Sunday, April 19, 2020

கரோனாவும் இஸ்லாமியர்களும்: பீலாவுக்கு ஆப்பு வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!


துபாயிலிருந்து விமானம் மூலம் இந்தியா வந்த இராணிப்பேட்டை மாவட்டம், கீழ்விசாரத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு கரோனா இருப்பது (tested positive) வாலாசாப்பேட்டை அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் கண்டறிப்பட்டதாக மார்ச் 26 ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.

ஒருவருக்குக் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானால், 8 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் அனைவருக்கும் கரோனா இருக்கிறதா என்பது சோதித்தறியப்படும் என்றும் சொல்கிறார்கள். அப்படியானால் கீழ்விசாரத்தைச் சுற்றி 8 கிலோ மீட்டருக்குள் ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாசாப்பேட்டை, மேல்விசாரம் ஆகிய நான்கு நகராட்சிகள் மற்றும் ஏராளமான கிராமங்களில் இலட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவரிடமும் கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதா? அந்த இளைஞர் மூலம் இந்த வட்டாரத்தில் கரோனா தொற்று ஏற்பட்டிருக்குமா என்பதைக் கண்டறிய வேண்டாமா?

கரோனாவைக் கண்டறிய தற்போது தமிழகத்தில் உள்ள மொத்த ஆய்வுக் கூடங்கள் - 34. அதில் அரசு - 25, தனியார் - 9. இவை அதிவிரைவு ஆய்வு (rapid test) முறைக் கூடங்கள் அல்ல. 6 மணி நேரம் முதல் 2 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும் ஆய்வுமுறைகள். 18.04.2020 அன்றுதான் அதிவிரைவு அதாவது, அரை மணி நேரத்தில் கரோனா இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான கருவியை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.

ஆனால், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோருக்கு கரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக இதுவரை தமிழக அரசு அறிக்கை வாசித்து வந்தது. உதாரணமாக, 13.04.2020 அன்று மட்டும் 98 பேருக்குக் கரோனா கண்டறியப்பட்டதாகக் கூறுகிறது அரசு. அதில் 91 பேர் அதே மூலத்தைச் (same source) சேர்ந்தவர்கள் என்றும் பீலா விட்டார்கள். நம்முடைய ஆய்வு முறைகளுக்கும் வெளியிடப்படும் முடிவுகளுக்கும் இடைவெளி அதிகம் என்பது மட்டும் புரிகிறது.

தமிழகக் களநிலவரம்

தமிழகத்தில் 18.04.2020 வரை கரோனா நோய்த்தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டவர்கள் 1372 பேர். இதுவரை சிகிச்சை மூலம் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 365 பேர். சிகிச்சை பலனளிக்காமல் இறந்தவர்கள் 15 பேர்.

கரோனாவுக்கு இதுவரை மருந்து எதுவுமே கண்டறியப்படவில்லை என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே மற்றொரு பக்கம் சிகிச்சையின் மூலம் குணமடைந்து வீடு திரும்பினார்கள் என்கிறது அரசு. குணமடைந்தவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது? மருந்துகள் ஏதேனும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதா? அப்படி கொடுக்கப்பட்டிருந்தால் அவை என்னென்ன? மருந்து இல்லாமல் தனிமைப் படுத்தல் மற்றும் உணவு முறையால்தான் குணமடைந்தார்களா? அப்படியானால் அவர்களுடைய உணவு முறைதான் (regimen) என்ன? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

18.04.2020 அன்று ஒரே நாளில் மட்டும் 82 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அப்படியானால் கரோனாவிற்கு நம்மிடம் அதிநவீன சிகிச்சை முறை இருக்கிறதா? அப்படி இருந்தால் இந்த அனுபவத்தை உலக நாடுகளுக்குத் தெரிவித்தால் அவர்களும் பயனடைவார்களே? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

கேரளாவில் முதல் கரோனா

சீனாவின் வூகான் மாநிலத்திலிருந்து கேரளா திரும்பிய மாணவர் ஒருவருக்கு கரோனா இருப்பது ஜனவரி 20 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதமே கரோனா இந்தியாவிற்குள் வந்துவிட்ட பிறகு பல வெளிநாட்டினர் கலந்து கொண்ட கோவை ஈஷா மையத்தில் பிப்ரவரி 21 ஆம் தேதி மகாசிவராத்திரி விழா நடைபெற எப்படி அனுமதித்தார்கள்? குஜராத் அகமதாபாத்தில் பிப்ரவரி 24, 25 தேதிகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்ட விழாவை எப்படி நடத்தினார்கள்? மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வெளிநாட்டினருக்கு கரோனா இருக்கிறதா எனச் சோதனை செய்தார்களா? அவ்வாறு சோதனை செய்யப்பட்டதாக எந்த ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் மூலமாகக்கூட ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே இந்தியாவில் கரோனா பெருமளவில் பரவி இருக்கலாமல்லவா? மேலும் ஊரடங்கு அறிவித்த பிறகு, அவர்கள் கூற்றுப்படி மார்ச் 11 முதல் 15 வரை டெல்லியில் நடைபெற்ற தப்லீக் மாநாட்டின் மூலம்தான் இந்தியாவில் கரோனா பரவியது என ஒரு பக்கம் குற்றம் சாட்டிக் கொண்டே, ஏப்ரல் 2 ஆம் தேதி இராமநவமி அன்று அயோத்தியில் இராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவை ஏன் நடத்தினார்கள்? இதில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கானோர் மூலம் கரோனா பரவி இருக்காதா?

ஜனவரி 20 ஆம் தேதியே இந்தியாவிற்குள் கரோனா நுழைந்து விட்டது. தப்லீக் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கர்நாடகாவில் முதியவர் ஒருவர் இறந்துள்ளார். லண்டலிருந்து அரியானாவுக்கு வந்த 23 வயதுப் பெண் ஒருவருக்கு கரோனா இருப்பது மார்ச் 15 ஆம் தேதி உறுதி செய்யப்படுகிறது. அன்றைய தேதியில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 170 பேர், இறந்தவர்கள் 3 பேர். அப்படியானால் தப்லீக் மாநாடு முடிந்து அதில் கலந்து கொண்டவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு முன்பாகவே கரோனா இந்தியாவில் பரவிவிட்டது என்பதுதானே உண்மை.

தமிழகத்தில் கரோனா பரவலுக்கு இஸ்லாமியர்கள் காரணமா?

டெல்லி தப்லீக் மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் மூலமாகத்தான் தமிழகத்தில் கரோனா பரவியதாக ஒவ்வொரு நாளும் பீலா விடுகிறார்கள். மார்ச் 15-க்கு முன்பாக வெளிநாடுகளிலிருந்து யாருமே தமிழ் நாட்டுக்கு வரவில்லையா? ஜனவரி 19 லேயே அமெரிக்காவில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதன் பிறகு உலகிலேயே கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா. நமது கேள்வி இதுதான். ஜனவரி 19 க்குப் பிறகு, அதாவது அமெரிக்காவில் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட தேதியிலிருந்து மார்ச் 15 வரை அந்நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு யாருமே வரவில்லையா? பிற நாடுகளிலிருந்தும் ஒருவர்கூட வரவில்லையா?

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து ஏராளமானோர் வந்துள்ளனர் என்பதுதான் உண்மை. அப்படி வந்தவர்களை சோதனைக்குப் பிறகுதான் தமிழ்நாட்டிற்குள் அனுமதித்தார்களா? வந்தவர்கள் கரோனாவையும் கொண்டு வந்திருக்க மாட்டார்களா? இவற்றை எல்லாம் மூடி மறைத்துவிட்டு மார்ச் 15 க்குப் பிறகு டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களால்தான் தமிழகத்தில் கரோனா பரவி வருகிறது என்று பேசுவதும், கரோனா அதிகரித்து வருவதால்தான் ஊரடங்கை நீட்டிக்க வேண்டி உள்ளது என்கிற கருத்தை உருவாக்குவதும் யாரைத் திருப்திப் படுத்த? உண்மை என்னவென்றால் மார்ச் 7 ஆம் தேதியே தமிழகத்தில் முதல் கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லிக்குச் சென்று வந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர் என்பதை உங்களால் கண்டறிய முடியவில்லையா? டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்ததாக, தாமாக முன்வந்த 1103 பேரில் 110 பேருக்கு மட்டுமே கரோனா இருப்பதாக ஏப்ரல் 1 அன்று அறிவித்த அரசு, அதே மூலத்தைச் (same source) சேர்ந்த 91 பேருக்கு கரோனா இருப்பதாக ஏப்ரல் 13 அன்று அறிவிக்கிறது. அப்படியானால், டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதில் தமிழகம் தோற்று விட்டதா? இதில் எங்கோ இடிக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் தமிழக சுகாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். “வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 95 சதவீதம் பேர் எவ்வித அறிகுறிகளும் இல்லாதவர்கள்” என்கிறார் அமைச்சர். (செய்தி ஆதாரம் - இந்து தமிழ் திசை, வேலூர், 19.04.2020). அதாவது, தொற்று இருப்பதாகக் கூறப்படும் 1372 பேரில் 69 பேருக்கு மட்டுமே கரோனா இருப்பதாகக் கூறுகிறார். அப்படியானால் டெல்லி தப்லீக் மாநாட்டுக்குச் சென்று வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கரோனாத் தொற்று இருப்பதாகவும், அவர்களால்தான் தமிழகத்தில் கரோனா பரவி வருவதாகவும் இதுவரை கூறப்பட்டவை அனைத்தும் பீலாதான் என்பது உறுதியாகி விட்டது.

தொடரும் ஊரடங்கு

அன்றாட வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் லட்சக் கணக்கானோர் ஒரு வேலை உணவுக்கே வழி இன்றி பரிதவிக்கின்றனர். ஏற்கனவோ உதவி செய்வோர் கரோனா விதிமுறைகளை சரியாக கடைபிடிக்கிறார்களா என்பதை மட்டும் சோதித்தறிவதற்குப் பதிலாக, தனிப்பட்ட முறையில் யாரும் உதவியே செய்யக் கூடாது என்று சொல்வதன் மூலம் ஏழை எளிய மக்களைச் சாவச் சொல்கிறதா அரசு? உதவி செய்ய விரும்புவோர் அரசு மூலமாகத்தான் செய்ய வேண்டும் என்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் வறுமையில் வாடுவோர் பற்றிய விவரங்களை அரசு கணக்கெடுத்துள்ளதா? இரண்டாம் கட்ட ஊரடங்கின் போதாவது பசியால் வாடுவோரின் வாட்டத்தைப் போக்க ஏதாவது திட்டம் வைத்திருக்கிறதா அரசு? அரசே உதவி செய்தால் மற்றவர்கள் உதவி செய்ய வேண்டிய அவசியம் இருக்காதே? உதவி செய்வதற்குக்கூட நீதிமன்றத்தை நாடவேண்டிய அவல நிலையில் தமிழகம் உள்ளது.

“விழித்திருங்கள், விலகி இருங்கள், வீட்டில் இருங்கள்” என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மக்களை வெளியே வரவழைப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? காலை நேரத்தில் பல நகரங்களில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதில் ரேசன் கடைகளில் ஆயிரம் ரூபாய்க்காக கூட்டப்படும் கூட்டம் தனி. பொருட்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற அச்சம்தான் இதற்கு மிக முக்கியக் காரணம். எனவே அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாகச் சென்று ஏன் வழங்கக் கூடாது? அதற்கு ஏன் அரசு முயற்சிக்கவில்லை? இரண்டாம் கட்ட ஊரடங்கின் போது, வரும் மே 3 வரையிலாவது இந்த முறையைப் பின்பற்றினால் புதிதாக நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும். அதன் பிறகு ஊரடங்கை நீட்டிப்பதற்கான அவசியமும் இருக்காது. 

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக, "காய்கறிகள் வீடு தேடி வரும், மளிகைப் பொருட்களை ஆப்ஸ் மூலமாக வாங்கிக் கொள்ளுங்கள்" என விளம்பரம் செய்கின்றனர். ஆப்ஸை பதிவிறக்கம் செய்து முயற்சி செய்தால் நம்மை வெளியே துரத்துகிறது. கடைகளும் திறந்திருக்காது. ஆப்ஸூம் வேலைக்கு அகாது என்றால் மளிகைக்கு என்ன செய்வது? அவற்றையும் - அதிலும் குறிப்பாக - அத்தியாவசியமானவற்றை மட்டும், காய்கறிகளைப் போல குடியிருப்புப் பகுதிகளுக்கு எடுத்துச் சென்றால் மக்கள் வெளியில் வருவதை முற்றிலுமாகத் தவிர்க்கலாமே? 

எனவே, இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்துவதைவிட்டுவிட்டு கரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்குவதே சாலச்சிறந்தது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புக்குப் பின்னால் CAA, NPR, NRC எதிர்ப்புப் போராட்டங்கள் நம் கண்முன்னே வந்து போவதைத் தவிர்க்கமுடியவில்லை. 

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்



2 comments:

  1. எங்கள் area வுக்கு நடமாடும் காய்கறிளையே காணவில்லை. இது காட்பாடி area

    ReplyDelete
    Replies
    1. அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும்.

      Delete