Thursday, April 9, 2020

நமது குடியுரிமைக்குக் குழி பறித்தது வாஜ்பாய்! குப்புறத்தள்ளுவது மோடி-அமித்ஷா கும்பல்! -----3


குடியுரிமை குறித்து இந்திய அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?

1947 இல் நாடு ‘விடுதலை’ அடைந்த போது, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையும் ஏற்பட்டது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் மக்களின் இடப் பெயர்வு பெருமளவில் நடந்தேறியது. அதன் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் தங்கள் நாடுகளுக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டன.

இந்திய நாட்டை, மதச்சார்பற்ற ஒரு குடியரசாக அமைப்பதற்கு இந்திய மக்கள் உறுதிபூண்டு அரசியல் நிர்ணய சபையில் 26.11.1949 அன்று இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கி, ஏற்றுக் கொண்டு நமக்கே வழங்கிக் கொண்டதுதான் இந்திய அரசியல் சாசனம். அதன் பிறகு 26.01.1950 அன்று இந்தியா தன்னை ஒரு குடியரசாக அறிவித்துக் கொண்டது.

இந்தியா ஒரு குடியரசான பிறகு இந்தியாவில் வாழுகின்றவர்களின் குடியுரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்கான சட்டப் பிரிவுகள் பாகம் 2 இல் குடியுரிமை என்ற தலைப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டம் துவக்கப்பட்ட நாளில், (26.01.1950), இந்தியாவில் குடியிருந்தவர்கள், இந்தியாவில் குடியேறிவர்கள் மற்றும் இந்திய மண்ணில் பிறந்தவர்கள் என்றால்,
“இந்திய அரசியல் சாசனம் துவக்கப்பட்ட நாளில் அதாவது 26.01.1950 அன்று இந்தியாவில் குடியிருக்கும் எந்த ஒரு நபரும் இந்தியக் குடிமகன்தான்.”  (பிரிவு: 5)

“பாகிஸ்தானில் அடங்கியுள்ள பிரதேசத்திலிருந்து வெளியேறி இந்திய மண்ணில் குடியேறியுள்ள ஒவ்வோரு நபரும் இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவர்.” (பிரிவு: 6)

“இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொரு நபரும் இந்தியக் குடிமகன்தான்.” (பிரிவு: 5-
அ)

தானோ, பெற்றோரில் ஒருவரோ அல்லது தாத்தா அல்லது பாட்டி ஆகிய ஒருவரோ இந்தியாவில் பிறந்திருந்தால்,
“ஒரு நபர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் அல்லது அவரது தாய்-தந்தை இவர்களில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் அல்லது தாத்தா-பாட்டி இவர்களில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் 1935 இந்திய அரசாங்கச் சட்டப்படி அவர் இந்தியக் குடிமகனாக் கருதப்படுவார். (பிரிவு: 6-அ)

காட்டாக, மேற்கண்ட விளக்கப்படி 1930 மற்றும் 1933 இல், இந்திய மண்ணில் பிறந்து, 26.01.1950 அன்று இந்தியாவிலேயே வசித்து வந்த எனது தந்தையும் தாயும் தானாகவே (Autonatic) இந்தியக் குடிமக்களாகிவிட்டனர். 

பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருப்பின்,
“அவ்வாறு இந்திய மண்ணில் பிறந்த அந்த நபரின் பெற்றோரில் ஒருவர் அதாவது தாயோ அல்லது தந்தையோ இந்தியராக இருப்பின் மேற்கண்ட நபரும் இந்தியக் குடிமகன்தான்.” (பிரிவு: 5-ஆ)

காட்டாக, தந்தை இந்தியராக இருந்து தாய் பாகிஸ்தானியராக இருந்தாலும், அல்லது தாய் இந்தியராக இருந்து தந்தை பாகிஸ்தானியராக இருந்தாலும், அவர்களுக்குப் பிறந்த குழந்தை இந்தியாவில் பிறந்திருந்தால் அக்குழந்தை இந்தியக் குடிமகன்தான்.

26.01.1945 முதல் இந்தியாவில் வசித்து வருபவராக இருந்தால்,
“இந்திய அரசியல் சாசனம் துவக்கப்படுவதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பிருந்தே அதாவது 26.01.1945 இலிருந்து இந்தியாவில் வசித்து வரும் எந்த ஒரு நபரும் இந்தியக் குடிமகன்தான்.” (பிரிவு: 5-இ)

19.07.1948 க்கு முன்பாக இந்தியாவில் குடியேறி இருந்தால்,
19.07.1948 க்கு முன்னதாக இந்தியாவில் குடியேறி, அப்படி குடியேறிய நாளிலிருந்து இந்தியாவிலேயே வசித்து வருபவர் இந்தியக் குடிமகன்தான்” (பிரிவு: 6-ஆ-i)

19.07.1948 க்குப் பிறகு இந்தியாவில் குடியேறி இருந்தால்,
ஒரு நபர் 19.07.1948 க்குப் பிறகு இந்தியாவில் குடியேறிய இருந்தால் அவர் 26.01.1950 க்கு முன்பாக உரிய அலுவலரிடம் குடியுரிமை கோரி  விண்ணப்பித்து பதிவு செய்திருந்தால் அத்தகைய நபரும் இந்தியக் குடிமகன்தான். (பிரிவு: 6-ஆ-ii).

ஆனால் அவர் அவ்வாறு மனு செய்த தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக இந்தியாவில் குடியேறி இருக்க வேண்டும்.

பாகிஸ்தானுக்குச் சென்று மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பினால்,
01.03.1947 க்கு முன்பாக பாகிஸ்தானுக்கு குடியேறிய எந்த ஒரு நபரும் இந்தியக் குடிமகனாகக் கருதப்படமாட்டார்”. (பிரிவு:7)

ஆனால், அவ்வாறு பாகிஸ்தானில் குடியேறிய அந்த நபர் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி வந்து இங்கேயே நிரந்தரமாக் குடியேறியதற்கான அனுமதியை அதற்குரிய அதிகாரியிடம் பெற்று இந்தியாவில் வசித்து வரும் நபர் பிரிவு 6-ஆ(ii) இன்படி 19.07.1948 க்குள் இந்தியாவில் குடியேறியவராக கருதப்பட்டு இந்தியக் குடிமகனாவதற்கான தகுதி உடையவராகிறார்.

இந்தியாவில் பிறந்து இந்தியாவிற்கு வெளியே வாழ்ந்து வந்தால்,
இந்திய அரசாங்கச் சட்டம் 1935 இல், இந்தியா என்று விவரிக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் பிறந்த ஒவ்வொரு நபரும் அல்லது அத்தகைய நபரின் பெற்றோரில் ஒருவர் அல்லது தாத்தா அல்லது பாட்டி ஆகியோரில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தால், அத்தகைய நபர்கள் இந்தியாவிற்கு வெளியேயுள்ள வேறு பிரதேசத்தில் வசித்து வந்தாலும் இந்தியக் குடிமக்களாகவே கருதப்பட வேண்டும். (பிரிவு: 8)

அப்படிக் கருதப்பட வேண்டுமெனில், அந்த நாட்டிலுள்ள இந்தியத் தூதரகத்தில் இந்தியக் குடிமகனாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அரசியல் சாசனம் துவக்கப்படுவதற்கு முன்னர் அதற்கென உரிய படிவத்திலும் இந்திய அரசின் விதிமுறைகளின்படியும் அப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வேறு நாட்டு குடியுரிமையைப் பெற்றிருந்தால்,
ஒருவர், தாமே வலிந்து முன்சென்று, வேறொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றிருந்தால், அந்த நபரை இந்தியக் குடிமகனாகக் கருதமுடியாது. (பிரிவு: 9)

இவைதான் இந்தியக் குடியுரிமையை தீர்மானிப்பதற்கான அளவுகோலாக இந்திய அரசமைப்புச் சட்டம் வரையறுக்கிறது.

மேற்கண்ட எந்தப் பிரிவிலும் மத அடிப்படையில் இந்தியக் குடியுரிமை தீர்மானிக்கப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

இந்தியக் குடிமகனாக நீடிக்க வேண்டுமானால்,
இந்தியக் குடிமகனாக இருக்கும் அல்லது இந்தியக் குடிமகனாகக் கருதப்படும் ஒவ்வொரு நபரும் குடியுரிமை பற்றி நாடாளுமன்றம் உருவாக்கும் சட்டத்திற்குட்பட்டு இந்தியக் குடிமக்களாக நீடிப்பர் (பிரிவு: 10)

குடியுரிமை குறித்த சட்டங்களை புதிதாகக் கொண்டு வரமுடியுமா?
ஒரு குடியுரிமையை வழங்குவதற்கும், இரத்து செய்வதற்கும் மற்றும் குடியுரிமை பற்றிய விதிமுறைகளை உருவாக்குவதற்கும் நாடாளுமன்றத்திற்குரிய அதிகாரத்தை பாகம் 2 இல் உள்ள பிரிவுகள் கட்டுப்படுத்த முடியாது. (பிரிவு: 11)

தொடரும்
ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

நமது குடியுரிமைக்குக் குழி பறித்தது வாஜ்பாய்! குப்புறத்தள்ளுவது மோடி-அமித்ஷா கும்பல்! -----2

நமது குடியுரிமைக்குக் குழி பறித்தது வாஜ்பாய்! குப்புறத்தள்ளுவது மோடி-அமித்ஷா கும்பல்! ---1

சட்ட அங்கீகாரம் இல்லாத NPR மற்றும் நீதிமன்றத்தின் பாராமுகம்!

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, (CAA) எப்படி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது?

CAA, NRC, NPR என்றால் என்ன? இவற்றை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?

சட்டங்கெட்டச் செயல்களே சட்டமாகின்றன!


No comments:

Post a Comment