Saturday, April 18, 2020

வயிறு காய்கிறது. யார் கொடுப்பார் மளிகைப் பொருளை?

வழக்கமாக எடுக்கும் மாத்திரைகள் தீர்ந்துவிட்டன. 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 'பெல்' மருத்துவமனைக்குச் சென்று வருவதும் பாதுகாப்பானது அல்ல என்பதால் உள்ளூரிலேயே வாங்குவதற்கு முடிவு செய்து, வாலாசாப்பேட்டை கடைவீதிக்குச் சென்று வந்தேன்.  என்னை வழக்கமாக சுமந்து செல்லும் ஸ்கூட்டி படுத்து 10 நாட்கள் ஆகிவிட்டதால் நடைபயணம்தான். கையில் பணம் இல்லை. முதலில் எஸ்பிஐ ஏடிஎம்முக்குச் சென்றேன். அதற்கும் கரோனா போல. படுத்து கிடந்தது. பிறகு இந்தியன் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டு மருந்துக் கடையில் தேவையான மருந்துகளை வாங்கினேன்.

உப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் தீர்ந்து விட்டதால் அதை வாங்குவதற்குக் கடைகளைத் தேடினேன். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. "இனி கடைகள் எதுவும் திறந்திருக்காது‌. காய்கறிகள் உங்கள் வீடு தேடி வரும். மளிகைப் பொருட்கள் வாங்க அப்ளிகேஷன் டவுன்லோட் செய்து வாங்கிக் கொள்ளுங்கள்" என வாகனங்களில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்கள்.

ஒருசில பேக்கரிகள் திறந்திருந்தன. பிரட் உள்ளிட்ட சிலவற்றை மட்டும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். காலை 8 மணி. ஏறு வெயில் வேறு. போகவர 2 கிலோ மீட்டர் தூரம் நடந்ததில் வேர்த்து விறுவிறுத்துவிட்டது. வீட்டிற்குள் நுழைந்து குளியலறைக்குச் சென்று அப்படியே ஷவரில் நனைந்து வெளியே வந்தேன். எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைக்குத்தான்.

மளிகைப் பொருள் வாங்குவதற்காக அவர்கள் சொன்ன அப்ளிகேஷனை கூகுளில் இருந்து டவுன்லோட் செய்தபோது தொலைபேசி எண்ணைக் கேட்டது. கொடுத்தேன். துப்பிவிட்டது.

கடைகளும் இல்லை. அப்ளிகேஷனும் மோடியைப் போல முகம் திருப்பிக் கொண்டது. வயிறு காய்கிறது. யார் கொடுப்பார் மளிகைப் பொருளை?

தொடர்புடைய பதிவுகள்

ஹோமியோபதி: கரோனாவைக் குணப்படுத்துமா?

No comments:

Post a Comment