Friday, November 28, 2025

சுயமரியாதைக்காரர்களுக்கும், பொதுவுடமையாளர்களுக்கும் வழிகாட்டும் சிங்காரவேலர்!

உழைப்பில் ஈடுபடும் மனிதனின் அவயங்களைக் காக்கத் தோன்றிய ஆடை, இன்று நவநாகரிக (Fashion) ஒன்றாகவும், நுகர்வுக்கானதாகவும் பார்க்கப்படுகிறது. அவயங்கள் தெரிய, அரைகுறை ஆடை அணிந்து, ‘என் உடல், என் உடை, என் உரிமை’ என்று தங்களின் உடை சுதந்திரம் பற்றிப் பேசும் ஆண்களும், பெண்களும் (இதில் முற்போக்குகளும் அடங்குவர் என்பது ஒரு கேலிக்கூத்து) அதிகரித்துவரும் இன்றைய சூழலில், ஆடை குறித்தும், 

பச்சை உணவை வலியுறுத்தும் சில  கற்கால அலப்பறைகள் அதிகரித்துவரும் இன்றைய காலத்தில், ஏன் உணவை சமைத்து சாப்பிட வேண்டும் என்பது குறித்தும்,

தோழர் சிங்காரவேலர் எழுதுகிறார், 

சிங்காரவேலர்

“மனிதனுக்கு ஆடை (clothing) அவசியமா? ஆடை நாகரிக வாழ்க்கைக்கு அத்தியாவசியமா? என்று கேட்கலாம். ஆடையைத் தரிப்பது Artificial அதாவது செயற்கையால் என்றும் இயற்கை அல்லவென்றும் சிலருடைய கருத்து.

இம்மாதிரியாகவே சமைத்து உண்பது செயர்க்கையென்றும் காய்கனிகளை அதாவது சமைக்காமல் (Raw) பச்சையாக உண்பது இயற்கை என்றும் சிலர் கருதுகின்றார்கள். இந்தக் கருத்துடன் நிற்காமல் பச்சையாக உண்ணவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தக் கோஷ்டியாரில் நமது காந்தியாரும் ஒருவர். இவர் நிர்வாணத்தை (Nudity) அனுசரிக்கின்றாரோ நமக்குத் தெரியாது. ஆனால் பச்சையுணவு நிர்வாணத்தைப்போல் ஓர்வித Fad (பித்து) என்பதே நமது தீர்மானம்.

பச்சையாகத் தின்றுகொண்டிருந்த குரங்கு மனிதன் (Ape-Man) நெருப்பைக் கண்டுபிடித்த பிறகே சமைத்து உண்ண நேரிடவும், அவன் மனித உருவத்தையும், அதற்குகந்த நடத்தையும் பெற்றான் என்பது உயிர் ஞானத்தின் (Bio Science) முடிவு எனலாம்.

இதைப்போலவே ஆடையில்லாமல் நிர்வாணமாக உளவிக் கிடந்த மனிதக் குரங்கு ஆடையை அணிய நேரிடவும், மனிதக் குரங்கு மனிதனாக மாறிவந்த விஷயமும் உயிர் ஞானத்தின் உண்மைகளில் ஒன்று. ஆனால் தற்போது நாம் அடைந்துள்ள மனிதப் பதவியை விட்டுவிட்டு நமது தூரப்பங்காளிகளாகிய (Distant Cousins) மனிதக் குரங்குகளைப் போல் (Man Aps) நாமும் மரங்களில் தொத்திக் கொண்டு கனிவர்க்கங்களை உண்டு வாழலாமென்று கருதுவோர் நிர்வாணமாக இன்றைக்கே நாடுகளை விட்டுக் காடுகளில் சென்று நடமாடலாம்.

இது நவீன நாகரிகமாகாது. இந்த வாழ்க்கை காட்டுமிராண்டி வாழ்க்கையாகும். சமைக்காமல் சாப்பிடுவதும், ஆடை அணியாமல் வாழ்வதும் நமது இயற்கை வாழ்க்கை  என்கின்றனர் சிலர். ஆம் அந்த வாழ்க்கை தற்போது நமக்கு உவந்ததானால் பிணத்தைத் (Cannibalism) தின்பதும், வரைமுறையற்ற புணர்ச்சியும் (Promiscuous Intercourse), கொலை (Murder), பலவந்தப் புணர்ச்சி (Rapine) இவை யாவும் இயற்கை வாழ்க்கை அன்றோ? இவற்றை ஏன் நாம் கையாளக் கூடாது? 

ஆனால் இந்த வாழ்க்கையைத் தவிர்த்து ஆடையை அணிந்து வீடுகளிலும், வாசல்களிலும் வாசஞ்செய்து ஒழுங்கான முறையில் வாழ நேரிட்ட பிறகே ஒரு காலத்தில் காட்டுமிராண்டிகளாய் இருந்த நாம் Decent Civilised Life என்று வழங்கும் தற்கால நாகரிக வாழ்க்கையை அடைந்துள்ளோம். 

நாம் நிர்வாண வாழ்க்கையை விட்டுப் பல லட்சம் வருஷமானதாக உயிர்நூலோர் கணக்கிடுக்கின்றார்கள். அந்த நிலையை இன்றைக்குக் கோருவது மிருகத்தன்மையேயொழிய மனிதத் தன்மையாகாது".

புரட்சி
11.3.1934
பக்கம் 9-13

***

1930 களின் தொடக்கத்தில் சமதர்மம், பொதுவுடமை, சுயமரியாதை, பகுத்தறிவு, மதங்கள், மூடநம்பிக்கைகள் குறித்து 'புரட்சி', 'குடி அரசு' போன்ற ஏடுகளில் வெளியான தோழர் சிங்காரவேலரின் கட்டுரைகளை வாசித்து முடித்த போது பிரமிப்பாய் இருந்தது. 

சுயமரியாதைக்காரர்களின் 'ஈரோட்டுத் திட்டம்' என்பதே பொதுவுடமையைக் கொண்டு வரும் புரட்சித் திட்டம்தான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்துவதில் பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என எந்த மதத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை.

பொதுவுடைமை குறித்து சுயமரியாதைக்காரர்களின் போதாமையாலும், பகுத்தறிவு குறித்து பொதுவுடமையாளர்களின் போதாமையாலும் இவ்விரு தரப்பாருமே பகைமைகாட்டி பிணக்கு செய்யும் இன்றைய காலகட்டத்தில், தோழர் சிங்காரவேலர் இவ்விருதரப்பாருக்கும் வழி காட்டுகிறார்.

பொதுவுடமை, மதங்கள், அறிவியல், மூடநம்பிக்கைகள் பற்றிய அவரது ஆழமானப் புரிதலுக்குக் காரணம் அவரது அயராத உழைப்பும், ஆங்கில நூல் வாசிப்பும் என்பதை அவரது கட்டுரைகள் உணர்த்துகின்றன. அவரது எழுத்துக்கள் நூறு ஆண்டை எட்டவிருக்கின்ற இன்றைய நவீன அறிவியல் உலகில் அவரைப் போன்று சிந்திப்பதற்கும், எழுதுவதற்கும் யாரும் இல்லையே என்கிற ஏக்கம் மட்டும்தான் இந்த நூலை வாசித்து முடித்த போது என்னுள் எழுந்தது! 

சுரண்டலும், ஒடுக்குமுறையும், மூடநம்பிக்கைகளும் பற்றிப் படரும் இன்றைய காலத்திற்கு சிங்காரவேலரைப் போன்ற சிந்தனையாளர்களுக்காக இச்சமூகம் ஏங்கிக் கிடக்கிறது. 

ஊரான்

No comments: