“பண்டைய காலத்தில் இருந்து வந்த அறியாமையால்தான், பாம்புக் கடிக்கு மந்திரம் ஒரு முறையென்று நாளதுவரை நமது பாமர மக்கள் எண்ணி வருவது, ஆதிகால முதல் எந்தெந்த நோய்களுக்குக் காரணங்கள் தெரியவில்லையோ, அந்தந்த நோய்களுக்கு மந்திரங்கள் மேல் நம்பிக்கை ஏற்பட்டது.
மந்திரமென்றால் என்ன? மந்திரம் என்பது சில சொற்களே! எல்லா சொற்களும் மந்திரத்தில் அடங்கியுள்ளன. இந்தச் சொற்களுக்கு மாத்திரம், இவ்வளவு செல்வாக்கு வந்ததேன்? இதுவும் நம்பிக்கையே (Faith). நம்பிக்கை இல்லாத சொற்கள் வெறுஞ்சொல்லென அறிக.
அந்த சொற்களில் ஏதோ மகத்துவம் உள்ளதாக எண்ண வந்தவுடன், அவைகளுக்கு மனிதர் உள்ளத்தில் நிவேதனம் (Sacredness) அடைகின்றன. இதுதான் மந்திரச் சொற்களுக்கும், மற்ற சொற்களுக்கும் உள்ள வித்தியாசம்.
மந்திரத்தில் ஆவது ஒன்றுமில்லை. “மந்திரத்தால் மாங்காய் விழுமா?” என்ற நாத்திகர் பாடமும் இதுவே. அறியாமையால், பாமர மக்கள் மந்திரம், மந்திரம் என்று மயங்குகின்றார்கள். அறியாமையை வளர்க்கவே மந்திரங்கள் கற்பிக்கப்படுகின்றன, இந்தப் பித்தலாட்டம், வேதத்திலேயே உண்டு".
"ஓம்” எனும் சொல்லுக்கு மகத்துவம் உண்டா?
“ஓம்” என்ற சொல், மற்ற சொற்களைப் போன்ற சொல்லேயொழிய வேறில்லை. “வா” “போ” என்ற சொற்களைவிட “ஓம்” என்பதற்கு விசேடம் ஒன்றுமில்லை. ஆனால், அந்தச் சொல்லுக்கு மாத்திரம் ஏன் அவ்வளவு விசேடங்கள் வேத நூல்களில் கொடுத்துள்ளார்? ஏனெனில், பாமர மக்களை மிரட்டுவதற்கென அறிக.
“ஆம்” “ஓம்” சாதாரண சொற்களே. ஆனால், அதனை உச்சரிப்பதிலே ஒரு பயத்தை உண்டாக்கும்படி உச்சரிக்கின்றார்கள். சொற்களால் பயத்தை உண்டாக்கலாம். உரத்துச் சொல்வதாலும் அல்லது கேட்கப்படாமல் வாய்க்குள்ளேயே சொல்வதாலும், பயத்தை உண்டாக்கலாம். எல்லா மகத்துவமும் பயத்தால் உண்டானவைகளே.
இந்தச் சொற்களை உச்சரிக்கும் விதங்களால் பாமர மக்களைப் பயப்படும்படி செய்வதால், அதிலிருந்து எல்லா நம்பிக்கையும், மகத்துவமும் உண்டாகின்றன”
அடுத்து, சந்தியா வந்தனம் பற்றி பார்ப்போம்.
குடியரசு
7.8.1932
பக்கம் 3-18
சிங்காரவேலர் கட்டுரைகள் நூலிலிருந்து.
மூடநம்பிக்கைகள் அதிகரித்து வரும் இன்றைய நவீன காலத்திலும், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு சிங்காரவேலர் கட்டுரைகள் பெரிதும் துணை புரியும்.
தொடரும்
ஊரான்
.jpeg)
No comments:
Post a Comment