சந்தியா வந்தனமென்று வழங்கும் காயத்ரி ஜெபத்தில் அடங்கிய சொற்கள், எல்லாச் சொற்களைப் போன்றவைகளே. ஆனால் அச்சொற்களை யார் காதுக்கும் படாமல், குளக்கரையிலோ, நதிக்கரையிலோ அஸ்தமன சமயத்தில், சூரியனை நோக்கி, கையும் காலும் அசைவற்றுச் சொல்வதால், அந்தச் சொற்களுக்கு வந்துள்ள புண்ணியங்களாமென அறிக. இவைகளோடு இதனை உபயோகிக்கும் பிராமணர்கள், மற்ற ஜாதியாருக்குக் கற்பிக்காமலே வந்திருத்தலும், ரகசியமாக இந்தச் சொற்களை வைத்துப் பாமர மக்களை மயக்குவதற்கென அறிக.
இந்தக் காயத்ரி ஜபம் சாதாரண ஜெபமாகும்,. இது சூரியனைக் குறித்துப் பூஜிக்கும் அதாவது பிராத்திக்கும் ஜபமாகும். ஆதி மனிதன் சூரியன் உதயத்தைப் பார்த்து, ஆச்சரியத்துடன் சொல்லும் சொற்களாகும்.
சந்தியா வந்தனம்
உதயத்தில் பட்சிகள் பாடுகின்றன. மயில்கள் ஆடுகின்றன. உறங்கிக் கிடந்த உலகமே ஒரு குதூகலத்தை அடைகின்றன. ஜீவராசிகளும் சூரிய உதயத்தைக் கண்டதும் மனக்களிப்பை அடைகின்றன. யார்தான் சூரிய உதயத்தைக் குறித்து ஆச்சரியப்பட மாட்டார்கள்?
சூரிய உதயமும் அஸ்தமும் ஓர் அழகிய காலமாகும். எந்த உயிரும் இந்தச் சம்பவங்களைக் கண்டு களிப்படையாமலிரா. எல்லா உயிர்க்கும் உண்டாகும் குதூகலத்தை, ஆதிவேத மனிதன், இந்தக் காயத்ரி ஜபமாக உச்சரித்து வந்தான்.
இவன் உச்சரித்து வந்தது போலவே, இன்றைக்கும் சந்டா தீவுகளில் (Sunda Islands) வசிக்கும் குரங்குகளும், சூர்யோதத்தைக் கண்டு கை கொட்டி ஆர்ப்பாட்டம் செய்கின்றன. சந்தியா வந்தனமென்பதே, சந்திக் காலத்தில், அதாவது காலை மாலையில், செய்யும் வந்தனம் என்று பொருள்.
சந்டா தீவு குரங்கு
இந்த வந்தனத்தையே கோழிகளும், பறவைகளும், குரங்குகளும் சூரியனைக் கண்டவுடன் தத்தம் கூச்சல்களால் குறிப்பிடுகின்றன. தங்களுக்குள் எழும் ஓர் குதூகலத்தை அதாவது சந்தோஷத்தைக் கூச்சல் மூலமாகத் தெரியப்படுத்துகின்றன.
அதுபோலவே வேத காலத்து மனிதரும் சந்திக் காலங்களில் சூரியனைக் கண்டதும், ஓர்வித சந்தோஷத்தைக் குறிக்கச் சந்தியா வந்தனம் எனும் கூச்சலையே இன்றைக்கும் இரு பிறப்பாளர்களெனும் வேதியர், காலையிலும், மாலையிலும் சூரியன் பக்கம் திரும்பிச் செய்கின்றனர். சந்தியா வந்தனத்தின் ஆரம்பம் (Origin) இவ்விதமிருக்க, தற்கால வேதியர்கள் இந்தச் சாதாரண குதூகலக் குறிப்பை (Mysterious words) மறைவான சொற்களென்றும், பிராமணர்களுக்குத்தான் இவை உரித்தென்றும் சொல்லித் திரிகின்றார்கள். மலையத் தீவுகளில் (Malay Islands) இந்த அந்தணர்கள் போய்ப் பார்ப்பார்களாகில், குரங்குகளும், “சந்தியா வந்தனத்தைக் கை கொட்டிக் குறிப்பிடுகின்றதைக் காணலாம்.
ஆனால் குரங்குகளுக்குக் கபடமென்பதும் கூடாதென்பதும், தனது சொத்தென்பதும், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதும், பார்ப்பான், பறையன் என்பதும் தெரியாதாகையால், அவைகள் சத்தமிடுவதில் ஒன்றும் ரகசியமில்லை. மனிதனோ, தான் பேச ஆரம்பித்ததும், மோசம், வஞ்சனை, மேல் கீழ், உயர்வு, தாழ்வு என்று தனக்குள் வேற்றுமைகளை உண்டாக்கிக் கொண்டு, “சந்தியா வந்தனம்” பிராமணன்தான் சொல்ல வேண்டும், மற்ற பாமர மக்கள் சொல்லும் நாவைத் துண்டிக்கப்படுமென்று சட்டதிட்டங்களை உண்டாக்கிக்கொண்டு தனது சீவனத்தை நடத்தி வருகின்றான். உபாயத்திற்காகவே மறைத்து வைக்கப்பட்டு மந்திரங்களாகப் பாவிக்கப்படுகின்றன. இதுதான் மந்திரங்களின் ஆதாரம். மறை பொருள் கொண்டவை எல்லாம் மந்திரங்களே!
மாட்டுச் சாணத்தைச் சாம்பலான பிறகு “மந்திரமென்பது நீறு, வானவர் தொழுவது நீறு,” என்று பாடும் ஊரில், சாதாரண சொற்கள் மந்திரங்களாக ஏன் பாவிக்கப்படா? மந்திரங்களின் உற்சவம் (Origin) இதுவே.
சாதாரணக் கல்லும், செம்பும், களி மண்ணும் விக்கிரக வஸ்துகளாக மாறும்போது, எப்படி மகத்துவமும் பயபக்தியும் பெறுகின்றனவோ, அவ்விதமே சாதாரண சொற்கள் பேசும் திறமையாலும், தொனியாலும் ரகசியமாக உச்சரிப்பதாலும், மறைவாக வைக்கப்பட்டிருந்ததாலும், பாமர மக்களுக்கு ஓர்வித நம்பிக்கையை உண்டாக்குகின்றன. மந்திரங்களின் ஆதாரத்தையும் எதார்த்தத்தையும் பாகுபாடு (Analysis) செய்து பார்க்கையில் “தோலும் கோலுமாக”வே காணப்படும்".
குடியரசு
7.8.1932
பக்கம் 3-18
சிங்காரவேலர் கட்டுரைகள் நூலிலிருந்து.
மூடநம்பிக்கைகள் அதிகரித்து வரும் இன்றைய நவீன காலத்திலும், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு சிங்காரவேலர் கட்டுரைகள் பெரிதும் துணை புரியும்.
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்

.jpeg)
No comments:
Post a Comment