Wednesday, May 13, 2020

வர்ணங்கள் குறித்து வாட்ஸ்அப் வதந்தி!

“பிராமணன் தலையில் பிறந்தான்
சத்திரியன் தோளில் பிறந்தான்
வைசியன் தொடையில் பிறந்தான்
சூத்திரன் பாதத்தில் பிறந்தான் என்று சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களைத் தூற்றுகிறார்களாம்.”  

வேதம் படித்த பார்ப்பனனின் முகம் பொலிவானதாம். சத்திரியனின் தோள் பிரம்ம தேவனின் தோள் போல வலிமையானதாம். வலிமையான துடை கொண்டு அமர்ந்து வாணிபம் செய்பவனாம் வைசியன். வயலில் பாடுபடும் சூத்திரனுக்கு வலிமையான பாதங்கள் வேண்டுமாம். இதுதான் ரிக் வேதத்தின் புருஷ சூக்தத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகத்திற்கான உண்மையான பொருளாம். இப்படி புதுக் கோணார் உரை எழுதி வாட்ஸ்அப்பில் உலவவிடுகிறார்கள் பார்ப்பனர்கள்.

மேலும் பிறப்பால் வர்ணங்கள் இல்லை என மனு தர்மம் சொல்வதாக வேறு அவிழ்த்து விடுகிறார்கள். ஆனால் அது எந்த சுலோகத்தில் வருகிறது என்பதைச் சுட்டவில்லை.

வேதங்கள் உள்ளிட்ட அனைத்துப் பார்ப்பன இந்து மத நூல்களின் சாரம்தான் மனுதர்மம். இது வர்ண பேதங்களைப் பற்றிப் பேசுகிறது. இது பார்ப்பன இந்து மதத்தின் சட்ட நூல். மனுதர்மம் இல்லையேல் வர்ணங்கள் இல்லை. வர்ணங்கள் இல்லையேல் சாதிகள் இல்லை. சாதிகள் இல்லையேல் இந்து மதமே இல்லை.

வர்ணங்கள் பிறப்பின் அடிப்படையிலானவை என்பதற்கான ஆதாரங்கள் மனுதர்மத்தில் கொட்டிக் கிடக்கின்றன. காட்டாக சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம் புஜம் துடை கால் இவைகளினின்றும் பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் இவர்களைக் கிரமமாக வுண்டு பண்ணினார். (மனு 1-31)
But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet. (Manu 1-31)

அந்தப் பிரம்மாவானவர் இந்த வுலகத்தைக் காப்பாற்றுதற்காக தன் முகம் தோள் துடை பாதம் இவைகளினின்று முண்டான பிராமண சத்திரிய வைசிய சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு மறுமைக்கு முபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்.
But in order to protect this universe He, the most resplendent one, assigned separate (duties and) occupations to those who sprang from his mouth, arms, thighs, and feet. (Manu 1-87)

வர்ணம் பிறப்பின் அடிப்படையில்தான் திர்மானிக்கப்படுகிறது. பார்ப்பன இந்து மதத்தின் வர்ண சாதி அமைப்பு குறித்து பல்வேறு அறிஞர்கள் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர் அம்பேத்கர். குறிப்பாக அவரது ஆய்வு நூல் தொகுப்பு (தமிழில்) 6 முதல் 10 வரை வர்ண சாதி அமைப்பு பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. மனு மட்டுமல்லாமல் யாக்ஞவல்கியர், நாரதர், விஷ்ணு, காத்யாயனர் முதலானவர்களின் பார்ப்பன இந்து மத சட்ட நூல்களும் பிறப்பின் அடிப்படையிலான வர்ணம் குறித்துப் பேசுகின்றன. “நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்”(4-13) என்கிறான் கிருஷ்ணன் கீதையிலே. நான்கு வர்ணங்களும் குணங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை. அவை பிறப்பின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன என சங்கிகளின் தலைமைப் பீடமான நாக்பூர் கீதா பிரஸ் வெளியிட்டுள்ள பகவத் கீதை தெளிவு படுத்துகிறது.
ஆனால் தற்பொழுது வெளியிடப்படும் பார்ப்பன இந்து மத நுல்களில் மேற்கண்டவை எல்லாம் திருத்தப்பட்டோ அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டோதான் வெளியிடப்படுகின்றன. அத்தகையதோர் முயற்சிதான் கீழ்கண்ட வாட்ஸ்அப் பதிவும்.

எனவே பார்ப்பன இந்து மதத்தின் மூல நூல்களைத் தேடிப் படித்தால் மட்டுமே உண்மையை வெளிக்கொணர முடியும்.

ஊரான்
*****
பார்ப்பனர்கள் உலவவிட்ட வாட்ஸ்அப் செய்தி கீழே.


#ஒரு_கதை_ரொம்ப நாளாக_ஒட்டப்பட்டு கொண்டிருக்கிறது

பிராமணன்  முகத்தில் இருந்து பிறந்தான்
சூத்திரன் காலில் இருந்து பிறந்தான் 

.....இப்படி சொல்வது இந்து மதம் (புருஷ சூத்திரத்தில் வரும் ஒரு செய்யுள்). 
பிராமணன் தலையில் பிறந்தான்
சத்திரியன் தோளில் பிறந்தான்
வைஷியன் தொடையில் பிறந்தான்
சூத்திரன் பாதத்தில் பிறந்தான்

-இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களை தூற்றுகின்றனர்

உண்மை என்ன?

உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது

புருஷ சூக்த்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்:

‘‘பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத:ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத” 
- (ரிக் வேதம் 10-90-12)

ஸ்லோகத்தின் பொருள்:
வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை புகட்டுபவன் பிராமணன், அப்பேர்பட்டவன் முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருத்தல் வேண்டும்.

இராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்திரியன் தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையானதாக இருத்தல் வேண்டும்

அப்போதுதான் அவனால் போர்களையில் சிறந்து விளங்கி தனது குடிகளை திறம்பட காத்திட முடியும்.

வைஷியனானவன் பொருளை ஈட்டும் போது பிறர் வயிற்றிர்க்கு வஞ்சனை அளிக்காமல் வியாபாரத்தில் நேர்மையானவனாக நல்ல தீர்க்கமாக வலிமையான துடை கொண்டு அமர்ந்து சிந்தித்து நேர்மையான வாணிபத்தில் ஈடுபட வேண்டும்.

சூத்திரனானவன் வயல்களில் பாடுபட்டு, இந்த லோக உயிர்களுக்கு பசியாற்ற பாடுபட வேண்டும். மேலும் பல தொழிலில் சிறக்க அவனுக்கு வலிமையான பாதங்கள் வேண்டும். சோர்வில்லாத பாதங்கள் வேண்டும்.

இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது?

மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது

வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன்.

பிறப்பால் வர்ணங்கள் இல்லை 
மனு தர்மம்:

பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது. அதற்கான ஸ்லோகம்,

ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே
அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே

தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின்றனர் (துவீஜம்). 

இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது.

இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது:
ஜன்மனாபிறப்பால்;
ஜாயதேபிறந்த அனைவரும்
சூத்ரசூத்திரரே
கர்மணாதான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜஇருபிறப்பாளனாக
ஜாயதேபிறப்பாளன் ஆகிறான்.

No comments:

Post a Comment