Saturday, May 2, 2020

கரோனா: நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

ஊரடங்கு தொடங்கி ஒன்றரை மாதம் ஓடிவிட்டது. மார்ச் கடைசி மற்றும் ஏப்ரல் முதல் வாரங்களில் காலையில் மளிகைக் கடைகளும் காய்கறிக் கடைகளும் திறந்திருந்தன. தேவையானவற்றைப் பெற முடிந்தது. வழக்கமான உணவையே எடுத்துக் கொண்டதால் உடல் பலகீனம் எதுவும் தெரியவில்லை.

அதன் பிறகு, “காய்கறிகள் வீடு தேடி வரும்; மளிகைப் பொருட்களை ‘டெலிவர் மி’ ‘ஆப்பை’ பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளுங்கள். யாரும் வெளியே வரக்கூடாது” என்றார்கள். காய்கறிகள் வந்தன. ஆனால் மளிகைப் பொருட்கள் பெறுவதில் ஆப்புதான் கிடைத்தது.

ஒரு பக்கம் கரோனாவை எதிர் கொள்ள ஊட்டமான உணவு உட்கொண்டு நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள் என உபதேசம். ஆனால், அரசின் நடைமுறையால் பொருளும் கிடைப்பதில்லை; அப்படியே கிடைத்தாலும் விக்கிற விலையில் ஊட்டத்தைப் பெருக்கிக் கொள்ளும் அளவுக்கு வாங்கித் திங்கவும் முடியவில்லை.

வாழைப் பழம்கூட கிலோ எண்பதைத் தொட்டது. பின் யார்தான் தொடமுடியும் அதை? தொன்னூறில் இருந்த துவரம்பருப்புகூட இருமடங்காய் ஆனதால் சாம்பார் எல்லாம் ரசமாய் மாறிப்போனது. காய்கறிக்கே வழி இல்லாத போது கறி மட்டும் கிடைக்குமா என்ன? கிடைத்தது ஒரு சில இடங்களில். கோழி முன்னூறுக்கும், ஆடு ஆயிரத்திற்கும்; அதுவும் கமுக்கமாய்.

கரோனா காலத்தில் ‘ரிலயன்ஸ் ஃபிரஷூம்’, ‘மோரும்’ ஓய்வெடுத்துக் கொள்ள அண்டை வீட்டு அண்ணாச்சிகளும் சிறு வியாபாரிகளுமே நம்மைக் காக்க கரோனாவையும் எதிர் கொண்டார்கள். “நமக்கேன் வம்பு?” என ‘ரிலயன்ஸ்’ போல அண்ணாச்சிகள் ஒதுங்கி இருந்தால் இந்த அரசால் என்ன செய்திருக்க முடியும்? சவப் பெட்டிகள் தயாரிப்பதைத் தவிர?

உயிரைப் பணயம் வைத்து நமக்காக உழைக்கும் அண்ணாச்சிகள் மீதும், சிறு வியாபாரிகள் மீதும் பலருக்குக் கோபம்தான். பல மடங்கு விலை வைக்கிறார்களே என்று? “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!” என்பது போல அண்ணாச்சிகள் அள்ளுகிறார்களோ என்றுதான் பலருக்கும் எண்ணத் தோன்றும். ஆனால் கள நிலவரம் வேறு.

கடையில் இருந்த ஆட்டுக்கறி மொத்தத்தையும் பார்சல் செய்த காவல் துணை ஆய்வாலரை மட்டும்தான் நமக்குத் தெரியும். கடை திறப்பதற்கும், வாகனங்களில் விற்பனை செய்ய அனுமதி பெறுவதற்கும் ஆயிரம் இரண்டாயிரம் என அபகரிக்கும் அரசு அதிகாரிகளை நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஏழைகளுக்கு நிவாரண உதவி செய்ய வேண்டும் என்ற பெயரில் ஐயாயிரத்துக்கும் பத்தாயிரத்துக்கும் பெருமானமுள்ள பொருட்களை இலவயமாய் மிரட்டிப் பெற்று ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கிள்ளிப் போட்டுவிட்டு மற்றொரு பகுதியை தங்களுக்கான நிவாரணமாய்ச் சுருட்டும் உள்ளூர் அரசியல்வாதிகளையும் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. இதில் சங்கிகள் முன்னணியில் இருப்பதாகக் கேள்வி. இவை எல்லாம் நம் தலையில்தானே விழுகிறது.
வாழ்விடத்திலேயே பொருட்கள் கிடைத்தால் வெளியே போக வேண்டிய அவசியம் ஏது? அதற்கு வழி செய்ய வக்கில்லை. ஆனால் வெளியே வருவோரின் வாகனங்களை பறிமுதல் செய்வதில் மட்டும் குறியாய் உள்ளனர். இப்படி கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நூற்றுக் கணக்கில் குவிந்து கிடக்கின்றன. “ஆமை புகுந்த வீடும் அமினா நுழைந்த வீடும் உறுப்படாது” என்பது போல, காவல் நிலையம் நுழைந்த வாகனம் மட்டும் முழுசாய் திரும்புமா என்ன? அதனால் எப்படியாவது பிடிபட்ட வண்டியை உடனே மீட்டுவிட வேண்டும், இல்லை என்றால் கரோனா நம்மைக் கரைப்பது போல காவல் நிலையத்திலேயே நமது வண்டியும் கரைந்து போகும். வண்டி கரையாமல் காக்க அங்கே கரன்சி நோட்டுகள் கைமாறுகின்றன. இதற்குக்கூட இடைத்தரகர்களாம். பலரின் வாழ்வைப் பறிக்கும் கரோனா சிலரின் வாழ்வை வளப்படுத்துகிறது.
.
ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

கரோனாவும் இஸ்லாமியர்களும்: பீலாவுக்கு ஆப்பு வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!


No comments:

Post a Comment