் அன்றைக்கு மட்டும்தான் அந்த பூதத்தின் பசியைப் போக்க முடியுமாம்.

தனது சாஸ்திரத்தை மதியாமல், தனக்கு சாப்பாடும் போடாமல் குடி போனால், பசியோடு அலையும் வாஸ்து பூதம் சும்மா விட்டுவிடுமா? கோபத்தில் அந்தக் குடும்பத்திற்கு பல்வேறு தீங்குகளைச் செய்யுமாம் அந்தப் பூதம். வாஸ்து சாஸ்திரத்தை மதியாமல் சாப்பாடு மட்டும் போட்டுவிட்டு குடி போனாலும் தப்பிக்க முடியாதாம். ஏனென்றால் தனது சாஸ்திரத்தை மதியாமல் வீடு கட்டி போடப்படும் சாப்பாட்டை அது சாப்பிடாதாம்.

என்ன இப்பொழுதே பயம் வந்து விட்டதா? வேறு வழி? பார்ப்பன புரோகிதனைத் தேட வேண்டியதுதான். வேறு யாரையும் வைத்து செய்ய முடியாதே. பாப்பானுக்குத்தானே சாஸ்திரம் தெரியும். அதைச் செய்யும் அதிகாரமும் அவனுக்கு மட்டும்தானே உண்டு.

தொடரும்

No comments:

Post a Comment